சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து: முட்டாள்களின் சொர்க்கத்தில் மோடியும் சீடர்களும்

காஷ்மீரில் அணை கட்டி நீரை இதர மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டுமென்றால் புவியியல் ரீதியாகப் பல இடையூறுகள் இருக்கின்றன. நில மட்டம் மேற்கு நோக்கிச் சரிந்து இருப்பதால் கிழக்கு நோக்கிய பெரும் கால்வாய்கள் கட்டுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.

ப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக ஏப்ரல் 23 அன்று மோடி அரசு அறிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஊரி பாதுகாப்புச் சாவடியில் நடந்த தாக்குதலில் பதினாறு படை வீரர்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சிக்குப் பின் மோடியும் அவரது பரிவாரங்களும் அவிழ்த்து விட்டிருக்கும் இன்னும் ஒரு சவடால்தான் ”சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்” என்பது. இக்கூச்சல் 2019 ஆம் ஆண்டு புல்வாமா தக்குதலின்போதும் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு வெளியானவுடன் இந்திய தொலைக்காட்சி சேனல்களும் பத்திரிகைகளும் இந்த ஒப்பந்தம் ஏதோ ஒரு பொட்டலம் மடித்த காகிதம் போலவும் அதை உடனே கிழித்து எறிந்து குப்பையில் வீசி விடலாம் என்பது போலவும் ஒரு தோற்றத்தைக் கொடுத்து வருகின்றன.

ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட பின்னர் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டிய நீரைத் தடுத்து விடலாம்; பஞ்சமும் வறட்சியும் பாகிஸ்தானைப் பரிதவிக்கச் செய்து விடும்; பாகிஸ்தான் மக்களும் விவசாயிகளும் இதன் மூலம் சரியானபடி தண்டிக்கப்படுவார்கள் என்பது இவர்களது விருப்பம். அதாவது மோடி அரசின் கையாலாகாத்தனத்தை மறைக்க பாகிஸ்தான் விவசாயிகளைப் பழிவாங்கப் போகிறார்களாம்.

சிந்து நதி உடன்படிக்கை

சிந்து நதி சீனாவின் தன்னாட்சிப் பகுதியான திபத்தில் துவங்கி இந்தியா வழியாகப் பாகிஸ்தான் சென்று அரபிக் கடலில் கலக்கும் ஒரு பேராறு. ஐந்து பெரிய கிளை ஆறுகள் ஆண்டு முழுதும் நீரைச் சுமந்து சென்று இந்தியாவின் பஞ்சாப், பாகிஸ்தானின் பஞ்சாப், சிந்து உள்ளிட்ட பல பகுதிகளை வளமாக்கி வருகின்றது. மனித குல வரலாற்றில் சிந்து நதியின் பங்கு மகத்தானது. அழிந்து போன மொஹஞ்சதாரோ, ஹரப்பா உள்ளிட்ட பண்டைய நகரங்கள்; தக்ஷசீலம் உள்ளிட்ட எண்ணற்ற கல்விச்சாலைகள் அனைத்தும் சிந்து நதியின் பரிசுகளே.

பிரிட்டிஷ் இந்தியா பிரிக்கப்பட்ட பொழுது இந்தியப் பகுதியில் பாயும் நீரையும் பிரிக்க வேண்டியிருந்ததால் சிந்து நதி நீரையும் பிரிக்க வேண்டியிருந்தது. இதற்கான, பேச்சுவார்த்தைகள் நீண்ட காலம் நடந்தன.

சுமார், பத்து ஆண்டு கால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு  1960ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு இரு நாடுகளின் ஆட்சித் தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்து இடப்பட்டது. இரு நாடுகளும் ஏற்றுக் கொள்ளும் வகையில் சட்ட அறிஞர்கள், நீரியல் வல்லுநர்கள் இந்த ஒப்பந்தத்தை உருவாக்கினார்கள். பேச்சுவார்த்தைகளைச் சுமுகமாக நடத்தவும், ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒப்பந்த விதிகளைச் சச்சரவின்றி நடைமுறைப்படுத்த வழிவகை செய்யவும் உலக வங்கியும் கையெழுத்து இட்டது. கடந்த அறுபது ஆண்டுகளில் இந்த ஒப்பந்தத்தில் பெரிய சிக்கல் எதுவும் எழவில்லை. அந்த வகையில் சர்வதேச அறிஞர்களால் இந்த ஒப்பந்தம் ஒரு மாபெரும் வெற்றி என்று தான் கருதப்படுகிறது. பெருவாரியான மக்கள் நம்பியிருக்கும் ஒரு ஆற்றின் நீரை சிக்கலில்லாமல் பகிர்ந்து கொள்ளும் சர்வதேச ஒப்பந்தங்களில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் முதன்மையானது மட்டுமல்ல, நீண்ட காலம் நடைமுறையிலிருந்து வருகிறது என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் சுருக்கம் இதோ:

  • சிந்து நதியின் முக்கியக் கிளை ஆறுகள் ஐந்து: ஜீலம், செனாப், ராவி, பியாஸ், சட்லெஜ். ஆக மொத்தம், சிந்து நதியுடன் சேர்த்து ஆறு நதிகள் என்று கணக்கில் கொள்ளப்படுகின்றன.
  • மேற்கில் ஓடும் வரிசையின் படி முதல் மூன்று ஆறுகளான சிந்து, ஜீலம், சீனாப் பாகிஸ்தானுக்கு எனவும்; அடுத்த மூன்று ஆறுகளான – ராவி, பியாஸ், சட்லெஜ் இந்தியாவுக்கு எனவும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
  • இப்படித் தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட ஆறுகளின் உபயோகம் முழுமையும் அந்தந்த நாடுகள் மட்டுமே தீர்மானித்துக் கொள்ளலாம். அவரவர் பயன்படுத்திய நீர் போக மீதி ஆற்றில் ஓடுமானால், அதை மற்றவர் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • பிறர் பகுதியில் வெள்ளத்தை உருவாக்கி விடாமலும், அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் தகுந்த முன்னறிவிப்பை வழங்குவதுடன் இரு நாடுகளும் பிறருக்கு போதிய பாதுகாப்புகள் செய்து தரவேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை ஆற்றில் ஓடும் நீர் குறித்த புள்ளி விபரங்கள் உள்ளிட்ட இதர கணக்கு விபரங்களை வல்லுநர்கள் கூட்டம் நடத்தி பகிர்ந்து கொள்ள வேண்டும்.
  • இடைப்பட்ட சிற்றாறுகளில் யாரேனும் புதிய திட்டம் உருவாக்கினால் அது குறித்து விபரங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டும். ஏதேனும் வில்லங்கம் ஏற்பட்டால், நீரியல் நிபுணர்கள் கூடி விவகாரம் முற்றாமல் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

இதேவேளையில், இந்தியாவின் பொறுப்பற்ற போக்கினால் நேபாளம், சீனா, பூட்டான், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளுடன் எந்த ஒரு சுமுக உடன்படிக்கையும் இதுவரை கையெழுத்து ஆகவில்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். எனவே, உருப்படியான எந்த ஒரு நதி நீர் திட்டத்தையும் இந்தியாவால் நிறைவேற்ற இயலவில்லை. இதன் காரணமாக, வட இந்திய மாநிலங்களான ஹிமாச்சலப் பிரதேசம், டில்லி, உத்தரப் பிரதேசம், பீகார்; வடகிழக்கு மாநிலங்களான  அஸ்ஸாம், மேகாலயா போன்றவற்றில் ஏற்படும் வெள்ளத்திற்கு மத்திய அரசின் பொறுப்பில்லாத போக்கே காரணம் என்று அவ்வப்போது இந்த மாநில அரசுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பாக்மதி நதியில் ஏற்படும் வெள்ளத்திற்கு இந்திய அரசும் அதன் பொறுப்பற்ற திட்டங்களும்தான் காரணம் என்று பலமுறை குற்றம் சாட்டியிருந்தது இதற்கு ஒரு சான்றாகும். எனவே, சிந்துவைத் தவிர்த்து இந்தியா எந்த ஒரு நதி நீருக்கும் உருப்படியான சர்வதேச ஒப்பந்தங்களைச் செய்திருக்கவில்லை என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கூடவே, கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருபத்தேழு இந்திய உள்நாட்டு நதிகளில் பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் மாநிலங்களுக்கு இடையே நதி நீர் சண்டைகளை ஏற்படுத்தி நாட்டையே ரணகளமாக்கி வைத்திருக்கிறது இந்திய அரசு.

சிந்துவில் இந்தியாவின் புதிய அணைகள் சாத்தியமா?

உண்மையில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் இந்தியாவுக்கு சாதகமான ஒன்று என்றுதான் கொள்ள வேண்டும். ஏனென்றால், சிந்து நதி நீருக்கு உரிமை கொண்டாடும் மாநிலங்களில் முக்கியமானவை காஷ்மீர், பஞ்சாப்,  ஹரியானா. இவற்றில், பஞ்சாபும் ஹரியானாவும் தங்களுக்குத் தேவையான நீரினைப் பெற்று வருகின்றன. எனவே, புதிய அணைகளை உருவாக்கினால் எந்தவிதமான புதிய பலனையும் அவை அடைந்து விட முடியாது. காஷ்மீர் மட்டுமே குறைவான நீரைப் பெற்று வருவதால், மோடியின் எடுபிடிகள் சொல்லும்படியான புதிய அணை கட்டும் திட்டங்களை உருவாக்கினால் அது காஷ்மீரில் மட்டுமே கட்டப்பட வேண்டியிருக்கும்.

போதுமான விளைநிலங்கள் இல்லாத காஷ்மீரில் அப்படியொரு அணை கட்டும் திட்டம் தேவையில்லை என்பது எதார்த்தம். ஒருவேளை, காஷ்மீரிலிருந்து தண்ணீரை இதர மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டுமென்றால் புவியியல் ரீதியாகப் பல இடையூறுகள் இருக்கின்றன. நில மட்டம் மேற்கு நோக்கிச் சரிந்து இருப்பதால் கிழக்கு நோக்கிய பெரும் கால்வாய்கள் கட்டுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. மலைகளைக் குடைந்து காஷ்மீருக்கு ரயில் விடவே அறுபது ஆண்டுகள் ஆன நிலையில் பேரணைகளையும் பல நூறு மைல்கல் நீளமான கால்வாய்களை உயர்ந்தோங்கிய இமய மலையில் இந்திய அரசு குறித்த காலத்தில் கட்டி முடிக்கும் என்று எதிர்பார்ப்பது அதைவிட மடமை. அதற்குப் பல ஆண்டுகள் ஆகும். பிறகு எப்படி மோடியின் வாய்ச் சவடால் நடைமுறைக்கு வரும்.

வரவே வராது என்பதுதான் உண்மை.


கிருஷ்ணராஜ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க