23.04.2025

காஷ்மீர் – பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்:
படுகொலைகளுக்கு யார் காரணம்?

பாசிச மோடியே பதில் சொல்!

பத்திரிகை செய்தி

ம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்ரல் 22) நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது. இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு மக்கள் அதிகாரக் கழகம் தனது கண்டனத்தையும் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா என்ற அமைப்பின் துணை அமைப்பான “தி ரெசிஸ்டென்ஸ் ஃப்ரண்ட்” என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளதாக அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற உடனேயே, இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கடும் வெறுப்புணர்வை திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. பாசிஸ்டுகள் தூண்டி விட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்ட 26 பேரில் காஷ்மீரை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவரும் இருந்த போதிலும் கூட இஸ்லாமியரா, இந்துவா என்று கேட்டு பயங்கரவாதிகள் கொலை செய்ததாக திட்டமிட்டு தகவல்கள் பரப்பப்படுகின்றன.

அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கிவிட்டால், காஷ்மீரில் எவ்வித தீவிரவாதத் தாக்குதல்களும் நடைபெறாது என்று அமித்ஷா அறிவித்தார். அரசமைப்புச் சட்டம் 370-ஐ நீக்கிய பிறகு தொடர்ந்து பல்வேறு போராட்டங்களும் தாக்குதல்களும் நடைபெற்று வருகின்றன.

அண்மையில், ஜம்மு காஷ்மீருக்கு வருகை தர இருந்த பிரதமர் மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணமாக பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஆக, பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளது என்று தெரிவித்த பிறகு கூட, படுகொலை நடைபெற்ற அப்பகுதியில் போலீஸ் மற்றும் இராணுவத்தின் பாதுகாப்பு இல்லாமல் இருந்தது மிகவும் சந்தேகத்திற்குரியதாகும்.

காங்கிரசு ஆட்சியில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றபோதெல்லாம் மாநில அரசாங்கத்தைக் கலைக்கவேண்டும், பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்று கதறிய பா.ஜ.க. பாசிசக் கும்பல், தற்போது இசுலாமியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை பரப்புகிறது.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலின் போது இதைப்போன்ற பொய்ப்பிரச்சாரத்தில் சங்கிக் கும்பல் ஈடுபட்டது. அப்போது காஷ்மீர் ஆளுநராக இருந்த மாலிக், புல்வாமா தாக்குதல் என்பது மோடிக்கு தெரிந்தே அல்லது அனுமதிக்கப்பட்டே நடைபெற்றது என்பதை அம்பலப்படுத்தினார்.

தற்போது, இத்தாக்குதலுக்கு பாதுகாப்புக் குறைபாட்டுக்கான காரணம் மோடி அரசின் கையாலாகாதத் தன்மையே என்பதை ஓய்வு பெற்ற இராணுவ ஜெனரல் பட்சி, அம்பலப்படுத்துகிறார். ஆகையால், இந்த பயங்கரவாதத் தாக்குதல் ஏன் நடை பெற்றது என்பதை நாட்டு மக்கள் மோடியைப் பார்த்து கேள்வி எழுப்ப வேண்டும்.

இராணுவ உடையில் பயங்கரவாதிகள் வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், சாதாரண உடையில் கையில் துப்பாக்கியுடன் தாக்குதலில் ஈடுபடும் படம் வெளியாகி உள்ளது.

மேலும், இப்பயங்கரவாதத் தாக்குதலுக்கு, காஷ்மீரில் தேர்தல் நடத்த உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் பொறுப்பேற்குமா என்று சங்கி ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்டோர் கூறிவருகின்றனர். இதன் மூலம் காஷ்மீருக்கு தேர்தல் நடத்தாமல் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீடித்திருக்க வேண்டும் என்று தங்களது நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதேவேளையில், காஷ்மீரில் உமர் அப்துல்லா ஆட்சி பொறுப்பேற்ற உடன் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்ததை தொடர்ந்து, இது உமர் ஆட்சியை கவிழ்ப்பதற்கான சதியாக இருக்குமா என்று சந்தேகத்தை எழுப்பி இருந்தார் பரூக் அப்துல்லா. ஏற்கனவே, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியதன் மூலம் காஷ்மீரி தேசிய இன உரிமையை ஒழித்த மோடி -அமித்ஷா பாசிசக் கும்பல் இத்தாக்குதல்களை சாக்காக வைத்து காஷ்மீரில் மாநில ஆட்சியை கலைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அரிய வகை தனிமங்கள் காஷ்மீரில் உள்ளதாக கண்டறியப்பட்ட பின்னர், கனிம வளங்களை அதானி – அம்பானி கார்ப்பரேட் கும்பலுக்கு தாரை வார்ப்பதற்காக இந்த முயற்சிகள் நடைபெறுகின்றனவா என்ற சந்தேகங்களும் எழுகின்றன.

தமிழ்நாட்டில் ஆளுநருக்கு எதிரான வழக்கில் மிக முக்கியமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. வக்பு சட்டத் திருத்தத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். மகாராட்டிரத்தில், இந்தி மொழியை திணிப்பதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், இந்தித் திணிப்பை தற்காலிகமாக கைவிடும் நிலைக்கு பாசிசக் கும்பல் தள்ளப்பட்டுள்ளது.

ஆக, நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசக் கும்பலுக்கு எதிரான போராட்டங்கள் உச்சம் பெறவுள்ள நிலையில், இப்பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்று உள்ளது.

ஆகவே, இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கவோ இரங்கல் தெரிவிக்கவோ பாசிச மோடி அரசுக்கு எந்த தகுதியும் இல்லை.

எனவே, நாட்டு மக்களாகிய நாம் கேள்வி எழுப்புவோம்.

இப்பயங்கரவாதத் தாக்குதலுக்கு யார் காரணம்?

அச்சுறுதல் உள்ளபோதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தாதது ஏன்?

மணிப்பூரில் தினந்தோறும் நடைபெறும் கலவரங்களுக்கு பதில் சொல்லாத மோடி, காஷ்மீருக்கு மட்டும் துடிப்பது ஏன்?

அரிய வகைத் தனிமங்கள் காஷ்மீரில் உள்ளதாக கண்டறியப்பட்டப் பின்னர், தாக்குதல்கள் ஏன் நடைபெறுகின்றன?

இந்த பயங்கரவாதத் தாக்குதல் தெரிந்தே நடைபெற்றதா அல்லது தெரிந்து அனுமதிக்கப்பட்டதா?


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க