- அரசு வாழ்க்கையில் கண்டிப்பான ஒழுங்குமுறையை லெனின் புகுத்துகிறார்
கஸாக்கியர்களையும் புரட்சி விரோதிகளையும் எதிர்த்துப் போரிடுவதற்காக அப்போது எல்லாச் சாலைகள் வழியாகவும் வெள்ளமாகப் பெருகிக்கொண்டிருந்த செங்காவற்படையினருடன்4 செல்வதற்கு அனுமதிச் சீட்டு பெற வேண்டும் என்று நவம்பர் 9ந் தேதி நான் விரும்பினேன். எனது சான்றிதழ்களைக் காட்டினேன். அவற்றில் ஹில்க்விட்5 ஹூய்ஸ்மன்ஸ்6 இருவரது கையெழுத்துக்கள் இருந்தன. இவை பிரமாதமான சான்றிதழ்கள் என நான் நினைத்தேன். லெனினோ, அப்படி எண்ணவில்லை. அவை யூனியன் லீக் கிளப் போன்ற ஏதோ பூர்ஷ்வாச் சமூக நலக் கழகத்திலிருந்து வந்தவை போன்று, சுருக்கமாக “இல்லை” என்ற ஒரே சொல்லுடன் என்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்.
இது அற்ப நிகழ்ச்சியே எனினும் பாட்டாளிகளின் நிறுவனங்களில் இப்போது தோன்றியிருந்த புதிய கண்டிப்பான போக்கை இது புலப்படுத்தியது. இதற்கு முன்பு வரை பொதுமக்கள் தங்களுடைய மட்டுமீறிய இனிய பண்பையும், நல்லியல்பையும் வாரி வழங்கித் தங்களுக்கே தீங்கு செய்துகொண்டார்கள். லெனின் ஒழுங்குமுறையை நிலைநாட்ட முற்பட்டார். பட்டினி, படையெடுப்பு, பிற்போக்கு என்ற அபாயங்கள் சூழ்ந்த புரட்சியைப் பலமான, கண்டிப்புள்ள நட வடிக்கையே காப்பாற்ற முடியும் என்று அவர் அறிந்திருந்தார். எனவே போல்ஷெவிக்குகள் தாட்சண்ணியமோ தயக்கமோ இன்றித் தங்கள் நடவடிக்கைகளை அமல்படுத்தினார்கள். அவர்களுடைய பகைவர் களோ, அவர்களைத் தாக்குவதற்கு உரிய அடைமொழிகளைத் தங்கள் வசை ஆயுத சாலைகளில் துருவித் தேடினார்கள். பூர்ஷ்வாக்களின் கண்களுக்கு லெனின் எதேச்சாதிகாரியாகவும் கொடிய வன்முறைகளைக் கையாள்பவராகவும் தோற்றம் அளித்தார். அந்தக் காலத்தில் அவர்கள் அவரை முதல் அமைச்சர் லெனின் என்று குறிப்பிடுவதில்லை, “கொடுங்கோலர் லெனின்,” “சர்வாதிகாரி லெனின்” என்றே குறிப்பிட்டு வந்தார்கள். வலதுசாரி சோஷலிஸ்டுகளோ, பழைய ரொமானவ் வம்ச ஜார் இரண்டாம் நிக்கொலாயின் இடத்துக்குப் புதிய ஜார் நிக்கொலாய் லெனின் வந்திருப்பதாகக் கூறினார்கள்.
“நமது புதிய ஜார் மூன்றாம் நிக்கொலாய் நீடூழீ வாழ்க!” என்று ஏளனத்துடன் முழக்கம் இட்டார்கள்.
ஒரு குடியானவன் சம்பந்தப்பட்ட வேடிக்கை நிகழ்ச்சியை அவர்கள் களிப்புடன் பயன்படுத்திக்கொண்டார்கள். குடியானவர்கள் பிரதிநிதிகளின் சோவியத் தனது ஆதரவைப் புதிய சோவியத் அரசாங்கத்துக்கு அளித்து ஸ்மோல்னிய மாளிகையின் ஹால்களில் பிரமாதமான கொண்டாட்டம் நிகழ்த்தி அன்பு மழை பொழிந்த இரவில் நடந்தது இது. அறிவுஜீவிகள் நாட்டுப்புறத்தின் சார்பில் பேசினார்கள். பின்பு நாட்டுப்புறத்தினர் தம் சார்பில் தாமே பேச வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. குடியானவனுக்குரிய மேலங்கி அணிந்த ஒரு கிழவன் மேடைக்கு வந்தான். நரைத்த தாடியினூடாகச் சிவுசிவென்று ரோஜா நிறத்தில் காட்சி தந்தது அவன் முகம். கண்கள் பளிச்சிட்டன. நாட்டுப்புற வழக்கு மொழியில் அவன் பேசினான்.
“தவாரிஷ்ஷி”7 பதாகைகள் பறக்க, இசை முழங்க நாம் இன்று இரவு இங்கு வந்தபோது நான் பெருத்த மகிழ்ச்சி அடைந்தேன். என் கால்கள் தரையில் பரவவில்லை. நான் காற்றிலே பறந்து வந்தேன். அறியாமை இருட்டு சூழ்ந்த கிராமத்தில் வசிக்கும் இருண்ட அறிவு கொண்ட மக்களில் நானும் ஒருவன். நீங்கள் எங்களுக்கு ஒளி தந்தீர்கள். ஆனால் எங்களுக்கு அது புரியவே இல்லை. விஷயத்தைத் தெரிந்து கொண்டு வரும்படி அதனால்தான் கிராமத்தார் என்னை இங்கே அனுப்பியிருக்கிறார்கள். முன்பெல்லாம் ‘சினோவ்னிக்கி’8 ரொம்பக் கடுமையாக இருப்பார்கள். எங்களை அடிப்பார்கள். இப்போதோ அவர்கள் மிகவும் மரியாதையாக இருக்கிறார்கள். முன்பெல்லாம் நாங்கள் அரண்மனைகளின் வெளிப்புறத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. இப்போதோ நாங்கள் நேரே அவற்றுக்குள் போகலாம். முன்பெல்லாம் நாங்கள் ஜாரைப் பற்றிப் பேச மட்டுமே செய்தோம். இப்போதோ, ‘தவாரிஷ்ஷி’, நான் ஜார் லெனினுடன் நாளைக்கே கைகுலுக்கலாம் என்று எனக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. ஆண்டவன் அவருக்கு நீண்ட ஆயுள் அளிப்பாராக!”
கூட்டத்தில் வெடிச் சிரிப்பு பீறிட்டது. கரகோஷம் அதிர்ந்தது. சிரிப்பு, கைதட்டல் முழக்கங்களால் ஆச்சரியம் அடைந்து கிழக் குடியானவன் உட்கார்ந்துவிட்டான். மறுநாள் அவன் லெனினிடம் அழைத்துச் செல்லப்பட்டான். பின்பு பிரேஸ்த்லித்தோவ்ஸ்க்கில் அவன் குடியானவர்களின் பிரதிநிதியாக இருந்தான்.
குழப்பம் நிறைந்த அந்த வாரங்களில் எஃகு போன்ற சித்தவுறுதியும் எஃகு நரம்புகளுமே நிலைமையைச் சமாளித்திருக்க முடியும். கண்டிப்பான ஒழுங்கும், கட்டுப்பாடும் எல்லா இலாக்காக்களிலும் தென்பட்டன. தொழிலாளர்களின் மனப்பாங்கு கடுமையாகி விட்டதையும், சோவியத் இயந்திரத்தின் தளர்வான பகுதிகள் இறுக்கப்பட்டு விட்டதையும் காண முடிந்தது. இப்போது சோவியத் செயலில் இறங்கியபோது, உதாரணமாக பாங்கு அமைப்பைக் கைப்பற்றியபோது அது கடுமையாகவும், திறம்படவும் தாக்கியது. எங்கே சட்டெனச் செயலாற்ற வேண்டும் என்பதை லெனின் அறிந்திருந்தார். அதே சமயம் எங்கே மெதுவாகச் செல்ல வேண்டும் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. தொழிலாளர்களின் பிரதிநிதிக் குழு ஒன்று லெனினிடம் வந்து தங்கள் தொழிற்சாலையைத் தேசிய உடமையாக்கும் ஆணையை அவர் பிறப்பிக்க முடியுமா என்று கேட்டது.
“முடியுமே” என்று ஒரு வெற்று நமூனாவை எடுத்தார் லெனின். “இதில் என் பங்கு மிக எளியது. நான் செய்ய வேண்டியதெல்லாம் இந்த நமூனாக்களை எடுத்து இதோ இந்த இடத்தில் உங்கள் தொழிற்சாலையின் பெயரை எழுதி, இதோ இங்கே என் பெயரை ஒப்பமிட்டு, கமிஸாரின் பெயரை இந்த இடத்தில் எழுதுவதுதான்” என்று கூறினார். தொழிலாளர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்து அது “மிக நல்லது” என்றார்கள்.
“ஆனால் இந்த நமூனாவில் நான் கையெழுத்திடுவதற்கு முன் உங்களைச் சில கேள்விகள் கேட்க வேண்டும். முதலாவதாக, உங்கள் தொழிற்சாலைக்கு வேண்டிய கச்சாப் பொருள்களை எங்கிருந்து பெறுவது என்பதை அறிவீர்களா?” என வினவினார் லெனின். அவர்கள் தங்களுக்கு அது தெரியாது என்று வேறு வழியின்றி ஒப்புக் கொண்டார்கள்.
“கணக்கு வைத்துக் கொள்வது உங்களுக்குப் புரியுமா? உற்பத்தியைத் தொடர்ந்து நடத்துவதற்கான முறையைத் தயாரித்து வைத்திருக்கிறீர்களா?” என்று தொடர்ந்து கேட்டார் லெனின். இந்த அற்ப விஷயங்கள் பற்றித் தங்களுக்கு அதிகமாகத் தெரியாது என்று தொழிலாளிகள் கூறினார்கள்.
“கடைசியாக, தோழர்களே, உங்கள் உற்பத்திப் பொருள்களை விற்பதற்கான சந்தையைக் கண்டுபிடித்துவிட்டீர்களா?” என்று விடாது வினவினார் லெனின்.
“இல்லை” என்று அவர்கள் மீண்டும் பதில் அளித்தார்கள்.
முதலமைச்சர் சொன்னார்: “நல்லது தோழர்களே, உங்கள் தொழிற்சாலையை எடுத்துக்கொள்வதற்கு நீங்கள் இன்னும் ஆயத்தமாகவில்லை என்று உங்களுக்குப் படவில்லையா? வீடு சென்று இந்த விஷயங்களைப் பற்றி திட்டம் வகுங்கள். அது கடினமாயிருக்கும் நீங்கள் பல தவறுகள் செய்வீர்கள். ஆனால் கற்றுக் கொள்வீர்கள். பிறகு சில மாதங்கள் சென்றதும் வாருங்கள். உங்கள் தொழிற்சாலையைத் தேசிய உடைமை ஆக்குவோம்”
- லெனினது சொந்த வாழ்வில் கட்டுப்பாடான ஒழுங்குமுறை
சமூக வாழ்வில் எத்தகைய கண்டிப்பையும் கறாரையும் லெனின் புகுத்தினாரோ அதையே சொந்த வாழ்விலும் அவர் காட்டினார். ஷ்சியும் (முட்டைக் கோசு சூப்), போர்ஷ்சும் (காரட் சூப்), ரொட்டித் துண்டுகளும் தேநீரும் பொங்கலுமே ஸ்மோல்னிய கூட்டத்தினரின் தினப்படிச் சாப்பாட்டின் அம்சங்களாக விளங்கின. லெனினும் அவருடைய மனைவியும் சகோதரியும் இவற்றையே உணவாகக் கொண்டார்கள். புரட்சி வீரர்கள் தங்கள் இடங்களில் நாள்தோறும் பனிரண்டு முதல் பதினைந்து மணி நேரம் வரை உழைத்தார்கள். லெனினோ, தினந்தோறும் பதினெட்டு முதல் இருபது மணி வரை வேலை செய்தார். நூற்றுக்கணக்கான கடிதங்களைத் தன் கைப்பட எழுதினார். வேலையில் ஒரேயடியாக ஆழ்ந்து, மற்ற எல்லாவற்றையும் சொந்த ஆகாரத்தைக் கூட அவர் மறந்துவிடுவார். லெனின் உரையாடலில் ஈடுபட்டிருக்கையில் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவருடைய மனைவி ஒரு கிளாஸ் தேநீருடன் வந்து “இந்தாருங்கள், ‘தவாரிஷ்’ இதைப் பருக மறந்துவிடாதீர்கள்” என்பாள். பெரும்பாலும் தேநீர் சர்க்கரை அற்றதாகவே இருக்கும். ஏனெனில் மற்ற மக்களுக்குக் கிடைத்த அளவே ரேஷன் லெனினும் பெற்று வந்தார். படை வீரர்களும் அஞ்சல்காரர்களும் பெரிய, வெற்றான, பாரக்குகள் போன்ற அறைகளில் இரும்புக் கட்டில்களில் படுத்து உறங்கினார்கள். லெனினும் அவருடைய மனைவியும் அவ்வாறே செய்தார்கள். களைத்துச் சோர்ந்து போய், கரடுமுரடான கட்டில்களில் விழுந்து உடைகளைக்கூட மாற்றாமல் அவர்கள் உறங்கிப் போவார்கள். எந்த அவசர நிலைமையிலும் எழுந்திருப்பதற்கு ஆயத்தமாக இந்தத் தியாகங்களை லெனின் மேற்கொண்டது துறவு மனப்பான்மை காரணமாக அல்ல. கம்யூனிஸத்தின் முதல் கோட்பாட்டை அவர் நடப்பில் அனுசரித்தார், அவ்வளவுதான்.
எந்தக் கம்யூனிஸ்ட் அதிகாரியின் சம்பளமும் சராசரித் தொழிலாளியின் சம்பளத்தைவிட அதிகமாக இருக்கக் கூடாது என்பது இந்தக் கோட்பாடுகளில் ஒன்று. அதிகபட்சம் மாதத்துக்கு 600 ரூபிள்கள் என அது நிச்சயிக்கப்பட்டது. பிற்பாடு இது உயர்த்தப்பட்டது. தற்போது ருஷ்யாவின் முதலமைச்சர் 200 டாலர்களுக்கும் குறைவான தொகையே மாதச் சம்பளமாகப் பெறுகிறார்.
“நேஷனல்” ஹோட்டலில் இரண்டாவது மாடியில் லெனின் ஓர் அறை எடுத்துக்கொண்டபோது நான் அந்த ஹோட்டலில் இருந்தேன். சோவியத் அரசாங்கம் செய்த முதல் வேலை ஆடம்பரமான, மிகுந்த விலையுள்ள வெஞ்சன வகைகளை ரத்து செய்ததுதான். ஒரு வேளைச் சாப்பாட்டில் அடங்கியிருந்த பற்பல வெஞ்சனங்கள் இரண்டாகக் குறுக்கப்பட்டன. சூப்பும் இறைச்சியும் அல்லது சூப்பும் பொங்கலும் ஒருவர் சாப்பிடலாம். முதன்மைக் கமிஸாரிலிருந்து சமையலறை வேலைக்காரப் பையன் வரை எந்த நபருக்கும் ஒரு வேளையில் கிடைக்கக்கூடியவை இவைதாம். ஏனென்றால், “எல்லோருக்கும் ரொட்டி கிடைக்கும் வரை ஒருவருக்கும் கேக் கிடையாது” என்று கம்யூனிஸ்டின் கொள்கையில் எழுதப்பட்டிருக்கிறது. சில நாட்களில் ரொட்டிகூட மக்களுக்கு மிகக் கொஞ்சமே கிடைத்தது. எனினும் ஒவ்வொரு மனிதனும் லெனின் பெற்ற அளவு ரொட்டி பெற்றான். சிற்சில நாட்களில் ரொட்டியே இருக்காது. அந்த நாட்களில் லெனினும் ரொட்டி இல்லாமல் இருந்து விடுவார். லெனினைக் கொல்ல முயற்சி செய்யப்பட்டதை அடுத்த நாட்களில் அவர் சாவுக்கு அருகே இருந்தபோது முறையான ரேஷன் கார்டு மூலம் பெற முடியாததும் மார்க்கெட்டில் யாரேனும் கள்ள வியாபாரியிடமிருந்து மட்டுமே வாங்கக்கூடியதுமான ஒரு உணவுப் பண்டத்தை அவர் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். நண்பர்கள் எவ்வளவோ மன்றாடியும் முறையான ரேஷனின் பகுதி அல்லாத எதையும் தொடுவதற்கு லெனின் மறுத்துவிட்டார்.
பிற்பாடு லெனின் உடல் தேறிக்கொண்டிருந்த காலத்தில் அவரது ஊட்டத்தை அதிகரிப்பதற்கு அவருடைய மனைவியும் சகோதரியும் ஒரு யுக்தி கண்டுபிடித்தார்கள். லெனின் தமது ரொட்டியை மேஜையின் செருகறையில் வைப்பதைக் கண்ட அவர்கள் அவர் இல்லாத வேளைகளில் அவருடைய அறைக்குள் ஓசைப்படாமல் வந்து அவருடைய சேமிப்பில் ஒரு துண்டு ரொட்டியைச் சேர்த்து விடுவார்கள். வேலையில் ஆழ்ந்திருக்கும் லெனின் செருகறைக்குள் கையை விட்டு ஒரு துண்டு ரொட்டியை கண்டு அது அதிகப்படியானது என்ற உணர்வே இன்றித் தின்பார்.
ஐரோப்பிய, அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு ஒரு கடிதத்தில் லெனின் பின்வருமாறு எழுதினார்: “ஆந்தாந்த்9 இராணுவத் தலையீடு காரணமாகத் தற்போது ருஷ்ய மக்களுக்கு விதிக்கப்பட்டிருப்பது போன்ற இவ்வளவு ஆழ்ந்த துன்பம், பட்டினியின் இத்தகைய வேதனை அவர்கள் முன் ஒருபோதும் அனுபவித்ததில்லை!” ஆனால் எந்த மக்களைப் பற்றி அவர் எழுதுகிறாரோ அவர்களுடன் சேர்ந்து அதே துன்ப துயரங்களை லெனினும் அனுபவித்து வந்தார்.
லெனின் ஒரு மாபெரும் நாட்டின் வாழ்க்கையைச் சூதாட்டத்தில் பணயம் வைப்பதாகவும் ருஷ்யாவின் நோயுற்ற உடல் மீது தமது கம்யூனிஸச் சூத்திரங்களைச் சோதனை செய்து பார்க்கும் சோதனையாளர் அவர் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் இந்தச் சூத்திரங்கள்பால் நம்பிக்கை குறைந்தவர் என்று அவரை யாரும் குறை கூற முடியாது. இவற்றை அவர் ருஷ்யாவின் மீது மட்டுமே அல்ல, தம் மீதும் சோதனை செய்து பார்க்கிறார். மற்றவர்களுக்குக் கொடுக்கும் தமது மருந்தைத் தாமும் சாப்பிட அவர் தயாராயிருக்கிறார். கம்யூனிஸக் கோட்பாடுகளுக்குத் தொலைவிலிருந்து அஞ்சலி செலுத்துவது ஒரு விஷயம். கம்யூனிஸம் புகுத்தப்படுவதனால் இன்றியமையாது ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை நிகழ்ச்சிக் களத்தில் லெனின் போன்று பொறுமையுடன் அனுபவிப்பது பெரிதும் வேறு விஷயம்.
ஆனால் கம்யூனிஸ அரசைத் தொடங்கி வைப்பது முற்ற முழுக்கத் துயர் நிறைந்ததாகச் சித்திரிக்கப்படக் கூடாது. மிக மிகக் கஷ்டம் நிரம்பிய காலத்தில்கூட ருஷ்யாவில் கலையும் இசை நாடகமும் செழித்து வளர்ந்தன. காதலும் தன் பங்கை ஆற்றத்தான் செய்தது. புரட்சி மன்றத்தின் பிரதானப் பாத்திரங்களைக்கூட அது பற்றிவிட்டது. பல துறைகளில் திறமை சான்ற கொலன்தாய்10 கடற்படை வீரர் தீபேன்கோவை மணந்துகொண்டார் என்று திடீரென ஒருநாள் செய்தி கிடைத்ததும் நாங்கள் வியப்பில் ஆழ்ந்தோம். பின்னர் நார்வா என்னும் இடத்தில் ஜெர்மானியருக்கு எதிரே பின்வாங்கத் தன் படைப்பிரிவுக்கு உத்தரவிட்டதன் பொருட்டு தீபேன்கோ கண்டனத்துக்கு ஆளானார். பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் அவர் அவமதிப்புடன் அகற்றப்பட்டார். இந்த நடவடிக்கைக்கு லெனின் ஏற்பு அளித்தார். கொலன்தாய் இயல்பாகவே மனத்தாங்கல் அடைந்தார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் கொலன்தாயுடன் பேசுகையில் அதிகார நஞ்சு லெனினுடைய இரத்த நாளங்களில் புகுந்து அவருடைய ஆணவத்தை ஒரேயடியாக உப்பச் செய்துவிட்டது போலும். எல்லா மனிதர்களையும் போன்றே அவரும் அதிகார வெறிக்கு ஆளாகிவிட்டார் போலும் என்று நான் குறிப்பிட்டேன். “இப்போது எனக்கு மனக்கசப்பு ஏற்பட்டிருக்கிறது எனினும் எந்தக் காரியத்தையும் லெனின் சொந்த நோக்கங்களால் தூண்டப்பட்டுச் செய்திருப்பார் என்று பல ஆண்டுகள் வேலை செய்துள்ள தோழர்களில் எவரும் அவரிடம் சுயநலம் துளிக்கூட இருப்பதாக நம்ப முடியாது” என்று பதிலளித்தார் கொலன்தாய்.
4. தொழிலாளர்களால் ஆன செங்காவற்படைப் பிரிவுகள் 1905-07இல் நடந்த முதல் ருஷ்யப் புரட்சியின்போது முதன்முதலாக உருவாயின. 1917இன் முடிவிலும் 1918இன் தொடக்கத்திலும் போல்ஷெவிக்குகளால் தலைமை தாங்கி நடத்தப் பெற்ற இந்தப் பிரிவுகள் புரட்சி எதிர்ப்பை முறியடிக்கும் போராட்டத்தில் மிகப்பெரிய பங்கு ஆற்றின. 1918, ஆகஸ்ட் இறுதியில் செங்காவற்படைப் பிரிவுகள் செஞ்சேனையாக ஒன்றாக்கப்பட்டன.
5. ஹில்க்விட் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சோஷலிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவர். இரண்டாவது இன்டர்நேஷனலில் ஊக்கத்துடன் செயலாற்றிய சீர்திருத்தவாதி.
6. ஹூய்ஸ்மன்ஸ் பெல்ஜிய சோஷலிஸ்ட், இரண்டாவது இன்டர்நேஷனலில் துடியாகச் செயலாற்றியவர்.
7. தோழர்களே என்று பொருள்படும் ருஷ்யச் சொல். (மொ-ர்). 1918, மார்ச் 3ஆம் தேதி பிரேஸ்த்லித்தோவ்ஸ்க்கில் சமாதான உடன்பாடு கையெழுத்தாகியது. ஒருபுறம் சோவியத் ருஷ்யாவுக்கும், மறுபுறம் ஜெர்மனி ஆஸ்திரியஹங்கேரி பல்கேரியா, துருக்கி ஆகிய நாடுகளுக்கும் இடையே இந்த உடன்பாடு செய்யப்பட்டது. இதன் நிபந்தனைகள் கடுமையாக இருந்தபோதிலும், சோவியத் ஆட்சியை வலுப்படுத்தவும் நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் சமாதானம் இன்றியமையாதிருந்ததால் சோவியத் அரசு இந்த உடன்பாட்டைச் செய்து கொண்டது.
8. அதிகாரிகள் என்று பொருள்படும் ருஷ்யச் சொல் (மொ-ர்).
9. “ஆந்தாந்த்” என்பது ஒரு ஏகாதிபத்தியக் கூட்டணி அக்டோபர் புரட்சிக்கு முன் ருஷ்யா இதில் ஒரு உறுப்பினராக இருந்தது. அக்டோபர் புரட்சிக்குப் பின் இந்தக் கூட்டணியின் பிரதான உறுப்பினர்களாகிய பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஜப்பான் ஆகியவை சோவியத் ருஷ்யாவை எதிர்த்து இராணுவத் தலையீட்டை ஒழுங்கமைத்தன. பிற நாடுகளில் புரட்சி இயக்கத்தைத் தோற்கடிப்பதையும் ஊக்குவித்தன.
10. கொலன்தாய் அமி (1872-1952) – அக்டோபர் புரட்சியில் தீவிரப் பங்கு ஆற்றியவர். புரட்சிக்குப் பின் சில ஆண்டுகள் கமிஸாராக இருந்தார். சர்வதேச மாதர் இயக்கத்தில் ஊக்கத்துடன் பங்காற்றினார். நார்வே, மெக்ஸிக்கோ, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் சோவியத் அரசாங்கத் தூதராகப் பணியாற்றினார்.
(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram