மக்கள் மீது நம்பிக்கை கொள்வோம்: அதுவே தோழர் லெனின் கற்பித்தது!

மாணவர்கள் மீது திணிக்கப்படும் நுகர்வு கலாச்சாரத்திலிருந்து அவர்களை மீட்டெடுத்து, அதன் பின்னால் இருக்கக்கூடிய அரசியல் சூழ்ச்சிகளைப் புரியவைத்து, அவர்களை அரசியல்படுத்தி சமூக அநீதிக்கு எதிராக நிறுத்த வேண்டியதுதான் புரட்சிகர இயக்கங்களின் வேலையே ஒழிய அவர்களை குறைகூறிக் கொண்டிருப்பது அல்ல.

ன்று பேராசான் தோழர் லெனினின் 155வது பிறந்தநாள். இந்நாளில் தோழர் லெனினின் பிறந்தநாளைக் கொண்டாடுவது என்பது அவர் வழியில் நடப்பதற்கு உறுதியேற்பதே!

அன்பார்ந்த தோழர்களே!

புரட்சியாளர் லெனினின் அண்ணன் அலெக்சாண்டர் கொடுங்கோன்மை ஜார் அரசால் கொல்லப்பட்டதிலிருந்தே மார்க்சியம் குறித்தான லெனினின் தேடல் தொடங்கியது. அண்ணனின் இறப்பு ஏன், எதற்காக நடந்தது என்று தெரிந்துகொள்ள முயன்றதன் விளைவாகவே அவர் மார்க்சியத்தையும் கம்யூனிசத்தையும் அறிந்து கொள்கிறார்.

இதன் விளைவு, கஸானில் பெடோஸியெவ் என்ற ஒருவரால் நிறுவப்பட்ட மார்க்சியக் குழுவில் உறுப்பினராகச் சேர்கிறார். அதன் பிறகு சமராவிற்கு லெனின் அப்புறப்படுத்தப்பட்டார். அங்கு வெகு சீக்கிரத்தில் லெனினை முக்கிய உறுப்பினராகக் கொண்ட ஒரு மார்க்சியக் குழு நிறுவப்படுகிறது.

1893-ஆம் ஆண்டின் முடிவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்திற்கு லெனின் போய் சேர்ந்தார். 1895-ஆம் ஆண்டு செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் இருந்த மார்க்சிய குழுக்கள் யாவற்றையும் (கிட்டத்தட்ட 20 குழுக்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது) லெனின் ஒன்றிணைக்கிறார். அதற்கு “தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கான போராட்ட சங்கம்” என்று பெயரிடப்படுகிறது.

1905-ஆம் ஆண்டு ஜனவரி 3 அன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள மிகப்பெரிய தொழிற்சாலையான ஒர்க்ஸில் தொழிலாளர்களின் மாபெரும் வேலைநிறுத்தம் தொடங்கியது. தொழிலாளி வர்க்கத்தின் புரட்சியை ஒழித்துக்கட்டும் நோக்கில் ஜனவரி 9 அன்று தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தருவதாகக் கூறி கோபன் என்ற பாதிரியார் குளிர்கால அரண்மனைக்கு மக்களுடன் பேரணியாகச் சென்று ஜார் மன்னனிடம் கையேந்த வைத்தான். அமைதி வழியில் பதாகைகளை ஏந்திச் சென்ற தொழிலாளர்கள் மீது படையை ஏவிவிட்டு ஆயிரக்கணக்கான மக்களை கொடுன்கோலன் ஜார் சுட்டுக்கொன்றான்.

இச்சம்பவத்திற்குப் பிறகு ரஷ்யாவில் புரட்சி பற்றிப் பரவத் தொடங்கியது. இப்புரட்சியின்போது லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகள்தான் தொழிலாளி வர்க்கத்தின் பக்கம் உறுதியாக நின்று வழிகாட்டினர். ஆனால், மென்ஷ்விக்குகளோ தொழிலாளர்களை குறை கூறிக் கொண்டிருந்தனர். மக்கள் மீது அவநம்பிக்கை கொண்டனர். பாட்டாளி வர்க்கம் முதிர்ச்சியடையவில்லை, அவ்வர்க்கத்தால் புரட்சிக்குத் தலைமை தாங்க முடியாது என ஒப்பாரி வைத்தனர். ஆனால், 1917-இல் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் ரஷ்யாவில் நடந்த புரட்சியானது பாட்டாளி வர்க்கத்தின் மீதும் பரந்துபட்ட மக்களின் மீதும் போல்ஷ்விக்குகள் கொண்டிருந்த நம்பிக்கைக்கான காரணத்தை இவ்வுலகிற்குப் பறைசாற்றியது.


படிக்க: “மாற்று” பற்றிய திட்டம்: லெனினியத்தின் சிறப்புகளில் ஒன்று!


இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிச கும்பலானது இந்தியாவில் பாசிசத்தை நிறுவி வருகிறது. இத்தகையச் சூழலில், மக்களுக்கும் மாணவர்களுக்கும் வழிகாட்டாமல், “மக்கள் சரியில்லை” என்று அங்கலாய்க்கும் பேர்வழிகள் இங்கும் இருக்கின்றனர். வறட்டுத்தனமாக மக்களைக் குறை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக, தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையை அமல்படுத்திவரும் அரசானது மாணவர்-இளைஞர்களை போதை பழக்கத்திற்கும் நுகர்வு கலாச்சாரத்திற்கும் ஆட்படச் செய்து கொண்டிருக்கிறது. இதனால், சமூகச் சூழலிலிருந்து மாணவர்-இளைஞர்களின் கவனம் திட்டமிட்டே திசைதிருப்பப்படுகிறது.

இதனை மட்டும் எடுத்துக்காட்டி, “மாணவர்கள் அரசியலற்று போய்விட்டனர்” என சில ‘இடதுசாரி’ இயக்கங்கள் சலித்துக் கொள்கின்றன. இவ்வியக்கங்கள் இதனை வெளிப்படையாக அறிவிக்கவில்லை எனினும் தங்களது கட்டுரைகளிலும் தனிப்பட்ட விவாதங்களிலும் இக்கருத்தை வெளிப்படுத்துகின்றன. இதன் மூலமாக, தங்களது செயலின்மையை மறைத்துக் கொண்டு, அணிகளின் கண்களுக்குக் கட்டுப்போட்டுவிடுகின்றன. தமது அணிகள் தங்களை மட்டுமே சுற்றிவரும் உத்தியைக் கையாள்கின்றன.

ஆனால், இவ்வியக்கங்களில் இருக்கும் இளைஞர்கள், மாணவர்கள் சிந்திக்க வேண்டும். மாணவர்களைக் குறை சொல்லவதற்கு புரட்சிகர அமைப்புகள் எதற்கு? மாணவர்கள் மீது திணிக்கப்படும் நுகர்வு கலாச்சாரத்திலிருந்து அவர்களை மீட்டெடுத்து, அதன் பின்னால் இருக்கக்கூடிய அரசியல் சூழ்ச்சிகளைப் புரியவைத்து, அவர்களை அரசியல்படுத்தி சமூக அநீதிக்கு எதிராக நிறுத்த வேண்டியதுதான் புரட்சிகர இயக்கங்களின் வேலையே ஒழிய அவர்களை குறைகூறிக் கொண்டிருப்பது அல்ல.

இப்பிரிவினர் தங்களுக்குத் தெரிந்த ஓரிரு வழிமுறைகளை மட்டும் கொண்டு மாணவர்களை அணுகிவிட்டு, அதில் மாணவர்கள் ஈடுபாடு காட்டவில்லை என்பதால் மாணவர்களைக் குறை சொல்லிக் கொண்டிருக்கின்றனர். மாறாக, தங்களையும் மாணவர்களை அமைப்பாக்க தாங்கள் மேற்கொண்ட வடிவங்களையும் பரிசீலிப்பதோ மாற்று வழிமுறைகளைக் கையாள்வதோ இல்லை. இது மாணவர்கள்-மக்கள் மீதும் புரட்சியின் மீதும் இவர்கள் கொண்டிருக்கும் அவநம்பிக்கையின் வெளிப்பாடன்றி வேறில்லை.


படிக்க: லெனின் 155: பாசிசத்தை வீழ்த்தும் போராட்டத்தில் கலைப்புவாதத்தையும் திரிபுவாதத்தையும் முறியடிப்போம்! 


ஆனால், மாணவர்களுக்கு உகந்த வடிவத்தை முன்வைத்துச் செயல்பட்டால் நிச்சயம் மாணவர்களை அரசியல்படுத்தி அமைப்பாக்க முடியும். ஏனென்றால், இன்றைக்கு இருக்கக்கூடிய மாணவர்கள் ஆற்றல் மிக்கவர்கள், சமூகப் பொறுப்புணர்வு கொண்டவர்கள்!

அப்படியாகத்தான் எமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாணவர் சமுதாயத்தைப் பார்க்கிறது. மாணவர்களை அரசியல்படுத்துவதற்கும் அமைப்பாக்குவதற்கும் இடதுசாரி இயக்கங்களின் மாணவர் அமைப்புகள் பொருத்தமான வடிவத்தை மேற்கொள்ளவில்லை என்பதே எமது பரிசீலனையாக இருக்கிறது.

மாணவர்கள் மத்தியில் சாதி ஒழிப்புச் சிந்தனையையும் பாலின சமத்துவ சிந்தனையையும் சோசலிச சிந்தனையையும் விதைக்கும் வகையில், “லவ் ஆல், நோ கேஸ்ட்” என்ற இயக்கத்தை மேற்கொண்டோம். இந்த இயக்கமே மாணவர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்றுத்தந்தது.

ஆகையால், தோழர்களே!

நாம் மக்கள் மீதும் மாணவர் சமுதாயத்தின் மீதும் பழி சுமத்திவிட்டு நின்று கொள்ளாமல், நம்மைப் பரிசீலனை செய்துகொண்டு மாணவர்களை எப்படி புரட்சிகர இயக்கத்தில் இணைப்பது என்பது பற்றியான விவாதங்களை நடத்தி சரியான வடிவங்களை முன்வைத்துச் செயல்படுவோம்.

அன்றைக்கு ரஷ்யாவில் எப்படி தொழிலாளி வர்க்கத்துக்கு போல்ஷ்விக்குகள் வழிகாட்டினார்களோ, அப்படி நாம் இந்திய உழைக்கும் மக்களுக்கும் மாணவர் சமுதாயத்திற்கும் வழிகாட்டுவோம்!

தன்னலம் கருதாமல் மார்க்சிய-லெனினிய வழியில் மக்கள் மற்றும் மாணவர்களின் நலனுக்காகப் பாடுபடுவோம்!

அதற்கு ஏப்ரல் 22 பேராசான் லெனினின் 155-வது பிறந்தநாளில் உறுதியேற்போம்!

தோழர்களுக்குப் புரட்சிகர வாழ்த்துகள்!


தீரன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க