சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: தொடரும் அரசின் மெத்தனப் போக்கு

விபத்து நடைபெறுவதற்கு முன்பே பட்டாசு ஆலையின் விதி மீறல்களை முறையாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்காமல் தொழிலாளர்களின் உயிர் பறிபோனதற்குப் பிறகு கோடி ரூபாய் இழப்பீடு கொடுத்தால் கூட என்ன பயன்?

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சிறுகுளத்தை சேர்ந்த ஜெய்சங்கர் (57) மற்றும் பூத்தாயம்மாள் நகரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவரின் மனைவி ராஜரத்தினம் (56) ஆகியோர் எம்.புதுப்பட்டி அருகே நெடுங்குளத்தில் ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலையை நடத்தி வருகின்றனர்.

மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை (பெசோ) உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 100-க்கும் மேற்பட்ட அறைகளில், 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏப்ரல் 26 அன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பட்டாசுக்கு ரசாயன கலவை செலுத்தும் பணியின்போது உராய்வு ஏற்றப்பட்டு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த அறைகளுக்கும் தீ பரவி பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கியது. இந்த வெடிவிபத்தில் சிக்கி எம்.சொக்கலிங்காபுரத்தை சேர்ந்த கலைச்செல்வி (33), சொக்கம்பட்டியை சேர்ந்த மாரியம்மாள் (51), கூமாபட்டியை சேர்ந்த திருவாய்மொழி(45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் கட்டிட இடிபாடுகளிலும் தீ விபத்தில் சிக்கிய கூமாபட்டியை சேர்ந்த கோமதி (55), ராபியா பீவி (50), பாத்திமாமுத்து (65), கோபாலன்பட்டி முனியம்மாள் (50), எம்.புதுப்பட்டியை சேர்ந்த பாக்கியலட்சுமி (55) உள்பட 7 பேர் பலத்த படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெடி விபத்து ஏற்பட்ட சம்பவ இடத்திற்குச் சென்ற விருதுநகர் மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் சிவகாசி சார் ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்து பட்டாசு ஆலை போர்மேன் சுப்புராஜ், மேனேஜர் ராஜேஷ் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பட்டாசு ஆலையின் உரிமையைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.


படிக்க: சிந்தப்பள்ளி பட்டாசு ஆலை பயங்கர வெடிவிபத்து – 30 வீடுகள் சேதம்!


விபத்து நடைபெறுவதற்கு முன்பே பட்டாசு ஆலையின் விதி மீறல்களை முறையாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்காமல் தொழிலாளர்களின் உயிர் பறிபோனதற்குப் பிறகு கோடி ரூபாய் இழப்பீடு கொடுத்தால் கூட என்ன பயன்? மக்களை ஆசுவாசப் படுத்துவதற்கான நடவடிக்கையேயன்றி வேறொன்றும் இல்லை.

விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் கடந்த மாதம் ஜனவரி முதல் ஏப்ரல் வரை நான்கு பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டு 13 கூலித் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டாசு, தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும் கல்குவாரிகளிலும் வெடிமருந்துகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறன.

50 கிலோவிற்குக் குறைவாக வெடி மருந்துகள் வாங்க (DRO – District Revenue Officer) மாவட்ட வருவாய் அதிகாரியிடம் உரிமம் (License) பெறுகிறார்கள். அவ்வாறு உரிமம் பெற்ற பட்டாசு ஆலை நிறுவனங்கள் எத்தனை கிலோ வெடி மருந்து வாங்குகிறார்கள், எத்தனை கிலோ இருப்பு வைத்திருக்கிறார்கள் என்பதைப் பற்றிய விவரங்களை டி.ஆர்.ஓ பராமரிக்க வேண்டும்.

அந்த நிறுவனம் மீண்டும் வெடி மருந்து வேண்டி விண்ணப்பிக்கும்போது அந்த நிறுவனத்திற்கு எந்த அளவு வெடி மருந்தை ஒதுக்கலாம் என்பது குறித்து டி.ஆர்.ஓ முடிவு செய்யலாம்.

50 கிலோவிற்கு அதிகமான வெடிமருந்தை வாங்க மத்திய அரசிடமிருந்து நாக்பூரில் உரிமம் (Licence) பெறவேண்டும்.

சிறப்பு தாசில்தார் (Special Tahsildar) தலைமையிலான வருவாய்த் துறையினர் மற்றும் போலீசாருக்கு அதிரடியாக சோதனை நடத்தும் அதிகாரம் உண்டு. மாவட்ட சிறப்பு தாசில்தார் சரியான கால இடைவெளியில் பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்து அரசு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா இல்லையா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.


படிக்க: தர்மபுரி: கம்பைநல்லூர் பட்டாசு ஆலை வெடி விபத்து! அதிகார வர்க்கமே முதல் குற்றவாளி!


பட்டாசு உற்பத்திக்கான கந்தகம், நைட்ரஜன், ஜெலட்டின் (Sulfate, Nitrogen, Gelatin) ஆகிய ஃபேன்சிரக வேதிப்பொருட்களைக் கலக்கும் போதுதான் அதிக அளவில் பெருமளவிலான விபத்துகள் நடைபெறுகின்றன. வேதிப்பொருட்கள் கலக்கும் அறையில் இரண்டு நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது.

வேதிப்பொருட்களை முறையாகக் கையாளாத காரணத்தாலும், அதிக அளவு வெடிபொருட்கள் கையிருப்பு வைத்திருப்பதாலுமே பெறு விபத்துகள் நடைபெறுகின்றன.

இப்படியான விதிகளை மீறிச் செயல்படுவதால்தான் பட்டாசு ஆலையில் தொடர்ச்சியாக உயிரைப் பறிக்கும் விபத்துகள் நடைபெறுகின்றன. இது அரசுக்கும் அதிகாரிகளுக்கும் நன்கு தெரிந்த விசயம். இருப்பினும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல், விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களே விபத்திற்குக் காரணம் எனக் குற்றம் சுமத்தி அன்றாடம் உழைக்கும் கூலித் தொழிலாளிகளின் உயிரைக் குடிக்கின்றது அரசும் அதிகார வர்க்கமும்.

இறந்தவர்கள் யார் என்றே அடையாளம் தெரியாத வகையில் உடல் கருகி, உறுப்புக்கள் சிதறி தொழிலாளர்கள் கொல்லப்படுகின்றனர். அதைக் கண்டு கதறும் தொழிலாளர்களின் குடும்பத்தாரின் ஒப்பாரியில் திளைக்கும் இந்த அரசிடம் நீதியை எதிர்பார்க்க முடியுமா? நிச்சயம் இல்லை என்பதே நடப்பு நிகழ்வுகள் நமக்கு உணர்த்தும் செய்தி.

மக்களின் பிரச்சினைகள் ஒவ்வொன்றிலும் அரசும் அதிகார வர்க்கமும் மக்களுக்கானவர்கள் அல்ல என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது.

எனவே தொழிலாளர்களின் மீதும் உழைக்கும் மக்களின் மீதும் அக்கறை கொண்ட, மக்களுக்கு அதிகாரம் வழங்குகின்ற அரசால் மட்டுமே இதுபோன்ற தொடர்ச்சியான விபத்துகளுக்கும், படுகொலைகளுக்கும் முடிவுகட்ட முடியும்.


யாழன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க