தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் தி.மு.க அரசு!

போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து புறப்பட்ட மாற்றுத்திறனாளிகளை அவரவர் ஊர்களில் போலீசார் கைது செய்துள்ளனர். பேருந்துகளில் நாள் முழுக்க அமரவைத்துக் குடிக்கத் தண்ணீர் கூட வழங்காமல் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

22.04.2025 அன்று சென்னையில் மாற்றுத்திறனாளிகள் தங்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் மனிதாபிமானமற்ற முறையில்  தி.மு.க அரசு கைது செய்துள்ளது.

அண்டை மாநிலமான ஆந்திராவில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகின்ற மாதாந்திர உதவித்தொகையை (ரூபாய் 6,000) போன்று இங்கும் வழங்க வேண்டும்; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பதிவு செய்த மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் தனி வேலை அட்டை வழங்குவதுடன், முழுமையான நாட்கள் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி “தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்” சார்பில் ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அப்போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து புறப்பட்ட மாற்றுத்திறனாளிகளை அவரவர் ஊர்களில் போலீசார் கைது செய்துள்ளனர். பேருந்துகளில் நாள் முழுக்க அமரவைத்துக் குடிக்கத் தண்ணீர் கூட வழங்காமல் கொடுமைப்படுத்தியுள்ளனர். போராட்டத்திற்குத் தலைமை தாங்கவிருந்த மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட நிர்வாகிகளை வீட்டுக்காவலில் அடைத்துள்ளது.


படிக்க: பாசிச இஸ்ரேல் அரசே! – பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை நிறுத்து! | ம.க.இ.க. கண்டனம்


ஆனால்,  தி.மு.க அரசின் இத்தகைய அடக்குமுறைகளையும் மீறி போராட்டத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாற்றுத்திறனாளிகள் சென்னைக்கு வந்திருந்தனர். அவர்கள் அனைவரையும் கோயம்பேடு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் வைத்தே  தி.மு.க அரசு கைது செய்துள்ளது. கோயம்பேட்டில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை குண்டுக்கட்டாக தூக்கி வண்டிகளில் ஏற்றி மனிதாபிமானமற்ற முறையில் கைது செய்துள்ளது.

மேலும் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடச் சென்ற மாற்றுத்திறனாளிகளையும் பாரி முனையில் வைத்து அராஜக முறையில் கைது செய்துள்ளது. இதற்கு முன்பு கடந்த ஜனவரி 21 ஆம் தேதி அன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளின் போராட்டங்களை தி.மு.க அரசு ஒடுக்கியது இங்கே குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால்  தி.மு.க ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளானாலும் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் வஞ்சித்து வருகிறது. அவர்களின் வலி மிகுந்த போராட்ட குரல்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அமைச்சரான ஸ்டாலின் செவிகளில் விழுவதில்லை. அமைதியான முறையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்தை ஒடுக்கியது கண்டனத்திற்குரியதாகும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க