8. லெனினை இடைவிடாது சூழ்ந்திருந்த ஆபத்து
அவர் குறிப்பிட்ட அடுத்த தடவை வராமலே போய்விடும் போன்ற நிலைமை அநேகமாக ஏற்பட்டது. லெனின் ஏறியிருந்த கார் மண்டபத்திலிருந்து வெளியே வந்ததும் மூன்று தெளிவான வெடியோசைகள் ஒலித்தன. மூன்று குண்டுகள் அவருடைய காரை உடைத்து உள்புகுந்தன. லெனினுடன் அதே ஆசனத்தில் உட்கார்ந்திருந்த சுவிட்சர்லாந்துப் பிரதிநிதி பிளாட்டனை¹⁶ ஒரு குண்டு காயப்படுத்தியது. எவனோ கொலைகாரன் பக்கத்துத் தெருவிலிருந்து குறிவைத்தான், அது தவறிவிட்டது.
போல்ஷெவிக் தலைவர்கள் உயிரை இழக்கும் அபாயத்தால் எப்போதும் சூழப்பட்டிருந்தார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. பூர்ஷ்வா சூழ்ச்சியாளர்களின் கவனத்துக்கு முதன்மையாக உரியவராக இருந்தவர் இயல்பாகவே லெனின்தான். அவரது ஊக்கமுள்ள மூளையிலேயே தங்கள் அழிவுக்கான திட்டங்கள் உருவாக்கப் படுகின்றன என்று அவர்கள் சொன்னார்கள். அந்த மூளையை ஓயச்செய்வதற்கு ஒரு குண்டு கிடைக்காதா! இதுவே புரட்சி விரோதிகளின் வீடுகளிலிருந்த பலிபீடங்களிலிருந்து நாள்தோறும் உளமாரச் செய்யப்பட்ட பிரார்த்தனை.
மாஸ்கோவில் இத்தகைய ஒரு வீட்டில் நாங்கள் அளவு மீறிய விருந்தோம்பலுடன் எப்போதும் வரவேற்கப்பட்டோம். பெரிய சாப்பாட்டு மேஜை மீது ஆவி உமிழும் ஸமோவார் வைக்கப்பட்டிருக்கும். பழங்களும், கொட்டைப் பருப்புக்களும், மதிமயங்கச் செய்யும் பணியார வகைகளும் ஆர்தர் ரான்ஸம்17 “மிட்டாய்கள்” என அழைத்த அவருக்கு மிக விருப்பமான தின்பண்டங்களும் மேஜைமேல் குவிந்திருக்கும் யுத்தத்தால் இந்த வீட்டாருக்கு மிகுந்த நலம் விளைந்தது. கள்ள வியாபாரத்தின் எல்லாக் கிளைகளும், இரகசிய வழியாக ஜெர்மனிக்குச் சரக்குகளை அனுப்புவதும், பிரமாண்டமான அளவில் நேர்த்தியாகக் கொள்ளை லாபம் அடிப்பதும் இந்தக் குடும்பத்தினரைச் செல்வச் சீமான்கள் ஆக்கியிருந்தன திடீரென எங்கிருந்தோ வந்து குதித்தார்கள் போல்ஷெளிக்குகள் இந்தக் குடும்பத்தினரின் செல்வச் செழிப்பினது அஸ்திவாரத்தையே இடித்துப் பெயர்த்தவாறு, அவர்கள் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினார்கள் அவர்களோடு வாதாடிப் பயனே இல்லை. காட்டுத்தனமான பைத்தியக்காரப் பயல்கள்! எல்லாவற்றுக்கும், கள்ள வியாபாரம், கொள்ளை லாபம், எல்லாவற்றுக்குமே முற்றுப்புள்ளி வைக்க விரும்பினார்கள் அவர்கள்! இதைத் தவிர்க்கும் ஒரே வழி அவர்களுக்கே முற்றுப்புள்ளி வைப்பது தான். கழுவிலேற்று அவர்களை! சுட்டுத் தள்ளு! உச்சியில் லெனினிலிருந்து தொடங்கு.
முன்னேறிக்கொண்டிருந்த இந்த மாஸ்கோ கள்ள வியாபாரி இளைஞன் ஆழ்ந்த முறையில் எனக்கு அறிவித்தான்: ‘லெனினைக் கொல்லும் மனிதனுக்குக் கொடுப்பதற்காகப் பத்து லட்சம் ரூபிள்கள் இந்த நிமிடத்தில் என்னிடம் இருக்கின்றன இந்தக் காரியத்துக்காகத் தலைக்குப் பத்து லட்சம் ரூபிள்கள் ஒதுக்கி வைத்திருக்கும் இன்னும் பத்தொன்பது பெயரை நாளைக்கே நான் பிடிக்க முடியும்”
எத்தகைய அபாயத்தில் அவர் இருக்கிறார் என்பது லெனினுக்குத் தெரியுமா என்று எங்கள் போல்ஷெவிக் நண்பர்கள் ஐவரைக் கேட்டோம். “ஆமாம், அவருக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவர் கவலைப்படுவதில்லை சொல்லப் போனால் எதற்குமே அவர் உண்மையில் கவலைப்படுவதில்லை” என்றார்கள். எதற்கும் லெனின் கவலைப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
சுரங்க வெடிகளும், வீழ்கிடங்குகளும் நிறைந்த பாதையில் அவர் கிராமாந்தர கனவான் போன்ற மன அமைதியுடன் நடந்தார். மனிதர்களின் நரம்புகளை ஆட்டித் தளர்த்தி அவர்களுடைய முகங்களை வெளிறச் செய்த நெருக்கடிகளில் அவர் நிதானத்துடனும், பதற்றமின்றியும் திகழ்ந்தார். லெனினைக் கொல்லும் பொருட்டு வெளிநாட்டு ஏகாதிபத்தியவாதிகளும் புரட்சி விரோதிகளும் செய்த சூழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தோல்வி அடைந்தன. ஆனால் 1918 ஆகஸ்ட் கடைசியில் சூழ்ச்சியாளர்கள் அநேகமாக வெற்றி பெற்றுவிட்டார்கள்.
மிஹெல்ஸோன் தொழிற்சாலையின் 15,000 தொழிலாளர்கள் முன் லெனின் சொற்பொழிவாற்றினார். பின்பு அவர் தமது காருக்குத் திரும்பிவந்து கொண்டிருக்கையில் ஒரு பெண் முதலமைச்சருக்கு ஏதோ விண்ணப்பம் சமர்ப்பிக்கும் பாவனையில் கையில் ஒரு காகிதத்துடன் ஓடிவந்தாள். காகிதத்தை வாங்குவதற்காக அவர் கையை நீட்டினார். அப்போது இன்னொரு பெண், கப்ளான் என்ற குலப்பெயர் உடையவள், மூன்று குண்டுகளை அவர் மேல் சுட்டாள். அவற்றில் இரண்டு குண்டுகள் அவர் உடலில் பாய்ந்து நடைபாதையில் அவரை வீழ்த்திவிட்டன. அவரைத் தூக்கிக் காரில் ஏற்றிக் கிரெம்ளினுக்குக் கொண்டு போனார்கள். காயங்களிலிருந்து குருதி வெள்ளமாய்ப் பெருகிக் கொண்டிருந்த போதிலும் அவர் மாடிப் படிகளில் தாமே நடந்து ஏறுவதாகப் பிடிவாதம் செய்தார். அவர் எண்ணியதைவிட அதிக அபாயகரமான காயங்கள் அவருக்கு ஏற்பட்டிருந்தன. பல வாரங்கள் அவர் சாவுக்கு வெகு அருகே இருந்தார். தமது இரத்த நாளங்களில் இருந்த காய்ச்சலுடன் போராடி வென்ற பிறகு எஞ்சிய பலத்தை நாடு முழுவதும் பரவியிருந்த பழிவாங்கும் காய்ச்சலைப் போராடித் தீர்ப்பதற்கு அவர் செலவிட்டார்.
ஏனெனில், தங்களது எல்லாச் சுதந்திரங்களுக்கும் அபிலாஷைகளுக்கும் சின்னமாக விளங்கிய மனிதரைக் கொடிய பிற்போக்குச் சக்திகள் தாக்கி வீழ்த்திவிட்டதால் சீறியெழுந்த மக்கள் பூர்ஷ்வாக்கள் மீதும் முடியரசுவாதிகள் மீதும் “செம்பயங்கர” முறைகளின் வடிவில் எதிர்த்தாக்குதல் நடத்தினார்கள்.
கமிஸார்கள் கொலை செய்யப்பட்டதற்கும், லெனினைக் கொல்ல முயற்சி செய்யப்பட்டதற்கும் பல பூர்ஷ்வாக்கள் தங்கள் உயிர்களை விலையாகச் செலுத்த நேர்ந்தது. மக்களின் சீற்றம் மிக ரௌத்திராகாரமாகப் பொங்கியபடியால் லெனின் மட்டும் ஆத்திரத்தை அடக்கிக்கொள்ளும்படி மக்களை வேண்டிக் கொண்டிராவிட்டால் நூற்றுக்கணக்கானவர்கள் மடிந்திருப்பார்கள் இந்த அமளிதுமளி முழுவதிலும் ருஷ்யாவில் யாவரினும் அமைதியாக இருந்தவர் லெனின்தான் என்று தயங்காமல் சொல்லலாம்.
16. பிளாட்டன். பி. சுவிட்ஸர்லாந்தின் இடதுசாரி சோஷலிஸ்ட் பின்னர் கம்யூனிஸ்ட் 1905இல் ரீகாவில் புரட்சி வேலை செய்தார். ருஷ்யப் புரட்சி இயக்கத்தில் பொதுவாகவே ஊக்கத்துடன் பங்காற்றினார். 1912-18இல் அவர் சுவிஸ் சோஷலிஸ்ட் கட்சிச் செயலாளராக இருந்தார். 1917, வசந்தகாலத்தில் சுவிட்ஸர்லாந்திலிருந்து ருஷ்யாவுக்கு லெனினது பயணத்துக்கு ஏற்பாடு செய்தார். சுவிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவராக இருந்தார்.
17. ஆர்தர் ரான்ஸம் பிரிட்டிஷ் லிபரல் பத்திரிகை ஒன்றின் நிருபர் சோவியத் ருஷ்யாவில் ஆறு வாரங்கள் என்ற நூலை எழுதியவர்.
(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram