லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 6

லெனினைச் சந்திப்பது மிகக் கடினம். ஆனால் ஒருமுறை அவரைச் சந்தித்து விட்டால் அவரது முழுமையான கவனத்தை நாம் பெற்று விடுவோம். அவரது திறமைகள் அனைத்தும் நமக்குக் கூச்சம் உண்டாக்கும் அளவுக்குத் தீவிரமான முறையில் நம்மீது ஒருமுனைப் படுத்தப்படும்.

9. லெனினது அசாதாரண நிதானம்

எல்லாச் சந்தர்ப்பங்களிலும் லெனின் மிகுந்த தன்னடக்கத்தை மேற்கொண்டிருந்தார். மற்றவர்களை வெறி கொள்ளச் செய்த நிகழ்ச்சிகள் அவரிடம் அமைதியையும் கம்பிரத்தையும் தோற்றுவித்தன.

அரசியல் நிர்ணய சபையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரே கூட்டத்தில் இரண்டு கட்சிப் பிரிவுகளும் ஒன்றுடன் ஒன்று கொலை வெறியுடன் மோதிக்கொண்டன. ஒரே கொந்தளிப்பும் குழப்பமுமான காட்சியாக விளங்கியது அது. பிரதிநிதிகள் போர்க் கோஷங்களை முழங்கினார்கள், சாய்வு மேஜைகளைத் தடதடவென்று தட்டினார்கள். பேச்சாளர்கள் அச்சுறுத்தல்களையும் சவால்களையும் கூறி ஆர்ப்பரித்தார்கள். இரண்டாயிரம் குரல்கள் இன்டர்நேஷனலையும் புரட்சி அணிநடைப் பாட்டையும் ஆவேசத்துடன் பாடின. இவைஎல்லாம் சூழ்நிலையை மின்னேற்றம் கொண்டது ஆக்கின. இரவு முதிர முதிர சபையின் மின்னோட்டம் மேலும் மேலும் அதிகரிப்பதாகத் தோன்றியது. பார்வையாளர் வரிசைகளில் இருந்த நாங்கள் அழிக் கம்பிகளைப் பற்றிக் கொண்டோம். எங்கள் பற்கள் நெறுநெறுத்தன, நரம்புகள் முறுக்கேறின. லெனினோ முன்வரிசை இடம் ஒன்றில் சலிப்படைந்தவர் போன்று உட்கார்ந்திருந்தார்.

கடைசியில் அவர் எழுந்து மேடையின் பின்புறத்துக்கு நடந்து போய் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்த படிகள் மீது கால்களை நீட்டி அமர்ந்தார். விசாலமான கூட்டத்தினர் மீது தற்செயலாகப் பார்வை செலுத்தினார். பிறகு “இத்தனை மனிதர்கள் நரம்புச் சக்தியை வீணாக்குகிறார்கள். நல்லது, ஒரு மனிதன் அதைக் கொஞ்சம் சேமிக்கப் போகிறான்” என்று சொல்பவர் போலக் கைமீது தலையைச் சாய்த்து உறங்கிவிட்டார். பேச்சாளர்களின் சொல்வன்மையும். கூட்டத்தினரின் ஆரவாரமும் அவர் தலைக்கு மேலே அலையடித்துப் பெருகின. அவரோ, அமைதியாகத் தூங்கினார். ஓரிரு தடவைகள் கண்களைத் திறந்து, இமைகளைக் கொட்டியவாறு இங்கும் அங்கும் பார்த்தார். பின்பு மறுபடி உறங்கலானார்.

முடிவில் எழுந்து சோம்பல் முறித்துவிட்டு முன்வரிசையில் தமது இடத்திற்குச் சாவகாசமாக நடந்தார். தருணம் வாய்த்ததென்று கண்டு ரீடும் நானும் கீழே நழுவி, அரசியல் நிர்ணய சபை நடவடிக்கைகளைப் பற்றி அவரிடம் கேள்விகள் கேட்டோம். அவர் அலட்சியமாகப் பதில் அளித்தார். பிரசார இலாக்காவின்¹⁸ வேலைகள் பற்றி அவர் விசாரித்தார். பிரசுரங்கள் டன் கணக்கில் அச்சிடப்படுவதாகவும் அவை உண்மையாகவே பல தடைகளை கடந்து ஜெர்மானியச் சைனியத்திற்குள் வினியோகமாகி வருகின்றன என்றும் நாங்கள் சொன்னதும் அவர் முகம் பளிச்சிட்டது. ஜெர்மானிய மொழியில் வேலை செய்வது எங்களுக்குக் கடினமாய் இருப்பதாகச் சொன்னோம்.

திடீரென்று உற்சாகத்துடன் “ஆ!” என்றார் அவர், கவச மோட்டாரில் எனது சொற்பொழிவு முயற்சியை நினைவுபடுத்தி, “ருஷ்ய மொழிப் பயிற்சி எந்த அளவில் இருக்கிறது? இந்தப் பேச்சுக்களை எல்லாம் இப்போது நீங்கள் புரிந்துகொள்ள முடிகிறதா?” என்று கேட்டார்.

“ருஷ்ய மொழியில் ஏராளமான சொற்கள் உள்ளனவே” என்று பட்டும் படாமலும் பதில் அளித்தேன். “அதுதான் விஷயம். நீங்கள் முறையாக அதைப் பயில வேண்டும். மொழியின் முதுகெலும்பை எடுத்த எடுப்பிலேயே முறித்துவிட வேண்டும். அதைப் பயில்வதற்கான எனது முறையை உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார் லெனின்.

சாராம்சத்தில் லெனினது முறை இதுதான்: முதலில் எல்லாப் பெயர்ச்சொற்களையும் கற்றுக்கொள்ள வேண்டும். பிறகு முறையே எல்லா வினைச்சொற்களையும் எல்லா வினையுரிச்சொற்களையும் பெயர்ச்சொற்களையும் எல்லாப் பிற சொற்களையும் கற்க வேண்டும். அப்புறம் இலக்கணம் முழுவதையும் வாக்கிய அமைப்பு விதிகள் யாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் எங்கும் எல்லோருடனும் மொழியைப் பேசிப் பழக வேண்டும். லெனினுடைய முறை முழுமையானது எனினும் அவ்வளவு நுட்பமானதல்ல என்பதை இதிலிருந்து காணலாம். சுருங்கக் கூறின் பூர்ஷ்வாக்களை வெல்வதற்கான அவரது முறை மொழியை வெல்வதற்காகக் கையாளப்படுவதே. எடுத்த காரியத்தில் தயவுதாட்சண்ணியமின்றி ஈடுபடுவதே இது. ஆனால் அவர் இதில் மிகுந்த உற்சாகம் காட்டினார்.

தமது இருக்கையிலிருந்து குனிந்து விழிகள் சுடர, அங்க ஜாடைகளால் தமது சொற்களை எங்கள் மனதில் பதிய வைத்தார். எங்கள் சக நிருபர்கள் பொறாமை ததும்பப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். லெனின் எதிர்த்தரப்பினரின் குற்றங்களை வன்மையாகத் தொலைத்தெடுக்கிறார், அல்லது சோவியத்தின் இரகசியங்களை வெளியிடுகிறார், அல்லது புரட்சிபால் இன்னும் அதிக உற்சாகம் காட்டும் படி எங்களைத் தூண்டி ஊக்குவிக்கிறார் என்று அவர்கள் நினைத்தார்கள் இத்தகைய நெருக்கடியின்போது, மாபெரும் ருஷ்ய அரசின் தலைவர் இவ்வளவு ஆற்றலை வெளியிடுவது இத்தகைய விஷயங்கள் குறித்தே இருக்க முடியும் என அவர்கள் எண்ணினார்கள். ஆனால் அவர்கள் நினைத்தது தவறு. ருஷ்ய முதலமைச்சர் அயல் மொழி ஒன்றைக் கற்பது எப்படி என்பது பற்றி வெறுமனே விளக்கிக் கொண்டிருந்தார். நட்பார்ந்த சிறு உரையாடலால் கிடைத்த பொழுபோக்கை ரசித்துக் கொண்டிருந்தார், அவ்வளவுதான்.

பெருத்த விவாதங்களின் இறுக்கத்தில், எதிர்த்தரப்பினர் தம்மை இரக்கமின்றி விளாசிக்கொண்டிருக்கையில் லெனின் கம்பீரமான அமைதியுடன் வீற்றிருப்பார். இந்த நிலைமையில் நகைச்சுவையைக் கூட காண்பார். நான்காவது காங்கிரஸில் பேசியபின், மேடையில் தமது இடத்தில் அமர்ந்து தமது ஐந்து எதிர்த்தரப்பினரின் தாக்குதல் களைச் செவிமடுத்தார் லெனின் தமக்கு எதிரான வாதம் நல்லதாகப்பட்டால் அவர் முகம் மலர்ந்து முறுவலிப்பார், கைதட்டலில் கலந்து கொள்வார். எதிர்த்தரப்பு வாதம் கேலிக்கிடமான தாகத் தோன்றினால் கிண்டலாகப் புள்ளகை செய்து கட்டைவிரல் நகங்களை ஒன்றோடொன்று அடித்து நையாண்டிக் கரகோஷம் செய்வார்.

10. அந்தரங்கப் பேச்சில் லெனின் நடத்தை

ஒரே ஒரு தடவைதான் அலுப்பின் குறியை நான் அவரிடம் கண்டேன் சோவியத்தின் நள்ளிரவுக் கூட்டம் ஒன்றின் பின் தமது மனைவியுடனும் சகோதரியுடனும் “நேஷனல் ஹோட்டல்” லிப்டில் புகுந்தார் லெனின் “மாலை வணக்கம்” என்று ஓரளவு அலுப்புடன் சொல்லிவிட்டு, “இல்லை, காலை வணக்கம் என்பதே சரி. பகலும் இரவும் முழுவதும் நான் பேசிக் கொண்டிருந்தேன். களைத்துப் போய்விட்டேன். ஒரு மாடிதான் ஏற வேண்டும் என்றாலும் லிப்டில் போகிறேன்” என்றார்.

ஒரே ஒரு தரம்தான் அவரிடம் பரபரப்பையும் அவசரத்தையும் கண்டேன். அது பிப்ரவரி மாதம் நேர்ந்தது. அப்போது “தவ்ரிதா அரண்மனை” மறுபடியும் காரசாரமான பூசலுக்கு அரங்கு ஆயிற்று. ஜெர்மனியுடன் போரைத் தொடர்வதா அல்லது சமாதானம் செய்து கொள்வதா என்பது பற்றி விவாதம் நடந்துகொண்டிருந்தது. திடீரென்று லெனின் தென்பட்டார். நீண்ட ஹாலைக் கடந்து பிரசங்க மேடையின் புகு வாயிலை நோக்கி விரைவாக, சுறுசுறுப்பாக அடி வைத்து அநேகமாகப் பாய்ந்தார். பேராசிரியர் சார்ல்ஸ் குந்த்ஸும் நானும் அவருக்காகப் பதிபோட்டுக் காத்திருந்தோம். “ஒரு நிமிடம் தவாரிஷ் லெனின்” என்று அவரைக் கூவி அழைத்தோம்.

அவர் தமது விரைந்த பாய்ச்சலை நிறுத்தி அனேகமாக இராணுவப் பாங்கில் கால்களைச் சேர்த்து நின்று, ஆழ்ந்த தோற்றத்துடன் தலை வணங்கிவிட்டு, “தயவுசெய்து இப்போது என்னைப் போக விடுங்கள், தோழர்களே.எனக்கு ஒரு வினாடி நேரம்கூட இல்லை. ஹாலுக்கு உள்ளே அவர்கள் எனக்காகக் காத்திருக்கிறார்கள். தயவு செய்து இந்தத் தடவை என்னை மன்னித்துவிடும்படி வேண்டிக் கொள்கிறேன்” என்றார். இன்னொரு முறை தலைவணங்கி, கைகுலுக்கிவிட்டு அவர் மறுபடியும் பாய்ச்சலாக விரைந்துவிட்டார்.

போல்ஷெவிக் எதிர்ப்பாளரான வில்காக்ஸ் என்பவர் அந்தரங்க உறவுகளில் லெனினுடைய வசீகரத் தன்மையைப் பற்றிக் கூறுகையில் பின்வரும் நிகழ்ச்சியை விவரிக்கிறார்: ஒரு ஆங்கிலேய வியாபாரி தமது குடும்பத்தினரை நெருக்கடியான நிலைமையிலிருந்து தப்புவிக்கும் பொருட்டு லெனினது சொந்த உதவியைக் கோரச் சென்றார். “இரத்த வெறி கொண்ட கொடுங்கோலர்’ என்று வருணிக்கப்பட்ட லெனின் சாந்தமான நடத்தையும், மரியாதையும் பரிவும் உள்ள தோற்றமும் கொண்ட மனிதர் என்பதையும் தம் சக்திக்கு உட்பட்ட எல்லா உதவியையும் செய்ய அவர் ஆர்வமாக முன்வந்ததையும் கண்டு பெருவியப்பு அடைந்தார் அந்த வர்த்தகர்.

உண்மையில் லெனின் அபரிமித மரியாதை காட்டுவதாகவும் மிகையான முறையில் காட்டுவதாகவும் சில வேளைகளில் தோன்றியது. இதன் காரணம் அவரது ஆங்கிலப் பிரயோகமாக இருக்கலாம். மரியாதையான உரையாடலுக்குரிய விரிவான வடிவங்களைப் புத்தகங்களிலிருந்து அப்படியே எடுத்து வழங்குவார் அவர். அல்லது மக்களுடன் பழகுவதற்கான அவரது முறையின் ஓர் அம்சமாக இது இருக்கலாம். ஏனெனில் மற்றத் துறைகளில் போலவே இந்தத் துறையிலும் லெனின் மிகுந்த திறமைசாலி. அவசியமற்ற மனிதர்களுக்காக நேரத்தை வீணாக்க அவர் மறுத்தார். அவரைச் சந்திப்பது எளிதல்ல. அவரது வரவேற்பறையில் பின்வரும் குறிப்பு காணப்பட்டது: “மிக ஏராளமான அலுவல்கள் உள்ள ஒரு மனிதருடன் தாங்கள் பேசப் போகிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளுமாறு பார்வையாளர்கள் வேண்டப்படுகிறார்கள். தாங்கள் சொல்ல வந்த விஷயத்தைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் விவரிக்கும்படி அவர்களை அவர் கேட்டுக்கொள்கிறார்.”

லெனினைச் சந்திப்பது மிகக் கடினம். ஆனால் ஒருமுறை அவரைச் சந்தித்து விட்டால் அவரது முழுமையான கவனத்தை நாம் பெற்று விடுவோம். அவரது திறமைகள் அனைத்தும் நமக்குக் கூச்சம் உண்டாக்கும் அளவுக்குத் தீவிரமான முறையில் நம்மீது ஒருமுனைப் படுத்தப்படும். மரியாதையாக, அநேகமாக உணர்ச்சி வெளிப்பாட்டுடன், முகமன் தெரிவித்த பிறகு அவர் நம்மை நெருங்குவார். அவருடைய முகம் நமக்கு ஓர் அடி தூரத்துக்கு மேல் இராத அளவுக்கு அவர் கிட்டத்தில் வந்துவிடுவார். உரையாடல் நடந்து கொண்டிருக்கையில் அடிக்கடி அவர் இன்னும் அருகே வந்து நமது விழிகளுக்குள் பார்வையைச் செலுத்துவார். நமது மூளையின் மிக ஆழத்திலுள்ள இடுக்குகளை அவர் துருவி ஆராய்வது போலவும் நமது ஆன்மாவுக்குள் கூர்ந்து நோக்குவது போலவும் தோன்றும். மலினோவ்ஸ்க்கிய் போன்ற சற்றும் நாணமற்ற பச்சைப் புளுகன் மட்டுமே அந்தப் பார்வையின் நிலைத்த தாக்குதலுக்கு எதிர்த்து நிற்க முடியும்.

ஒரு சோஷலிஸ்டை நாங்கள் அடிக்கடி சந்திப்பதுண்டு. 1905ஆம் ஆண்டு மாஸ்கோ எழுச்சியில் கலந்து கொண்டு தடையரண்களில் நன்றாகப் போரிடக் கூடச் செய்தவர். தொழிலும் வாழ்க்கையின் வசதிகளும் அவருடைய ஆரம்ப கால உளமார்ந்த ஈடுபாட்டிலிருந்து அவரை விலகச் செய்துவிட்டன. ஓர் ஆங்கிலச் செய்தித்தாள் சிண்டிகேட்டுக்கும் பிளெகானவின்¹⁹ யெதின்ஸ்த்வோ²⁰ பத்திரிகைக்கும் நிருபராக வேலை செய்து வந்த அவரது தோற்றம் செல்வச் செழிப்பைக் காட்டியது. பூர்ஷ்வா எழுத்தாளர்களை நேரத்தை வீணாக்குபவர்கள் என்று லெனின் கருதினார். ஆனால் தமது சென்ற காலப் புரட்சிச் செயல்களைப் பிரமாதப்படுத்தியதன் மூலம் இந்த மனிதர் லெனினுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதில் வெற்றி பெற்று விட்டார். லெனினைச் சந்திக்கப் போகும்போது அவர் ஒரே உற்சாகமாக இருந்தார். சில மணி நேரத்துக்குப் பிறகு அவர் கலக்கமுற்றிருக்கக் கண்டேன். இதன் காரணத்தை அவர் விளக்கினார்.

அலுவலகத்துக்குள் போனதும் 1905 புரட்சியில் எனது பங்கைக் குறிப்பிட்டேன். லெனின் என் பக்கத்தில் வந்து, “சரி தோழரே, ஆனால் இந்தப் புரட்சிக்காக நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார். அவருடைய முகம் எனக்கு ஆறு அங்குல தூரத்துக்கு மேல் இல்லை. அவருடைய விழிகளோ நேராக என் விழிகளுக்கு உள்ளே நோக்கிக்கொண்டிருந்தன. மாஸ்கோ தடையரண்களில் எனது பழைய நாட்களைப் பற்றிப் பேசியவாறு நான் ஓர் அடி பின்வாங்கினேன். ஆனால் லெனின் ஓர் அடி முன்னே வைத்து, என் விழிகளிலிருந்து பார்வையை அகற்றாமலே, “சரி தோழரே, ஆனால் இந்தப் புரட்சிக்காக நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என மீண்டும் கேட்டார். எக்ஸ்ரே போலிருந்தது அது. கடந்த பத்து ஆண்டுகளில் நான் செய்தவற்றை எல்லாம் அவர் கண்டுகொண்டது போன்று தோன்றியது. என்னால் அதைத் தாங்க முடியவில்லை. குற்றம் புரிந்த குழந்தை போல நான் தரையை நோக்க நேர்ந்தது. பேச முயன்றேன், ஆனால் பயனில்லை. நான் வெளியே வர வேண்டியதாயிற்று. சில நாட்களுக்குப் பிறகு இம்மனிதர் இந்தப் புரட்சிக்குத் தொண்டு செய்யத் தொடங்கி, சோவியத்துக்காக உழைப்பவர் ஆகிவிட்டார்.


18. 1918ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் ருஷ்யக் கம்யூனிஸ்ட் (போல் ஷெவிக்) கட்சியில் நிறுவப்பட்ட அயல்நாட்டுக் குழுக்களின் சம்மேளனத்துடன் இணைக்கப்பட்டிருந்தது பிரசார இலாகா வெளிநாட்டு எழுத்தாளர்களும் பிரசாரகர்களும் கொண்டது இது. பல்வேறு பிரசுரங்களை இது வெளியிட்டு வினியோகித்தது ஏகாதிபத்திய லல்லரசுகளின் துருப்புக்களுக்கு இடையே பிரசாரம் நடத்தி வந்தது.

19. பிளெகானல் கிவ (1856-1918) ருஷ்யாவில் மார்க்சியத்தை முதன்முதலாகப் பரப்பியவர். பொருள்முதல்வாத உலகக் கண்ணோட்டத்தின் உறுதியான பிரசாரகர் ருஷ்ய சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்தின் பிரதானச் செயலர்களில் ஒருவர். அதே சமயம், தமது தத்துவ, அரசியல் நோக்குகளிலும் நடைமுறைச் செயல்களிலும் அவர் ஆழ்ந்த தவறுகள் செய்தார். மென்ஷெவிக் தலைவர்களில் அவர் ஒருவராக இருந்தார். முதலாவது உலக யுத்தத்தின்போது சோஷலிஸ நாட்டுவெறிப் போக்கை மேற்கொண்டார்.

20. “ஒற்றுமை.”

(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க