வட இந்திய மாநிலமான உத்தரகாண்டில், இமயமலை அருகில் உள்ள நந்தா நகர், புதுதில்லியில் இருந்து 10 மணிநேர பயண தூரத்தில் உள்ளது. இந்திய-சீன எல்லைக்கு அருகில் உள்ளது இந்நகரம். சுமார் 2,000 மக்கள் இங்கு வசிக்கின்றனர். அந்நகரின் வழியாக ஓடும் நந்தாகினி நதிக்கரையில் துணிகள் உலர் சலவை நிலையம் (dry-cleaning shop) வைத்துள்ளார் 49 வயதான அஹ்மத் ஹசன்.
செப்டம்பர் 2024 வரை, அன்றாடம் 20 முதல் 25 வாடிக்கையாளர்கள் அவர் கடைக்கு வந்து செல்வார்கள். சிலர் அவருடன் தேநீர் அருந்தி, அரசியல் பேசிவிட்டுச் செல்வார்கள். தங்கள் சொந்த விசயங்களைக் கூட அவரிடம் பகிர்ந்து விட்டுச் செல்வார்கள். வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள், சிலர் முஸ்லீம்கள்.
ஆனால் தற்போது ஐந்துக்கும் குறைவான இந்து வாடிக்கையாளர்களே அவரின் கடைக்கு வருகின்றனர். அதேசமயம் தற்போது முஸ்லீம் வாடிக்கையாளருக்குக் காத்திருப்பதில் பொருளில்லை என்பது அவருக்குத் தெரியும். தற்போது ஹசன்தான் அந்த ஊரில் இருக்கும் ஒரே முஸ்லீம்.
பல தலைமுறைகளாக, 15 முஸ்லீம் குடும்பங்கள் நந்தா நகரில் வசித்து வந்தனர். ஹசனும் அங்குதான் பிறந்து வளர்ந்தார். இந்துக்கள் தங்களது பண்டிகைகளுக்கு முஸ்லீம்களை அழைப்பதும், ரமலானுக்கு இந்துக்களை முஸ்லீம்கள் விருந்தோம்பல் செய்வதும் இயல்பாக இருந்தது. தனது இந்து நண்பர்கள் உயிரிழந்தபோது, அவர்களின் உடல்களை ஹசன் தனது தோளில் சுமந்து சென்றுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 22 அன்று, ஓர் இளம் இந்துப் பெண், முடிதிருத்தும் கடை வைத்துள்ள முகமது ஆரிஃப் என்ற முஸ்லீம் இளைஞனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குற்றச்சாட்டுக்குப் பின்பு அனைத்தும் மாறிவிட்டது.
இந்தப் பிரச்சினை, முஸ்லீம் வெறுப்புக் கலவரமாக மாற்றப்பட்டது. நந்தா நகர் முஸ்லீம்களின் கடைகள் அழிக்கப்பட்டன. உயிருக்குப் பயந்து, இரவோடு இரவாக முஸ்லீம் குடும்பங்கள் ஊரைவிட்டு வெளியேறிவிட்டனர். ஹசன் மட்டுமே தனது மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்களுடன் ஊருக்குப் பிடிவாதமாகத் திரும்பி வந்தார். ஆனாலும் குடும்பம் பயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
படிக்க: உத்தரகாண்டில் பிரார்த்தனையில் ஈடுபட்ட கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவிக் குண்டர்கள்
அவருடைய இந்து அண்டைவீட்டார் யாரும் பேசுவதில்லை. முன்பு போல ஆற்றங்கரையோரம் அவர் நடந்து செல்வதில்லை. மேலும் வன்முறை வெடித்துவிடுமோ என்ற அச்சம் அவருக்கு இருக்கிறது.
“நான் என் கடைக்குப் போய்விட்டு வீடு திரும்புவேன். இப்போதைக்கு இதுதான் வாழ்க்கை. இந்த ஊரில் தற்போது வாழும் அன்றாட வாழ்க்கையை பேய் போல உணர்கிறேன். யாரும் என்னிடம் பேசுவதில்லை” என்று கூறுகிறார், ஹசன்.
2021 வரை வாழ்க்கை பெரும்பாலும் அமைதியாக இருந்தது என்று ஹசன் கூறுகிறார். கொரோனா தொற்றுநோய் காலத்தில், ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி இந்துமதவெறிக்கும்பல் “கொரோனா ஜிகாத்” என்று முஸ்லீம்களுக்கு எதிராகப் பரப்பிய சதிக் கோட்பாடுகளால் இந்தியா முழுவதும் முஸ்லீம்கள் இழிவுபடுத்தப்பட்டார்கள். திடீரென்று, தனது இந்து நண்பர்கள் தன்னிடமிருந்து விலகி வருவதை ஹசன் உணர்ந்தார். தீபாவளியன்று தனது இந்து நண்பர்களிடமிருந்து வரும் அழைப்புகள் கோவிட் வந்த பிறகு நின்று விட்டதாகக் கூறுகிறார்.
முஸ்லீம் இளைஞரின் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, செப்டம்பர் 1 இல் நடைபெற்ற நிகழ்வுகள் முஸ்லீம்கள் மீதான வெறுப்புணர்வை மோசமான நிலைக்கு இட்டுச் சென்றது.
செப்டம்பர் 1 ஆம் தேதி நகரக் கடைக்காரர்கள் சங்கம் சார்பாக, மேற்சொன்ன பிரச்சினையைக் கண்டித்தும், போலீசு நடவடிக்கை கோரியும் பேரணி நடைபெற்றது. இதில் முஸ்லீம் மக்களும் கலந்து கொண்டனர். ஆனால், பேரணியின் ஒரு கட்டத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான முழக்கங்கள் எழத் தொடங்கின. “நாங்கள் போராட்டக்காரர்களுடன் நடந்து செல்லும்போது, ’முஸ்லீம் விபச்சாரிகளைக் காலணிகளால் அடியுங்கள்’ என்பது போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன” என்று கூறுகிறார் ஹசன்.
பேரணி நந்தா நகரில் உள்ள போலீசு நிலையத்தை அடைந்தபோது, போராட்டத்திலிருந்த குழு ஒன்று, 30 வயது முஸ்லீம் இளைஞர் ஹருன் அன்சாரியைப் பிடித்து அடிக்கத் தொடங்கியது. அவர் குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர் தப்பியோடுவதற்கு உதவியதாகக் குற்றஞ்சாட்டினர்.
படிக்க: உத்தராகண்ட் பொது சிவில் சட்டம்: இந்துராஷ்டிரத்திற்கு அடித்தளமிடும் பாசிஸ்டுகள்!
அச்சமடைந்த மற்ற முஸ்லீம் மக்கள் பேரணியிலிருந்து தப்பி ஓடி, தங்கள் வீடுகளுக்குச் சென்று பூட்டிக் கொண்டனர். நூற்றுக்கணக்கான பேர் கொண்ட கும்பல் அவர்களின் வீடுகள் மீது கற்களை வீசத் தொடங்கியது. உதவி கேட்டு போலீசை அழைத்தும், யாரும் வரவில்லை. மற்ற இந்து நண்பர்களுக்கு உதவி கேட்டு போன் செய்தும் யாரும் எடுக்கவில்லை. ஹசனின் கடை உடைக்கப்பட்டு, பொருட்கள் அனைத்தும் நொறுக்கப்பட்டன. பிள்ளைகளின் திருமணத்திற்காகச் சேமித்து வைத்திருந்து 4 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது.
செப்டம்பர் 2 ஆம் தேதி, இந்து தீவிரவாத வலதுசாரி குழுக்களால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. மற்ற நகரங்களிலிருந்து ஆட்களைத் திரட்டினர். ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டனர். ஆனால் 60 அல்லது 70 போலீசார் மட்டுமே அங்கு இருந்தனர். முஸ்லீம் வெறுப்புப் பேச்சுக்குப் பெயர் பெற்ற தர்ஷன் பாரதியின் பேச்சுக்குப் பிறகு, முஸ்லீம்களின் சொத்துக்கள் நாசம் செய்யப்பட்டன. ஒரு மசூதி அடித்து நொறுக்கப்பட்டது.
முஸ்லீம் குடும்பங்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்க முடியாது என்று போலீசு கைவிரித்தது. பெரும்பாலான முஸ்லீம் குடும்பங்களுக்கு, அது நந்தா நகர் வாழ்க்கையின் முடிவாக இருந்தது. முதலில் ஹசனின் குடும்பம் டேராடூனுக்கு சென்றது. அங்கு சில நாட்கள் தங்கியிருந்த பிறகு, ஹசனும் 48 வயதான முகமது அய்யூமும் பாதுகாப்புக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
உயர்நீதிமன்றம், முஸ்லீம் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று போலீசுக்கு உத்தரவிட்டது. ஆனால் பெரும்பாலான முஸ்லீம் குடும்பங்கள் பயத்தின் காரணமாக நந்தா நகருக்குச் செல்வதைத் தவிர்த்து விட்டனர்.
ஆனால் ஹசன் ஊருக்குச் செல்ல முடிவெடுத்தார். “இது என்னுடைய வீடு. என்னுடைய அடையாளம், வாழ்க்கை அனைத்தும் உத்தரகாண்டில் தான்” என்று கூறுகிறார். ”என்னுடைய மனைவி என்னை விட தைரியமானவர். முதலில் அவர் குழந்தைகளுடன் நந்தா நகருக்குச் சென்றார். பின்னர் நானும் சென்றேன்” என்று ஹசன் கூறுகிறார். அக்டோபர் 16 ஆம் தேதி ஊருக்குச் சென்றபோது, ஹசனின் கடைக்கு எதிரே ஒரு இந்து, ஹசனுக்குப் போட்டியாக உலர் துப்பரவுக் கடை திறந்திருப்பதைக் கண்டார்.
படிக்க: இந்து ராஷ்டிரமாக உருவெடுத்து வருகிறது உத்தரகாண்ட்!
ஹசன் தனது கடையைப் பழுதுபார்க்க முயன்றபோது, எந்த இந்துக்களும் அவருக்கு உதவ முன்வரவில்லை. முஸ்லீம்களுக்கு உதவ வேண்டாம் என்று இந்து தீவிரவாத வலதுசாரிக் குழுக்கள் சொன்னதன் காரணமாகவே உதவவில்லை என்று இந்து தொழிலாளர்கள் கூறியுள்ளனர். ஹசன் கடையைத் தானே சரி செய்தார். ஆனால் தற்போது இந்துக்கள் யாரும் அவர் கடைக்கு வருவதில்லை.
ஹசனின் 16 வயது மகள் பள்ளியில், முஸ்லீம் என்ற காரணத்திற்காகக் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடைய வகுப்புத் தோழிகளில் ஒருவரே, பள்ளியிலிருந்து அவர் வெளியேற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். பள்ளி முதல்வரை நேரில் பார்த்துப் பேசிய பிறகு இப்பிரச்சினை சரி செய்யப்பட்டது.
செப்டம்பர் 1 தாக்குதல் தொடர்பாக நந்தா நகர் போலீசு நிலைய இன்ஸ்பெக்டர் சஞ்சய் சிங் நேகி நேரில் பார்த்த அடிப்படையில் புகார் பதிவு செய்யப்பட்டது. புகார் இருந்தும் இதுவரை யாரையும் உத்தரகாண்ட் போலீசு கைது செய்யவில்லை.
நந்தா நகரில் நாம் பார்ப்பதென்பது, உத்தரகாண்ட் மாநிலம் முழுவதும் நடந்து கொண்டிருக்கும் பயங்கரங்களின் ஒரு அடையாளம்தான். உத்தரகாண்ட் பி.ஜே.பி முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் அதிகாரத்தின் கீழ், மாநிலம் முழுவதும் முஸ்லீம் வெறுப்புக் குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. அனைத்து நகரங்களிலும் இந்துத் தீவிரவாத குழுக்கள், முஸ்லீம்களை வெளியேற்ற வேண்டும் என்ற பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. முஸ்லீம்களுக்குச் சொந்தமான கடைகள் எரிக்கப்படுகின்றன; சூறையாடப்படுகின்றன. அவர்கள் மீதான பொருளாதாரப் புறக்கணிப்புகள் நிறுவனப்படுத்தப்பட்டுள்ளன.
அண்மையில், தாமி அரசாங்கம் முஸ்லீம்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினரின் உரிமைகளைக் காக்கும் சட்டங்களைத் தகர்க்கும் வகையில் பொது சிவில் சட்ட (UCC) விதிகளை அறிவித்தது.
படிக்க: உத்தராகண்ட்: முஸ்லீம்கள் மீது ஏவப்படும் அரச பயங்கரவாதம்
”முஸ்லீம்கள் மீதான அடக்குமுறைகளை, நம் நாட்டு நீதிமன்றங்கள் உணரவில்லை” என்று டேராடூனைச் சேர்ந்த சமூக ஆர்வலர் குர்ஷித் அகமது கூறுகிறார்.
தற்போது ஹசனின் கடைக்கு, ஒரு சில இந்து நண்பர்கள் வரத் தொடங்கியுள்ளனர். ஆனாலும் அவருக்கு மனதில் வலி இன்னும் இருக்கிறது. “முஸ்லீம் குடும்பங்கள் தங்கள் உடைமைகளை எடுக்கத் திரும்ப வந்தபோது, முன்பு உட்கார்ந்து பேசி சிரித்தவர்களே கேலி செய்தனர். ஏன் திரும்பி வந்தீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அது என் இதயத்தை உடைத்தது. உடல் ரீதியான வன்முறை குறைந்துவிட்டாலும், அமைதியான சமூக வன்முறை தொடர்கிறது” என்று கூறுகிறார்.
ஆனாலும், ஹசன் எதிர்காலத்தைப் பற்றியோ அல்லது நந்தா நகரைப் பற்றியோ தற்போதும் நம்பிக்கை இழக்கவில்லை. அந்த நம்பிக்கை என்பது, நீதி வெல்லும், உண்மை வெல்லும் என்பதன் மீதான நம்பிக்கை. மனிதர்களின் மீதான நம்பிக்கை.
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி இந்துமதவெறி பாசிஸ்டுகள் எப்படிப்பட்ட நாட்டை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள், உருவாக்கப் போகிறார்கள் என்பதற்கான அண்மைச் சான்றே நந்தா நகரின் நிகழ்வுகள்.
நாம் என்ன செய்யப் போகிறோம்?
மூலம்: அல்ஜசீரா
அய்யனார்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram