- லெனினின் இளம் சீடர்கள்
முதன்முறை நான் லெனினை நேரிடையாக அல்ல, ஐந்து இளம் ருஷ்யத் தொழிலாளர்களின் உள்ளங்களிலும், உணர்ச்சிகளிலுமே கண்டேன். 1917ஆம் ஆண்டுக் கோடைக்காலத்தில் பெத்ரோகிராதுக்குத் திரும்பிய நாடுகடந்த ருஷ்யர்களின் பெருவெள்ளத்தின் ஒரு பகுதியாக இருந்தார்கள் இந்த ஐவரும்.
இவர்களுடைய ஊக்கம், அறிவுக்கூர்மை, ஆங்கில ஞானம் ஆகியவற்றால் அமெரிக்கர்கள் இவர்கள்பால் ஈர்க்கப்பட்டார்கள். தாங்கள் போல்ஷெவிக்குகள் என்று அவர்கள் எங்களுக்கு விரைவிலேயே அறிவித்தார்கள். “பார்வைக்கு இவர்கள் அப்படித் தோன்றவே இல்லை” என்றான் ஒரு அமெரிக்கன். சிறிது காலம் வரை அவன் அவர்களது கூற்றை நம்பவே இல்லை. நீண்ட தாடிகளும் அறியாமையும் சோம்பலும் கொண்ட முரட்டுப் போக்கிரிகளின் வடிவில் போல்ஷெவிக்குகளின் படங்களை அவன் செய்தித்தாள்களில் பார்த்திருந்தான். இந்த இளைஞர்களோ, மழித்த முகங்களும், மரியாதையும் நகைச்சுவையும் இனிய சுபாவமும் அறிவு விழிப்பும் வாய்த்திருந்தார்கள். இவர்கள் பொறுப்பை ஏற்க அஞ்சவில்லை. உயிர் கொடுக்க அஞ்சவில்லை, எல்லாவற்றையும் விட ருஷ்யாவில் வியப்பூட்டிய விஷயம் என்னவென்றால், வேலை செய்வதற்கும் இவர்கள் அஞ்சவில்லை என்பதுதான். எனினும் இவர்கள் போல்ஷெவிக்குகள்.
வோஸ்கோவ் நியூயார்க்கிலிருந்து வந்திருந்தான். அங்கே அவன் தச்சர்கள், சிறு தச்சு வேலைக்காரர்கள் சங்கம் நம்பர் 1008இன் ஒழுங்கமைப்பாளனாக இருந்தான். யானிஷேவ் மெக்கானிக்; கிராமப் பாதிரியின் மகனான இவன் உலகின் பல பகுதிகளில் சுரங்கங்களிலும் ஆலைகளிலும் வேலை செய்ததற்குரிய அடையாளங்கள் அவன் உடலில் தென்பட்டன. நேய்பூத் கம்மியன்; இவன் எப்போதும் ஒரு கட்டுப் புத்தகங்களை வைத்திருப்பான். புதிதாகக் கிடைத்த புத்தகத்தைப் பற்றி எப்போதும் ஒரே உற்சாகமாகப் பேசுவான். வொலதார்ஸ்க்கிய இரவும் பகலும் இடைவிடாது அடிமை போல உழைப்பான். பகைவரால் அவன் கொல்லப்படுவதற்குச் சில வாரங்களுக்கு முன் என்னிடம் சொன்னான்: “அட என்ன வந்துவிடும்! பகைவர்கள் என்னைக் கொன்றுவிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோமே! ஐந்து மனிதர்கள் வாழ்நாள் முழுவதிலும் அடைய வேண்டியதைக் காட்டிலும் அதிக இன்பத்தை இந்த ஆறு மாதங்களில் வேலை செய்ததனால் நான் அடைந்துவிட்டேனே.” பீட்டர்ஸ் ஒரு மேஸ்திரி. விரல்கள் பேனாவைப் பிடிக்க வலுவற்றுப் போகும்வரை கொலைத் தண்டனை உத்தரவுகளில் கையெழுத்திடும் இரத்தவெறி கொண்ட கொடுங்கோலன் என்று பத்திரிகைச் செய்திகளில் பிற்காலத்தில் வருணிக்கப்பட்ட இவன், தனது ஆங்கில ரோஜாத் தோட்டத்தையும் நெக்ராஸவின்1 கவிதைகளையும் நினைத்து அடிக்கடி பெருமூச்செறிவான்.
அறிவிலும் உளவுறுதியிலும் லெனின் எல்லா போல்ஷெவிக்குகளுக்கும் மட்டுமே அல்ல, ருஷ்யாவிலும் ஐரோப்பாவிலும் உலகம் அனைத்திலும் உள்ள மற்ற எல்லாருக்கும் முன்னணியில் நிற்கிறார் என்று இந்த மனிதர்கள் நிதானமாக எங்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
ஜெர்மன் உளவாளி என்று வருணிக்கப்பட்ட லெனினைப் பற்றி நாள்தோறும் பத்திரிகைகளில் படித்துவந்த எங்களுக்கு, போக்கிரி, துரோகி, அறிவு மழுங்கியவர் என்று பூர்ஷ்வாக்கள் லெனினைப் பகிஷ்கரிப்பதைத் தினந்தோறும் கேட்டு வந்த எங்களுக்கு இந்த இளைஞர்களின் கூற்று விந்தையான போதனையாகப் பட்டது. இது நம்ப முடியாததாகவும் வெறிபிடித்ததாகவும் தொனித்தது. ஆனால் அந்த இளைஞர்கள் முட்டாள்களோ உணர்ச்சி வசப்படுபவர்களோ அல்ல. உலகில் அடிபட்டுத் தேறி இத்தகைய பலவீனங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டிருந்தார்கள் அவர்கள். இந்த இளைஞர்கள் வீரவழிபாட்டினரும் அல்ல. போல்ஷெவிக் இயக்கம் மூலதத்துவ ஆற்றலும் ஆவேசமும் கொண்டது எனினும் விஞ்ஞான ரீதியானது. எதார்த்தவாதப் போக்கு உள்ளது, வீரவழிபாட்டுக்கு ஏற்காதது. இவ்வாறிருக்க இந்த ஐந்து போல்ஷெவிக்குகளுமோ, நேர்மையிலும், அறிவுக் கூர்மையிலும் மாண்புமிக்க ஒரு ருஷ்யர் இருக்கிறார், அவர் பெயர் நிக்கொலாய் லெனின்2 என்று பிரகடனம் செய்தார்கள். அந்தக் காலத்தில் அவர் தற்காலிக அரசாங்கத்தால் வேட்டையாடப்பட்ட சட்டத்துக்கு புறம்பானவர்.
இந்த உற்சாகம் கொண்ட இளைஞர்களை பார்க்கப் பார்க்க அவர்கள் தங்கள் ஆசான் என ஏற்றுக்கொண்ட மனிதரைக் காண எங்கள் விருப்பம் மிகுந்துகொண்டு போயிற்று. அவருடைய மறைவிடத்துக்கு அவர்கள் எங்களை அழைத்துப் போவார்களா?
“சற்றுப் பொறுங்கள், அப்புறம் அவரைக் காண்பீர்கள்” என்று சிரித்துக்கொண்டே பதில் அளிப்பார்கள் இளைஞர்கள்.
1917ஆம் ஆண்டு கோடைக் காலம் முழுவதும் இலையுதிர் காலத்திலும் நாங்கள் பொறுமையின்றிக் காத்துக்கொண்டிருந்தோம். கேரென்ஸ்கிய்3 அரசாங்கம் மேலும் மேலும் வலுவிழந்துகொண்டு போவதைக் கண்டோம். நவம்பர் மாதம் 7ந் தேதி அது இறந்து விட்டது என்று போல்ஷெவிக்குகள் தீர்ப்பளித்தார்கள். அதே சமயம் ருஷ்யா சோவியத்துக்களின் குடியரசு என்றும் லெனின் அதன் முதலமைச்சர் என்றும் அவர்கள் பிரகடனம் செய்தார்கள்.
- லெனினைப் பற்றிய முதல் உளப்பதிவு
தங்கள் புரட்சியின் வெற்றியால் பூரிப்படைந்த தொழிலாளர்களும் படைவீரர்களும் ஸ்மோல்னியின் பிரமாண்டமான ஹாலில் பாடிக் கொண்டு நிறைந்தார்கள். போர்க் கப்பல் “அரோராவின்” பீரங்கிகள் பழைய அமைப்பின் இறப்பையும் புதிய அமைப்பின் பிறப்பையும் கட்டியங்கூறி முழங்கிக் கொண்டிருந்தன. அந்த வேளையில் லெனின் அமைதியாகப் பேச்சாளர் மன்றப் படிகளின் மீது அடி வைத்தார். “தோழர் லெனின் இப்போது காங்கிரஸ் முன் பேசுவார்” என்று அறிவித்தார் தலைவர்.
எங்கள் மனத்தில் இருந்த உருவத்துக்கு அவர் பொருத்தமாக இருப்பாரா என்று காண்பதற்காக நாங்கள் எம்பிப் பார்த்தோம். ஆனால் நிருபர்கள் மேஜைக்கு அருகிலிருந்த எங்கள் இருக்கைகளிலிருந்து அவரை முதலில் காண முடியவில்லை. உரத்த ஆரவாரத்திற்கும் வெற்றி முழக்கங்களுக்கும் சீழ்க்கைகளுக்கும் கால்களைத் தரையில் அடிக்கும் சத்தங்களுக்கும் இடையே அவர் மன்றத்தைக் கடந்து, எங்களுக்கு முப்பது அடி தூரத்துக்குள் இருந்த பிரசங்க மேடை மேல் ஏறினார். இப்போது நாங்கள் அவரைத் தெளிவாகக் கண்டோம். எங்கள் நெஞ்சு விழுந்து போயிற்று.
நாங்கள் உருவகப்படுத்தி வைத்திருந்ததற்கு அநேகமாக எதிரிடையாக இருந்தார் அவர். வாட்டசாட்டமாகவும் மிடுக்குடனும் தோற்றம் அளிப்பதற்குப் பதில் அவர் குட்டையாக, கட்டுக் குட்டென்று இருந்தார். அவருடைய தாடியும் தலைமயிரும் முரடாக கலைந்து கிடந்தன.
கைதட்டல் புயலை அடக்கிய பின், அவர், “தோழர்களே இப்போது நாம் சோஷலிஸ அரசை நிறுவும் வேலையை மேற்கொள்வோம்” என்று கூறினார். பிறகு அவர் கிளர்ச்சி அற்ற, விவகார ரீதியான விவாதத்தில் இறங்கினார். அவருடைய குரலில் சொல்வன்மை அல்ல, ஒரு வகைக் கடுமையும் வறட்சியும் கொண்ட தொனி இருந்தது. தமது அரைக் கோட்டின் தோள் துளைகளுக்குள் கட்டை விரல்களை நுழைத்துக் கொண்டு, குதிகால்களில் முன்னும் பின்னும் சாய்ந்தாடினார். கட்டற்ற இளமையும் வலிமையும் வாய்ந்த இந்த மனிதர்களின் உள்ளங்கள் மீது அவருடைய ஆதிக்கத்துக்குக் காரணமான மறைந்த காந்தக் கவர்ச்சிப் பண்புகளைக் கண்டறியும் நம்பிக்கையுடன் நாங்கள் சுமார் ஒரு மணி நேரம் அவரது பேச்சைக் கேட்டோம். ஆனால் பயனில்லை.
எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. போல்ஷெவிக்குகள் தங்கள் வீச்சினாலும், துணிவினாலும் எங்களைக் கவர்ந்துவிட்டார்கள். அவர்களுடைய தலைவரும் அவ்வாறே செய்ய வேண்டும் என்றே நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் இந்தக் கட்சியின் தலைவர் இந்தக் குணங்களின் பருவடிவாகவும் இயக்கம் அனைத்தின் பொழிப்பாகவும் ஒருவகை அதி போல்ஷெவிக்காக எங்கள் முன் வரவேண்டும் என நாங்கள் எதிர்பார்த்தோம். மாறாக, அவரோ மென்ஷெவிக் போல, அதிலும் மிகச் சிறு மென்ஷெவிக் போலத் தோற்றம் அளித்தார்.
“இவருக்குக் கொஞ்சம் நல்லுடை அணிவித்துவிட்டால் சிறு பிரெஞ்சு நகர் ஒன்றின் பூர்ஷ்வா மேயராகவோ பாங்கராகவோ இவரைக் கருத முடியும்” என்று கிசுகிசுத்தான் ஆங்கிலேய நிருபன் ஜூலியஸ் வெஸ்ட்.
“ஆம், மிகவும் பெரிய வேலைக்கு மிகவும் சிறிய மனிதர்” என்று நீட்டி முழக்கினான் அவனுடைய கூட்டாளி.
போல்ஷெவிக்குகள் மேற்கொண்டுள்ள சுமை எவ்வளவு கனமானது என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். இதைச் சுமக்க அவர்களால் முடியுமா? அவர்களுடைய தலைவர் வலியவராக எங்களுக்கு முதல் பார்வைக்குத் தோன்றவில்லை.
இவ்வளவு தூரம் முதல் உளப்பதிவை விவரித்தேன். ஆனால், சாதகமற்ற முதல் மதிப்பீட்டிலிருந்து தொடங்கிய நான் ஆறு மாதங்களுக்கெல்லாம் வோஸ்கோவ், நேப்பூத் பீட்டர்ஸ், வொலதார்ஸ்க்கிய், யானிஷேவ் ஆகியோரின் முகாமில் சேர்ந்துவிட்டேன். அவர்கள் கருத்துப்படி ஐரோப்பாவின் முதல் மனிதரும் ராஜதந்திரியும் நிக்கொலாய் லெனினே ஆவார்.
- நெக்ராஸவ், நி. அ (1821-1877) ருஷ்ய மகாகவி புரட்சிகர ஜனநாயகவாதி.
- நிக்கொலாய் லெனின் ஆசிரியர் குறிப்பிடுவது வி.இ. லெனினின் பல புனைபெயர்களில் ஒன்று.
- அபி. கேரென்ஸ்கிய், 1917இல் ருஷ்யாவில் பல்வேறு கூட்டுக்களால் அமைந்த தற்காலிக அரசாங்கத்தின் தலைமை அமைச்சர்.
(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram