7. பொதுக் கூட்டச் சொற்பொழிவில் லெனின்
இரவுபகல் இடைவிடாத இந்தக் கடும் சோதனையின் கஷ்ட நஷ்டங்கள் இருப்பினும் லெனின் ஓயாமல் பொதுக் கூட்ட மேடைகளில் தோன்றிப் பேசி வந்தார். அவரது பேச்சுக்கள் இரத்தினச் சுருக்கமானவை. அறிவு விழிப்பு சுடர்பவை, நிலைமைகளைக் காரணங்காட்டி விளக்குபவை, பரிகாரங்களைக் குறிப்பவை, அவற்றைக் கையாளும் பொருட்டுக் கேட்போரைச் செயலுக்குத் தூண்டி அனுப்புபவை. கல்வியறிவற்ற வர்க்கத்தினரிடையே லெனினது சொற்பொழிவுகள் ஏற்படுத்திய உற்சாகத்தைக் கண்டு பார்வையாளர்கள் வியப்படைந்தார்கள். லெனினது உரைகள் விரைவாக,தடையின்றிப் பெருகும். புள்ளிவிவரங்கள் அவற்றில் ஏராளமாக நிறைந்திருக்கும். ஆனால் அவரது மேடைத் தோற்றம் போலவே அவரது உரைகள் பொதுவாக வண்ணக் கவர்ச்சியோ, காவிய வனப்போ அற்றவையாக இருந்தன. அவற்றை மனத்தில் வாங்கிக் கொள்வதற்கு இடையறாத சிந்தனை தேவைப்பட்டது. அவை கேரென்ஸ்கியின் உரைகளுக்கு நேர்மாறாக இருந்தன. கேரென்ஸ்கி தோற்றக் கவர்ச்சி உள்ளவர். சொல்வன்மை மிக்கப் பேச்சாளர், மேடைப் பிரசங்கிக்கு உரிய கலை நுட்பங்களும் ஆவேசங்களும் அவருக்குக் கைவந்தவை “அஞ்ஞானிகளும் எழுத்தறியாதவர்களுமான ருஷ்யர்களை” இந்தப் பண்புகள் யாவும் ஒரேயடியாக ஆட்கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றும். உண்மையிலோ, ருஷ்ய மக்கள் கேரென்ஸ்கியால் வசீகரிக்கப்படவில்லை. ருஷ்ய இயல்பில் உள்ள இன்னொரு முரண்பாடு இது. இந்தத் தேர்ந்த மேடைப் பிரசங்கியின் பகட்டான வாக்கியங்களையும் இரத்தினக் கச்சிதமான இடைநிறுத்தங்களையும் பொதுமக்கள் கேட்டார்கள். அப்புறம் எதிர்த்திசையில் திரும்பி லெனினுக்கு, நூலறிவும், தர்க்க முறையும் அளவார்ந்த சிந்தனையும் கோட்பாட்டுக்கு இயைந்த பேச்சும் வாய்ந்த லெனினுக்குத் தங்கள் விசுவாசத்தை அளித்தார்கள்.
தர்க்க இயலிலும் வாக்குவாதத்திலும் லெனின் தேர்ந்த நிபுணர். விவாதத்தில் அவரது பதற்றமின்மை எதிர்க்கட்சியினருக்கு எரிச்சலூட்டுவது விவாதத்தில் அவரது திறமை உச்ச கட்டத்தை எட்டிவிடும் என்று ஒல்கின்¹⁴ சொல்லுகிறார்: “லெனின் எதிரிக்குப் பதில் அளிப்பதில்லை. எதிரியின் வாதங்களைக் கூறுபோடுகிறார். அவர் மழிப்புக் கத்தி முனை போலக் கூர்மையானவர். அவருடைய அறிவு வியப்பூட்டும் நுண்மையுடன் செயல்படுகிறது. வாதப் போக்கில் உள்ள எல்லாப் பிழைகளும் அவருக்குப் புலனாகிவிடுகின்றன. தமக்கு ஏற்பில்லாத முதனிலைகளை அவர் நிராகரிக்கிறார், அவற்றிலிருந்து மிக மிக அபத்தமான முடிவுகளைப் பெறுகிறார். அதே சமயம் அவர் கிண்டலும் செய்கிறார். தமது எதிரியை அவர் எள்ளி நகையாடுகிறார்.விளாசுகிறார். தமது தாக்குதலுக்கு உள்ளானவன் அறிவிலி, மடையன், அகந்தைமிக்க அநாமதேயம் என்று கேட்பவர்களுக்குப் படும்படி செய்துவிடுகிறார். அவருடைய தர்க்கத்தின் ஆற்றல் கேட்பவர்களை ஆட்கொண்டுவிடுகிறது. அவருடைய அறிவு ஆவேசம் கேட்பவர்களை வசப்படுத்தி விடுகிறது”.
வாதத்தின் விரைந்த போக்கில் ஓரளவு இடையீடு அளிப்பதற்காக அவர் சிற்சில சமயங்களில் சிறிது நகைச்சுவையைக் கையாள்கிறார், அல்லது பின்வருவது போன்ற சுருக்கென்று தைக்கும் பதிற் சொற்களைப் பாய்ச்சுகிறார்: தோழர் காம்கோவின் கேள்விகள், ‘பத்து அறிவாளிகள் விடை அளிக்க முடிவதைவிட அதிகமான கேள்விகளை ஒரு மடையனால் கேட்க முடியும்’ என்ற மூதுரையை எனக்கு நினைவு படுத்துகின்றன.” போல்ஷெவிக் பத்திரிகை எழுத்தாளர் ராதேக் என்பவர் ஒருமுறை லெனினைப் பார்த்து, “பெத்ரோகிராதில் ஐந்நூறு தைரியசாலிகள் இருப்பார்களேயானால் நாங்கள் உங்களைச் சிறைக்கு அனுப்பிவிடுவோம்” என்று கூறியபோது லெனின் அமைதியாகப் பின்வருமாறு விடையளித்தார்: “சில தோழர்கள் சிறை செல்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வாய்ப்புக் கூறுகளை நீங்கள் கணக்கிட்டால் நீங்கள் என்னைச் சிறையில் இடுவதைவிட நான் உங்களைச் சிறையில் இடுவதே அதிகச் சாத்தியமானது என்பதைக் காண்பீர்கள்.” சில வேளைகளில் அவர் புதிய அமைப்புக்கு விளக்கம் தரும் சாதாரண நிகழ்ச்சி ஒன்றை விவரிப்பார்: குடியானவக் கிழவி நிலச்சுவான்தாரின் காட்டில் விறகு சேகரித்துக் கொண்டிருக்கிறாள். புதிய காலட் படைவீரனோ அவளைக் கொடுமைப்படுத்துபவனாக இன்றி அவளது காவலனாகப் பணியாற்றுகிறான்.
துன்ப அனுபவம், நிகழ்ச்சிகளின் அழுத்தம் ஆகியவை காரணமாக இந்த மனிதருக்குள் மறைந்திருக்கும் ஆவேசக்கனலும் உணர்ச்சிப் பெருக்கும் வழக்கமான கட்டுப்பாட்டை உடைத்துக்கொண்டு வெளிப்பட்டுவிட்டன போலத் தோன்றியது. ஒரு பெரிய பொதுக் கூட்டத்தில் லெனின் ஓரளவு தயக்கமும், சிக்கலும் நிறைந்த வாக்கியங்களுடன் உரையைத் தொடங்கியதாகவும், உரை ஓரளவு தொடர்ந்த பிறகு அதிகத் தெளிவாக விளங்கும் வகையில் பேசினார் என்றும் அண்மையில் அவரது பேச்சைக் கேட்ட ஒருவர் கூறினார். லெனின் மேலும் மேலும் ஆற்றொழுக்காகவும், துடிதுடிப்புடனும் பேசத் தொடங்கினாராம். வெளிப்படையான பிரயாசை மிகுதியாக இன்றி மேலும் மேலும் அதிகரிக்கும் உள்கிளர்ச்சியுடன் அவர் உரையாற்றினாராம். அது வரவர அதிகப் பாதிப்பு விளைவித்ததாம். “கட்டுக்கு அடங்கிய ஒரு வகை உணர்ச்சிக் கனிவு அவரது ஆன்மாவில் ஊடுருவிப் பரவிற்று. அவர் பல சைகைகள் செய்தார், சில அடிகள் பின்னும் முன்னுமாக நடந்த வண்ணமாக இருந்தார். மிகுந்த ஆழமான, ஒழுங்கற்ற சுருக்கங்கள் அவரது நெற்றியில் ஏற்பட்டன. மிகத் தீவிரமான ஆழ்ந்த சிந்தனையை, அனேகமாகத் துன்புறுத்தும் மூளை உழைப்பைக் காட்டின இவை” என்று விவரித்தார் மேற்குறித்த அன்பர் லெனின் முதன்மையாக அறிவையே தமது இலக்காகக் கொண்டார். உணர்ச்சிகளை அல்ல. எனினும் கேட்டவர்கள் மீது அவரது சொற்கள் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து வெறும் அறிவுத் தன்மையின் உணர்ச்சி ஆற்றலை நாம் காண முடிந்தது.
