11. லெனினின் நேர்மையும் எதார்த்தமின்மைபால் வெறுப்பும்
லெனினது சக்தியின் மர்மங்களில் ஒன்று அவருடைய உளமார்ந்த நேர்மை ஆகும். தமது நண்பர்களிடம் அவர் நேர்மையைக் கடைப்பிடித்தார். அணிகளில் ஒவ்வொரு புது நபர் சேரும்பொழுதும் அவர் மகிழ்ச்சி அடையத்தான் செய்தார். ஆயினும் வேலை நிலைமைகளையோ வருங்கால வாய்ப்புக்களையோ கவர்ச்சியாகச் சித்திரிப்பதன் மூலம் ஒரு ஆளைக்கூட அவர் திரட்ட மாட்டார். மாறாக விஷயங்களை உள்ளதைவிட மோசமாக வருணிப்பதையே அவர் மேற்கொண்டார். லெனினுடைய பல பேச்சுக்களின் பல்லவி இதுதான்: “போல்ஷெவிக்குகள் அடைய முயலும் குறிக்கோள் தொலைவில் இருக்கிறது உங்களில் பெரும்பாலோர் கனவு காண்பதைவிடத் தொலைவில் இருக்கிறது. நாம் ருஷ்யாவைக் கரடுமுரடான பாதையில் நடத்தி வந்திருக்கிறோம். ஆனால் நாம் கடைப்பிடிக்கும் போக்கு நமக்கு மேலும் அதிகப் பகைவர்களையும் மேலும் பட்டினியையும் உண்டாக்கும். சென்ற காலம் கடினமாகவே இருந்தது. வருங்காலமோ இன்னும் கடினமான நீங்கள் நினைப்பதை விட அதிகக் கடினமான நிலைமைகளை கொண்டிருக்கும்” கவர்ச்சியூட்டும் ஆசை காட்டல் அல்ல இது. வழக்கமாகப் படை திரட்டுவதற்குரிய அழைப்பு அல்ல இது! எனினும் காயங்களும் சிறைவாசமும் மரணமுமே எதிர்ப்படும் என்று கூறிய காரிபால்டியை இத்தாலியர்கள் திரண்டு வந்து பின்பற்றியது போல ருஷ்யர்கள் திரண்டு வந்து லெனினைப் பின்பற்றினார்கள். தலைவர் தமது இயக்கத்தைப் பெருமைப்படுத்த வேண்டும். கேட்போர் மனம் மாறி அதில் சேர்ந்து கொள்ளுமாறு வற்புறுத்தித் தூண்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பவனுக்கு இது ஓரளவு சங்கடமாயிருந்தது. ஆனால் லெனின் இந்தத் தூண்டுதல் உள்ளத்திலிருந்து வரும்படி விட்டு விட்டார்.
தமது வெளிப்படையான பகைவர்களிடமும்கூட லெனின் நேர்மையைக் கடைப்பிடிக்கிறார். அவரது அசாதாரணமான கபடின்மையைப் பற்றிக் குறிப்பிடுகையில் ஓர் ஆங்கிலேயர் அவருடைய போக்கு பின்வருமாறு இருந்தது எனச் சொல்லுகிறார்: “சொந்த முறையில் உங்கள்மீது எனக்குப் பகைமை எதுவும் இல்லை. ஆனால் அரசியல் நோக்கில் நீங்கள் என் பகைவர், உங்களை அழிப்பதற்கு எனக்குத் தோன்றும் எல்லா ஆயுதங்களையும் நான் பிரயோகித்தாக வேண்டும். உங்கள் அரசாங்கம் எனக்கு எதிராக இதையே செய்கிறது. இப்போது எவ்வளவு தூரம் நாம் சேர்ந்து செல்ல முடியும் என்பதைப் பார்ப்போம்.”
நேர்மையின் இந்த முத்திரை லெனினுடைய எல்லா வெளிப்படைக் கூற்றுக்களிலும் பதிந்திருக்கிறது. ராஜதந்திரி அரசியல்வாதிக்குரிய வழக்கமான சாதனங்கள் வெற்று வேட்டு, படாடோபமான சொற்கள், வெற்றி மனப்பான்மை ஆகியவை லெனினிடம் கிடையாது. அவர் விரும்பினாலுங்கூட மற்றவர்களை ஏய்க்க அவரால் முடியாது என்று தோன்றுகிறது. அதே காரணத்தினால் தம்மையே ஏமாற்றிக் கொள்ளவும் அவரால் முடியாது. அவரது விஞ்ஞான மனப்போக்கும் மெய் விவரங்கள்பால் அவருக்குள்ள தீவிர ஆர்வமுமே இதன் காரணம். அவருடைய தகவல் மார்க்கங்கள் எல்லாத் திசைகளிலும் சென்று கணக்கற்ற மெய் விவரங்களை அவருக்குக் கொண்டு தருகின்றன. இந்த விவரங்களை அவர் சீர்தூக்கிப் பார்த்து, சலித்தெடுத்து, சுத்தப்படுத்துகிறார். பிறகு அவர் போர்த்தந்திர நிபுணர், சமூகத் தனிமங்களைக் கொண்டு செயல்புரியும் தேர்ந்த இரசாயனி, கணித அறிஞர் என்ற முறையில் இவற்றைப் பயன்படுத்துகிறார். உதாரணமாக ஒரு விஷயத்தை அவர் பின்வரும் வழியில் அணுகுகிறார்:
“இப்போது நமக்குச் சாதகமான விவரங்கள் இவை: ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு…” அவற்றை அவர் சுருக்கமாக எடுத்துரைப்பார். “நமக்கு எதிரான விவரங்கள் இவை.”
அதேமாதிரி இவற்றையும் அவர் எண்ணிக் கணக்கிடுவார், “ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு வேறு எவையேனும் உள்ளனவா? என்று கேட்பார். வேறு எதையேனும் கண்டு சொல்வதற்காக நாங்கள் மூளையைக் குடைந்துகொள்வோம், பொதுவாகப் பயனின்றி, சாதகமானவை, பாதகமானவை, இருதரப்பு விஷயங்களையும் விவரித்து விட்டு, கணிதப் பிரச்சினையை மதிப்பிடுவது போலத் தமது மதிப்பீட்டைச் செய்வார் லெனின்.
மெய் விவரங்களைப் பெருமைப்படுத்துவதில் அவர் வுட்ரோ வில்சனுக்கு நேர் எதிரானவர். வில்சன் ஒரு சொற்கலைஞர். எல்லா விஷயங்களுக்கும் நயமான சொற்களால் முலாம் பூசி, மக்களைப் பிரமிக்கவும், மதிமயங்கவும் புரிந்து, விஷயத்தில் அடங்கிய விகாரமான எதார்த்தங்களையும் திண்ணமான பொருளாதார விவரங்களையும் அவர்கள் காணவிடாதவாறு அவர் செய்துவிடுவார். லெனினோ அறுவைக் கத்தியுடன் சத்திர மருத்துவன் போல வருகிறார். ஏகாதிபத்தியவாதிகளின் ஆடம்பரமான பாஷைக்குப் பின் மறைந்துள்ள எளிய பொருளாதார நோக்கங்களை அவர் திறந்து காட்டுகிறார். ருஷ்ய மக்களுக்கு அவர்கள் விடுக்கும் பிரகடனங்களின் வெளிப் போர்வையை நீக்கி, அம்மணம் ஆக்கி, அவர்களுடைய நேர்த்தியான உறுதிமொழிகளின் பின்னே மறைந்திருக்கும் சுரண்டுவோரின் கரிய, சூறையாடும் கையை அவர் வெளிக்காட்டுகிறார்.
வார்த்தைப் பந்தல் போடும் வலதுசாரியினர்பால் அவர் சற்றும் இரக்கம் காட்டுவதில்லை. அதேசமயம், எதார்த்தத்திலிருந்து தப்புவதற்குப் புரட்சிக் கோஷங்களில் புகலிடம் தேடும் இடதுசாரியினரை அவர் கடுமையுடன் விளாசுகிறார். “புரட்சிகர ஜனநாயகச் சொல்வன்மை என்னும் இனிப்பூட்டப் பெற்ற நீரில் காடியையும் பித்தநீரையும் ஊற்றுவது தமது கடமை என அவர் கருதுகிறார். உணர்ச்சிப் பெருக்கில் உருகுபவனையும் வறட்டுக் கோட்பாடுகளை உரக்க முழங்குபவனையும் அவர் சுரீரெனத் தைக்கும் ஏளனத்துக்கு உள்ளாக்குகிறார்.
ஜெர்மானியர்கள் சோவியத் தலைநகரை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தபோது ருஷ்யாவின் எல்லாப் பகுதிகளிலுமிருந்து தந்திகள் ஸ்மோல்னியுக்கு வெள்ளமாகப் பெருகி வந்தன. வியப்பும். திகிலும் ஆத்திரமும் அவற்றில் வெளியிடப்பட்டிருந்தன. “ருஷ்யப் பாட்டாளி வர்க்கம் நீடூழி வாழ்க!” “ஏகாதிபத்தியக் கொள்ளைக்காரர்கள் ஒழிக!” “கடைசித் துளி வரை இரத்தம் சிந்திப் புரட்சியின் தலைநகரைக் காப்போம்!” என்பது போன்ற கோஷங்களுடன் இந்தத் தந்திகள் முடிந்திருந்தன.
லெனின் அவற்றைப் படித்துவிட்டு எல்லா சோவியத்துக்களுக்கும் ஒரு தந்தி அனுப்புவித்தார். பெத்ரோகிராதுக்குப் புரட்சிக் கோஷங்களைத் தயவுசெய்து அனுப்பாமலிருக்கும்படியும் துருப்புக்களை அனுப்பும்படியும் அதோடு எத்தனை தொண்டர்கள் படைவீரர்களாகத் திரட்டப்பட்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்கும்படியும், ஆயுதங்கள், போர்த் தளவாடங்கள் ஆகியவற்றின் இருப்பு பற்றியும் உணவு நிலைமை பற்றியும் அறிக்கை செய்து கொள்ளும்படியும் அதில் சோவியத்துக்கள் கேட்டுக் கொள்ளப் பட்டிருந்தன.
12. நெருக்கடியில் செயலாற்றும் லெனின்
ஜெர்மானியர்களின் முன்னேற்றத்திற்கு கூடவே அயல்நாட்டினரின் வெளியேற்றம் நிகழ்ந்தது. “ஹூணர்களைக் கொல்லுங்கள்!” என்று காட்டுக்கூச்சல் போட்டவர்கள் எல்லோரும் இப்போது ஹூணன் கொல்லப்படும் தொலைவுக்குள் வந்ததும் கண் தலை தெரியாமல் விழுந்தடித்து ஓடியதைக் குறித்து ருஷ்யர்கள் அமிழ்ந்த வியப்பைத் தெரிவித்தார்கள். இந்தக் கும்பலோடு சேர்ந்து கம்பி நீட்டுவது எனக்கும் நன்றாய்த்தான் இருந்திருக்கும், ஆனால் கவசமோட்டார் மீது நின்று நான் அளித்த வாக்குறுதி என்னைத் தடுத்தது. எனவே நான் செஞ்சேனையில் சேர முன்வந்தேன். இடதுசாரிக் கம்யூனிஸ்ட் புகாரின் நான் லெனினைக் காண வேண்டும் என்று வற்புறுத்தினார்.
“எனது வாழ்த்துக்கள்! எனது மகிழ்வுரைகள்!” என்றார் லெனின், “எங்களது நிலைமை இப்போது மிக மோசமானதாகத் தோன்றுகிறது. பழைய சைனியம் போரிடாது. புதிய சைனியமோ பெரும்பாலும் காகிதத்தில்தான் இருக்கிறது. ப்ஸ்கோவ் நகரம் எதிர்ப்பு இன்றி இப்போதுதான் சரணடைந்துவிட்டது. இது கடுங்குற்றம். அந்த வட்டார சோவியத் தலைவன் சுடப்பட வேண்டும். நமது தொழிலாளர்களிடம் பெருத்த தன்னலத் தியாகமும் வீரம் இருக்கிறது. ஆனால் இராணுவப் பயிற்சி இல்லை, கட்டுப்பாடு இல்லை.”
இவ்வாறு சுமார் இருபது சின்ன வாக்கியங்களில் நிலைமையைத் தொகுத்துரைத்துவிட்டு முடிவில் லெனின் கூறினார்: “நான் காண்பது எல்லாம் சமாதானந்தான். எனினும் சோவியத் போருக்கு ஆதரவாக இருக்கலாம். என்னவாயினும், புரட்சிச் சேனையில் சேர்ந்ததற்கு என் வாழ்த்துக்கள். ருஷ்ய பாஷையுடன் உங்கள் போராட்டத்துக்குப் பிறகு ஜெர்மானியர்களுடன் போர் புரிய நீங்கள் நல்ல பயிற்சி பெற்றிருக்க வேண்டுமே” சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தபின் அவர் மேலும் கூறினார்:
“ஒரு வெளிநாட்டான் நிரம்பச் சண்டை போட்டுவிட முடியாது. ஒருவேளை மற்றவர்களும் உங்களுடன் சேர்ந்துகொள்ளலாம்.”
ஒரு படைப்பிரிவு அமைக்க நான் முயலக்கூடும் என்று நான் அவரிடம் சொன்னேன்.
லெனின் நேரடியாகச் செயலாற்றுபவர் திட்டம் யோசனையில் உதித்ததுமே அதைச் செயல்படுத்துவதில் அவர் முனைந்தார். சோவியத் கமாண்டர் க்ரிலேன்கோவுக்குப் போன் செய்ய முயன்றார் அது முடியாமல் போகவே பேனாவை எடுத்து அவருக்கு ஒரு குறிப்பு எழுதினார்.
இரவு ஆவதற்குள் நாங்கள் சர்வதேச லீஜியன் அமைத்து விட்டோம். அயல்மொழிகள் பேசும் ஆடவர் அனைவருக்கும் இந்தப் புதிய படைப்பிரிவில் சேருமாறு அழைப்பு விடுத்தோம். ஆனால் லெனின் விஷயத்தை இத்துடன் விட்டு விடவில்லை. காரியத்தை ஆடம்பரமான முறையில் தொடங்கி வைத்ததுடன் அவர் திருப்தி அடையவில்லை. அவர் அதை விடாது, விவரமாகத் தொடர்ந்தார் அழைப்பு அறிக்கையை ருஷ்ய மொழியிலும் ஆங்கிலத்திலும் அச்சிடுமாறு பிராவ்தா அலுவலகத்துக்கு இரண்டுமுறை போன் செய்து உத்தரவிட்டார் பின்பு அதைத் தந்தி மூலம் நாடெங்கும் பரப்பினார். இவ்வாறு யுத்தத்தையும் சிறப்பாக அதைப் பற்றிய புரட்சிக் கோஷங்களால் தங்களுக்கு வெறி ஏற்றிக் கொண்டிருந்தவர்களையும் ஒருபுறம் எதிர்த்த அதே சமயத்தில் போருக்கு ஆயத்தமாவதற்காக எல்லாச் சக்திகளையும் லெனின் திரட்டிக் கொண்டிருந்தார்.
பெத்ரோப்பாவ்லவ்ஸ்க்காயா கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த புரட்சி எதிர்ப்பு இராணுவ அதிகாரிகளில் சிலரை அழைத்து வருமாறு செங்காவற்படையினருடன் ஒரு காரை அனுப்பிவைத்தார்.
ஜெனரல்கள் லெனினது அலுவலகத்துக்குள் வரிசையாக வந்து சேர்ந்ததும் அவர், “கனவான்களே, நிபுணர்கள் என்ற முறையில் உங்களிடம் ஆலோசனை கேட்பதற்காகவே உங்களை இங்கே அழைத்திருக்கிறேன். பெத்ரோகிராத் அபாயத்தில் இருக்கிறது. அதன் தற்காப்புக்கான இராணுவச் செயல் தந்திரத்தை உங்களால் வகுத்துத்தர முடியுமா?” என்றார். அவர்கள் சம்மதித்தார்கள்.
வரைப்படத்தில் செம்படையினரின் அணிகளும் போர்த்தளவாடங்களும் சேமிப்புப் படையினரும் இருக்கும் இடங்களைக் காட்டிவிட்டு லெனின் தொடர்ந்தார்:
எங்கள் படைகள் இதோ இருக்கின்றன. எதிரித் துருப்புக்களின் எண்ணிக்கையையும் இட அமைப்புக்களையும் பற்றி எங்களுக்குக் கிடைத்துள்ள கடைசியான தகவல்கள் இவை ஜெனரல்களுக்கு வேறு ஏதேனும் தேவையானால் அவர்கள் கேட்கலாம்.”
ஜெனரல்கள் வேலையில் முனைந்தார்கள். மாலையாகும் போது தங்கள் யோசனைகளின் முடிவுகளை லெனினிடம் அளித்தார்கள். பின்பு அவர்கள் நைச்சியமாக, “இப்போது, எங்களுக்கு அதிக வசதியான இருப்பிடங்கள் அளிப்பதற்கு முதலமைச்சர் அன்புகூர்ந்து இணங்குவாரா?” என்றார்கள்.
“மிக மிக வருந்துகிறேன். வேறு ஒரு சமயம் பார்ப்போம், ஆனால் இப்போது அல்ல. கனவான்களே, உங்கள் இருப்பிடங்கள் சௌகரியம் இல்லாதவையாக இருக்கலாம், ஆனால் பாதுகாப்பானவை என்ற அனுகூலம் அவற்றில் உண்டு” எனப் பதிலளித்தார் லெனின். அதிகாரிகள் பெத்ரோப்பாவ்லவ்ஸ்க்காயா கோட்டைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram