5. கம்யூனிஸ நடைமுறை மக்களை சோவியத்துக்கள் தரப்பில் ஒன்றுதிரட்டுகிறது
பூர்ஷ்வா வெளியீடுகளில் லெனின் இதற்கு நேர் எதிராகவே சித்திரிக்கப்பட்டார். கொடும் பேயின் அவதாரம், தன்னலம் படைத்த, எல்லாவற்றையும் பறித்துக்கொள்ளும் அரக்கர் என்றே அவர் வருணிக்கப்பட்டார். எனினும் பொய்களின் இந்தப் போர்வைக்கு உள்ளிருந்து உண்மை லெனின் கொஞ்சங்கொஞ்சமாக வெளிப் பட்டார். லெனினும் அவரது கூட்டாளிகளும் மக்களுடன் அற்ப உணவைப் பகிர்ந்துகொள்கிறார்கள் என்ற செய்தி ருஷ்யாவில் பரவியதும், வெகுஜனங்கள் அவர்கள் தரப்பில் ஒன்று திரண்டு விட்டார்கள்.
தனது அற்ப ரேஷனைப் பற்றி முணுமுணுக்க விரும்பும் உரால் பிரதேசச் சுரங்கத் தொழிலாளி, உணவு, துணிமணி, இருப்பிடம் ஆகியவற்றின் பொதுச் சேமிப்பிலிருந்து ஒவ்வொருவரும் சமபங்கே பெறுகிறார் என்பதை நினைவுபடுத்திக்கொள்கிறான். அப்படியிருக்கையில் தனது கறுப்பு ரொட்டித் துண்டைக் குறித்து அவன் முணுமுணுப்பானேன்? என்ன ஆனாலும் இந்த ரொட்டித் துண்டு, அளவில் லெனினுக்குக் கிடைப்பது போன்றதேதான். பட்டினி வேதனையுடன் அநீதியால் உண்டாகும் எரிச்சலூட்டும் வேதனையும் சேர்ந்துகொள்வதில்லை.
வோல்கா ஆற்றிலிருந்து வீசும் கடுங்குளிர் காற்றில் விறைத்து நடுங்கும் குடியானவப் பெண்ணுக்கு ஜாரின் இடத்திற்கு வந்துள்ள மனிதர் பற்றி அனேகமாக ஒன்றும் தெரியாது. ஆனால் அடிக்கடி அவர் வெப்பமூட்டப் பெறாத அறையிலேயே வேலை செய்கிறார் என்று அவள் கேள்விப்படுகிறாள். இப்போது அவள் குளிரால் வருந்தினாலும் வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளால் துன்புறுவதில்லை.
நீஷ்னிய் நகரத்து எஞ்சினியர் அறுநூறு ரூபிள் மாதச் சம்பளம் தன் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அறவே போதாது என்பதைக் கண்டு மனக்கசப்பு அடையத் தொடங்குகிறான். கிரெம்ளினில் உள்ள மனிதர் இதைவிட அதிகச் சம்பளம் பெறுவதில்லை என்பது அப்புறம் அவன் நினைவுக்கு வருகிறது. இந்த எண்ணத்தால் அவனது குரோதம் அகன்றுவிடுகிறது.
நேச நாட்டினரின் பீரங்கிக் குண்டுகளுக்கு எதிர் நிற்கும் சோவியத் படைவீரன், பின்னணியில் இருந்தபோதிலும் லெனினும் குண்டுத் தாக்குதலுக்கு எதிர் நிற்கிறார் என்பதை அறிவான். ஏனெனில் ருஷ்யாவில் மற்ற எல்லாவற்றையும் போலவே அபாயமும் சமூக உடைமை ஆக்கப்பட்டுவிட்டது. அதனால் பாதிக்கப்படாதவர் ஒருவரும் இல்லை. பின்னணியில் கொல்லவும் காயப்படுத்தவும் பட்ட சோவியத் தலைவர்களின் சதவிகிதம் முனைமுகத்தில் கொல்லவும் காயப்படுத்தவும் பட்ட சோவியத் படைவீரர்களின் சதவிகிதத்தை விஞ்சிவிட்டது. லெனினது உடலில் கொலைகாரர்களின் குண்டுகள் இரு முறை பாய்ந்திருக்கின்றன. உரீத்ஸ்கியும்11 வொலதார்ஸ்க்கியும் டஜன் கணக்கான மற்றவர்களும் கொலை செய்யப்பட்டார்கள். எனவே செம்படை வீரனின் கண்களுக்கு லெனின் போரிலிருந்து ஒதுங்கித் தனிமையில் வாழ்பவர் அல்ல, போராட்ட நடவடிக்கையின் ஆபத்துக்களையும், கஷ்டங்களையும் பகிர்ந்துகொள்ளும் முனைமுகத் தோழர், எனவே படுகிறார்.
புல்லிட் என்பவரால் தயாரிக்கப்பட்ட, ருஷ்யாவுக்குச் சென்ற அமெரிக்க தூதுகோஷ்டியின் அறிக்கை பின்வருமாறு கூறுகிறது:
“இன்று லெனின் அநேகமாகத் தீர்க்கதரிசியாகவே மதிக்கப்படுகிறார். வழக்கமாகக் கார்ல் மார்க்ஸின் படத்தோடுகூட அவருடைய படம் எங்கும் தொங்குகிறது. நான் லெனினைக் காணச் சென்றபோது, குடியானவர்களின் பிரதிநிதிக் குழு ஒன்று அவருடைய அறையிலிருந்து வெளியேறும் வரை நான் சில நிமிடங்கள் காத்திருக்க நேர்ந்தது. தோழர் லெனின் பட்டினி கிடப்பதாக அவர்கள் தங்கள் கிராமத்தில் கேள்விப்பட்டார்களாம். லெனினுக்கு கிராமத்தின் பரிசாக எண்ணூறு “பூட்”12 தானியத்தை எடுத்துக்கொண்டு நூற்றுக்கணக்கான மைல்கள் பயணம் செய்து அவர்கள் வந்திருந்தார்கள். அவர்களுக்குச் சற்று முன்னர் குடியானவர்களின் இன்னொரு பிரதிநிதிக் குழு லெனினிடம் வந்திருந்ததாம். தோழர் லெனின் வெப்பமூட்டப் பெறாத அறையில் வேலை செய்வதாக அவர்கள் கேள்விப்பட்டார்களாம். ஒரு கணப்பையும் அதை மூன்று மாதங்கள் சூடுபடுத்தப் போதுமான விறகையும் எடுத்துக்கொண்டு வந்தார்களாம். இம்மாதிரிப் பரிசுகள் பெறும் ஒரே தலைவர் லெனின் மட்டுமே. அவர் அவற்றைப் பொதுச் சேமிப்பில் சேர்த்து விடுகிறார்”.
பொதுச் செல்வத்தையும் பொது வறுமையையும் ஒரே மாதிரிப் பகிர்ந்துகொண்டது முதலமைச்சரிலிருந்து பரம ஏழைக் குடியானவன் வரையில் அனுதாபம் என்ற பொது உறவை ஏற்படுத்திவிட்டது. இதனால் சோவியத் தலைவர்களுக்கு மக்களின் ஆதரவு மேலும் மேலும் அதிகமாகக் கிடைத்தது.
6. கம்யூனிஸ நடைமுறை மக்களின் நாடித்துடிப்பை அறிய லெனினுக்கு உதவுகிறது
மக்களுக்கு அவ்வளவு அருகில் வாழ்ந்தமையால் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பொதுஜன உணர்ச்சியின் ஏற்றத்தையும் இறக்கத்தையும் அறிந்திருந்தார்கள்.
மக்களின் உணர்ச்சிகளையும், மனப்பாங்கையும் அறிவதற்காக ஒரு விசாரணைக் குழுவை அனுப்புவது லெனினுக்குத் தேவைப்படவில்லை. உணவில்லாமல் சமாளிக்கும் மனிதன் பசித்த மனிதனின் மனநிலையை வெறுமே ஊகிக்க வேண்டியது இல்லையே. அவன் இதை அறிவான். மக்களுடன் சேர்ந்து பட்டினி கிடந்து, மக்களுடன் சேர்ந்து குளிரால் விறைத்த லெனின் அவர்களுடைய உணர்ச்சிகளை உணர்ந்தார், அவர்களுடைய எண்ணங்களை எண்ணினார், அவர்களுடைய விருப்பங்களை வெளியிட்டார்.
இந்த முறையிலேயே, அதாவது, பொது மக்களின் எண்ணங்களை நேரடியாகப் பிரதிபலிக்கும் சாதனமாகவும் அவற்றை வெளியிடும் ஒலிக்கருவியாகவுமே, தான் செயல்படுவதாகக் கம்யூனிஸ்ட் கட்சி உரிமை கொண்டாடுகிறது.
கம்யூனிஸ்டுகள் சொல்கிறார்கள்: “சோவியத்துக்களை நாங்கள் உண்டாக்கவில்லை. மக்களின் வாழ்க்கையிலிருந்து அவை தாமே உதித்தன. நாங்கள் ஒரு செயல்திட்டத்தை எங்கள் மூளையில் உருவாக்கி, பிறகு அதை வெளியில் எடுத்து மக்கள் மேல் ஒட்டி வைக்கவில்லை. மாறாக நேரே மக்களிடமிருந்தே நாங்கள் எங்கள் செயல்திட்டத்தை எடுத்துக்கொண்டோம். ‘நிலம் குடியானவர்களுக்கு’, ‘தொழிற்சாலைகள் தொழிலாளர்களுக்கு’, ‘சமாதானம் உலகம்முழுவதற்கும்’ என்று மக்கள் கோரி வந்தார்கள். இந்தக் கோஷங்களை எங்கள் பதாகைகள் மீது பொறித்துக்கொண்டு மக்களுடன் சேர்ந்து அணிநடை நடந்து அதிகாரப் பீடத்தில் அமர்ந்தோம். மக்களைப் புரிந்துகொள்வதில்தான் எங்கள் வலிமை அடங்கியுள்ளது. உண்மையில் நாங்கள் மக்களைப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. நாங்களேதாம் மக்கள்”. இது சாதாரணத் தலைவர்களின் விஷயத்தில் நிச்சயமாக உண்மை. பெத்ரோகிராதில் நாங்கள் முதன்முதல் சந்தித்த ஐந்து கம்யூனிஸ்டுகள் போலவே இவர்கள் மக்களின் உடலும் உயிருமாகத் திகழ்ந்தார்கள்.
ஆனால் லெனின் போன்ற அறிவாளிகளோ? அவர்கள் எப்படி மக்களின் பெயரால் பேச முடியும்? வெகுஜனங்களின் உணர்ச்சிகளையும், சிந்தனைகளையும் அவர்கள் எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? அவர்களால் முடியவே முடியாது என்பதுதான் இதன் பதில். இதில் சந்தேகமே இல்லை. ஆனால் இன்னொரு விஷயமும் இவ்வளவே நிச்சயமானது. தல்ஸ்த்தோய்13 காட்டியதுபோல, மக்களின் வாழ்க்கையை வாழ்பவன் மக்களுடைய போராட்டங்களிலிருந்து தனித்து ஒதுங்கியிருப்பவனைவிட அவர்களை நெருங்கி அறிகிறான் என்பதே அது.
தமது எதிரிகளுக்கு இல்லாத ஒரு பெரிய நல்வாய்ப்பு லெனினுக்குக் கிடைத்திருந்தது. உரால் பிரதேசச் சுரங்கத் தொழிலாளி, வோல்கா பிரதேசக் குடியானவன், அல்லது சோவியத் படைவீரனுடைய உணர்ச்சிகளை அவர் வெறுமே அனுமானிக்க வேண்டியிருக்கவில்லை. அவர் அவற்றை அறிந்திருந்தார், ஓரளவு ஏறத்தாழ, நிச்சயமாக அவருடைய அனுபவங்களும் ஆகும். எனவே, எதிரிகள் இருட்டில் தட்டித்தடவிக் கொண்டிருந்த போது, லெனின் விஷயத்தை நன்கு அறிந்தவருக்கு உரிய நிச்சயத்துடன் விரைவாக முன்னேறினார்.
சோவியத் தலைவர்களால் கம்யூனிஸம் நடைமுறையில் மேற்கொள்ளப்பட்டது. சோவியத் அரசாங்கத்துக்கு ஆதரவாக வலிமையைத் திரட்டுவதற்கான ஆற்றல்மிக்க காரணிகளில் ஒன்றாகும். ருஷ்யாவுக்கு வெளியே இந்த உண்மை ஒன்று கவனிக்காமல் விடப்பட்டது, அல்லது குறைத்து மதிப்பிடப்பட்டது. ஆனால் லெனின் இதைக் குறைத்து மதிப்பிடவில்லை. கம்யூனிஸத்தை நடைமுறையில் மேற்கொள்வதே பாட்டாளி வர்க்க ராஜதந்திரிகள் கடைப்பிடிக்க வேண்டிய ஒரே உண்மையான வழி என்பதை அவர் அரசும் புரட்சியும் என்ற நூலில் விளக்கியிருக்கிறார். இது கடினமான வழி இதைப் பின்பற்றுவோர் அரிதாகச் சிலரே.
11. உரீத்ஸ்கிய், மி. ஸெ. (1873-1918) அக்டோபர் புரட்சியில் ஊக்கத்துடன் பங்காற்றியவர். பெத்ரோகிராத் ச்செக்காவின் (புரட்சி எதிர்ப்பு, மறைமுக நாசவேலை, கள்ள வியாபாரம் ஆகியவற்றை ஒடுக்குவதற்கான அகில ருஷ்யக் கமிஷன்) தலைவர் என்ற முறையில் பிற்போக்கை எதிர்த்துத் தீர்மானமான போராட்டம் நடத்தினார். 1918, ஆகஸ்ட் 30ந் தேதி புரட்சி எதிர்ப்பாளர்களால் கொல்லப்பட்டார்.
12. பூட் என்பது 16.38 கிலோகிராம் கொண்ட ருஷ்ய எடை (மொ-ர்).
13. தல்ஸ்தோய், லே. நி (1828-1910) மாபெரும் ருஷ்ய எழுத்தாளர்.
(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram