இந்தியாவில் ஊடகம் என்பது ஜனநாயகத்தை தாங்கும் நான்காவது தூண் என்று கூறப்படுகிறது. ஜனநாயகத்திற்கு வேண்டுமென்றால் சுதந்திர ஊடகங்கள் தேவைப்படலாம். ஆனால், அதானி – அம்பானி; ஆர்.எஸ்.ஸ் – பா.ஜ.க. பாசிச கும்பலின் ஆட்சியில் சுதந்திர ஊடகம் என்பது ஒரு தடைக்கல்லாகவே பார்க்கப்படுகிறது. எனவேதான் தேசிய ஊடகங்கள் முதல் சமூக ஊடகங்கள் வரை அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு பல்வேறு முயற்சிகளை பாசிச மோடி அரசு மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில், தமிழ்நாட்டில் விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் “நீயா நானா” எனும் விவாத நிகழ்ச்சியில், புதிய கல்விக் கொள்கையின் மும்மொழித் திட்டம் குறித்து “மும்மொழித் திட்டத்தை ஆதரிப்போரும் – எதிர்ப்போரும்” என்கிற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு படப்பிடிப்பும் முடிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்நிகழ்ச்சி மோடி அரசின் நிர்பந்தத்தினாலும் விஜய் டி.வி-யின் புதிய முதலாளி முகேஷ் அம்பானியின் உத்தரவினாலும் நிறுத்தப்பட்டுவிட்டது.
இந்நிகழ்ச்சியில், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பேசுவதற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஆனந்தன் அய்யாசாமி என்கிற பா.ஜ.க. பிரமுகர் உட்பட யாராலும் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக எந்த நியாயமான வாதத்தையும் தர்க்க ரீதியாக எடுத்து வைக்க முடியவில்லை. இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டால் பா.ஜ.க-வின் மும்மொழிக் கொள்கை அம்பலப்பட்டுப் போகும் என்பதை உணர்ந்துகொண்ட ஆனந்தன் அய்யாசாமி, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் மூலம் இந்நிகழ்ச்சியை தடை செய்ய வைத்துள்ளார் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதேபோல், சில வாரங்களுக்கு முன்பு “ஆனந்த விகடன்” இணையப் பத்திரிகையில் மோடியின் அமெரிக்க அடிமைத்தனத்தை அம்பலப்படுத்தும் விதமாக கார்ட்டூன் வெளியிட்டதற்காக, தேசத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு எந்தவித முன்னறிவிப்புமின்றி விகடனின் இணையதளம் முடக்கப்பட்டது. தமிழ்நாட்டில் நடைபெற்றிருக்கும் இவ்விரண்டு நிகழ்ச்சிகளும் இந்திய ஊடகச் சுதந்திரத்தின் நிலையைப் புரிந்துகொள்வதற்கான சமீபத்திய சான்றுகளாகும்.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலோ ஊடக சுதந்திரம் என்பது கல்லறையில் புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஊடகவியலாளர்கள் மிரட்டப்படுவதும் போலீசால் சிறையிடப்படுவதும் கிரிமினல் கும்பலால் படுகொலை செய்யப்படுவதும் அன்றாட நடைமுறையாக மாறிவருகிறது. நிலவரத்தைப் புரிந்துகொள்ள சில சம்பவங்களை மட்டும் சுருக்கமாகப் பார்ப்போம்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்தில், சுயேட்சையான பத்திரிகையாளர் முகேஷ் சந்திராகர் என்பவர், “நிலாஸ்னார்- மிர்தூர்- கங்கலூர்” சாலை கட்டுமான ஒப்பந்தம் 56 கோடியிலிருந்து சுமார் 120 கோடியாக உயர்த்தப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதை அம்பலப்படுத்தியிருந்தார். இதனால், ஆத்திரமடைந்த ஒப்பந்ததாரர்கள் ஜனவரி 1 அன்று முகேஷ் சந்திராக்கரை கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். அவரது உடல் ஜனவரி 3 அன்று ஒப்பந்ததாரரின் புதிய கட்டடத்தின் செப்டிக் தொட்டியில் போடப்பட்டு கான்கிரீட் சிதறல்களால் மூடப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதேபோல், கடந்த மார்ச் மாதம் 9-ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில், இந்தி நாளிதழ் ஒன்றில் பத்திரிகையாளராக பணிபுரிந்துவந்த ராகவேந்திர பாஜ்பாய் என்பவர் கிரிமினல் கும்பலால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நெல் கொள்முதல் முறைகேடுகள் மற்றும் நில கொள்முதலில் முத்திரை வரி ஏய்ப்பு குறித்து செய்திகள் வெளியிட்டதால், ராகவேந்திராவுக்கு சமீப காலமாக கொலை மிரட்டல்கள் வந்ததாக அவரின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இறுதியாக, தற்போது இந்திய அளவில் பேசுபொருளாகியிருக்கும் நகைச்சுவையாளர் குணால் கம்ரா விவகாரம். கடந்த பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி “நயா பாரத்” (புதிய இந்தியா) என்ற தலைப்பில் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை குணால் நடத்தியிருந்தார். அதில், மோடியின் புதிய இந்தியா குறித்தும் நாட்டில் உள்ள நீதிமன்றங்களும், அமலாக்கத்துறையும் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்தும், மகாராஷ்டிரா துணைமுதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்தும் கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்த விமர்சனங்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள துணிவில்லாத பா.ஜ.க. கும்பல், ஷிண்டே பிரிவைச் சார்ந்த சிவசேனா குண்டர்படை மூலம் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தப்பட்ட கிளப் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், மும்பை போலீசு குணால் கம்ரா மீது வழக்கும் பதிவு செய்துள்ளது.
வட இந்தியாவில், பா.ஜ.க. அரசின் மக்கள்விரோத கொள்கையையும் கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளையையும் எதிர்க்கும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நினைக்கும், இந்து மதவெறிக்கு எதிராக மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கும் ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் பலரும் மிரட்டப்படுவதும் போலீசின் அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்படுவதும், கிரிமினல் கும்பல் மற்றும் காவிக் குண்டர் படையால் வன்முறை தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
உலக சமாதானத்திற்காக செயல்படும் அமைப்பாக கூறப்படுகின்ற “அம்னஸ்டி இன்டர்நேஷனல்” (Amnesty International) மோடி அரசின் அடக்குமுறைகள் காரணமாக சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் 2020-இல் தனது இந்தியக் கிளையை மூடிவிட்டுப் போய்விட்டது. இவையெல்லாம் கருத்துரிமை மீதான மோடி அரசின் அடக்குமுறைகளை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
இந்து குழுமத்தின் இயக்குநர் என்.ராம், “மோடி ஆட்சிக்குப் பிறகு இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் மிகவும் வெட்டி சுருக்கப்பட்டிருக்கிறது. உலகின் பத்திரிகை சுதந்திரம் பற்றிய குறியீடுகளில் (World Press Freedom Index) 2004-இல் 114-வது இடத்தில் இருந்த இந்தியா 2024-இல் 159-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது” என்று கூறுகிறார். மேலும், “2014-லிருந்து 2024 வரையிலான 10 ஆண்டுகளில் 19 பத்திரிகையாளர்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். காயமடைந்தவர்கள், மிரட்டப்பட்டவர்கள், வேலையிழந்தவர்கள் இன்னும் ஏராளம். குறிப்பாக, இன்றைய நிலையில் பத்திரிகையாளர்களுக்கு இந்தியா அபாயமிக்க நாடாக கருதப்படுகிறது” என்றும் கூறுகிறார்.
டெல்லியைச் சேர்ந்த வரலாற்றியலாளரும் எழுத்தாளருமான முகுல் கேசவன், “ஊடகங்களையும் பத்திரிகைகளையும் கார்ப்பரேட் முதலாளிகள் கைப்பற்றுவது, தொடரப் போகும் பெரும் சதி திட்டங்களுக்கான முன் தயாரிப்பு நடவடிக்கையாகும்” என்று கூறுகிறார். மேலும், “மாற்றுக் கருத்துகளை நசுக்குவது என்பதுதான் கார்ப்பரேட்டுகளின் முதன்மையான இலக்காக இருக்கிறது. ஆனாலும், பெரும்பாலான பத்திரிகை ஊடகங்கள் அவற்றின் முதலாளிகளின் நோக்கங்களுக்கு சேவை செய்யக்கூடிய வகையில் அரசுக்கு ஆதரவானதாக மாறிப் போய்விட்டன” என்று குற்றம் சுமத்துகிறார். இது தொடர்ந்தால் ஜனநாயகத்திற்கு அழிவு காலம்தான் என்கிறார் முகுல் கேசவன்.
அரசை விமர்சிப்பவர்கள் எதிர் கருத்து அல்லது மாற்றுக் கருத்து சொல்பவர்கள் அவற்றை தங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடுபவர்கள் என்று அனைவர் மீதும் வழக்கு தொடுப்பது, சிறையிலடைத்து கொடுமைப்படுத்துவது என்றால், இது என்ன ஜனநாயகம் என்று கேள்வி எழுப்புகிறார் தெற்காசியாவின் மனித உரிமை கண்காணிப்பகத்தின் (South Asian Director of Human Rights Watch) இயக்குநர் மீனாட்சி கங்குலி.
மக்கள் அமைப்பாக அணிதிரளவும், எதிர்த்துப் போராடவும், பேரணி நடத்தவும் பொதுவெளியில் பேசவும், தங்கள் கருத்துக்களை பதிவிடவும் என்று எல்லா உரிமைகளும் உள்ளது என அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கின்றன. நடைமுறையில் அவ்வாறு இல்லையெனினும், கொஞ்சநஞ்சம் இருந்த உரிமைகளை கூட முற்றுமுழுதாக பறிக்கும் வேலையில் பாசிச மோடி அரசு இறங்கியுள்ளது.
அதுவும் மக்களின் இந்த அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்படுவது வெறுமனே வாய் வழியாக, அடாவடித்தனமாக நடத்தப்படுவது மட்டுமல்ல, அவை தேச விரோதமாகவும் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாகவும், தீவிரவாத சக்திகளுக்கு ஊக்கம் கொடுப்பதாகவும், நாட்டைக் காட்டி கொடுப்பதாகவும் இதே சட்டத்தின் பெயரால் நியாயப்படுத்தப்படுகின்றது. சட்டத்தின் ஆட்சி என்ற கேடயத்தின் பின்னால் இருந்துகொண்டு நீதிமன்றங்களும் இவற்றை ஆதரித்து நிற்கின்றன. இதுதான் அடிப்படை பிரச்சினையாகும்.
எல்லாம் அரசின் விருப்பம் என்று ஆக்கப்பட்டிருக்கின்றது. அரசு மட்டுமே சமூகத்தின் ஒரே நிறுவனம் அதற்கு எதிராக இயங்கும் எவையும் தேசவிரோதம் என்று வெளிப்படையாக பேசுகின்றனர். இதில் பலியிடப்படுவது ஜனநாயகம்தான் என்பதை மக்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை என்பதே நமது சமூகக் கட்டமைப்பின் அவலம். இவ்விடத்தில்தான் ஜனநாயக சக்திகளின் கடமையும், இயக்கமும், செயல்பாடும் முக்கியத்துவமடைகின்றன.
ஆதி
(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram