“பலன்கள் இருந்தாலும், பணமதிப்பழிப்பு நடவடிக்கை மோசமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக” துக்ளக் இதழின் ஆசிரியரும் சங்கப் பரிவார அமைப்புகளின் சித்தாந்தவாதியுமான குருமூர்த்தி முதலைக் கண்ணீர் வடித்திருக்கிறார். பணமதிப்பழிப்பு நடவடிக்கை குறித்து துக்ளக் இதழில் வெளிவந்த / வெளிவரும் கட்டுரைகளுள் ஒன்றில்கூடக் காணப்படாத இந்தக் கண்ணீர், சென்னையில் மேட்டுக்குடி அறிவுஜீவிகள் கலந்துகொண்ட கருத்தரங்கமொன்றில் வழிந்தோடியது.
“பணமதிப்பழிப்பு – அதன் பாத்திரம், தாக்கம், விளைவுகள்” என்ற தலைப்பில் சென்னையைச் சேர்ந்த மெட்ராஸ் பொருளாதாரப் பள்ளி நடத்திய கருத்தரங்கில் உரையாற்றிய குருமூர்த்தி,

“பணமதிப்பழிப்பு, வாராக் கடன்களை வசூலிக்க உருவாக்கப்பட்டுள்ள புதிய விதிகள், திவால் சட்டம், சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.), கருப்புப் பணத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என ஒரே நேரத்தில் அடுத்தடுத்து வந்துள்ள இவற்றைப் பொருளாதாரத்தால் ஜீரணிக்க முடியாது.”
“90 சதவீத வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரக்கூடிய, தனக்குத் தேவைப்படும் மூலதனத்தில் 95 சதவீதத்தை வங்கிக்கு வெளியே பெற்றுவரும் அமைப்புசாரா தொழில்துறையைப் பணமதிப்பழிப்பு நடவடிக்கை முடக்கிப் போட்டுவிட்டது. இதனால், வேலைவாய்ப்பு உருவாக்கமும், நுகர்வும் தேங்கிவிட்டன. அமைப்புசாரா தொழில்துறை 360 முதல் 480 சதவீத வட்டிக்குக் கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.”
“பணமதிப்பழிப்பு நடவடிக்கை ஒரு விஷவாயுக் கூடமாக மாறிவிட்டது. முன்கூட்டியே வரியை வசூலிக்க முடியாத அரசாங்கம், இப்பொழுது வரியை வசூலிப்பதற்காகக் கருப்புப் பணத்தைத் துரத்தி வருகிறது” என்றெல்லாம் பொளந்து கட்டியிருக்கிறார்.
குருமூர்த்தி கூறியிருப்பவை எவையும் புதிதல்ல. இந்த உண்மைகளைப் பேச வேண்டிய அல்லது ஒப்புக்கொள்ள வேண்டிய அல்லது சமாளிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் பா.ஜ.க. அரசும் மோடியின் ஆதரவாளர்களும் சிக்கிக் கொண்டுவிட்டார்கள் என்பதுதான் புதிது.

பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் தொடக்கத்திலேயே, அது ஏற்படுத்தவுள்ள பேரழிவு குறித்து சமூக அக்கறை கொண்ட பொருளாதார வல்லுநர்களும் புரட்சிகர, ஜனநாயக அமைப்புகளும் பேசிய சமயத்தில், அவர்களையெல்லாம் மோடி எதிர்ப்பு அரசியல் நடத்தும் பேர்வழிகள், நாட்டு நலனில் அக்கறை இல்லாதவர்கள் என்றெல்லாம் இழித்தும் பழித்தும் துக்ளக் இதழின் வழியாக ஏசிவந்தவர்தான் ஆடிட்டர் குருமூர்த்தி.
“நோட்டுத் தடை (பணமதிப்பழிப்பு நடவடிக்கை) செய்யவில்லையென்றால், நாட்டின் பொருளாதாரம் (அடுத்த) ஓரிரு ஆண்டுகளில் கவிழ்ந்திருக்கும். அது தடுக்கப்பட்டிருக்கிறது.” (துக்ளக், 02.08.2017, 13.09.2017)
“இதன் (பணமதிப்பழிப்பு) மூலம் கிட்டதட்ட 50-60 இலட்சம் கோடி ரூபாய் வரை மூலதனம் உருவாக வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. வெளியில் இருந்த கருப்பு, வெள்ளை ரொக்கம் வங்கிகளை அடைந்ததால், வங்கிகளிடம் பணம் பெருகி, வட்டி விகிதம் குறையும். வங்கிகளில் பணம் பெருகி, வட்டி குறைந்தால்தான் சிறு, குறு தொழில்களுக்கு வங்கிக் கடன்கள் கிடைக்கும்.” (துக்ளக், 25.01.2017)
“ரூபாய் நோட்டுக்கள் தடை, தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது.” (துக்ளக், 18.01.2017)
இப்படி பணமதிப்பழிப்பு நடவடிக்கையைச் சிலாகித்துப் புல்லரிக்கச் செய்யும் வாதங்களையும் புள்ளிவிவரங்களையும் ஊதிவிட்டு வந்தவர்தான் குருமூர்த்தி. இப்பொழுது தட்டைத் திருப்பிப் போட்டுத் தட்டுகிறார், அரையும் குறையுமாக. முழுப் பொய்யைவிட அரைகுறையான உண்மைதான் மிக ஆபத்தானது.

ஆடிட்டர் குருமூர்த்தி சாதாரணமான யோக்கியவான் அல்ல. ஆடிட்டர் தொழிலில் பொய்யையும் புரட்டையும் செய்ய வேண்டியிருப்பதால், அத்தொழிலையே தாம் விட்டுவிட்டதாகக் கூறிவரும் மகா யோக்கியவான். அப்படிப்பட்ட இந்த மகா யோக்கியவான், பணமதிப்பழிப்பு நடவடிக்கை குறித்துத் தான் எழுதியவையும் பேசியவையும் மண்ணைக் கவ்விவிட்டதைக் குறித்து அக்கருத்தரங்கிலும் வாய் திறக்கவில்லை. அதன் பிறகு வெளிவந்த துக்ளக் இதழிலும் ஒப்புக் கொள்ளவில்லை.
துக்ளக் வாசகனை ஏமாற்றும் குருமூர்த்தி
பணமதிப்பழிப்பு செய்யப்பட்ட 15.44 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களில் 15.28 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான நோட்டுக்கள் வங்கிக்குள் வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி தனது பொருளாதார அறிக்கையில் குறிப்பிட்டதையடுத்து, மோடியின் கருப்புப் பண வேட்டை மிகக் கேவலமான முறையில் தோல்வியடைந்திருப்பது ஊரறிய அம்பலமானது. இதனையடுத்து இந்தியாவே மோடியைக் கழுவி ஊத்திக் கொண்டிருந்த வேளையில், ஆடிட்டர் குருமூர்த்தி, “99 சதவீத நோட்டுக்கள் வங்கிக்குத் திரும்பிவந்திருப்பது தோல்வியாகாது” என வரிந்து கட்டிக்கொண்டு வாதாடினார்.
“500, 1,000 ரூபாய் கருப்புப் பணம் வைத்திருந்தவர்களால் துணிந்து வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட 2.90 இலட்சம் கோடி ரூபாயை, வருமான வரித்துறை பட்டியலிட்டு விசாரணை செய்து வருகிறது. இதனையும் சேர்த்து 3.35 இலட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் பிடிபட்டிருக்கிறது அல்லது பிடிபடும். அதன் மீது 3 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வரியும் அபராதமும் வசூலாகும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது” என 13.09.2017 தேதியிட்ட துக்ளக் இதழில் புள்ளிவிவரங்களை எடுத்துப்போட்டு மதிப்பிழந்து போன மோடியின் நடவடிக்கைக்கு முட்டுக் கொடுத்தார்.
அந்த இதழ் வெளிவந்த பத்தாவது நாளில்தான் சென்னை பொருளாதார மையத்தின் கருத்தரங்கம் நடந்தது. அதில் வங்கிக்குள் வந்துவிட்ட கருப்புப் பணத்தின் மீது 3 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அபராதம் விதிக்கும் நல்வாய்ப்பு விளைந்திருப்பது குறித்து துக்ளக் இதழில் எழுதியதைப் பேசவில்லை. மாறாக, முன்கூட்டியே வரியை வசூலிக்க முடியாத அரசாங்கம், இப்பொழுது கருப்புப் பணத்தைத் துரத்திக் கொண்டிருப்பதாக அலுத்துக் கொண்டார்.
அதே துக்ளக் இதழில், “பண மதிப்பழிப்பு நடவடிக்கையால் வங்கிகளில் மக்கள் டெபாஸிட் செய்த தொகை 10 இலட்சம் கோடி ரூபாய் உயர்ந்திருக்கிறது. இதனால் வங்கி வட்டி வீதம் சரிவதோடு, முத்ரா திட்டத்தின் கீழ் கந்து வட்டியால் வாடும் குறுந்தொழில்களுக்கு இயல்பான வட்டியில் கடன் கொடுக்கும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது, குறுந்தொழில்களுக்கு அச்சே தின் வரப் போகிறது” என்று உடுக்கடித்தார்.
ஆனால், கருத்தரங்கிலோ, வங்கிக்குள் இவ்வளவு இலட்சம் கோடி ரூபாய் வந்த பிறகும்கூட, குறு, சிறு தொழில்களுக்கு வங்கிக் கடன் கிடைக்கவில்லை என்றும், பணமதிப்பழிப்பு நடவடிக்கை பணப்புழக்கத்தைக் குறைத்துவிட்டதால், சிறு தொழில்கள் 360 முதல் 480 சதவீத வட்டிக்கு கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டதாகவும்” குறிப்பிட்டு கண்ணீர் உகுத்தார்.
ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதைக்கும் பணமதிப்பழிப்பு நடவடிக்கையை முட்டுக் கொடுத்து குருமூர்த்தி முன்வைத்த வாதங்களுக்கும் ஒற்றுமையும் வேற்றுமையும் உண்டு. ஒற்றுமை, ஆண்டிகளின் கற்பனை நிறைவேறாதது போலவே, குருமூர்த்தியின் வாதங்களும் தோற்றுப் பல்லிளித்துவிட்டன. வேற்றுமை, ஆண்டிகளின் மடம் கற்பனைக் கதை என்பதால், அதைப் படித்துச் சிரித்துவிட்டுப் போகலாம். ஆனால், குருமூர்த்தியின் வாதங்களோ திட்டமிடப்பட்ட மோசடி.
இந்த மோசடி குறித்து கருத்தரங்கிற்கு வந்திருந்த மேல்தட்டு அறிவுஜீவிகளும் கேள்வி எழுப்பவில்லை. கருத்தரங்கில் பேசியது உண்மையா, துக்ளக் இதழில் எழுதியிருப்பது உண்மையா என துக்ளக் வாசகனும் கேட்கவில்லை.
உண்மைதான் முதல் பலிகடா
பழைய நோட்டுக்களைச் செல்லாதாக்கிவிட்டு, புதிய நோட்டுக்களை அறிமுகப்படுத்தும்போது, அதற்கேற்ப ஏ.டி.எம். இயந்திரங்களை மாற்றியமைக்க வேண்டும் என்ற சாதாரண அறிவுகூட இல்லாமல், அவசர அவசரமாக, பேர் எடுக்கும் சுயதம்பட்ட நோக்கத்தோடு அறிவிக்கப்பட்ட அரைவேக்காட்டுத்தனமான நடவடிக்கைதான் மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கை.
மோடி அரசின் இந்த முட்டாள்தனத்தைப் பொதுமக்கள் பரிகசித்தபொழுது, “ஏ.டி.எம். இயந்திரங்களை முன்னரே மாற்றத் தொடங்கியிருந்தால், கருப்புப் பணப் பேர்வழிகள் சுதாரித்திருப்பார்கள், அதனால்தான் செய்யவில்லை” என்று சால்ஜாப்பு சொன்னார்கள். “தனது அமைச்சர்களுக்குக்கூடச் சொல்லாமல், இந்த நடவடிக்கையை மோடி மிக இரகசியமாக எடுத்தார், அவரைத் தவிர வேறு யாருக்கும் இப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கும் தைரியம் கிடையாது, தனக்குக் கெட்ட பெயர் ஏற்படக்கூடும் எனத் தெரிந்தும் நாட்டு நலன் கருதி இந்த நடவடிக்கையில் குதித்தார்” என்றெல்லாம் எழுதி, மோடிக்கும் அவரது அரைவேக்காட்டுத்தனத்துக்கும் ஒளிவட்டம் கட்டினார்கள்.
வௌக்குமாறுக்குப் பட்டுக் குஞ்சம் கட்டிய இந்த வாதங்கள் அனைத்தும் இப்பொழுது பல்லிளித்துவிட்டன. நாட்டையும் மக்களையும் மிகப் பெரும் பேரழிவுக்குத் தள்ளிய மோடியைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டிய நேரமிது. ஆனால், குருமூர்த்தியோ முதன்மைக் குற்றவாளியான மோடியைத் தப்ப வைப்பதற்காக ரிசர்வ் வங்கியையும், உச்சநீதி மன்றத்தையும், அதிகார வர்க்கத்தையும் குற்றம் சாட்டுகிறார்.
“பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பொறுப்பான இரகசியக் குழுவுக்கும் நிதியமைச்சகத்துக்கும் இடையே தகவல் தொடர்பில் ஏற்பட்ட பிழைகள் காரணமாகவே கருப்புப் பண பேர்வழிகள் தப்பிவிட்டனர்.”
“தாமாகவே முன்வந்து கருப்புப் பணத்தை ஒப்படைக்கும் சலுகை திட்டத்தையும் பணமதிப்பழிப்பு நடவடிக்கையையும் ஒரேசமயத்தில் அறிவிக்காதது தகவல் தொடர்பு குளறுபடி.”

“அரசாங்கம் முத்ரா வங்கிகளை நடைமுறைக்குக் கொண்டுவந்துவிட்டு, பணமதிப்பழிப்பு நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். இதுதான் அசல் திட்டம். ஆனால், முத்ரா திட்டத்தை ரிசர்வ் வங்கி சுயநல நோக்கில் தனது அதிகாரத்தைக் கொண்டு தடுத்துவிட்டது.”
“இவற்றுக்கு அப்பால், அரசியல் குறுக்கீடுகளும், உச்சநீதி மன்றத்தின் தலையீடும் இருந்தன.” – இவையெல்லாம் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் தோல்வியிலிருந்து மோடியைத் தப்பவைக்க குருமூர்த்தி அடுக்கியிருக்கும் காரணங்கள்.
“கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கடன் கொடுப்பதில் முட்டைக்கட்டு போடுகிறார், வாராக் கடன்களைக் கறாராக வசூலிக்க முனைப்பு காட்டுகிறார், பணமதிப்பழிப்பு நடவடிக்கை எடுப்பதை ஆதரிக்க மறுக்கிறார்” எனப் பழிசுமத்தி, ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியிலிருந்து விலகிச் செல்லும்படி ரகுராம் ராஜனுக்கு நிர்பந்தம் கொடுத்துவிட்டு, அந்த இடத்தில் உர்ஜித் படேலை அமர்த்திய மோடி அரசு, இப்போது தோல்விக்கு அவரைப் பொறுப்பாக்குகிறது.
வலிமையானவரும் துணிவுமிக்கவரும் அப்பாடக்கருமான மோடியின் முத்ரா திட்டத்துக்கு ரிசர்வ் வங்கி முட்டுக்கட்டை போட்டுவிட்டதென்றும், அதனால்தான் எல்லாமே பாழாகி விட்டதென்றும் குருமூர்த்தி அளக்கும் கதையை யாராவது நம்பமுடியுமா? தனது அமைச்சரவைக்கும், ரிசர்வ் வங்கி மற்றும் நிதித்துறை அதிகாரிகளுக்கும்கூடச் சொல்லாமல், ஒரேநாள் இரவில் பணமதிப்பழிப்பு நடவடிக்கையை எடுக்கத் துணிந்த மோடியால், முத்ரா திட்டத்திற்கு ரிசர்வ் வங்கி போட்ட முட்டுக்கட்டையைத் தூக்க முடியவில்லையாம்!
தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பது என்ற பெயரில் மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா என கலர் கலராகத் திட்டங்களை அறிவித்திருக்கிறது, மோடி அரசு. அதிலொன்றுதான் முத்ரா திட்டம். இந்தத் திட்டங்கள் அனைத்தும் மோடியின் சுயதம்பட்ட, விளம்பர மோகத்திற்குப் போடப்பட்ட தீனி தவிர வேறில்லை. விளம்பரம் பல்லைக் காட்டிய பிறகு, பலிகடாக்களைத் தயார் செய்கிறார், குருமூர்த்தி.
சூதாட்டம்தான் வளர்ச்சி
பணமதிப்பழிப்பு நடவடிக்கையும், சரக்கு மற்றும் சேவை வரியும் விவசாயத்தையும் குறு, சிறு தொழில்களையும் பேரழிவுக்குள் தள்ளிவிட்டிருப்பதோடு, பொருளாதாரத்தையும் குப்புறத் தள்ளவிட்டது என்பது இன்று மறுக்கவியலாதபடி நிரூபணமாகிவிட்டது. இதனை அரைகுறையாகவேனும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள குருமூர்த்தி அண்ட் கோ, “இதைத்தான் அன்றே, மக்கள் கசப்பு கசாயம் குடிக்க வேண்டியிருக்கும்” என மோடி கூறிவிட்டாரே எனச் சொல்லித் தங்களை நியாயவான்களைப் போலக் காட்டிக் கொள்ள முயலுகிறார்கள்.

மேலும், “பணம் இருந்தும் வங்கிகள் கடன் கொடுக்க மறுக்கின்றன. இதனால், ரிஸர்வ் வங்கிக்கும் மோடி அரசுக்கும் இன்றும் பனிப்போர் நடந்து வருகிறது” எனக் கூறி (துக்ளக், 11.10.2017), பொருளாதார முடக்கத்திற்கான பழி முழுவதையும் ரிசர்வ் வங்கி மீது சுமத்துகிறார். ரிசர்வ் வங்கி கடன் வழங்குவதில் தாராளமாக நடந்துகொண்டால், மோடி வானத்தை வில்லாக வளைத்துவிடுவார் என்று அளந்து விடுகிறார்.
கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கும் தாராளமாகக் கடன் கிடைத்தால், இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து, வேலைவாய்ப்பு பெருகி, மக்கள் கையிலும் நாலு காசு புழங்கி, நாடே முன்னேற்றப் பாதையில் நடைபோடத் தொடங்கிவிடும் என நம்புவதற்கு ஏதாவது அடிப்படை இருக்கிறதா?
விவசாய நெருக்கடியாலும், வேலைவாய்ப்பின்மையாலும் இந்திய மக்களின் வாங்கும் சக்தி படுபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. அந்தத் தோல்வியை மூடிமறைக்கும் நோக்கில்தான், இந்தியாவில் உற்பத்தி செய்து, அந்நிய நாடுகளில் சந்தைப்படுத்தும் மேக் இன் இந்தியா திட்டத்தைத் தடபுடலாக அறிவித்தார், மோடி. மேற்கத்திய நாடுகளின் பொருளாதார நிலைமையும் இந்தியாவைப் போலவே குப்புறக் கவிழ்ந்துகிடப்பதால், மேக் இன் இந்தியா திட்டம் பிறவி ஊனமாகிவிட்டது. இந்த நிலையில் வங்கிக் கடன்கள் மூலம் உள்நாட்டு நுகர்பொருள் உற்பத்தியையும், நுகர்வையும் அதிகப்படுத்தச் சொல்லும் குருமூர்த்தியின் யோசனை இன்னொரு சூதாட்டமாகவே முடியும்.
இன்றைய பொருளாதாரத் தேக்க நிலையில், வங்கிக் கடன் கிடைப்பதைத் தாராளமயப்படுத்துவது ஒருபுறம் வாராக் கடன்களையும் இன்னொருபுறம் விலைவாசியையும் அதிகரிக்கச் செய்யும். பணத்தைக் கொண்டு உற்பத்தியில் ஈடுபடாமல் பங்குகளை, நிலங்களை வாங்கிக் குவிக்கும் சூதாட்டப் பொருளாதாரத்தை மீண்டும் சூடுபிடிக்கச் செய்யும். அதனால்தான் ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி வீதத்தைக் குறைக்க மறுக்கிறது.
“மன்மோகன் சிங் ஆட்சி சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரித்து, சூதாட்டப் பொருளாதாரத்தை வளர்ச்சியடைய வைத்தது. அதனால்தான், பொருளாதாரம் 8 சதவீதம் வளர்ச்சியடைந்தாலும் அது வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை. எனவே, வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டுமென்றால், புழக்கத்திலுள்ள அளவுக்கு அதிகமான பணத்தை வங்கிக்குள் கொண்டுவர வேண்டும் என முடிவுசெய்து, அதற்காகத்தான் மோடி பணமதிப்பழிப்பு நடவடிக்கையை எடுத்தார்” என நியாயம் பேசும் குருமூர்த்தி, இப்பொழுது தட்டைத் திருப்பிப் போட்டுத் தட்டி, “வளர்ச்சியையும் வேலைவாய்ப்பையும் உருவாக்க வங்கிகள் தாராளமாகக் கடன் தந்து, பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும்” என வாதிடுகிறார்.
அடுத்தவன் செய்தால் பித்தலாட்டம், அதையே பார்ப்பான் செய்தால் தர்மம்!
– செல்வம்
-புதிய ஜனநாயகம், அக்டோபர் 2017
₹15.00Add to cart
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
_____________
கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு !!
சென்னையில் மாபெரும் கூட்டம்
19 நவம்பர், 2017 மாலை 4:00 மணிக்கு, ஒய்.எம்.சி.ஏ அரங்கம், நந்தனம், சென்னை – 600 035.
நண்பர்களே,
ரசியப் புரட்சி 100-ம் ஆண்டு, கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-வது ஆண்டு விழா சிறப்புக் கூட்டம், பருவமழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டதை அறிவீர்கள். அந்நிகழ்ச்சி எதிர்வரும் நவம்பர் 19, ஞாயிறு அன்று அதே இடத்தில் நடத்தப்படவுள்ளது. அனைவரும் வருக.
பெரும் பொருட்செலவுடன் நடைபெறும் இக்கூட்டத்திற்கு நன்கொடை தாருங்கள். அனைவருக்கும் அனுமதி இலவசம்தான். இங்கே நன்கொடைக்காக டிக்கெட் வடிவத்தை வெளியிட்டிருக்கிறோம். மனித குலத்தின் உலகு தழுவிய மாற்றம்- முன்னேற்றம் – புரட்சியின் குறியீடான ரசியப் புரட்சியின் இந்நிகழ்வு நன்கொடைச் சீட்டுக்களுக்கு ஐந்து பெருங் கடல்களின் பெயர்களை வைத்திருக்கிறோம். ஆதரவு தாருங்கள்!
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே நன்கொடை அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி