சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி திரௌபதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் சின்னதிருப்பதியிலிருந்து ரூ.10,000 மதிப்பிலான நாட்டு வெடி பட்டாசுகளை வாங்கி இருசக்கர வாகனத்தில் திருவிழா நடைபெறும் இடத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.
கஞ்சநாயக்கன்பட்டி கிராமம், பூசாரிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் நேற்று (25.4.2025) இரவு சுமார் 8:50 மணியளவில் கோவில் சீர்வரிசை (திருவீதி உலா) ஊர்வலத்தின்போது வானவேடிக்கை நடந்துள்ளது.
அப்பகுதியைச் சுற்றி பட்டாசு வெடித்ததால் தீப்பொறிகள் காற்றில் பரவியுள்ளது.அப்போது இருசக்கர வாகனத்தில் சாக்கு மூட்டையில் கொண்டுவரப்பட்ட நாட்டு வெடி பட்டாசுகள் மீது தீப்பொறி பட்டதில் பட்டாசு தீப்பிடித்து வெடித்துள்ளது.
இந்த வெடி விபத்தில் கஞ்சநாயக்கன்பட்டி, கொட்டமேடுவைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 29), குருவாலியூரைச் சேர்ந்த சிறுவர்கள் தமிழ்செல்வன் (வயது 11), கார்த்தி (வயது 11) ஆகிய மூன்றுபேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கொட்டமேடுவைச் சேர்ந்த லோகேஷ் (வயது 20) என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மளிகைக் கடைகள், வீடு, இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் சேதமடைந்தது உள்ளன. சம்பவ இடத்துக்குச் சென்ற சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் ஆய்வு செய்து தீவிட்டிபட்டி போலீசு நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருவதாகக் கூறும் நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்த தடயவியல் நிபுணர்கள் (forensic department) வெடி விபத்திற்கு நாட்டு ரக வெடி மருந்து பட்டாசுகள் தான் காரணம் எனக் கூறியுள்ளார்.
படிக்க: தர்மபுரி: கம்பைநல்லூர் பட்டாசு ஆலை வெடி விபத்து! அதிகார வர்க்கமே முதல் குற்றவாளி!
அடுத்தநாள் (26/04/2025) காலை விபத்து ஏற்பட்ட கிராமத்தில் உடல் உறுப்புகள் ஏதேனும் சிதறி இருக்கிறதா எனத் தேடும் பொழுது ஒரு வீட்டின் மொட்டை மாடியில் காலும், மற்றொரு வீட்டின் அறையில் கையும் இருந்துள்ளது. இதனைக் கண்ட கிராம மக்களும் இறந்தவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் “சாமிக்காகத்தான் ஊர் திருவிழாவை முன்னெடுக்கிறோம். இப்படி அநியாயமாக 4 உயிர் பறிபோய்டிச்சே…சாமிக்குக் கண்ணே இல்லையா..?” என வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறுகிறார்கள்.
போலீசிடம் அனுமதி பெற்றுத்தான் ஊர்த் திருவிழாவை நடத்தவேண்டும் எனக் கூறும் போலீசு அதிகாரிகள், அதிக அளவு மக்கள் கூடும் போது ஏன் முறையாகக் கண்காணித்து மக்களை நெறிப்படுத்தவில்லை?
குறிப்பிட்ட அளவைவிட அளவுக்கதிகமான வெடி மருந்து கலவையைப் பயன்படுத்தி ஆபத்தான நாட்டு வெடி பட்டாசுகளை தயாரிக்கும் பட்டாசு ஆலைகளின் மீதும், முறைகேடாக வெடி மருந்துகளை வாங்கி நாட்டு வெடிகளைத் தயாரிக்கும் தனிநபர்களின் மீதும் அரசு அதிகாரிகள் முறையாகக் கண்காணித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்விகள் எழுகின்றன.
ஆகவே வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை நிர்ணயித்த அளவைவிட அளவுக்கு அதிகமாக வெடிமருந்துகளைப் பயன்படுத்தி உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தும் நாட்டு வெடிரக பட்டாசுகளைத் தயாரிக்கும் ஆலை உரிமையாளர்களையும் தனிநபர்களையும் கைது செய்ய வேண்டும். அவர்களது உரிமையை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்.
அதிக அளவில் திருவிழாவின் போது மக்கள் கூடும் இடங்களை முறையாகக் கண்காணித்து பாதுகாப்பு வழங்காத போலீசும், முறைகேடாக இயங்கும் பட்டாசு ஆலையை முறையாகக் கண்காணிக்காத தகுதியற்ற அதிகாரிகளுமே இந்த வெடிவிபத்தில் முதன்மைக் குற்றவாளிகள்.
விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மூன்று நான்கு இலட்சத்தைக் கொடுத்துவிட்டு அவர்களது அரசு தரப்பு சடங்குகளை முடித்துக்கொள்கிறார்கள். உழைக்கும் மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து அதிகார வர்க்கத்தைக் கேள்விக்குள்ளாகும் வகையில் போராட்டங்களை நடத்துவதன் மூலமே இதுபோன்ற விபத்துக்களைத் தடுக்க முடியும்.
எனவே சம்பந்தப்பட்ட போலீசு அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு தலா 50 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். உயிரிழந்த மாணவர்கள், இளைஞர்களின் குடும்பத்தாரின் பொருளாதார தேவையை இறுதிவரை அரசே ஏற்க வேண்டும்.
யாழன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram