ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை மிரட்டும் டிரம்ப் அரசு!

ஹார்வர்ட் பல்கலைக்கழக தலைவர் ஆலன் கார்பர் ”இந்த நிறுவனம் அதன் சுதந்திரத்தையோ அதன் அரசியலமைப்பு உரிமைகளையோ விட்டுக் கொடுக்காது” என்று உறுதிபடக் கூறியுள்ளார்.

மெரிக்க டிரம்ப் அரசு ஏப்ரல் 16 அன்று ”போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்பான தகவல்களை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும்; தவறினால் வெளிநாட்டு மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவதற்குத் தடை விதிக்கப்படும்” என்று ஹார்வர்ட் பல்கலைக்கழக நிர்வாகத்தை மிரட்டி கடிதம் அனுப்பியுள்ளது.

உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் அமெரிக்காவில் அமைந்துள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் ஒன்று. அங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். மக்களின் பிரச்சினைகளுக்காக மாணவர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக, காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையைக் கண்டித்தும், இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுத உதவிகள் வழங்குவதைக் கண்டித்தும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

டிரம்ப் ஆட்சிக்கு வந்த உடனேயே ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களில் மாணவர் போராட்டங்களை ஒடுக்குவதற்கும் மாணவர்கள் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டது. அதன் பகுதியாக பாசிச டிரம்ப் அரசு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதாவது “பல்கலைக்கழக மாணவர்கள் குறித்து தணிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களின் குழுத் தலைவர்களின் பின்புலம் ஆராயப்பட வேண்டும். மாணவர்கள் முகக்கவசம் அணியக்கூடாது” போன்ற நிபந்தனைகளை விதித்துள்ளது.

இது குறித்து ஏப்ரல் 14 அன்று கருத்து கூறிய பல்கலைக்கழக தலைவர் ஆலன் கார்பர் (Alan Garber) ”இந்த நிறுவனம் அதன் சுதந்திரத்தையோ அதன் அரசியலமைப்பு உரிமைகளையோ விட்டுக் கொடுக்காது” என்று உறுதியாகத் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அரசு பல்கலைக்கழகத்திற்கு வழங்க வேண்டிய சுமார் 19,000 கோடி ரூபாய் (2.2 பில்லியன் டாலர்) நிதியை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. அத்துடன் 512 கோடி ரூபாய் (60 மில்லியன் டாலர்) மதிப்பிலான ஒப்பந்தங்களையும் முடக்கியுள்ளது.

பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை குறித்து தன்னுடைய ”எக்ஸ்” பக்கத்தில் பதிவிட்ட முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா “கல்வி சுதந்திரத்தை நசுக்கும் சட்டவிரோதமான மற்றும் கையாலாகாத முயற்சியை நிராகரித்து, ஹார்வர்ட் மற்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளது. மற்ற நிறுவனங்களும் இதைப் பின்பற்றும் என்று நம்புவோம்” என்று தெரிவித்துள்ளார்.


படிக்க: அமெரிக்காவை ஸ்தம்பிக்க வைக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்


டிரம்ப் நிர்வாகம் தனது நிபந்தனைகளுக்கு உடன்படாவிட்டால் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கான வரி விலக்கு ரத்து செய்யப்பட்டும் என்றும் மிரட்டியுள்ளது.

“ஹார்வர்டை இனி ஒரு ஒழுக்கமான கற்றல் இடமாகக் கூட கருத முடியாது. மேலும் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளின் எந்தவொரு பட்டியலிலும் அதைக் கருதப்படக்கூடாது” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக ஊடகங்களில் எழுதியுள்ளார்.

பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோயம் (Kristi Noem) “முதுகெலும்பில்லாத தலைமையால் இயக்கப்படும் ஹார்வர்ட் யூத எதிர்ப்புக்கு எதிராக மண்டியிடுவது, தீவிரவாத கலவரங்களின் குப்பைக் கிடங்கைத் தூண்டி, நமது தேசிய பாதுகாப்பை அச்சுறுத்துகிறது” என்று மாணவர்களின் போராட்டத்தை இழிவுபடுத்திப் பேசியுள்ளார்.

டிரம்ப் அரசு ஜனவரி மாதம் முதலே பல்கலைக்கழக போராட்டங்கள், பன்முகத்தன்மை திட்டங்கள் மற்றும் சுதந்திரமான நடவடிக்கைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக கொலம்பியா, பென்சில்வேனியா பல்கலைக்கழகம், பிரவுன், பிரின்ஸ்டன், கார்னெல் மற்றும் நார்த்வெஸ்டர்ன். பல்கலைக்கழகங்களை மிரட்டி வருகிறது.

ஆனால் ஹார்வர்ட் பல்கலைக்கழக நிர்வாகம் டிரம்ப் அரசின் மிரட்டல்களுக்கு அடிபணிய மற்றுத்துவிட்டது. பாசிஸ்ட் டிரம்பின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது. மாணவர்களுக்குத் துணைநிற்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அமெரிக்க மக்கள் துணைநிற்க வேண்டும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க