ஒரே ஒரு தடவைதான் அவரது சொற்பொழிவு கேட்போருக்கு உற்சாகமூட்டாததை நான் கண்டேன். இது நடந்தது டிசம்பரில், மிஹாய்லவ்ஸ்க்கிய் குதிரையேற்றப் பயிற்சி மண்டபத்தில், புதிய செஞ்சேனையின் முதல் பிரிவு போர் முனைக்குப் புறப்பட்ட தறுவாயில் கொழுந்து விட்டெரியும் தீவத்திகள் மண்டபத்தின் அகன்று பரந்த உள்புறத்தில் ஒளிபரப்பின. நீண்ட வரிசைகளாக நின்ற சுவச மோட்டார்கள் அவற்றின் பிரகாசத்தில் ஏதோ விந்தை யான தொடக்கக் கால விகிருதிகள் போன்று தோற்றம் அளித்தன. புதிய படைவீரர்கள் விசாலமான அரங்கில் நெடுகிலும் மொய்த்திருந்தார்கள். மோட்டார்கள் மேல் தொற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் ஆயுத சாதனங்கள் குறைவாகவே இருந்தன. ஆனால் புரட்சி ஆவேசத்தில் அவர்கள் வலிமை மிக்கவர்களாயிருந்தார்கள். உடம்பில் சூடேற்றிக்கொள்வதற்காக அவர்கள் நடனமாடினார்கள், தரையில் கால்களை அடித்துக்கொண்டார்கள். உற்சாகம் பெறுவதற்காகப் புரட்சிக் கீதங்களையும் நாடோடிப் பாடல்களையும் பாடினார்கள்.
பெருத்த ஆரவாரம் லெனினது வருகையை அறிவித்தது. பெரிய கார்களில் ஒன்றில் ஏறி நின்றுகொண்டு அவர் பேசத் தொடங்கினார். அரை இருளில் கூட்டத்தினர் ஏறிட்டு நோக்கிக் கவனமாகக் கேட்கலாயினர். ஆனால் அவருடைய சொற்கள் அவர்களைத் தூண்டி ஊக்குவிக்கவில்லை. கரகோஷத்துக்கிடையே அவர் பேச்சை முடித்தார். எனினும் வழக்கமான உற்சாக ஆரவாரத்துக்கும் இந்தக் கரகோஷத்துக்கும் வெகுதூரம். அன்று அவரது பேச்சு உப்புசப்பற்றதாக இருந்தது. உயிர் வழங்குவதற்காகச் செல்லவிருந்த மனிதர்களின் மன நிலைக்கு அது ஏற்றதாக இல்லை. கருத்துகள் சாதாரணமாக இருந்தன. சொற்கள் வீரியமற்றிருந்தன. அவருடைய உணர்ச்சியின்மைக்குக் காரணங்கள் இருந்தன. மட்டுமீறிய உழைப்பும், வேறு விஷயங்களில் அவர் மனம் ஈடுபட்டிருந்ததுமே தான். எனினும் முக்கியமான ஒரு சந்தர்ப்பத்தில் லெனின் பொருளாழம் அற்ற உரை ஆற்றினார் என்ற உண்மை இந்தக் காரணங்களால் மாறிவிடவில்லை. இந்த உழைப்பாளிகள் இதை உணர்ந்தார்கள். ருஷ்யப் பாட்டாளிகள் கண்மூடித்தனமான வீரவழிபாட்டினர் அல்ல. புரட்சியின் பாட்டனாரும் பாட்டியாரும் கண்டறிந்தது போல, பழைய அருஞ்செயல்களையும் மதிப்பையும் கொண்டே ஒருவர் காலந்தள்ள முடியாது. ஒருவர் இப்போது தாம் வீரர் என்று செயலில் நிரூபிக்காவிட்டால் வீரருக்கு உரிய புகழ்ச்சியை அவர் பெற முடியாது.
லெனின் காரிலிருந்து இறங்கியதும், “ஒரு அமெரிக்கத் தோழர் உங்கள் முன் பேசுவார்” என்று பொத்வோய்ஸ்க்கிய் அறிவித்தார். கூட்டம் உன்னிப்பாகக் கவனிக்கலாயிற்று நான் அந்தப் பெரிய காரில் ஏறிக்கொண்டேன்.
“அப்படியா, நல்லது. நீங்கள் ஆங்கிலத்தில் பேசுங்கள். என்னை மொழிபெயர்க்கவிடுங்கள்” என்றார் லெனின்.
“வேண்டாம். நான் ருஷ்ய மொழியில் பேசுகிறேன்” என்று ஏதோ யோசனையற்ற உந்தலால் தூண்டப்பட்டு நான் பதில் அளித்தேன்.
ஏதோ வேடிக்கையை எதிர்பார்ப்பவர் போலப் பளிச்சிடும் கண்களுடன் லெனின் என்னை நோக்கினார். விரைவிலேயே வேடிக்கை தொடங்கி விட்டது. முன்கூட்டித் தயாரித்துக்கொண்ட தொடக்க வாக்கியங்களைப் பேசித் தீர்த்தபின் நான் தயங்கினேன், பேச்சை நிறுத்தினேன். மறுபடி ருஷ்ய மொழியில் பேச்சைத் தொடர்வதில் எனக்குச் சிரமம் ஏற்பட்டது. வெளிநாட்டினர் தங்கள் மொழியை என்னதான் சித்திரவதை செய்தாலும் ருஷ்யர்கள் மரியாதையைக் கடைப்பிடித்தவாறு சகித்துக்கொள்வது வழக்கம். கற்றுக்குட்டியின் முறையைப் பாராட்டாவிடினும் அவனது முயற்சியை அவர்கள் மதிப்பார்கள். எனவே எனது பேச்சுக்கு நடு நடுவே கைதட்டல்கள் நீண்ட அவகாசங்களை ஏற்படுத்தின. இன்னும் சிறிது தூரம் முன்னேறுவதற்குத் தேவையான சொற்களைக் கோவைப் படுத்திக் கொள்வதற்கு ஒவ்வொரு கைதட்டலின்போதும் எனக்கு நேரம் கிடைத்தது. பெருத்த நெருக்கடி எதிர்ப்பட்டால் நானே செஞ்சேனையில் படைவீரனாகச் சேர உவப்புடன் முன்வருவேன் என்று சொல்ல நான் விரும்பினேன். நான் ஒரு சொல்லுக்காகத் தட்டித் தடவியவாறு தயங்கினேன். லெனின் என்னைப் பார்த்து, “என்ன வார்த்தை உங்களுக்கு வேண்டும்” என்று கேட்டார். “படை வீரனாகச் சேர என்றேன்.”வ்ஸ்துப்பீத்” என்று அவர் சொல்லிக் கொடுத்தார்.
அதன்பிறகு எனக்குத் தடங்கல் ஏற்பட்டபோதெல்லாம் லெனின் தேவையான சொல்லை என்னிடம் வீசுவார். நான் அதைப் பிடித்து, எனது அமெரிக்க ஒலியழுத்தத்தினால் சிதைத்துத்தான் என்றாலும், கூட்டத்தினர் மீது எறிவேன். இந்த விஷயமும், தாங்கள் வெகுவாகக் கேள்விப்பட்டிருந்த சர்வதேசியத்தின் பெருமை பெற்ற சின்னமாக நான் அங்கே நின்றதும் சிரிப்புப் புயல்களையும் கைதட்டல், இடி முழக்கங்களையும் கூட்டத்தினரிடையே ஏற்படுத்தியது. இவற்றில் லெனினும் மனப்பூர்வமாகக் கலந்துகொண்டார்.
“நல்லது, ருஷ்ய மொழியில் இது தொடக்கம் வேறொன்றும் இல்லாவிட்டாலும், ஆனால் நீங்கள் இதில் முனைந்து பாடுபட வேண்டும் என்றார் அவர். பின்பு பெஸ்ஸி பீட்டியை¹⁵ நோக்கி, நீங்களும் ருஷ்ய மொழி கற்க வேண்டும். பரிமாற்றுப் பாடங்கள் கோரிச் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யுங்கள். அப்புறம் ருஷ்ய மொழியில் மட்டுமே படியுங்கள், எழுதுங்கள், பேசுங்கள், அமெரிக்கர்களுடன் பேசாதீர்கள். அதனால் எவ்வகையிலும் எந்த நன்மையும் உங்களுக்கு உண்டாகாது” என்று வேடிக்கையாகச் சொல்லிவிட்டு, “அடுத்த தடவை உங்களைப் பார்க்கும்போது பரீட்சை நடத்துவேன்” என்றார்.
14. ஒல்கின் என்பது I.G. நொவொமேய்ஸ்க்கியின் புனைபெயர். அவர் கட்டுரையாளர். 1914இல் அவர் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குச் சென்று சோவியத் யூனியனைப் பற்றி பல கட்டுரைகளும் நூல்களும் எழுதினார்.
15. பெஸ்ஸி பீட்டி – அமெரிக்கப் பத்திரிகை பெண் எழுத்தாளர். 1917ஆம் ஆண்டுப் புரட்சியின்போது அவர் ருஷ்யாவில் இருந்தார். ருஷ்யாவின் செவ்விதயம் என்ற நூலையும் அக்டோபர் புரட்சி பற்றிய பல கட்டுரைகளையும் எழுதினார்.
(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram