பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் நீண்ட போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆளும் வர்க்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அம்மக்களின் போராட்டம் ஏப்ரல் 20 அன்று ஆயிரம் நாட்களைத் தொட்டுள்ளது.
காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க ஒன்றிய மோடி அரசும் தமிழ்நாடு தி.மு.க அரசும் முயன்று வருகிறது. இதற்காக பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் 5,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ஏகனாபுரம், நாகப்பட்டு உள்ளிட்ட கிராமங்கள் மொத்தமாக இத்திட்டத்துக்காகக் கையகப்படுத்தப்பட உள்ளன.
சென்னையைச் சுற்றிலும் பல விவசாயம் அல்லாத நிலப்பகுதிகள் இருக்கும்போது தங்களது கிராமங்களையும் விவசாய நிலங்களையும் அழித்து விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரத்தை மையமாக வைத்து 2022 ஆம் ஆண்டு முதல் அப்பகுதி மக்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக 2024 நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்தது, ஆந்திராவிற்கு அகதிகளாகத் தஞ்சம் புகுவதாக அறிவித்தது என இரண்டாண்டுகளுக்கும் மேலாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆனால் மக்களின் போராட்டத்தைத் துளியும் கண்டுகொள்ளாத தி.மு.க அரசு தொடர்ந்து விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது. அதன் விளைவாக கடந்த ஆண்டு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடமிருந்து இடத்தேர்வுக்கான ஒப்புதலைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று விமான நிலையம் அமைக்கும் திட்ட அனுமதிக்கான கொள்கை அளவிலான ஒப்புதலையும் மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகம் வழங்கியுள்ளது.
ஒரு விமான நிலையம் அமைப்பதற்கு இட அனுமதி, திட்ட அனுமதி மற்றும் கட்டுமானம் முடிந்த பிறகு அதைச் செயல்படுத்துவதற்கான அனுமதி என மூன்று வகை அனுமதியை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் பெற வேண்டும். ஆனால் தற்போது இரண்டு அனுமதி கிடைத்த நிலையில், விமான நிலையம் அமைப்பதற்கான பணியை மேற்கொள்ளும் கூட்டு நிறுவனத்தைத் தேர்வு செய்கின்ற பணியை டிட் கோ விரைவில் தொடங்க உள்ளது என்கிற செய்தி வெளியாகி உள்ளது.
அதற்காக பர்ந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் விமான நிலையத்திற்கான 5,300 ஏக்கரில் 3,750 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். நிலம் கையகப்படுத்துதல் முடிந்தவுடன் பரந்தூர் விமான நிலையத்திற்கான முதல் கட்டத்தை 2026 ஜனவரியில் தொடங்கி 2028 இல் முடிக்கத் திட்டமிட்டுள்ளது தி.மு.க அரசு.
படிக்க: பரந்தூர் மக்கள் போராட்டம்: 1000-ஆவது நாள் | கண்டுகொள்ளாத திமுக அரசு | தோழர் ரவி
இந்நிலையில்தான் தங்களின் விளைநிலங்களை அழித்து விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான மக்களின் போராட்டம் ஆயிரம் நாட்களைக் கடந்துள்ளது. மக்களின் இந்த போராட்ட உணர்வு அனைவராலும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
போராட்டம் குறித்து ஏகனாபுரத்தைச் சேர்ந்த எஸ்.டி. கதிரேசன் கூறுகையில், “1,000 நாட்களாகப் போராட்டம் நடத்தி வரும் நாங்கள் எந்த விலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இந்தப் போராட்டத்தைத் தொடர்வோம்; சுற்றுச்சூழலை அழிக்கும் இந்தத் திட்டத்திற்காக எங்கள் நிலங்களையும் வீடுகளையும் கையகப்படுத்த விடமாட்டோம். இங்குள்ள மக்கள் கடந்த 1,000 நாட்களாக இயல்பு வாழ்க்கையை வாழ முடியாமல் அச்சத்தில் உள்ளனர்” என்று தங்களின் வாழ்நிலையை வலியுடன் தெரிவித்துள்ளார்.
ஏகனாபுரம் கிராம மக்கள் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களுக்காக மட்டும் போராடவில்லை. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்கு அனைத்து பகுதி மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.
மக்களின் போராட்டங்கள் குறித்த செய்திகளை ஆளும் வர்க்க ஊடகங்கள் திட்டமிட்டு வெளியிடுவதில்லை. தி.மு.க கூட்டணிக் கட்சிகள் தி.மு.க அரசின் கார்ப்பரேட் நடவடிக்கைகளை எதிர்த்து கேள்வி எழுப்ப வேண்டும்; அதன் கார்ப்பரேட் நலத் திட்டங்களைப் பொதுவெளியில் அம்பலப்படுத்த வேண்டும்.
மறுபுறம் ஏகனாபுரம் கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டத்திற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஆதரவு அளிக்க வேண்டும். இப்போராட்டம் தி.மு.க அரசைப் பணிய வைத்து பரந்தூர் விமான நிலைய திட்டத்தைக் கைவிடுவதை நோக்கி வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram