தஞ்சாவூர் மாநகராட்சியில் ஒப்பந்த முறையில் பணி செய்து வரும் தூய்மைப் பணியாளர்கள் 400க்கும் மேற்பட்டவர்கள் ஏப்ரல் 21 முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை மாநகராட்சி அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நீண்ட காலமாகத் தேங்கிக் கிடக்கும் தங்களது 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்தி வருவதாக தமிழ்நாடு உள்ளூராட்சி ஊழியர்கள் சங்கத்தின் தஞ்சை மாவட்ட தலைவர் A. கலியபெருமாள் கூறுகிறார்.
உடனே நிறைவேற்ற வேண்டிய கோரிக்கையாக ஊதிய உயர்வை முன் வைத்துள்ளனர். உண்மையில் இது ஊதிய உயர்வும் அல்ல. தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறையின் அரசாணை 62 இன் படி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூபாய் 760 ஆகும். ஆனால் தற்போது ரூ. 590 தான் கொடுத்து வருகின்றனர். இத்தனைக்கும் இவர்கள் ஒப்பந்தப் பணியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணி செய்து வருபவர்கள்.
கோரிக்கைகளாவன:
- ஒவ்வொரு மாதமும் முறையாக ஐந்தாம் தேதி ஊதியம் வழங்க வேண்டும்.
- மாதாந்திர ஊதியத்துக்கான முறையான ரசீது வழங்க வேண்டும்.
- ஆண்டுக்கு இரண்டு செட் சீருடை வழங்க வேண்டும்
- மாநகராட்சி மைய மற்றும் கிளை அலுவலகங்களில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வறை மற்றும் கழிப்பறை வசதிகள் அமைத்துத் தர வேண்டும். (தூய்மைப் பணியாளர்கள் பெரும்பாலும் பெண் ஊழியர்கள் என்பது கவனத்திற்குரியதாகும்)
- எட்டு மணி நேர வேலை என்பதை வரையறை செய்து உறுதிப்படுத்த வேண்டும்.
- தூய்மைப்பணியாளர்களுக்கு அரசு வீடு கட்டி தர வேண்டும்
உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகின்றது. இதில் 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒற்றுமையுடனும் உறுதியுடனும் ஈடுபட்டுள்ளனர்.
படிக்க: மதுரை: அவர்-லேண்ட் நிறுவனத்திற்கு எதிராக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!
வீடுகளுக்குச் சென்று குப்பைகளைச் சேகரிக்கும் பணிகளை இந்த ஒப்பந்த தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மாநகராட்சியின் நிரந்தரமான தூய்மைப் பணியாளர்கள் தனியே வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பிறவகையான தூய்மைப் பணிகளில் ஈடுபடுகின்றனர். அதாவது, தெருக்கள் மற்றும் சாலைகளைத் தூய்மைப்படுத்துவது. கழிவுநீர் கால்வாய்களைப் பராமரிப்பது போன்ற பிற பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
தூய்மைப் பணியாளர்கள் என்று கௌரவமாகப் பெயரிடப்பட்டிருந்தாலும் அவர்கள் தொழிலாளி வர்க்கத்திலேயே கடைநிலையில் இருத்தப்பட்டவர்களாக உள்ளனர். ஒரு நிமிடம் இவர்களின் கோரிக்கைகளை எண்ணிப் பாருங்கள். இவை எல்லாம் ஒரு அரசாங்க நிறுவனத்திடம் கேட்டுப் பெற வேண்டிய கோரிக்கைகளா? எல்லாமும் அரசாங்கமே உருவாக்கி வைத்திருக்கின்ற சட்டங்களின்படியானவையே.
இதற்கு முன்னர் கடந்த தீபாவளி சமயத்தில், அதாவது அக்டோபர் மாதத்தில், மூன்று மாதமாக ஊதியம் வழங்கவில்லை என்றும் தீபாவளிக்கான போனஸ் வழங்கவில்லை என்றும் இதே போன்றதொரு போராட்டத்தை நடத்தித்தான் ஊதியத்தைப் பெற்றோம் என்று கூறிய சங்கத் துணைத் தலைவர் ஆனந்தராஜ் மற்றும் நிர்வாகிகள் முனியம்மாள், இளவரசன், சேகர், கண்ணன் ஆகியோர் மாநகராட்சி நிர்வாகத்தின் அடாவடித்தனத்தைக் கடுமையாகச் சாடுகின்றனர்.
இப்போதும் ஒப்பந்த பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் மாநகராட்சி நிர்வாகம் அவர்களுக்கு எதிராக வீடுகளில் குப்பைகளைச் சேகரிக்கும் பணியில் நிரந்தர பணியாளர்களை ஈடுபடுத்த முயன்றது. ஆனால் ஒப்பந்த பணியாளர்கள் ஒன்று சேர்ந்து குறுக்கிட்டு அவர்களைத் தடுத்து நிறுத்தி பிரச்சினையாக்கவே நிர்வாகம் பின்வாங்கிக் கொண்டது.
இப்பொழுது, நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் அவர்கள் நிர்வாகத்தினால் ஏய்க்கப்பட்டிருக்கும் பிரச்சினைக்காகத் தனியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது மாநகராட்சியின் நிரந்தர பணியில் 263 தொழிலாளர்கள் உள்ளனர். தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தின் மூலம் கூட்டுறவு வங்கி கடனளித்திருந்தது. வட்டியுடன் சேர்த்து மொத்தம் 10.12 கோடி தொகையை தொழிலாளர்களின் மாதாந்திர ஊதியத்தில் பிடித்தம் செய்து விட்ட போதிலும் மாநகராட்சி நிர்வாகம் அத்தொகையைக் கூட்டுறவு வங்கியில் செலுத்தவேயில்லை.
பொறுத்துப் பார்த்த கூட்டுறவு வங்கி நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு நெருக்கடி கொடுக்க தொழிலாளர்களை இந்த சிக்கலில் இழுத்து விடும் நோக்கத்தில் நுட்பமாக ஒரு வேலை செய்தது. இதுவரையிலும் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பிக் கொண்டு இருந்ததை நிறுத்தி விட்டு இப்பொழுது தனித்தனியாக தொழிலாளர்களுக்குக் கடனை திருப்பி செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
படிக்க: தனியார்மய அரசாணைகளை ரத்து செய்யக் கோரி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
இதனைக் கண்டு ஆத்திரமும் கோபமும் கொண்ட தொழிலாளர்கள் உடனடியாக கடன் தொகையை கூட்டுறவு வங்கிக்குச் செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநகராட்சி நிர்வாகம் உடனே தலையிட்டு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி கூடிய சீக்கிரம் கடனை திருப்பிச் செலுத்தி விடுவதாகவும் ஊழியர்களுக்கு நோட்டீஸ் இனிமேல் வராது என்றும் உத்தரவாதம் அளித்ததன் பேரில் நிரந்தரத் தூய்மைப் பணியாளர்களின் இந்த போராட்டம் கைவிடப்பட்டிருக்கிறது.
அடித்தட்டு நிலையில் இருக்கும் தூய்மைப்பணித் தொழிலாளர்களின் மனிதாபிமான அடிப்படையிலான மிகச் சாதாரண கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றாமல் ஏய்க்க நினைக்கிறது தஞ்சை மாநகராட்சி நிர்வாகம். மேலும் வருங்கால வைப்பு நிதி மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவ பிடிப்பு போன்ற தொகைகளை தொழிலாளர் ஊதியத்தில் பிடித்தம் செய்து விட்டு உரிய துறைகளில் செலுத்தாமல் கையாடல் செய்து ஏமாற்றி வருகிறது தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம்.
இவையெல்லாம் தனியார் முதலாளிகள் மட்டுமே செய்கின்ற மோசடிகள் என்று தான் பலரும் அறிந்திருக்கிறார்கள். ‘வேலியே’ பயிரை மேயும் கதையாக அரசாங்கமும் அதே அயோக்கியத்தனத்தைத்தான் தொடர்ந்து செய்து வருகிறது. இவற்றையெல்லாம் தங்களின் சொந்த அனுபவத்தில் உணர்ந்து கொண்டதனால்தான் தொழிலாளர்கள் தங்களின் வர்க்க ஒற்றுமையில் நம்பிக்கை வைத்து போராட்டம் என்பதைக் கையில் எடுத்திருக்கிறார்கள். தூய்மைப் பணி ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டம் நிச்சயம் வெல்லும்.
தொழிலாளர்களைச் சுரண்டும் விஷயத்தில் தனியார் முதலாளிகளைப் போலவேதான் அரசாங்கமும் நடந்து கொள்ளும் என்றால் இதற்குப் பெயர்தான் ’சமூகநீதி’ அரசாங்கமா? இதைத் தொழிலாளர்கள் நம்ப வேண்டுமா?
சுந்தரம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram