காஷ்மீர்: முன்னறிவிப்பின்றி வீடுகளை இடித்த அதிகாரிகள்

"பஹல்காம் தாக்குதலில் எனது சகோதரர் ஈடுபட்டிருந்ததாக வைத்துக்கொண்டாலும், எங்கள் குடும்பத்திற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் செய்த தவறுக்காக எங்கள் பெற்றோர்கள் ஏன் தண்டிக்கப்படுகிறார்கள்?"

ஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீரின் சில பகுதிகளில் லஷ்கர்-இ-தொய்பா (LeT) உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. குறைந்தது ஒன்பது வீடுகள் இடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

காஷ்மீரின் அனந்த்நாக், பந்திபோரா, குப்வாரா, குல்காம், புல்வாமா மற்றும் ஷோபியான் மாவட்டங்களில் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒன்பது பேரின் வீடுகள் இடிக்கப்பட்டதாக ஏப்ரல் 27 அன்று வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவற்றில், ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஏழு வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. மேலும் இரண்டு வீடுகள் ஏப்ரல் 26 இரவு வெடிவைத்துத் தகர்க்கப்பட்டுள்ளன.

சந்தேகிக்கப்படும் நபர்கள் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர், ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் அவற்றின் துணை அமைப்புகளின் உறுப்பினர்கள் என்று அரசு தரப்பால் கூறப்படுகிறது.

புல்வாமாவைச் சேர்ந்த அஹ்சன் உல் ஹக் ஷேக், ஆசிப் அகமது ஷேக் மற்றும் அமீர் நசீர், பந்திபோரா மாவட்டத்தைச் சேர்ந்த ஜமீல் அகமது ஷெர்கோஜ்ரி, குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாகிர் அகமது கனி, ஷோபியன் மாவட்டத்தைச் சேர்ந்த ஷாஹித் அகமது குட்டே மற்றும் அட்னான் ஷபி தார், அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதில் தோக்கர் மற்றும் குப்வாராவில் வசிக்கும் ஃபரூக் அகமது தத்வா ஆகியோர் லஷ்கர் உறுப்பினர்கள் என அரசால் சந்தேகிக்கப்படுபவர்களாக உள்ளனர்.

பஹல்காம் தாக்குதலில் ஷேக் மற்றும் தோக்கர் ஆகியோர் நேரடியாக ஈடுபட்டதாக அரசு குற்றம் சாட்டுகிறது.


படிக்க: பஹல்காம்: பாதுகாப்பு குறைபாட்டைக் கேள்விகேட்ட பத்திரிகையாளரைத் தாக்கிய பாசிச கும்பல்!


கட்டிடங்களை இடிக்க வெடிமருந்துகளைப் பயன்படுத்தியதன் விளைவாக அவற்றின் சுற்றுப்புறங்களில் சில வீடுகள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

உரிமையாளர்களுக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் (show-cause notice) வழங்காமல் வீடுகளை இடித்ததானது அரசியலமைப்பால் வழங்கப்படும் அடிப்படை உரிமையான தங்குமிட உரிமையை மீறும் நடவடிக்கையாகும். இதுபோல் வீடுகளை இடிப்பதைச் சமீபத்தில் உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் அரசால் வீடுகள் இடிக்கப்பட்டபோது பாதிக்கப்பட்டவர்களுக்கு பண இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்குகளில், ஷோ-காஸ் நோட்டீஸ்கள் நேரிலோ அல்லது பதிவு தபாலிலோ வழங்கப்படவில்லை; ஆனால் இடிக்கப்படுவதற்கு முன்பாக மட்டும் அவர்களின் வீடுகளில் ஒட்டப்பட்டதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது.

“இந்த வழக்குகள் எங்கள் மனசாட்சியை உலுக்குகின்றன. மனுதாரர்களின் குடியிருப்பு வளாகங்கள் இடிக்கப்பட்டுள்ளன… தங்குமிட உரிமை என்று ஒன்று உள்ளது; உரிய செயல்முறை என்று ஒன்று உள்ளது… தங்குமிடத்திற்கான உரிமையும் அரசியலமைப்பின் 21வது பிரிவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்பதை அதிகாரிகள், குறிப்பாக மேம்பாட்டு ஆணையம் நினைவில் கொள்ள வேண்டும்” என்று நீதிமன்றம் கூறியிருந்தது. மேலும் வீடுகளை இடிப்பதற்கு முன்பாக தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிய வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் அரசிற்கு அறிவுறுத்தியிருந்தது.


படிக்க: காஷ்மீர் – பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: படுகொலைகளுக்கு யார் காரணம்?


பஹல்காம் படுகொலையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து லஷ்கர் உறுப்பினர்களில் ஒருவர் என்று கூறப்படும் ஆசிப் ஷேக்கின் சகோதரி யாஸ்மீனா தி வயரிடம் பேசுகையில், “பஹல்காம் தாக்குதலில் எனது சகோதரர் ஈடுபட்டிருந்ததாக வைத்துக்கொண்டாலும், எங்கள் குடும்பத்திற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் செய்த தவறுக்காக எங்கள் பெற்றோர்கள் ஏன் தண்டிக்கப்படுகிறார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள குரி கிராமத்தில் வசிக்கும் ஷெஹ்சாதா பானோ ”வியாழக்கிழமை (ஏப்ரல் 24) இரவு பாதுகாப்புப் படையினர் தங்கள் கிராமத்தைச் சுற்றி வளைத்தனர். நான் வீட்டில் தனியாக இருந்தேன். அவர்கள் வீட்டைச் சோதனையிட வேண்டியிருந்ததால் ஒரு பாதுகாவலர் என்னை வெளியே வரச் சொன்னார். சில நிமிடங்களில், கிராமத்தினர் அனைவரும் தங்கள் குடியிருப்புகளிலிருந்து காலி செய்யப்பட்டனர். வெடி வைக்கப்போவதால் வேறு தங்குமிடங்களைத் தேடிக்கொள்ளுமாறு கூறிவிட்டனர்” என்று கூறினார். இவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அடில் தோக்கர் என்பவரின் தாயார் ஆவார்.

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் வீடுகள் இடிக்கப்பட்டபோது பா.ஜ.க அரசிற்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் தற்போது மௌனம் காத்து வருகின்றனர்.

செய்தி ஆதாரம்: தி வயர்


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க