“மாற்று” பற்றிய திட்டம்: லெனினியத்தின் சிறப்புகளில் ஒன்று!

பாசிச சக்திகளையோ அல்லது அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்துராஷ்டிரத்தையோ முறியடிக்க வேண்டுமெனில், இந்த அரசியல் - பொருளாதார - சமூகக் கட்டமைப்புக்கு மாற்றான, ஓர் அரசியல் பொருளாதார சமூகத் திட்டம் - மாற்றுத் திட்டம் வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில் சிந்தித்துச் செயல்படுபவர்களால் மட்டுமே, பாசிச சக்திகளை வீழ்த்த முடியும்.

ன்றைய நாள், தோழர் லெனினின் 155-வது பிறந்த நாள். இந்நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான தோழர்களுக்கு புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ரசியப் புரட்சி குறித்தும் அதன் சிறப்புகள் குறித்தும் பல கட்டுரைகள் இணைய வெளியில் காணக்கிடக்கின்றன; பல நூல்களும் வெளிவந்துள்ளன. ரசியப் புரட்சி என்பது ஏகாதிபத்திய சகாப்தம் என்ற லெனினிய வரையறுப்பின் கீழ் நடந்த ஒரு மாபெரும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட புரட்சியாகும்.

ஏகாதிபத்திய சகாப்தம் என்று தோழர் லெனின் அன்றைய காலத்தைப் பிரித்துக் காட்டும் போது, பாட்டாளி வர்க்கத் தலைமையில் ஒரு பிரிவினர் ஓடுகாலி நிலையெடுத்ததைக் குறிப்பிடுகிறார்; பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் இருந்த அந்தப் பிரிவினர் ஆளும் வர்க்கத்தின் செல்லப் பிள்ளைகளாக மாறிவிட்ட தொழிலாளி வர்க்கத்தினரின் பிரதிநிதிகள் என்று குறிப்பிடுகிறார்; இதற்கு அடிப்படை மேற்கத்திய நாடுகளானது, காலனி நாடுகளைச் சுரண்டி தம் நாட்டின் பாட்டாளி வர்க்கத்தினருக்கு சில உரிமைகளை, சலுகைகளை, பிற நாட்டின் மக்களைவிட முன்னேறிய ஒரு வாழ்க்கையை வழங்குவதைக் குறிப்பிடுகிறார்; அதனால், பாட்டாளி வர்க்கப் புரட்சி என்பது உடனடியாக மேற்கத்திய நாடுகளில், பாட்டாளி வர்க்கம் வளர்ந்து முன்னேறிய நாடுகளில் உடனடியாக சாத்தியமில்லை என்பதைக் குறிப்பிடுகிறார்.

இதுவரை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் பேசிய முதலாளித்துவம், தேசிய இனத்திற்காகப் போராடிய முதலாளித்துவம், தேசிய விடுதலைக்காகக் குரல் கொடுத்த முதலாளித்துவத்தின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது; அந்த அடிப்படையில் முதலாளித்துவ புரட்சிகர சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது; இது ஏகாதிபத்திய சகாப்தம். இந்த ஏகாதிபத்திய சகாப்தத்தில், காலனிய நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சியைத் தடுத்து, அங்கிருக்கும் முதலாளித்துவத்திற்கு முந்தைய பிற்போக்கு சக்திகளுடன் ஏகாதிபத்தியவாதிகள் கைகோர்த்துக் கொண்டு சுரண்டுவதாகும்.

இதனால், தேசிய விடுதலைப் போராட்டங்களும் ஜனநாயகப் புரட்சியும் இனி, பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில்தான் நடத்தப்பட வேண்டியிருக்கிறது. பாட்டாளி வர்க்கத் தலைமையில் நடக்கும் இந்தப் புரட்சிகள்தான், அதன் முடிவுவரை செல்லும்.


படிக்க: லெனின் 155: பாசிசத்தை வீழ்த்தும் போராட்டத்தில் கலைப்புவாதத்தையும் திரிபுவாதத்தையும் முறியடிப்போம்! 


ஆகையால், ஐரோப்பா தழுவிய புரட்சிக்கான வாய்ப்புகள் தற்போது இல்லை; ஏகாதிபத்தியங்களின் பலவீனமான கண்ணியில்தான் புரட்சி வெடிக்கும். ஆகையால், காலனிய நாடுகளில்தான் புரட்சி வெடிக்கும் என்று வரையறுத்தார். ஆகையால், உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற முழக்கத்துடன், ஒடுக்கப்படும் தேசங்களே ஒன்று சேருங்கள் என்றும் சேர்த்து முழங்கினார்.

லெனினியத்தின் இந்த வழிகாட்டுதலின் அடிப்படையில், 1919 மூன்றாவது அகிலத்தின் மூன்றாவது காங்கிரசில், காலனி அரைக்காலனி நாடுகளின் புரட்சிகரப் போராட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டது. காலனிய நாடுகளின் தேசவிடுதலைப் போராட்டங்கள் ஓர் அலையாக எழுந்தது.

இந்த லெனினிய சித்தாந்தத்தின் அடிப்படையில், ரசியாவில் போல்ஷ்விக்குகள் தலைமையில் புரட்சி முன்னெடுக்கப்பட்டது. ஆனால், ஏகாதிபத்திய சகாப்தத்தின் வளர்ச்சியையும் ஒரு நாட்டில் புரட்சி என்ற லெனினிய கோட்பாட்டையும் ஏற்காத மென்ஸ்விக்குகள், இரண்டாம் அகிலத்தின் ஓடுகாலிகள் முன்வைத்த முழக்கத்தையே முன்வைத்தனர். பாட்டாளி வர்க்கம் இன்னும் தலைமை தாங்கும் அளவிற்கு வளரவில்லை; உழவர் வர்க்கத்தை நம்பி புரட்சியில் இறங்க முடியாது, அது துரோகமிழைத்துவிடும். ஆகையால், முதலாளித்துவ வர்க்கத்தின் தலைமையில் புரட்சியை முடிக்க வேண்டுமெனக் கூறினர்.

இந்த மென்ஸ்விக்குகளின் சித்தாந்தம் தோல்வியைத் தழுவியது; தோழர் லெனின் முன்வைத்த பாட்டாளி வர்க்கத் தலைமையிலான புரட்சி வெற்றி பெற்றது. 1917 நவம்பர் 7-இல் நடந்த ரசிய சோசலிசப் புரட்சியானது உலகத்தையே உலுக்கியது.


படிக்க: லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 1


எனினும், சிறுவீத உற்பத்தி, சிறு விவசாயிகளை அதிகமாகக் கொண்டிருந்தது ரசியா; கல்வியறிவில் பின் தங்கியிருந்தது; கிராமப்புறங்களுக்கு மின்சாரம் இல்லாத நிலைமை இருந்தது. இந்த ரசியாவில் சோசலிச உடைமை மாற்றம் என்பது உடனடி சாத்தியமில்லாத நிலைமை இருந்தது. அந்த சூழலில், ரசியாவில் தொழில் வளர்ச்சி அவசியமானதாக இருந்தது. அப்போதுதான், லெனின் தலைமையிலான ரசியா புதிய பொருளாதாரக் கொள்கையை முன்வைத்தது. லெனினது இந்தக் கொள்கையின் அடிப்படையில் செயல்பட்ட ரசியாவின் வளர்ச்சி குறித்து, ரசியப் புரட்சியின் நான்காம் ஆண்டு விழாவில் லெனின் ஆற்றிய உரையில் விளக்கமாகக் குறிப்பிடுகிறார்.

ஆகையால், சோசலிச கட்டுமானத்தை நிறுவுவதற்கான போராட்டத்தில், இடையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் – பொருளாதார – சமூக நிலைமைகளைக் கடப்பதற்காக முன்வைக்கப்பட்ட அரசியல் – பொருளாதார – சமூகத் திட்டம்தான் (மாற்றுத் திட்டம் – alternate programme) அன்றைய ரசியாவில் பெரும் மாற்றங்களைச் சாதித்தது; சோசலிசக் கட்டுமானத்திற்கான அடிப்படைகளை உருவாக்கியது.

லெனினியத்தின் அடிப்படையிலான, அக்காலத்தின் அரசியல் நிலைமைகளுக்குகந்த ஒரு “மாற்று” (alternate) அரசியல் – பொருளாதார – சமூகத் திட்டத்தை முன்வைக்காமல், சோசலிசப் புரட்சியை நடத்திவிட்டோம், சோசலிச உடைமை மாற்றத்திற்கான அரசியல் – பொருளாதார – சமூகத் திட்டத்தைத்தான் பின்பற்றுவோம் என ரசிய கம்யூனிஸ்டுகள் செயல்பட்டிருந்தால், விவசாய வர்க்கத்துடனான உறவு பகை உறவாக மாறியிருக்கும்; ரசிய புரட்சி வீழ்ச்சியடைந்திருக்கும்.

ஆகையால், 1917 ரசிய சோசலிசப் புரட்சிக்குப் பின்னர், முன்வைக்கப்பட்ட இடைக்கட்டத்திற்கான அரசியல் – பொருளாதார – சமூகத் திட்டம்தான் ரசியப் புரட்சியை சோசலிசப் பாதையை மேற்கொள்வதற்கான வாயிலுக்கு இட்டுச்சென்றது.

இன்று, இந்தியாவில் சோசலிசப் புரட்சி, புதிய ஜனநாயகப் புரட்சியை மேற்கொள்வதாகப் பல மார்க்சிய-லெனினியக் கட்சிகள், குழுக்கள் கூறிக் கொள்கின்றன. இச்சூழலில், பாசிசத்தை பக்கவாட்டில் உருவாகியிருக்கும் ஒரு பிரச்சினையாகப் பார்க்கின்றன. மாறாக, சமூக வளர்ச்சிப் போக்கில் உருவாகியுள்ள ஓர் இடைக்கட்டத்திற்குரிய வளர்ச்சியின் விளைவாகப் பார்ப்பதில்லை. இதனால்தான், பெரும்பாலான கட்சிகள், குழுக்கள், இந்த நாடாளுமன்ற அரசியல் பொருளாதார சமூகக் கட்டமைப்பிலேயே பாசிசத்தை வீழ்த்திவிட முடியும் என்று கருதுகின்றன. இது, பாசிசத்தை எந்த வகையிலும் வீழ்த்த உதவாது.

***

நமது நாட்டில், பாசிசம் என்பது இன்றைய அரசியல் – பொருளாதார – சமூகக் கட்டமைப்பின் வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் விளைவாகும். அதாவது, 1950-களில் உருவாக்கப்பட்டு பின்னர் முழு நிறைவாக முன்வைக்கப்பட்ட ‘சோசலிச – மதச்சார்பற்ற – ஜனநாயகக் குடியரசு’ என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டே, அதற்கெதிரான தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற பாசிசத் தன்மை கொண்ட கொள்கைகளை ஆளும் வர்க்கங்கள் தீவிரமாக நடைமுறைப்படுத்தியதன் விளைவாகும்.

2000-களின் பிற்பகுதியில், இந்த ஜனநாயகப் போர்வையைப் போர்த்திக் கொண்டு தங்களது சுரண்டலைத் தீவிரப்படுத்த முடியாமல் திணறின; அதனால், கடுமையான அரசியல் பொருளாதார நெருக்கடியில் சிக்கின. இனியும் இந்தப் போர்வையைப் பயன்படுத்த முடியாது, அதனைத் தூக்கியெறிய வேண்டுமென ஆளும் வர்க்கத்தின் ஆகப் பிற்போக்கான சக்திகள் (பா.ஜ.க. தலைமையில்) முன்வைக்கத் தொடங்கின. ஜனநாயகப் போர்வையைப் போர்த்திக் கொண்டு, தனியார்மயம் – தாராளமயம் – உலகமயத்தைப் பின்பற்றப் போவதாகக் கூறிக்கொண்ட பழைய பிரிவினர் (காங்கிரசு தலைமையில்), அத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த முடியாமல் திணறின. நீறுபூத்த நெருப்பாக ஆளும் வர்க்கத்தில் இருந்த இந்தப் பிளவானது, 2010-களின் தொடக்கத்தில் தீவிரமாக வெளிப்படத் தொடங்கியது.

இந்த வளர்ச்சிப் போக்கின் விளைவாக, இந்த நாடாளுமன்ற ஜனநாயகக் கட்டமைப்பைப் பயன்படுத்தியே இதனைத் தூக்கி வீசிவிட்டு, பெயரளவிலான ஜனநாயக உரிமைகள் ஏதுமற்ற, அப்பட்டமான சுரண்டலை முன்வைக்கின்ற அரசியல் – பொருளாதார – சமூகக் கட்டமைப்பை (இந்துராஷ்டிரத்தை) நிர்மாணிக்கத் தொடங்கிவிட்டது பா.ஜ.க. தலைமையிலான பாசிசக் கும்பல். அந்தவகையில், இந்துராஷ்டிரம் சட்டப் பூர்வமான முறையில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

இந்தக் கட்டமைப்பிற்குள் இருந்து கொண்டு, பாசிச சக்திகளை வீழ்த்தப் போவதாகக் குறிப்பிடுபவர்கள், தாங்கள் மட்டுமின்றி, தம்மை நம்பியவர்களையும் கூட்டிக் கொண்டு இந்துராஷ்டிரத்திற்குள் மண்ணோடு மண்ணாகிப் போவார்களே அன்றி, பாசிச சக்திகளை வீழ்த்தப் போவதில்லை.


படிக்க: பொதுவுடைமைவாதப் பத்திரிகை எப்படி இருக்க வேண்டும்? – தோழர் லெனின்


ஆகையால், இந்தப் பாசிச சக்திகளையோ அல்லது அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்துராஷ்டிரத்தையோ முறியடிக்க வேண்டுமெனில், இந்த அரசியல் – பொருளாதார – சமூகக் கட்டமைப்புக்கு மாற்றான, ஓர் அரசியல் பொருளாதார சமூகத் திட்டம் – மாற்றுத் திட்டம் வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில் சிந்தித்துச் செயல்படுபவர்களால் மட்டுமே, பாசிச சக்திகளை வீழ்த்த முடியும்.

தாம் மேற்கொள்ள இருக்கும் புரட்சியானது சோசலிசப் புரட்சியாகவோ, ஜனநாயகப் புரட்சியாகவோ இருக்கலாம். சில குழுக்கள் முன்வைப்பது போல, தேசிய இன விடுதலையாகக் கூட இருக்கலாம். மக்கள் விரோதத் திட்டங்களை முறியடிக்கும் தங்களது அன்றாட வாழ்வாதாரக் கோரிக்கைகளாகக் கூட இருக்கலாம். இவை அனைத்திற்கும் தடையாக இருப்பது, பாசிச சக்திகள்தான். இந்த பாசிச சக்திகளை வீழ்த்தாமல், இவை எதையும் அடைவதை நோக்கி ஓர் அடிகூட முன்னேற முடியாது.

மேற்கண்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் பாசிச சக்திகளை வீழ்த்துவதற்கான ஒரு பொதுத் திட்டமாக, பாசிசத்திற்கெதிரான அரசியல் – பொருளாதார – சமூகத் திட்டத்தை முன்வைத்து ஒன்றிணைய வேண்டும். இந்த பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை நிர்மாணிப்பதில் இருந்துதான், அவரவர் விரும்புகின்ற சமூக மாற்றத்திற்கான பாதையில் முன்னேற முடியும்.

இது லெனினியத்தின் சிறப்புகளில் ஒன்று. இதனை, “குறித்த திட்டம்” (Specific programme) என்று குறிப்பிடுகிறார், தோழர் மாசேதுங். சீனாவில், “கூட்டரசாங்கம் குறித்து” என்ற அவரது சிறு நூல், முன்வைப்பது அரசியல் – பொருளாதார – சமூகத் திட்டமாகும். அது, அப்போது நிலவிய பிற்போக்குக் கட்டமைப்பும் அல்லாத, புதிய ஜனநாயகமும் அல்லாத இரண்டிற்கும் இடைப்பட்ட ஓர் அரசியல் – பொருளாதார – சமூகத் திட்டமாகும்; புதிய ஜனநாயகக் கட்டமைப்பை நோக்கி முன்னேறுவதாகும்.


மகாதேவ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க