ஜே.என்.யு மாணவர் சங்க தேர்தல் உணர்த்துவது என்ன?

ஏ.பி.வி.பி-இன் நோக்கமெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது மாணவர்களின் குரலுக்கும் உரிமைக்கும் ஆதரவாக இருக்கும் மாணவர் சங்கத் தேர்தலை ஒழிப்பதும், எளியோரின் பல்கலைக்கழகமாக இருக்கும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை முடக்குவதும் தான்.

ரலாற்றுச் சிறப்புமிக்க பல்கலைக்கழகமான ஜவகர்லால்நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர் சங்கத் தேர்தல் (JNUSU – JNU Students Union Election) மிகவும் முக்கியமானது. சிறப்புடைய இம்மாணவர் சங்கத் தேர்தலை ஒழித்துக் கட்ட வேண்டும் என்றும் அதன்வழி மாணவர்களின் உரிமையைப் பறிக்க வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டு ஆளும் பா.ஜ.க-வும் அதன் கைப்பாவையாகச் செயல்படும் பல்கலைக்கழகத் துணைவேந்தரும் ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷித் (ABVP) அமைப்பினரும் செயல்படுகின்றனர்.

இவையெல்லாவற்றையும் முறியடித்து கொரோனா மற்றும் பல்வேறு காரணங்களைக் காட்டி நான்கு வருட காலமாக ஒத்தி வைக்கப்பட்ட தேர்தல் மாணவர்களின் கடும் போராட்டத்தால் கடந்த ஆண்டு (2024) நடந்து முடிந்தது. தேர்தலின்போதும் வன்முறைகளின் வழியாக மாணவர் சங்கத் தேர்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கருதிய ஏ.பி.வி.பி – சங் பரிவாரங்களுக்கு ஜவகர்லால்நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தக்க பாடத்தைப் புகட்டினர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரி மாணவர் அமைப்புகளான அனைத்திந்திய மாணவர் சங்கம் (AISA), இந்திய மாணவர் சங்கம் (SFI), ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு (DSF) அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பு (AISF) ஆகியன ஒருமித்த கருத்துடன் ஒன்றாக ABVP-ஐ எதிர்த்துக் களம் கண்டனர். வாக்குப் பதிவிற்கு சில மணி நேரங்கள் முன்பாக பொதுச்செயலர் பதவிக்கு நின்றிருந்த DSF அமைப்பைச் சார்ந்த மாணவி அவரின் வருகை பதிவேட்டைக் காரணம் காட்டித் தேர்தல் குழுவால் நீக்கப்பட்டார். இருப்பினும், இடதுசாரி மாணவர்களின் ஆதரவுடன் பிர்சா அம்பேத்கர் ஃபூலே மாணவர் சங்கம் (BAPSA) அமைப்பைச் சேர்ந்த மாணவி பொதுச்செயலராக வெற்றி பெற்றுப் பல்கலைக்கழக வரலாற்றில் புதிய திருப்பத்தை உருவாக்கினார். தலைவர், துணைத்தலைவர், இணைச்செயலர் பதவிகளில் ஒருங்கிணைந்த இடதுசாரி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

2024 – 2025 க்கான தேர்தல் ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டு நேற்று (28.04.2025) நடந்து முடிந்திருக்கிறது. லிண்டா கமிட்டி அறிக்கை (LCR) ஒவ்வொரு கல்வியாண்டும் தொடங்கப்பட்ட ஆறு – ஏழு வாரங்களில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் எனக்கூறுகிறது. எனினும், இந்த ஆண்டும் மாணவர்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பிறகே தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியது.

உலக அளவில் புகழ்பெற்ற திறன்மிக்க பேராசிரியர்கள் நிறைந்த பல்கலைக்கழகம் தற்போது பாட அறிவு கூட இல்லாத பேராசிரியர்களால் நிரம்பிக் கொண்டிருக்கிறது. ஆளும் பா.ஜ.க அரசிற்குத் துதி பாடுபவர்கள் பேராசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். பெரும் பணத்தொகையை முதலீடு செய்து பணியைப் பெறும் பேராசிரியர்கள் தனக்குச் சாதகமான மாணவர்களை வாய்மொழித் தேர்வு என்னும் பெயரில் ஆய்வு மாணவர்களாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். இதற்காகவே இதுவரை நடத்தப்பட்டுக் கொண்டிருந்த JNUEE தேர்வு நிறுத்தப்பட்டு UGC – NET வழியாக ஆய்வு மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டது. இதனால், உண்மையில் கடின உழைப்பைக் கொடுத்து ஆய்வு செய்ய விரும்பும் எளிய மாணவர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகிறது. JNUEE தேர்வினை மீண்டும் கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி இந்த மாணவர் சங்கத் தேர்தல் நடந்தது.


படிக்க: தெற்கு ஆசிய பல்கலைக்கழகம்: மாணவர்களின் உணவு உரிமையைப் பறிக்கும் ஏபிவிபி கும்பல்


கடந்த ஆண்டு தேர்தலைப் போல் அல்லாது இம்முறை இடதுசாரி மாணவர் அமைப்புகளிடம் முழுமையான ஒற்றுமை இல்லை. வடகிழக்கு மேம்பாட்டு அமைச்சகம் அளித்த 28 கோடியில் கட்டிமுடிக்கப்பட்ட பராக் விடுதி (Barak Hostel) திறக்கப்படாமலே இருந்தது. இதைத் திறக்க வலியுறுத்தியும் மாணவர் சங்கத் தேர்தலை நடத்த வலியுறுத்தியும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம் சார்பாக புல முதன்மையர் அலுவலகத்தின் (DoS) முன்பு தொடர்ச்சியான மாணவர் போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில் இடதுசாரி மாணவர் அமைப்புகளிடையே முரண்பாடுகள் ஏற்பட்டன. மேலும், தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையில் AISA அமைப்பினர் தலைவர் பதவிக்கான இடத்தை விட்டுத் தரவில்லை. கடந்த ஆண்டும் AISA மாணவர் அமைப்பைச் சார்ந்தவரே தலைவர் பதவிக்கு நின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால், SFI, AISF, PSA ஆகிய இடதுசாரி அமைப்புகளும் பிர்சா அம்பேத்கர் ஃபூலே மாணவர் அமைப்பான BAPSA வும் இணைந்து இடது – அம்பேத்கரிய கூட்டமைப்பாக ஒரு அணியாகவும்; ஒருங்கிணைந்த இடதுசாரி அமைப்பாக (United Left) AISA மற்றும் DSF ஒரு அணியாகவும் களம் கண்டனர். இவை மட்டும் அல்லாமல் காங்கிரஸ் மாணவர் அமைப்பான NSUI-யும் இஸ்லாமிய மாணவர் அமைப்பான Fraternityயும் இணைந்து ஓர் அணியாகக் களம் கண்டனர்.

பராக் விடுதியின் மாணவர் ஒதுக்கீட்டில் 75 சதவீதம் வடகிழக்கு மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்னும் அடிப்படையிலே வடகிழக்கு மேம்பாட்டு அமைச்சகம் பணத்தை அளித்துள்ளது. எனினும், பராக் விடுதி ஒதுக்கீட்டில் வடகிழக்கு மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு பின்பற்றப்படாததாலும் இதனை இடதுசாரி மாணவர் அமைப்புகள் முதன்மை பிரச்சனையாகப் பேசாததாலும் வடகிழக்கு மாணவர்கள் அமைப்பாக ஒருங்கிணைந்து இத்தேர்தலில் யாரி நயம் என்பவரைப் பொதுச்செயலர் பதவிக்கு நிறுத்தினர்.

இப்படிப் பல்வேறு வகையில் மாணவர்களின் வாக்குகள் சிதறும் நிலையில் இத்தேர்தல் ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் குண்டர் படையான ABVP-க்குச் சாதகமானதாகக் கணிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் இறுதிவரை ABVP மாணவர்களே முதன்மை பெற்றிருந்தனர். எனினும், இறுதி வாய்ப்பாக இருந்த இந்திய மொழிகள் பள்ளி மாணவர்களே வெற்றி வாய்ப்பினை மாற்றினர்.


படிக்க: காடுகளைக் காப்பாற்ற களத்தில் இறங்கிய ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள்!


அதன்படி ஒருங்கிணைந்த இடதுசாரி மாணவர் கூட்டமைப்பு (AISA & DSF) தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலர் ஆகிய மூன்று இடங்களையும், ABVP அமைப்பு இணைச்செயலர் பதவியையும் கைப்பற்றியுள்ளது. இந்த இணைச்செயலர் பதவியிலும் மிகச் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலே தான் இடது மாணவர்கள் தோல்வியைத் தழுவினர். ABVP குண்டர் படையைச் சேர்ந்த வைபவ் மீனா பெற்ற வாக்குகள் 1499. இப்பதவிக்கான ஒருங்கிணைந்த இடதும் இடது – அம்பேத்கரிய கூட்டமைப்பும் பெற்ற வாக்குகள் முறையே 1397, 1215 ஆகும். மொத்தம் 2612 வாக்குகள் பெற்று வெற்றி பெற வேண்டிய பதவியை இடது மாணவர்களின் ஒற்றுமை இன்மையால் இழந்திருக்கிறார்கள்.

இம்மிகப் பெரிய ஓட்டு பிரிதலின் காரணமாக 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு ABVP மீண்டும் மாணவர் சங்க இணைச்செயலர் பொறுப்பை ஏற்றிருக்கிறது. ABVP-இன் நோக்கமெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது மாணவர்களின் குரலுக்கும் உரிமைக்கும் ஆதரவாக இருக்கும் மாணவர் சங்கத் தேர்தலை ஒழிப்பதும், எளியோரின் பல்கலைக்கழகமாக இருக்கும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை முடக்குவதும் தான்.

2016 ஆம் ஆண்டு இணைச்செயலர் பதவியை வென்ற இவ்வமைப்பினர் முழங்கிய முழக்கம் ”ஜே.என்.யூ-வை மூடு” (Shutdown JNU) என்பது தான். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவிலேயே மிகவும் குறைந்த கல்விக் கட்டணத்தில் (180 ரூபாய் மட்டும்) எளிய மாணவர்கள் கல்வி கற்பதற்காக உருவாக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தை முடக்குவதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் ஒடுக்கப்பட்ட, பொருளாதாரத்தில் நலிவுடையோர் தரமான கல்வி பெறுவதைத் தடுக்க வேண்டும் என்ற தனது இலட்சிய நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள எத்தனிக்கிறது.

பாசிச சக்தியான ABVP அமைப்பினர் தேர்தலின் போது மாணவர்களைத் தாக்கிய காட்சிகளும் அரங்கேறின. பெரும் படுகொலையை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இஸ்ரேலின் கொடியை உயர்த்திப் பிடித்து, பாலஸ்தீனிய கொடியை எரித்தனர். பெண்களை அடிமைகளாக எண்ணும் மனுவை உயர்த்திப் பிடித்தனர்.

ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலாக இருக்கும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை, குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மணிஷாவையும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த முந்தேகாவையும் தேர்ந்தெடுத்ததன் வழி ABVP மாணவர்களுக்கு இத்தேர்தலிலும் பாடம் புகட்டியுள்ளனர். அதே வேளையில் இது வெறுப்பரசியல் காலம் என்பதைப் புரிந்து கொண்டு இடது மாணவர்களின் ஒற்றுமையையும் இத்தேர்தல் வலியுறுத்தியிருக்கிறது.


ஒளியன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க