உத்தரப் பிரதேசம் கான்பூர் மாவட்டத்தின் சர்சௌல் பகுதியில், “ஜெய் ஸ்ரீராம்” என்று சொல்ல மறுத்ததற்காக இஸ்லாமிய சிறுவன் இந்து சிறுவர்களால் கொலைவெறித் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக இருக்கும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலத்தில், சிறு குழந்தைகள் மத்தியிலும் மதவெறி நஞ்சு எந்தளவிற்குப் புகுத்தப்பட்டுள்ளது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.
கடந்த 17-ஆம் தேதி அன்று இரவு, சர்சௌல் பகுதியைச் சேர்ந்த 13 வயது இஸ்லாமிய சிறுவன், அருகிலுள்ள பேருந்து நிலையத்திற்குச் சென்றுள்ளான். அப்போது, அச்சிறுவனை வழிமறித்த சிறுவர்கள் கும்பல் ஒன்று தங்களின் காலைத் தொட்டு வணங்கும்படி மிரட்டியுள்ளது.
சிறுவன் அதற்கு மறுப்பு தெரிவிக்க, “ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கமிடச் சொல்லி அச்சிறுவனை வற்புறுத்தியுள்ளது அக்கும்பல். சிறுவன் அதற்கும் மறுப்பு தெரிவித்ததால் மதவெறி பிடித்த சிறுவர்களில் ஒருவன் பாட்டிலை உடைத்து அதன் கண்ணாடியைக் கொண்டு சிறுவனின் இடது காலில் குத்தி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளான்.
காயத்தால் ரத்தம் கசிந்தபடி தாங்க முடியாத வலியுடன் சிறுவன் தனது வீட்டிற்குச் சென்றுள்ளான். அங்கே தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளான். உடனே சிறுவனுடைய தாத்தா மகா ராஜ்பூர் போலீசு நிலையத்தில் தன்னுடைய பேரன் மதவெறிப்பிடித்த கும்பலால் தாக்கப்பட்டது குறித்து புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
படிக்க: ஈஸ்டர் பண்டிகை: கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தும் காவி கும்பல்!
பாதிக்கப்பட்ட சிறுவன் இந்தப் பகுதியில், இதுபோன்ற மதவெறுப்பு சம்பவங்களுக்கு அடிக்கடி ஆளாகியுள்ளதாக தன்னுடைய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்.
இஸ்லாமிய மக்களுக்கு எதிரான காவிக் கும்பலின் இந்துமதவெறி பிரச்சாரம் சிறுவர்களையும் இரக்கமற்ற மதவெறியர்களாக மாற்றி வருகிறது என்பதை இச்சம்பவம் காட்டுகிறது. சாதி, மதம் போன்றவற்றின் பிடியிலிருந்து விலகி முற்போக்காக வளர வேண்டிய இளைய சமுதாயம் காவிக்கும்பலின் வெறுப்புப் பிரச்சாரத்திற்குப் பலியாகி காவி குண்டர்படைகாளாக மாற்றப்படுகின்றனர்.
இதை இன்னும் தீவிரப்படுத்துவதற்காகத்தான் தேசிய கல்விக் கொள்கை மூலம் புராணக் குப்பைகளையும், கட்டுக்கதைகளையும், இஸ்லாமிய வெறுப்பு கருத்துகளையும் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க எத்தனிக்கிறது காவிக் கும்பல்.
காவிக்கும்பலின் இந்த நடவடிக்கையை முறியடித்து, மாணவர்களிடையே அறிவியல் பூர்வமான, முற்போக்கான கருத்துகளை கொண்டுசெல்லாமல் கைவிட்டோமானால் நாளைய இளைய சமுதாயம் பாசிசக் கும்பலின் அடித்தளமாக மாறுவதை நம்மால் தடுக்க முடியாது.
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram