டெல்லி லட்சுமிபாய் கல்லூரியின் முதல்வர் வகுப்பறையைக் குளிர்விப்பதாகக் கூறி சுவர்களில் மாட்டுச் சாணத்தைப் பூசியுள்ளார். அதற்கு மாணவர்கள் அவரது அறையிலேயே மாட்டுச் சாணத்தைப் பூசி எதிரிவினை ஆற்றியுள்ளனர்.
டெல்லியின் அசோக் விஹார் பகுதியில் லட்சுமிபாய் கல்லூரி அமைந்துள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஏப்ரல் 13 ஆம் தேதி அன்று கல்லூரி முதல்வர் பிரதியூஷ் வத்சாலா ”சி பிளாக்”கில் உள்ள வகுப்பறைகளின் சுவரில் மாட்டுச் சாணத்தைப் பூசியுள்ளார். இது பாரம்பரிய குளிர்விக்கும் முறை என்று கூறிய முதல்வர் மற்ற ஊழியர்களுடன் இணைந்து செயல்படுகின்ற காணொளி சமூக வலைத்தளங்களில் விரைவாகப் பரவியது.
மேலும் அந்த காணொளியை ஆசிரியர்கள் குழுவில் பகிர்ந்து “இங்கே வகுப்புகள் நடத்துபவர்கள் விரைவில் இந்த அறைகளைப் புதிய தோற்றத்தில் காண்பார்கள். உங்கள் கற்பித்தல் அனுபவத்தை இனிமையாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன,” என்று பதிவிட்டிருந்தார்.
முதல்வரின் நடவடிக்கைக்கு எதிராகப் பலரும் தங்களது எதிர்ப்புக் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். காணொளியைப் பார்த்த மாணவர்கள் தங்களது அனுமதியைப் பெறாமல் சுவர்களில் மாட்டுச் சாணம் பூசப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர். டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ரோனாக் காத்ரி (Ronak Khatri) மாணவர்களுடன் சென்று முதல்வர் அலுவலக அறையின் சுவரில் மாட்டுச் சாணத்தைப் பூசி முதல்வரின் சங்கித்தனத்திற்கு சவுக்கடி கொடுத்துள்ளார்.
அதனை தன்னுடைய ”எக்ஸ்” பக்கத்தில் பகிர்ந்த காத்ரி முதல்வரின் காணொளியைக் குறிப்பிட்டு அவரும் அவரது ஆதரவாளர்களும் முதல்வரின் அலுவலகச் சுவர்களின் சாந்து பூசுவதன் மூலம் முதல்வருக்கு ’உதவி’ செய்யச் சென்றதாகக் கிண்டலாகக் கூறியதுடன் “மேடம் இப்போது தனது அறையிலிருந்த ஏ.சி-யை அகற்றி மாணவர்களிடம் ஒப்படைப்பார். மாட்டுச் சாணம் பூசப்பட்ட இந்த நவீன மற்றும் இயற்கையான குளிர்ச்சியான சூழலில் கல்லூரியை நடத்துவார் என்று எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
படிக்க: அம்பேத்கர் பல்கலைக்கழகம்: துணைவேந்தரின் சங்கித்தனத்தைக் கேள்விகேட்ட மாணவி இடைநீக்கம்!
மாணவர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து “இது கல்லூரியின் பேராசிரியரால் நடத்தப்பட்டு வரும் ஆராய்ச்சியின் ஒரு பகுதி. ஒரு வாரம் கழித்தே ஆராய்ச்சி தொடர்பான முடிவுகளை என்னால் வெளியிட முடியும்” என்று தன்னுடைய சங்கித்தனத்தை மறைத்துக் கொண்டுள்ளார்.
மாணவர்கள் முதல்வரின் சங்கித் தனத்திற்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்தது வரவேற்கத்தக்க ஒன்றாகும். இது மற்ற கல்லூரி மாணவர்களுக்கு முன்மாதிரியாகும். கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் மாட்டுக் கோமியம் குடித்தால் நல்லது என்று தெரிவித்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க கும்பல் ஆட்சிக்கு வந்த பின்பு கல்வி நிலையங்கள் காவிமயமாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வட மாநிலங்களில் இது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கை கருத்துகளைத் திட்டமிட்டு மாணவர் மத்தியில் பரப்பி வருகின்றனர்.
அக்கருத்துகளைத் தடுப்பதற்கு முற்போக்கு, அறிவியல் கருத்துகளை மாணவர் அமைப்புகள் மாணவரிடையே கொண்டு செல்ல வேண்டும். அறிவியல், அரசியல் அறிவை வளர்க்கக்கூடிய பாடங்களைக் கல்வி நிலையங்களில் இடம் பெறச் செய்ய வேண்டும். அதன் மூலமே கல்வி நிலையங்களில் காவி கும்பலின் நடவடிக்கைகளைத் தடுக்க முடியும்.
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram