ஒரு நாட்டில் தீவிரவாத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டு மக்களுக்கு ஒரு கவலை வருவது வழக்கம். அத்தகைய தாக்குதல் தொடருமா என்கிற கவலை. இந்தியாவில் மட்டும், ஒரு தாக்குதல் நடந்தால் நமக்கு இரு கவலைகள். ஒன்று, இத்தகைய தாக்குதல் தொடரக் கூடாதே என்பது. மற்றொன்று, இந்த தாக்குதலை கொண்டு இங்குள்ள இஸ்லாமியர்களை சங்கிக் கூட்டம் இலக்காக்குமே என்பது.
உத்தரகாண்டில் ஒரு சங்கி அமைப்பு, காஷ்மீரி மாணவர்கள் வெளியேற வேண்டும் என கெடு விதித்திருக்கிறது. நிஷிகாந்த் துபே, ‘காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை சனாதனத்தால் ஒன்றுபட்டிருக்கிறது. இஸ்லாமியர்களை தூண்டி விடுபவர்கள் அழிக்கப்படுவார்கள்’ என பேசுகிறார்.
மேற்கு வங்க எம்.பி. சுவெந்து அதிகாரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் “இந்துவை பேர் கேட்டுத்தான் சுட்டுக் கொன்றார்கள் என சொல்” என உணர்வுப்பூர்வமாக கத்தி தூண்டி விட்டு பேச வைக்கிறார். கூடுதலாக “இஸ்ரேல் காசாவை கையாண்டது போல, இந்த பிரச்சினையை மோடி கையாளுவார்” என உறுதி கொடுக்கிறார்.
மோடியோ நாட்டு மக்களிடம் பிரத்யேகமாக ஏதும் பேசாமல், இந்த வருட முடிவில் தேர்தல் நடக்கவிருக்கும் பிகாருக்கு சென்றும் புதிய திட்டங்கள் அறிவிக்கும் பிரசார மேடையில் நின்று கொண்டு, “தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கப்படும்” என முழங்குகிறார்.
பாகிஸ்தான் அதிகாரிகளை வெளியேற்றுவது துவங்கி, பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பகிர்வை நிறுத்தும் வரை இந்தியா எதிர் நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது.
இந்தியாவுடனான சிம்லா சமாதான ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என பாகிஸ்தான் அறிவித்திருக்கிறது. இந்தியாவுடனான வணிக உறவுகளையும் அந்த நாடு ரத்து செய்திருக்கிறது. சிந்து நதி நீர் பகிர்வு நிறுத்தப்பட்டால், அதைப் போர் நடவடிக்கையாக கருதுவோம் எனவும் பாகிஸ்தான் அரசு அறிவித்திருக்கிறது.
ஊடகங்கள் யாவும் போர் முரசு கொட்டிக் கொண்டிருக்கின்றன. தாக்குதல் நடத்தப்படும் என உளவு தகவல் இருந்தும் கூட, பிரபல சுற்றுலா தளமான சம்பவ இடத்தில் ஏன் பாதுகாப்பு படையினர் இல்லை என உள்துறை அமைச்சகத்திடம் எந்த ஊடகமும் கேட்கவில்லை. தகவல் கிடைத்தபிறகு 4.5 கிலோமீட்டர் தூரத்தை பாதுகாப்பு படையினர் ஓடியே கடக்க வேண்டிய அவலம் நேர்ந்திருக்கிறது. அப்படி அவர்கள் சென்று சேரும்போது சம்பவம் முடிந்து ஒரு மணி நேரம் ஆகி விட்டிருக்கிறது.
சுற்றுலா பயணிகளை குதிரைகளில் ஓட்டி வந்த காஷ்மீரிகள், தீவிரவாதிகளை எதிர்த்து உயிரைக் கொடுத்து போராடியிருக்கிறார்கள். குதிரை ஓட்டிகளின் சங்கத் தலைவர் வாட்சப்பில் தாக்குதல் குறித்த செய்தியை போட்டிருக்கிறார். உடனே காஷ்மீரிகள் பலரும் சம்பவ இடத்தில் சுற்றுலா பயணிகளை காக்க விரைந்திருக்கின்றனர். அதில் ஒருவர்தான் சஜத் அகமது பட்!
ஒரு சிறுவனை தோளில் தூக்கிக் கொண்டு சுற்றி பதைபதைப்புடன் பார்த்தபடி ஓடி வரும் அவரது காணொளி வெளியானபோது திரும்ப திரும்ப கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவர் மனதில் என்ன ஓடியிருக்கும்? ஏன் காப்பாற்ற வேண்டுமென வீட்டிலிருந்து கிளம்பி சம்பவ இடத்தின் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் சென்றார்? தீவிரவாதிகள் எங்கேனும் தென்படுகிறார்களா என சுற்றி சுற்றி பார்க்கும் அவரின் பதைபதைப்புக்கு பின் இருப்பது தன்னுயிர் காக்கும் பதட்டமா, தோளில் இருப்பவரின் உயிரை காக்க வேண்டிய கவலையா?
சஜத் அகமது பட்டை தேடி கண்டுபிடித்து பேட்டி எடுத்து வெளியிட்டிருந்தார்கள். வறுமையால் உள்ளொடுங்கிய கண்களுடன், நிலைகுத்திய பார்வை கொண்டு உள்ளுறுதியுடன் அநாயாசமாக சொன்னார்:
“சுற்றுலா பயணிகளால்தான் எங்களுக்கு வருமானம். அவர்களுக்கு ஒன்று என்றால் எதற்கும் யோசிக்க மாட்டோம். மனிதநேயத்துக்கு முன் மதமெல்லாம் ஒன்றும் இல்லை. சம்பவ இடத்துக்கு சென்று பார்த்ததும் எனக்கு கண்ணீர் வந்தது. அங்கிருப்பவர்கள் அழுததும் எனக்கும் அழுகை வந்தது. தீவிரவாதிகள் அவர்களை கொல்வதற்கு பதிலாக எங்களை கொன்றிருக்கலாம்!”
சங்கிகள் தம் மக்களுக்கு எதிராக வஞ்சத்தை கட்டவிழ்ப்பார்கள் என்பது சஜத்துக்கு தெரிந்திருக்கலாம். பாஜக கூட்டம் காஷ்மீர்களுக்கும் இஸ்லாமியருக்கும் எதிராக இச்சம்பவத்தை பயன்படுத்தும் என்பதும் அவருக்கு தெரிந்திருக்கலாம். இந்திய அரசு இச்சம்பவத்துக்கு பிறகு இன்னும் அடக்குமுறையை காஷ்மீர் மீது கட்டவிழ்க்கும் என்று கூட அவருக்கு தெரிந்திருக்கலாம்.
இதில் எதுவும் அவரது மனிதநேயத்தை குலைக்கவில்லை. அன்பை இற்றுப்போக விட்டுவிடவில்லை. பரிவை சுமையாக பார்க்க வைக்கவில்லை.
மறுபக்கத்தில் தந்தை ராமச்சந்திரனை தாக்குதலில் பறிகொடுத்த மகள் ஆரதி பேசுகிறார்:
“என் தந்தை கொல்லப்பட்டதும் பரிதவித்து நின்ற எனக்கு, ஷபீர் மற்றும் முசாபிர் என இரு காஷ்மீரி டிரைவர்கள் உதவினார்கள். ஊர், இடம் தெரியாத எனக்கு பிணவறை தொடங்கி வசிப்பிடம் வரை உடன் இருந்து உதவினார்கள். அந்நியர்களாக எங்களை அவர்கள் பார்க்கவே இல்லை. சகோதரர்களை போல் பார்த்துக் கொண்டார்கள். காஷ்மீருக்கு போனதில் எனக்கு இரு சகோதரர்கள் கிடைத்திருப்பதாக சொல்லித்தான் அவர்களிடமிருந்து விடைபெற்றேன். அவர்களை அல்லா நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்.”
சஜத் உகுத்த கண்ணீரின் மானுடம், ஷபீர் மற்றும் முசாபிரின் பரிவு, ஆரதி கொண்டிருக்கும் மதச்சார்பின்மை ஆகியவைதான் இந்த தாக்குதலில் நாம் எடுத்து வரித்துக் கொள்ள வேண்டியவை. சங்கப் பரிவாரத்தின் வெறுப்பு கூச்சலையோ பாஜக அரசின் தேசியவாத சிலுப்பலையோ ஊடகங்களின் போர் பரணியையோ அல்ல.
வன்மத்தையும் வெறுப்பையும் அறுவடை செய்யும் கூட்டத்துக்கு நடுவே கோமாளிகளாக தெரிந்தாலும் நாம் அன்பையே விதைப்போம்.
சுமையாக இருந்தாலும் மனிதநேயத்தை சுமப்போம்!
நன்றி சஜத்!
முகநூலில்: ராஜசங்கீதன்