காசா மீது இனவெறி இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதலால் பாலஸ்தீன குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவை மட்டுமே சாப்பிட்டு உயிர் பிழைத்து வருவதாக அங்கு உள்ள 12 முக்கிய உதவிக் குழுக்களின் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
இனவெறி இஸ்ரேல் 18 மாதங்களாக காசா மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்; ஆயிரக்கணக்கானோர் உடல் உறுப்புகளை இழந்து மண்ணில் நரகத்தை அனுபவித்து வருகின்றனர். தாய்மார்கள் குழந்தைகளின் பசியைப் போக்கப் போராடுவதும், பிஞ்சுக் குழந்தைகள் பட்டினியால் மடிவதும் தினந்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
ஆனால் மக்கள் உறுதியுடன் போராடி வருகின்றனர். இடையில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மக்களுக்கு சுவாசிப்பதற்கான நேரத்தைக் கூட வழங்கவில்லை. தூங்கிக்கொண்டிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. மீண்டும் மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். காசா மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், தண்ணீர், மருத்துவப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கூட அனுமதிக்காமல் உயிருடன் மக்களைக் கொன்று குவித்து வருகிறது இனவெறி இஸ்ரேல்.
மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வ உதவிக் குழுக்கள் மீதும் கொடூரத் தாக்குதலை நடத்தி வருகிறது. இதன் காரணமாக காசாவில் உள்ள மனிதாபிமான உதவி அமைப்புகள் பின்னடைவைச் சந்தித்து வருவதாக ஏப்ரல் 17 ஆம் தேதி வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் பரவலான மற்றும் கண்மூடித்தனமான குண்டுவீச்சு காரணமாக நடமாடுவது மிகவும் ஆபத்தானது என்பதனால் , 43 சர்வதேச மற்றும் பாலஸ்தீன உதவிக் குழுக்களில் 95 சதவீதம் பேர் ஏற்கெனவே காசாவில் தங்கள் சேவைகளை நிறுத்திவிட்டனர்.
ஆக்ஸ்பாம் உதவிக் குழுவின் கொள்கைத் தலைவர் புஷ்ரா கலீதி (Bushra Khalidi) “குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவை விட குறைவாகவே சாப்பிடுகிறார்கள். அடுத்த வேளை உணவுக்குச் சிரமப்படுகிறார்கள். எல்லோரும் பெட்டிகளில் அடைக்கப்பட்ட உணவை மட்டுமே சாப்பிடுகிறார்கள்… காசாவில் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் பஞ்சம் நிச்சயமாக ஏற்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
படிக்க: காசா: கருத்து சுதந்திரத்தின் கல்லறை
மேலும் காசாவில் உள்ள எல்லைகளற்ற மருத்துவர்கள் (Doctors Without Borders) அமைப்பின் அவசரநிலை ஒருங்கிணைப்பாளர் அமண்டே பஸெரோல் (Amande Bazerolle), ”உதவிப் பணியாளர்கள் குறைந்த பொருட்களைக் கொண்டு நிவாரணம் வழங்குவதற்கான சாத்தியமற்ற சுமையைச் சுமந்துகொண்டு, மக்கள் (அவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள்) துன்பப்படுவதையும் இறப்பதையும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது ஒரு மனிதாபிமான தோல்வி அல்ல – இது ஒரு அரசியல் தேர்வு. இது மக்களின் உயிர்வாழும் திறன் மீது வேண்டுமென்றே தண்டனையின்றி நடத்தப்படும் தாக்குதல்“ என்று தெரிவித்துள்ளார்.
காசா நகரில், அல் ஜசீராவின் செய்தியாளர் ஹானி மஹ்மூத் (Hani Mahmoud) ஏப்ரல் 18 ஆம் தேதி அன்று வெளியிட்ட செய்தியில் காசா பகுதியில் குழந்தைகளுக்கான பால் பொருட்கள் தீர்ந்து வருவதாகவும், இதனால் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர் என்றும் பதிவு செய்தார். மேலும், “நாங்கள் பல கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளவர்களைக் கண்டிருக்கிறோம். மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குக் கூட, அவர்களின் குடும்பங்களால் மிக அடிப்படையான தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. சந்தைகள் மற்றும் மருந்தகங்களில் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள் பெரும்பாலும் இல்லை. காசாவில் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் விரைவாகத் தீர்ந்து வருகின்றன” என்று அவர் கூறினார்.
டெய்ர் அல்-பலாவில் உள்ள அல்-அக்ஸா மருத்துவமனைக்கு வெளியே, பாலஸ்தீனியர்கள் அல் ஜசீரா செய்தி நிறுவனத்திடம் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் தங்கள் குழந்தைகளை இழந்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
ஊட்டச்சத்துக் குறைபாட்டால் தனது மகனை இழந்த ஃபாடி அகமது (Fadi Ahmed), ”மருத்துவமனை ஊழியர்கள் சிறுவனின் நுரையீரலில் பாரிய தொற்றுகளைக் கண்டறிந்தனர். அது அவரது இரத்தத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது. சிறுவனின் பலவீனம் மற்றும் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக அவனால் உறுதியாக இருக்க முடியாமல் போனது. பின்னர் மருத்துவமனையில் ஒரு வாரம் கழித்த பிறகு அவன் இறந்து போனான்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மூன்று நாட்களாகப் பால் கிடைக்காததால் தனது பேரனை இழந்ததாகச் சிறுவனின் பாட்டி இன்டிசார் ஹம்தான் கூறினார்.
படிக்க: பாசிச இஸ்ரேல் அரசே! – பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை நிறுத்து! | ம.க.இ.க. கண்டனம்
காசாவில் “குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் மட்டுமல்ல, கடுமையான மருத்துவ சிக்கல்கள் மற்றும் நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றிற்கு எளிதில் சிகிச்சையளிக்க முடியாது. மேலும் மருத்துவ பொருட்கள் பற்றாக்குறையாக இருக்கின்றன” என்று அல் ஜசீரா செய்தியாளர் தாரிக் அபு அஸ்ஸூம் (Tareq Abu Azzoum) கூறுகிறார்.
காசாவின் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, பாலஸ்தீனத்தில் குறைந்தது 60,000 குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களாக உள்ளனர். ஆனால், மனிதாபிமானப் பணியாளர்களுக்கு பூமியில் மிகவும் ஆபத்தான இடம் என்று காசா குறித்து உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. இதனால் குழந்தைகளுக்குச் சேவைகளை வழங்குவது இன்னும் கடினமாக உள்ளது.
சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் மனிதாபிமான மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் அக்டோபர் 2023 முதல் காசாவில் 400க்கும் மேற்பட்ட உதவிப் பணியாளர்களும் 1,300 சுகாதாரப் பணியாளர்களும் இனவெறி இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல தாக்குதல்கள் பதிவுசெய்யப் படாமலும் போயுள்ளன.
பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்வது மட்டுமல்லாமல் அவர்களுக்குக் கிடைக்கும் மனிதாபிமான உதவிகளைக் கூட இனவெறி இஸ்ரேல் தடுத்து வருகிறது. ஆனால், இனவெறிக்கு எதிரான போரில் தாங்கள் சிந்துகின்ற ஒவ்வொரு துளி ரத்தமும் சுதந்திர பாலஸ்தீனத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் பாலஸ்தீன மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram