ஐரோப்பியாவில் தோன்றிய முதலாளித்துவப் பொருளாதாரமே முதலாளித்துவ ஜனநாயகக் கட்டமைப்பை உருவாக்கியது என்பது வரலாறு. ஆனால், இரு நூற்றாண்டு காலத்தில், ஏகாதிபத்தியமாக மாறிய முதலாளித்துவத்திற்கும், அதன் கட்டற்ற சுரண்டலுக்கும் ஜனநாயக முகமூடி தேவையற்றதாக மாறிவிட்டது. அதன் பிரதிபலிப்பே இத்தாலி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும், இந்தியாவிலும் பாசிச சக்திகள் ஆட்சிக்கு வந்திருப்பதும், பல நாடுகளில் பாசிச சக்திகள் தேர்தல்களில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு செலுத்தத் தொடங்கியிருப்பதுமாகும்.
குறிப்பாக, உலகப் பொருளாதார பெருமந்தத்தின் தாக்கம், கோவிட் பெருந்தொற்று, உக்ரைன் – ரஷ்யப் போர் ஆகியவற்றால் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. உக்ரைன் போரால், எரிவாயு, தானியங்கள், பெட்ரோல் ஆகியவற்றிற்காக ரஷ்யாவை நம்பியிருந்த இந்நாடுகளில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. உக்ரைன் போருக்காக பல லட்சம் கோடி ரூபாய்களை வாரியிறைத்துள்ளன ஐரோப்பிய நாடுகள். பல நிறுவனங்கள் தங்களது இடத்தை மாற்றிக் கொண்டுள்ளன. இதன்விளைவாக, மக்களின் வாழ்வாதாரம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. உக்ரைன் போருக்கு எதிராக ஐரோப்பிய நாட்டு மக்களின் போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளன. இச்சூழலில், இந்நாடுகளில் உள்ள தீவிர வலதுசாரிகள் புலம்பெயர் தொழிலாளர் பிரச்சினையை கையிலெடுத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். போலி சோசலிசவாதிகளே புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வெளிப்படையாக ஆதரவளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ருமேனியாவில் தீவிர வலதுசாரிகள் ஆட்சியைக் கைப்பற்றும் அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளனர். நேட்டோவின் இணைப்பு நாடான ருமேனியா, உக்ரைனுடன் 640 கி.மீ. எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. உக்ரைன் போரால், கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ருமேனியாவில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்திருக்கிறது. இந்நாட்டில் உள்ளவர்கள் பெரும்பாலும் பிரான்ஸ், ஜெர்மனி போன்ற அண்டை நாடுகளில் புலம்பெயர் தொழிலாளர்களாக உள்ளனர். இந்நாட்டில் 19 மில்லியன் மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.
மேலும், உக்ரைன்-ரஷ்யப் போரினால், உக்ரைனிலிருந்து தானியங்களை ஏற்றுமதி செய்ய முடியாத சூழல் நிலவுவதால் ருமேனியாவின் கான்ஸ்டண்டா துறைமுகம் வழியாக உக்ரைனின் தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உக்ரைன் தானியங்களுக்கான போக்குவரத்து மையமாக ருமேனியா மாறியுள்ளது.
எனவே, உக்ரைன் தானியங்களால் ருமேனியா விளைபொருட்களுக்கு விலை கிடைக்காதது; குறைந்த விலைக்கு உணவுப் பொருள்கள் இறக்குமதி; அதிகரிக்கும் செலவுகள் ஆகியவற்றால் ருமேனிய விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகுகின்றனர். இதற்கு எதிராக விவசாயிகள் கடந்த ஜனவரி மாதம் ருமேனிய தலைநகர் புக்கரெஸ்ட் உட்பட பல இடங்களில் சாலை மறியல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ருமேனியாவில் கடந்த நவம்பர் 2024-இல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. ருமேனியா தேர்தல் முறைப்படி, போட்டியிடும் வேட்பாளர்களில் 50 சதவிகிதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெறுபவரே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார். முதல் சுற்றில் ஜனாதிபதிக்குரிய வாக்கு சதவிகிதத்தை யாரும் பெறவில்லையென்றால் இரண்டாவது சுற்றுத் தேர்தல் நடைபெறும்.
அந்தவகையில், 2024 நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தீவிர வலதுசாரியும், ரஷ்ய ஆதரவாளரும், சுயேட்சை வேட்பாளருமான கலின் ஜார்ஜஸ்கு என்பவர் 37.2 சதவிகித வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றார். ருமேனியாவின் “சமூக ஜனநாயகக் கட்சியின்” (PSD) தலைவர் மார்செல் சியோலாகு இரண்டாவது இடத்தையும், மத்திய-வலதுசாரி “சேவ் ருமேனியா யூனியன்” (USR) கட்சியின் எலினா லாஸ்கோனி மூன்றாவது இடத்தையும், தீவிர வலதுசாரி “ருமேனியர்கள் ஒற்றுமைக்கான கூட்டணி” கட்சியின் ஜார்ஜ் சிமியன் நான்காவது இடத்தையும் பெற்றனர்.
அமெரிக்காவின் டொனால்டு ட்ரம்பைப் போலவே, “ருமேனியாவை மீண்டும் சிறந்ததாக்குவேன்” என்று கலின் முன்வைத்த முழக்கம் பணவீக்கத்தாலும், விலைவாசி உயர்வாலும் பாதிக்கப்பட்டுள்ள ருமேனியர்களிடம் தாக்கம் செலுத்தியது. சமூக ஊடகப் பிரச்சாரங்கள் கலினை பிரபலமடைய வைத்தது. அவர் வெளியிட்ட “டிக்-டாக்” காணொளிகளுக்கு 3.6 மில்லியன் மக்கள் விருப்பம் தெரிவித்திருக்கின்றனர் என்பதிலிருந்து அவரது பிரபலத்தின் வீச்சை அறிய முடியும்.
ஆனால், ஒரு ரஷ்ய ஆதரவாளர்-பாசிஸ்ட் ருமேனியாவின் ஜனாதிபதியாவதை விரும்பாத ருமேனிய தாராளவாத-ஜனநாயகவாதிகள் தேர்தலிலிருந்தே கலின் ஜார்ஜஸ்குவை நீக்கியிருக்கின்றனர். கலினின் வெற்றிக்கு சட்டவிரோத டிக்-டாக் கணக்குகளே காரணம் என்றும், ரஷ்யாவின் தலையீட்டால்தான் கலின் வெற்றி பெற்றார் என்றும் கூறப்படுகிறது.
எனவே, இதுகுறித்து இந்தாண்டு மார்ச் மாதம் நடைபெற்ற விசாரணையில், நாட்டின் தேர்தல் கணினி அமைப்பில் 85,000-க்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்கள் நடந்திருப்பதாகவும், கலின் தொடர்பான செய்திகளை திடீரென பெருக்கிய 25,000 செயலற்ற டிக்-டாக் கணக்குகளை அடையாளம் கண்டிருப்பதாகவும் ருமேனியாவின் உளவுத்துறை சேவை மற்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்தன.
இதனடிப்படையில், கடந்த மார்ச் மாதம் 9-ஆம் தேதி ருமேனியாவின் அரசியலமைப்பு நீதிமன்றம், கலின் வெற்றியையும், நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலையும் இரத்துச் செய்தது. இரத்துச் செய்யப்பட்ட ஜனாதிபதி தேர்தல் வருகின்ற மே மாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கலின் நீக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தின் முன்பு ஆயிரக்கணக்கானோர் கூடிப் போராட்டமும் நடத்தியிருக்கின்றனர். கலீனை நீக்கியது ஜனநாயக விரோதமானது என்று பலரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
குறிப்பாக, கலினின் நீக்கத்தை அமெரிக்கா கண்டித்திருக்கிறது. அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ், “ வெளிநாட்டிலிருந்து வரும் சில ஆயிரம் டாலர்கள் விளம்பரம் மூலம் உங்கள் ஜனநாயகத்தை அழிக்க முடியும் என்றால், அது ஆரம்பத்தில் அவ்வளவு வலுவாக இல்லை” என்று நவம்பர் தேர்தலை இரத்துச் செய்ததை விமர்சித்திருக்கிறார். எலான் மஸ்கோ, கலினை நீக்கியதை “பைத்தியக்காரத்தனம்” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
கலினின் நீக்கத்தைத் தொடர்ந்து, அரசியலமைப்பு விழுமியங்களை மதிக்கவில்லை என்பதற்காக, மே மாதம் நடைபெறவுள்ள தேர்தலிலிருந்து தீவிர தேசியவாதிகளான எஸ்.ஓ.எஸ். ருமேனியா கட்சியின் தலைவர் டயானா சோசோகாவை தகுதி நீக்கம் செய்திருக்கிறது, அரசியலமைப்பு நீதிமன்றம்.
இவ்வாறு சட்டப்பூர்வமான வழிமுறைகளின் மூலம், அதாவது பாசிஸ்டுகளை தேர்தலில் போட்டியிடத் தடைசெய்வதன் மூலம் பாசிஸ்டுகள் ஆட்சிக்கு வருவதைத் தடுத்துவிட முடியுமென்று ருமேனிய தாராளவாதிகள் மனப்பால் குடிக்கின்றனர் என்றே சொல்லலாம்.
ஏனெனில், ருமேனிய தேர்தலில் தீவிர வலதுசாரியான ஜார்ஜ் சிமியன் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றிருப்பதும், இவர் கலினை ஆதரிப்பதும், மே மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் கலினின் ஆதரவாளர்கள் இவருக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்பு இருப்பதைக் காட்டுகின்றன.
எனவே, பாசிஸ்டுகளை தேர்தலில் போட்டியிடத் தடைவிதிப்பதால் மட்டும் வீழ்த்தி விட முடியாது என்பதை ருமேனியாவின் தேர்தல் சூழல் நிரூபிக்கிறது.
பாசிஸ்டுகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பது முதலாளித்துவ சுரண்டலேயாகும். அதாவது ஜனநாயக முகமூடியை அணிந்துகொண்டு சுரண்டலை நடத்த முடியாது என்ற நிலையில்தான் பாசிசம் அரங்கேறுவதும், பாசிஸ்டுகள் ஆட்சிக்கு வருவதும் நடைபெறுகிறது. எனவே, பெரும்பான்மை மக்களைச் சுரண்டலிலிருந்து விடுவிக்கிற மாற்று அரசியல்-பொருளாதாரத் திட்டங்களை முன்வைத்து மக்களைத் திரட்டிப் போராடாமல் பாசிஸ்டுகளை வீழ்த்த முடியாது என்பதையே ருமேனியாவின் தேர்தல் நிலைமை எடுத்துக்காட்டுகிறது.
அப்பு
(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram