கல்லாங்காடு சிப்காட்டிற்கு எதிரான மக்கள்  போராட்டம் வெல்லட்டும்!

சிப்காட் தொழிற்பேட்டை வருவதன் மூலம் கல்லாங்காடு சுற்றுவட்டாரப் பகுதி விவசாயம், கால்நடைகள், மேய்ச்சல் நிலங்கள், பழங்கால சின்னங்கள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், தாவரங்கள், காட்டுயிர்கள், கோவில்கள் என கல்லாங்காடு பகுதி முற்றிலும் பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்நிலை மோசமடையும் அவலநிலை உள்ளது.

துரை மாவட்டம், மேலூர் வட்டம் கல்லாங்காடு பகுதியில் 279 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தினை தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இத்திட்டத்திற்கான அளவீடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லாங்காடு மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் போராடி வருகின்றனர்.

வஞ்சி நகரம், பூதமங்கலம், கொடுக்கம்பட்டி ஆகிய ஊராட்சிகள் இணையும் பகுதியில் கல்லாங்காடு கிராமம் அமைந்துள்ளது. இம்மூன்று ஊராட்சிகளுக்கு உட்பட்ட 21 கிராமங்களைச் சேர்ந்த மக்களும் தங்களது வாழ்வாதாரத்திற்காக கல்லாங்காட்டையே சார்ந்துள்ளனர்.

இக்கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கால்நடை வளர்ப்பையே தங்களது முக்கிய வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். ஒரு குடும்பத்திற்கு 10 முதல் 50 வரை கால்நடைகளை வளர்க்கும் இம்மக்கள் கல்லாங்காட்டையே மேய்ச்சல் நிலமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், மேடு பகுதியான கல்லாங்காட்டில் பெய்யும் மழையானது சுற்றுவட்டாரத்திலுள்ள 144 ஏக்கர் பாசன அதிகார கண்மாய், 100 ஏக்கர் பாசன கீராந்தி கண்மாய், 70 ஏக்கர் பாசன பிராந்தன் கண்மாய், 20 ஏக்கர் பாசன ஆதிசுந்தரம் கண்மாய், 70 ஏக்கர் பரப்பளவு பாசன வேம்புலி கண்மாய், குளங்கள் போன்றவற்றில் நிரம்புகின்றது. சிப்காட் திட்டத்தால் நீர்வரத்து பாதிக்கப்படும்போது இந்த நீர்நிலைகளை நம்பியுள்ள கடலை, நெல், தென்னை, பருத்தி, காய்கறிகள், பயிறு விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

மேலும், கல்லாங்காட்டில் உள்ள அழகு நாச்சி அம்மன் கோயில் காடு, கல்லாங்காடு, சிவன் கோயில், பெருங்காட்டுக் கருப்பு கோவில் காடுகள் ஆகியவையும் பாதுகாக்கப்பட வேண்டியவையாகும். 3,500 ஆண்டுகளுக்குப் பழமையான கல்பதுக்கைகள், முதுமக்கள்தாழி, கல்திட்டை, கல்வெட்டம், கற்குவியல் உள்ளிட்ட பெருங்கற்கால சின்னங்கள் இங்குள்ளன. உசிலை, அரசம், தைலம், குருந்தம் போன்ற பல்வேறு தாவரங்களுக்கும், புள்ளி புறா, புள்ளிமூக்கு வாத்து, பட்டை கழுத்து கள்ளிப்புறா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பறவை இனங்களும், கொள்ளை வெள்ளையன், வெண்புள்ளிக்கருப்பன், புங்க நீலன், சிறுபுல் நீளம் உள்ளிட்ட 14 வகை வண்ணத்துப்பூச்சிகளுக்கும், தேவாங்கு, குரங்கு, உடும்பு, மரநாய், காட்டுக்குயில் உள்ளிட்ட காட்டுயிர்களுக்கும் இப்பகுதி வாழ்விடமாக அமைந்துள்ளது.

சிப்காட் தொழிற்பேட்டை வருவதன் மூலம் கல்லாங்காடு சுற்றுவட்டாரப் பகுதி விவசாயம், கால்நடைகள், மேய்ச்சல் நிலங்கள், பழங்கால சின்னங்கள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், தாவரங்கள், காட்டுயிர்கள், கோவில்கள் என கல்லாங்காடு பகுதி முற்றிலும் பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்நிலை மோசமடையும் அவலநிலை உள்ளது.

எனவே கல்லாங்காட்டில் சிப்காட் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லாங்காடு மட்டுமின்றி சுற்றுவட்டார 16 கிராம மக்கள் போராடி வருகின்றனர். “சிப்காட் தொழிற்பேட்டை அமையக்கூடாது” எனக் கோரிக்கை வைத்துக் கடந்த பிப்ரவரி 17 அன்று 16 கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்தனர். மாவட்ட ஆட்சியரிடமிருந்து முறையான பதில் கிடைக்காததால் கடந்த மார்ச் 23 அன்று பல கிராம மக்கள் ஒருங்கிணைந்து கல்லங்காடு அழகுநாச்சி அம்மன் கோவில் முன்பு மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், கீழடி, சிவகளை, வெம்பக்கோட்டை போன்று கல்லங்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தொல்லியல் ஆய்வு செய்து கல்லங்காடு பகுதியைப் பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் மரபுத் தளமாக அறிவிக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

மதுரை டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை முறியடித்து மதுரையைக் காப்பாற்றியது போல கல்லாங்காடு சிப்காட் தொழிற்பேட்டை அமையாமல் தடுத்துநிறுத்தி, பகுதி மக்களின் வாழ்வாதாரம், இயற்கை வளங்கள், பழங்கால பொருட்கள், தாவரங்கள், காட்டுயிர்கள் போன்றவற்றைப் பாதுகாப்பதற்குத் துணைநிற்போம்!


புதிய ஜனநாயகம் களச்செய்தியாளர், மதுரை

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க