தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான
திருவாரூர் போலீஸ்-இன் அத்துமீறல்களை
வன்மையாகக் கண்டிக்கிறோம்
22/04/2025 அன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சாலையில் உள்ள ரயில்வே கேட் கீப்பராக பணி புரியும் பங்கஜ் குமார் என்பவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்கியதால் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதை அறிந்த திருவாரூர் தாலுக்கா போலீஸ், ரயில்வே போலீஸ், கொரடாச்சேரி போலீஸ் ஆகிய மூன்று தரப்பினரும் சேர்ந்து சுமார் 20 பேர் சம்பவ இடத்திற்கு வந்தார்கள்.
நாங்கரை பகுதியைச் சேர்ந்த பாலு என்பவரது மகன் அருள்தாஸ் என்பவர் கொடுத்த பொய்யான தகவலின் அடிப்படையில் ராகுல், ராஜா ஆகிய இரண்டு 17 வயது இளைஞர்கள் குற்றவாளிகள் என போலீஸ் முடிவுக்கு வந்தது.
உடனடியாக போலீஸ் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்து பூட்ஸ் காலுடன் வீடு வீடாகச் சென்று இரண்டு பேரையும் தேடியுள்ளார்கள். அப்போது ராகுல் வீட்டில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் அவரது தம்பி ராஜேஷ் இருந்திருக்கிறார். அவரை திருவாரூர் தாலுக்கா போலீஸ் சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்றது. ”உன் அண்ணன் இராகுல் வந்தால்தான் உன்னை விடுவேன்” என்று சொல்லி அழைத்து சென்றது.
போலீசால் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு இளைஞர்கள் ஏழ்மை காரணமாகப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு கூலி வேலைக்குச் செல்பவர்கள். சம்பவம் நடந்த போதும், போலீஸ் தேடிய போதும் அவர்கள் யாரும் அங்கு இல்லை. வேலைக்காக வெளியில் சென்றிருந்தார்கள். எனவே இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்பதற்கு இதுவே நிரூபணமான சான்றாகும். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான சாதி உணர்வு கொண்ட போலீஸ், இளைஞர்கள் வேலை செய்யும் இடத்திற்குச் சென்று அப்பாவி இளைஞர்களைக் கைது செய்து அவர்களின் போனை பறித்துள்ளது. அத்தோடு உடன் வேலைசெய்யும் நண்பர் சிவசூரியாவையும் குற்றவாளிகள் பட்டியலில் இணைத்துள்ளது.
படிக்க: தனியார்மய அரசாணைகளை ரத்து செய்யக் கோரி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
இளைஞர்களைப் பிடித்தவுடன் அவர்களை பங்கஜ் குமார் இடம் அழைத்து வந்து அடையாளம் காட்ட கூறியுள்ளார்கள். பங்கஜ் குமாரோ “தன்னை அடித்தவர்கள் இவர்கள் அல்ல” எனக் கூறியுள்ளார். இருப்பினும், போலீசு இருவரையும் போலீசு நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி உள்ளார்கள். உள்ளூர் இளைஞர்கள் குற்றவாளிகள் இல்லை என்பதை உணர்ந்த பொதுமக்கள் போலீசின் அத்துமீறலையும் அராஜகத்தையும் கேள்வி கேட்டவுடன் போலீசார் அவர்கள் செல் போனை வாங்கிக் கொண்டு மூவரையும் ”நாளைக்கு (23.04.2025) ரயில்வே போலீசு நிலையம் வாருங்கள்; விசாரணை முடிந்தவுடன் செல் போனை வாங்கி கொள்ளலாம்” என் சொல்லி விட்டு போலீஸ் மூவரையும் விட்டு சென்றுள்ளார்கள். அதன் பிறகு அடுத்த நாள் அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் மூவரையும் ரயில்வே போலீசு நிலையம் அழைத்துச் சென்று இவர்களுக்கும் அந்த பிரச்சினைக்கும் சம்பந்தம் கிடையாது என எழுதிக் கொடுத்துவிட்டு அவர்கள் செல் போனை வாங்கி வந்துள்ளார்கள்.
போலீசிடமிருந்து இருவரையும் மீட்ட பிறகு உள்ளூர் மக்கள் மாணவர்களிடம் விசாரித்த போது “நாங்கள் இந்த குற்றத்தைச் செய்யவில்லை. கேட் கீப்பருக்கு தேவையான உதவிகளை நாங்கள்தான் செய்து வருகிறோம். பங்கஜ் குமார் எங்களிடம் தமிழ் கற்றுக் கொண்டும் வரும் அளவிற்கு நெருக்கமாக உள்ளோம். அப்படி இருக்கையில் நாங்கள் ஏன் அவரை அடிக்கப் போகிறோம்” என கேள்வி கேட்டுள்ளார்கள்.
ஆக இப்பிரச்சினையின் மூலமாக போலீசின் கையாலாகத்தனத்தை நம்மால் காண முடிகிறது. போலீசை பொறுத்தவரையில் பிரச்சினை ஏற்படுகிறது என்றால் அதற்கான காரணமானவர்களைத் தண்டிப்பதைத் தவிர்த்து விட்டு உடனடியாக யாராவது ஒருவரைப் பழி சுமத்துவது என்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அப்படிதான் இம்முறையும் போதை ஆசாமி ஒருவரின் ஆதாரங்களை எடுத்துக்கொண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து அராஜகமாக நடந்துள்ளார்கள். அதேபோல், போலீசின் சாதிய புத்தியை கடந்து விட்டு சென்றுவிட முடியாது. ஆதிக்கச் சாதி பகுதிகளில் குடிகாரர்களும் ஊதாரிகளும் இல்லையா என்ன? அப்பகுதியில் இம்மாதிரியான பிரச்சினை ஏற்பட்டால் இதே தொனியில் போலீஸ் பூட்ஸ் காலோடு அவர்கள் குடியிருப்புகள் சென்று அராஜகம் செய்வார்களா? ஆக இதிலிருந்து போலீஸ் துறையின் சாதிய புத்தியை நம்மால் உணர முடிகிறது.
தங்களுடைய கையாலாக தனத்தினால் ஏதுமரியாத அப்பாவி மக்களைத் தண்டிப்பதன் மூலமாக அவர்களைக் குற்றவாளியாக உருவாக்குகிறார்கள் என்பது தான் நிதர்சனமாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் அதிகரித்து வரும் சாதிய தாக்குதல்களும் அரசு வன்முறைகளும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதுதான் அதிகமாக நடத்தப்படுகிறது. இதைக் கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொள்வதானது போலீசின் சாதிய புத்திக்கும், அத்துமீறல்களுக்கும் நாம் துணை போவதாகும். எனவே, இம்மாதிரியான பிரச்சினைகளுக்குக் களத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துணைநிற்க வேண்டும்.
களச்செய்தியாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
திருவாரூர்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram