வேண்டும் ஜனநாயகம்: தமிழ்நாடு தழுவிய மே நாள் பேரணி – ஆர்ப்பாட்டம்

நமது நாட்டில் கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டைக் கடைபிடித்து வரும் இந்த ஆண்டில், மே தினத்தில், பாசிசத்தை வீழ்த்தவும் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டவும் உறுதியேற்பது உழைக்கும் மக்கள் அனைவரது கடமையாகும்.

அதிகரித்துவரும் வேலையின்மை, விலையேற்றம்,
உரிமைகள் பறிப்பு, போர், சூழலியல் நெருக்கடி

வேண்டும் ஜனநாயகம்

தமிழ்நாடு தழுவிய மே நாள்
பேரணி – ஆர்ப்பாட்டம்

ன்பார்ந்த தொழிலாளர்களே, உழைக்கும் மக்களே!

எட்டு மணிநேர வேலை, எட்டுமணி நேர ஓய்வு, எட்டுமணி நேர உறக்கம் என்ற உரிமைக்காக சிக்காகோ தொழிலாளர்கள் தொடங்கிய போராட்டத்தின் உச்சம்தான் மே தினம்!

அன்று, தொழிலாளர்கள் மேற்கொண்ட போராட்டங்கள், உயிர் தியாகங்களின் விளைவாகத்தான் எட்டு மணி நேர வேலைமுறை நடைமுறைக்கு வந்தது. அதன் பின்னர், நிரந்தர வேலை, குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதம், சமவேலைக்கு சம ஊதியம், மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம் போன்ற பல உரிமைகளும் தொழிலாளர்களின் போராட்டங்களால் வென்றெடுக்கப்பட்டன.

ஆனால், 1990-களிலிருந்து நமது நாட்டிலும் சர்வதேச அளவிலும் பின்பற்றப்பட்டு வரும் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கைகளின் விளைவாக, தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கப்பட்டு, மீண்டும் நவீன கொத்தடிமைகளாக்கப்படும் அபாய நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.

இன்று உலகம் முழுவதும் மேலாதிக்கம் செலுத்துகின்ற ஏகாதிபத்திய முதலாளித்துவ சமூக அமைப்பில், தொழிலாளர்கள் போராடி தமது உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ளும் பெயரளவிலான சட்ட உரிமைகளும் நசுக்கப்படுகின்றன. ஆளும் அரசாங்கங்கள் ஏகாதிபத்திய கார்ப்பரேட் முதலாளித்துவ வர்க்கங்களின் நலனிற்காக, அனைத்து துறைகளிலும் காண்ட்ராக்ட்மயமாக்கம், பொதுத்துறைகள் கார்ப்பரேட்மயமாக்கம், இயற்கை வளக் கொள்ளை, கண்மூடித்தனமான நவீனமயமாக்கம், மருத்துவம், கல்வி, சாலை, குடிநீர் போன்ற சேவைகளை அரசு கைகழுவி கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு திறந்துவிடுவது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால், தொழிலாளர்கள் நாளும் வேலையிழந்து வருகின்றனர். சிறுதொழில் செய்வோர், பழங்குடிகள், விவசாயிகள் போன்ற பல்வேறு உழைக்கும் மக்களும் தமது வாழ்வாதாரத்தை இழந்து, கூலித் தொழிலாளர்களாக நகரங்களை நோக்கி விரட்டப்படுகின்றனர்.

இவற்றின் விளைவாக, வேலைக்கான போட்டி அதிகரிப்பது, கூலி அன்றாடம் குறைந்து வருவது, அத்தியாவசிய பொருட்கள் கடுமையாக விலையேற்றம் அடைவது, வாழ்க்கை நிலைமை நலிவடைவது என கொத்தடிமை நிலைமைக்குத் தொழிலாளர்கள் தள்ளப்படுகின்றனர். சங்கம் வைக்கும் உரிமை, போராடும் உரிமைகள் மறுக்கப்படுகின்றன; போராடும் தொழிலாளார்கள் கடுமையான ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படுகின்றனர். இலாபவெறிப் பிடித்த ஏகாதிபத்திய முதலாளித்துவம், பெண்களுக்கான வேலைவாய்ப்பைப் பெருக்குவதாகக் கூறி, அற்பக் கூலிக்கு பெண்களின் உழைப்பைச் சுரண்டுகின்றன.

இன்னொருபுறம், மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளிலும் நமது நாட்டிலும் நிதிமூலதன ஆதிக்கக் கும்பலின் ஏகபோக ஆதிக்கம் கொண்ட பிரிவினரின் செல்வாக்கு வளர்ந்து வருகிறது. இந்த கும்பல் அந்தந்த நாடுகளில் நிலவும் ஆக பிற்போக்கான சித்தாந்தங்களைக் கொண்டு, இனவெறி, மதவெறிகளைத் தூண்டிவிட்டு பாசிச சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதற்கு முயன்று வருகின்றன. அமெரிக்காவில் டிரம்ப் கும்பலும், இந்தியாவில் பாசிச பா.ஜ.க.வின் மோடி-அமித்ஷா கும்பலும், பாசிச ஆட்சியை வேகமாக அரங்கேற்றி வருகின்றன.

மேலும், நிலக்கரி, பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு போன்ற புதை படிவ எரிபொருள்களை வகை தொகையின்றி சூறையாடிய இந்த ஏகாதிபத்தியங்கள், தற்போது காட்மியம், லித்தியம் போன்ற அரியவகை கனிமங்களைத் தோண்டி எடுக்க போட்டிப் போட்டு வருகின்றன. இதற்காக, இதுவரை மனிதன் சென்றிராத காடுகள், மலைகள், ஆழ்கடல்களை அகழ்ந்து தோண்டி இயற்கைச் சுற்றுச்சூழலை நாசப்படுத்தி வருகின்றன.

இதுமட்டுமின்றி, நவீனமயமாக்கத்தின் விளைவாக, டிஜிட்டல்மயமாக்கம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏ.ஐ.). ஆட்டோமேசன் போன்றவை தொழில்துறையை மட்டுமின்றி, சமூகத்தின் அனைத்து துறைகளையும் ஆக்கிரமித்து வருகின்றன. இதனால், ஏற்கெனவே, உற்பத்தி. சேவை மற்றும் வினியோகத் துறைகளில் பணிபுரிந்து வருகின்ற கோடிக்கணக்கான தொழிலாளர்களும் ஊழியர்களும் வேலையிழந்து வருகின்றனர். இந்தியாவில் அரசு ஊழியர்கள். வங்கித் துறை ஊழியர்கள் எதிர்கொண்டிருக்கும் முக்கியமான அபாயமாகவும் இது உள்ளது.

இந்த அவுட்சோர்சிங்-காண்ட்ராக்ட் வேலைமுறையும் நவீனமயமாக்கத்துடன் இணைந்து உருவாகி வரும் சிதறிய வேலைமுறையான கிக் தொழிலாளர்களும் அதிகரித்து வருகின்றனர். சுவிக்கி, சொமெட்டோ போன்ற உணவு வினியோக நிறுவனங்கள். ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற நுகர்பொருள் வினியோக நிறுவனங்கள், ஓலா, ரேப்பிடோ போன்ற வாகனப் போக்குவரத்து சேவை நிறுவனங்கள் போன்றவை இந்தவகையான வேலைமுறையின் சான்றுகளாகும். இவற்றால் நிரந்தர வேலைமுறை ஒழித்துக்கட்டப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்காக, பாலஸ்தீனத்திற்கு எதிராக இசுரேல் நடத்தும் போர், உக்ரைனை வைத்து அமெரிக்கா – ரசியா இடையில் நடக்கும் பதிலிப் போர், அடுத்து ஈரான் மீது போருக்கான முனைப்புகள் என போர் அபாயம் உழைக்கும் மக்களை மிகப்பெரும் அளவில் அழித்து வருகிறது. அமெரிக்காவின் உலக மேலாதிக்க இராணுவக் கூட்டமைப்புகளில் இந்தியாவும் தன்னை இணைத்துக் கொண்டதன் மூலம், மக்களின் வரிப்பணத்தை இராணுவத்திற்கு வாரி இறைக்கிறது. மக்களின் மீது வரிச் சுமையை ஏற்றுகிறது.

சூழலியலில் ஏற்படும் புவி வெப்பமயமாதல், காற்று மாசு, நீர் மாசு போன்றவையும் உழைக்கும் மக்களை மிகப்பெரும் அளவுக்கு பாதிக்கின்றன. பல்வேறு வகையான கொடிய நோய்களுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். இவை மட்டுமின்றி, பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரிக்கின்றன; திருட்டு, கொலை, கொள்ளை, ஆபாச சீரழிவு என விழுமியங்களற்ற சமூகமாக மனித சமூகம் மாற்றப்படுகிறது.

நமது நாட்டில் ஆட்சியிலிருக்கும், ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் இயங்கும், மோடி-அமித்ஷா தலைமையிலான பாசிச பா.ஜ.க. ஆட்சியானது, இந்த அனைத்து கேடுகளுக்கும் மையமாக விளங்குகிறது. உழைக்கும் மக்களை நவீன கொத்தடிமைகளாக்கும் இந்துராஷ்டிரத்தை அரங்கேற்றி வருகிறது. நாட்டின் பெரும்பாலான தொழில்கள், வணிகங்கள், சொத்துக்களை அம்பானி, அதானி, அகர்வால் போன்ற கார்ப்பரேட் கும்பலின் ஏகபோக கொள்ளைக்குத் திறந்துவிடுகிறது. இவற்றிற்கெதிராக போராடும் மக்களை மதரீதியாகப் பிளவுப்படுத்துவதற்காக இந்துமுனைவாக்கத்தை மேற்கொண்டு வருகிறது. மேலும், தலித் மக்கள், இசுலாமியர்கள், கிறிஸ்த்தவர்களை சங்-பரிவாரத்தின் பயங்கரவாதக் குழுக்கள் படுகொலைகள் செய்துவருகின்றன.

இந்த பாசிச கும்பலானது, நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியைக் கொண்டுவருவதற்கு சதிவேலைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு, இது இந்திய துணைக் கண்டத்தில் இருக்கும் அண்டை நாடுகளுக்கும் அனைத்து தேசிய இனங்களுக்கும் அபாயகரமான சக்தியாக விளங்குகிறது.

நமது நாட்டில் அரங்கேறிவரும் இந்த பாசிச ஆட்சிக்கு எதிராகவும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அரங்கேறிவரும் பாசிச ஆட்சிகளுக்கு எதிராகவும் போர்கள், சூழலியல் நெருக்கடி, உரிமைகள் பறிக்கப்படுதல் போன்றவற்றிற்கு எதிராகவும் உழைக்கும் மக்களின் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சோசலிசத்தின் மீதும் கம்யூனிசத்தின் மீதுமான நம்பிக்கை அதிகரித்து வருகிறது.

நமது நாட்டில் கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டைக் கடைபிடித்து வரும் இந்த ஆண்டில், மே தினத்தில், பாசிசத்தை வீழ்த்தவும் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டவும் உறுதியேற்பது உழைக்கும் மக்கள் அனைவரது கடமையாகும்.

தனியார்மயம் தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகளை முறியடிப்போம்!

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்தை வீழ்த்துவோம்!

பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசமைப்போம்!

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மா.ஒ.கு),
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மக்கள் அதிகாரக் கழகம்.

***

சென்னை – திருவள்ளுர் – காஞ்சிபுரம் – வேலூர்:

அதிகரித்துவரும் வேலையின்மை, விலையேற்றம்,
உரிமைகள் பறிப்பு, போர், சூழலியல் நெருக்கடி

வேண்டும் ஜனநாயகம்

தமிழ்நாடு தழுவிய மே நாள்
பேரணி – ஆர்ப்பாட்டம்

மே 1, 2025

காலை 9.30 மணி | ஆவடி, பேருந்து நிலையம் அருகில்

மாலை 4.30 மணி | காஞ்சிபுரம், காவலான் கேட் அருகில்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மா.ஒ.கு),
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மக்கள் அதிகாரக் கழகம்,
சென்னை – திருவள்ளுர் – காஞ்சிபுரம் – வேலூர்.
தொடர்புக்கு: 9444831578, 9786076201, 9444836642, 7358482113.

***

கோவை:

அதிகரித்துவரும் வேலையின்மை, விலையேற்றம்,
உரிமைகள் பறிப்பு, போர், சூழலியல் நெருக்கடி

வேண்டும் ஜனநாயகம்

தமிழ்நாடு தழுவிய மே நாள்
பேரணி – ஆர்ப்பாட்டம்

தெருமுனைக்கூட்டம்
மே 1, 2025 | மாலை 5 மணிக்கு,
MSR புரம் மேட்டுப்பாளையம்.

மக்கள் அதிகாரக் கழகம்,
கோவை மாவட்டம்.
94889 02202

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க