‘‘இந்திய வரலாற்றில் அவசரநிலை என்பது ஒரு கரும்புள்ளி. நாம் இந்த நாளைக் கருப்பு நாளாக கடைப்பிடிக்க காரணம், காங்கிரஸ் செய்த பாவத்தை விமரிசிப்பதற்காக மட்டுமல்ல, அரசமைப்பு சட்டத்தையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான் இதைக் கடைப்பிடிக்கிறோம். அந்த நாட்களில் இந்த நாடே ஒரு சிறையாக மாற்றப்பட்டுவிட்டது என்று அவசரநிலையின் 43 ஆண்டை ஒட்டி பா.ஜ.க.வின் கூட்டமொன்றில் பேசியிருக்கிறார் மோடி.
நெருக்கடி நிலை பற்றி ஒரு சிந்தனை என்று சோ எழுதிய கட்டுரையை 4.7.2018 துக்ளக்கில் மீள் பிரசுரம் செய்திருக்கிறார் குருமூர்த்தி. அக்கட்டுரை கீழ்க்கண்டவாறு முடிகிறது:
‘‘நாட்டுக்கு இன்று முதல் தேவை ஒழுங்கு முறையும் கட்டுப்பாடும். அவற்றைச் சாதிக்க நெருக்கடி நிலை அமல் ஆவது பெரிதும் உதவும் என்பது நாடு கண்ட அனுபவம். குடிமக்களுக்கு உரிமைகள்தான் உண்டே தவிர கடமைகள் எதுவும் கிடையாது என்ற ஜனநாயக விரோத சிந்தனையை மாற்ற எமர்ஜென்சியால்தான் முடியும் என்று நாம் கற்ற பாடத்தை இன்று நினைவுகூரத் தோன்றுகிறது.”
அவசர நிலை குறித்து மோடி பேசியிருப்பது உண்மையா, குருமூர்த்தி வழிமொழியும் சோவின் கருத்து உண்மையா? எது மோடி அரசின் கருத்து? அன்று அவசரநிலையை எதிர்த்தவர்கள் போலவும் ஜனநாயகத்துக்காகப் போராடியவர்களைப் போலவும் நடிக்கின்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் அவர்களது தலைமையும், உண்மையில் அன்றைக்கு இந்திராவிடம் சரணடைந்த கோழைகள். கள்ளத்தனமான இந்திராவுடன் கூட்டு வைத்துக் கொண்ட துரோகிகள் என்பதுதான் வரலாறு.

எனவே சோ வழிமொழிந்து குருமூர்த்தி கூறியிருப்பதுதான் ஆர்.எஸ்.எஸ். இன் கருத்து. ஜனநாயகம் என்ற கருத்தாக்கத்துக்கே ஆர்.எஸ்.எஸ். எதிரி என்பது மட்டுமல்ல, இந்தக் கோழைகள் கூட்டம் சுதந்திரத்தையோ ஜனநாயகத்தையோ எந்தக் காலத்திலும் விரும்பியதில்லை என்பதுதான் வரலாறு.
உண்மை இவ்வாறிருக்க, அவசரநிலைக்காலத்தில் ஒரு மாத காலம் வரை சிறை வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு மாதம் தோறும் 5000 ரூபாயும், ஒரு மாதத்துக்கு மேல் சிறை வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு மாதம் 10,000 ரூபாயும் ஓய்வூதியம் அளிக்கவிருப்பதாக மகாராட்டிர பா.ஜ.க. அரசு இந்த ஜுன் மாதம் அறிவித்திருக்கிறது.
அரசின் இந்த முடிவை எள்ளி நகையாடிய மகாராட்டிர காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், ‘‘அவசர நிலையை ஆதரித்தவர்களும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தவர்களுமான ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு ஓய்வூதியம் கொடுப்பது என்ன நியாயம்? என்று கேள்வி எழுப்பினார். பா.ஜ.க.வினர் யாரும் இதற்கு பதிலளிக்க முடியவில்லை.
‘‘அவசரநிலைக்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். செய்தது என்ன? என்பது குறித்து பல்வேறு ஆதாரங்களுடன் ஏ.ஜி.நூரானி எழுதியிருக்கும் கட்டுரையொன்று சமீபத்திய ஃபிரண்ட்லைன் இதழில் வெளிவந்துள்ளது. அதிலிருந்து சில பகுதிகளைப் பார்ப்போம்.
- உச்ச நீதிமன்றத்தில் பாபர் மசூதி வழக்கு: மீண்டும் வீதிக்கு வருகிறான் ராமன்!
- பாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் – தோழர் மருதையன்
- திப்பு : காவிக் கும்பலின் குலைநடுக்கம் !
ஜூன் 25, 1975 அன்று அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. ஜுலை 15 அன்றே சிறையில் இருந்து தனது முதல் மன்னிப்பு கடிதத்தை அனுப்பி விட்டார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் பாலாசாகேப் தேவரஸ்.
‘‘இந்த அரசுக்கோ சமூகத்துக்கோ எதிராக ஆர்.எஸ்.எஸ். எதுவும் செய்ததில்லை. எங்கள் திட்டத்திலேயே அப்படி எதுவும் கிடையாது. அரசாங்கம் எங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மகாராட்டிர காங்கிரஸ் முதல்வர் எஸ்.பி.சவானிடம் அக்கடிதத்தில் மன்றாடினார் தேவரஸ்.
அடுத்தபடியாக ஆகஸ்டு 22 ஆம் தேதி இந்திராவுக்கு நேரடியாக கடிதம் எழுதினார் தேவரஸ்.
‘‘ஆகஸ்டு 15 ஆம் தேதி செங்கோட்டையிலிருந்து நீங்கள் ஆற்றிய உரையைக் கேட்டேன். இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமானதாக இருந்தது உங்கள் உரை… இந்து சமூகத்தை ஒன்றுபடுத்துவதுதான் எங்கள் நோக்கம். எங்களை ஒரு மதவாத அமைப்பு என்று சிலர் கூறுகிறார்கள். அது ஆதாரமே இல்லாத குற்றச்சாட்டு. இந்துக்கள் அல்லாதவர்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். எதையும் பிரச்சாரம் செய்ததே கிடையாது. நாங்கள் முஸ்லீம் எதிர்ப்பாளர்கள் என்பதும் அடிப்படையிலேயே தவறு. இசுலாமுக்கோ, முகமது நபிக்கோ, கிறித்தவத்துக்கோ, ஏசு கிறிஸ்துவுக்கோ எதிராக நாங்கள் ஒரு வார்த்தை கூட தவறாகப் பேசியதில்லை”

என்று போகிறது அந்தக் கடிதம். தேவரஸ் சொல்வது அனைத்தும் பச்சைப்பொய் என்பதற்கு கோல்வால்கரின் நூல்களிலேயே போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன.
தேவரஸின் கடிதம் ஆர்.எஸ்.எஸ். மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கி, தங்களையெல்லாம் விடுவிக்குமாறு கோருகிறதே ஒழிய, அவசர நிலைக்கு எதிராகவோ, மற்ற கைதிகளை விடுவிக்க கோரியோ அதில் ஒரு வரி கூட கிடையாது.
இந்தக் கடிதங்களையெல்லாம் இந்திரா கண்டுகொள்ளவே இல்லை. ஆகையினால் அன்று ‘கெவர்மென்ட் சாமியார் என்று கேலியாக அழைக்கப்பட்ட வினோபா பாவேக்கு கடிதம் எழுதுகிறார் தேவரஸ்.
‘‘ஆர்.எஸ்.எஸ். பற்றி பிரதமர் கொண்டிருக்கும் தவறான அபிப்ராயத்தை மாற்றுவதற்கு முயற்சிக்குமாறு உங்களை நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் இதைச் செய்தால் ஆர்.எஸ்.எஸ். மீதான தடை நீக்கப்படும். ஆர்.எஸ்.எஸ். இன் தொண்டர்கள் பிரதமரின் தலைமையில் நாட்டின் முன்னேற்றத்துக்குப் பாடுபடுவார்கள் என்கிறார் தேவரஸ். இந்தக் கடிதத்திலும் அவசரநிலையை அகற்றுவது பற்றியோ, ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்றோரை விடுவிப்பது பற்றியோ ஒரு வார்த்தை கூட தேவரஸ் எழுதவில்லை.

ஆர்.எஸ்.எஸ். இன் பச்சைத் துரோகம் குறித்து மகாராட்டிர தொழிற்சங்கத் தலைவர் பாபா ஆதவ், செக்யூலர் டெமாக்ரசி (ஆகஸ்டு, 1977) இதழில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
‘‘எப்பாடுபட்டாவது மகாராட்டிர முதல்வர் சவானையும் இந்திராவையும் நேரில் பார்த்து விடவேண்டுமென்று ஆர்.எஸ்.எஸ். தலைமை அரும்பாடு பட்டது. எரவாடா மத்திய சிறைச்சாலையில் கைதிகள் மத்தியில் அரசாங்கமே மன்னிப்புக் கடிதம் ஒன்றை சுற்றுக்கு விட்ட மறுகணமே, ஆர்.எஸ்.எஸ். இன் பெரும்பான்மையான உறுப்பினர்கள் அந்த மன்னிப்புக் கடிதத்தில் கையெழுத்திட்டுக் கொடுப்பதை நான் என் கண்ணால் பார்த்தேன். இன்று இந்தக் கோழைகள்தான் மாபெரும் வீரர்களாக தம்மை சித்தரித்துக் கொள்கிறார்கள்.
‘‘அரசாங்க கடிதம் வரும்வரை கூட காத்திருக்காமல், எப்படியாவது வெளியே போனால் போதும் என்று தனித்தனியே இவர்கள் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார்கள் என்று ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங் என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார் டி.ஆர்.கோயல்.
ஆர்.எஸ்.எஸ். இன் அதிகாரபூர்வ பத்திரிகையான பாஞ்சஜன்யா (ஏப். 4, 1976) சஞ்சய் காந்தியின் உரையை வெளியிட்டது. அதன் மராத்தி பத்திரிகையான தருண் பாரத், சஞ்சய் காந்தி சிறப்பிதழே கொண்டு வந்தது.
அவசரநிலையை எதிர்ப்பதற்கு ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த லோக் சங்கர்ஷ் சமிதியில் அங்கம் வகித்துக் கொண்டே, இன்னொருபுறம் இரகசியமாக இந்திராவிடம் மண்டியிட்டதுதான் ஆர்.எஸ்.எஸ். இன் வரலாறு.
ஏ.ஜி.நூரானி ஆதாரமின்றி இதைக் கூறவில்லை. அக்டோபர் 18, 1977 அன்று மகாராட்டிர சட்ட மன்றத்தில் தேவரஸின் கடிதங்கள் வைக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.
நூரானி மட்டுமல்ல, அவசர நிலைக்காலத்தில் மத்திய உளவுத்துறை இயக்குநராக இருந்த டி.வி.ராஜேஸ்வர், அவசரநிலைக்காலம் குறித்த தன்னுடைய நூலிலும், இந்தியா டுடே டி.வி.க்காக செப், 21, 2015 அன்று கரன் தபாருக்கு அளித்த பேட்டியிலும் இதை உறுதி செய்கிறார்.
‘‘பிரதமர் இல்லத்துடன் தேவரஸ் ரகசியமாக தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, அவசர நிலையின் மூலம் நாட்டில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் நிலை நாட்டுவதற்கு எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளுக்காக இந்திராவுக்குப் பாராட்டு தெரிவித்தார். இந்திராவை மட்டுமல்ல, சஞ்சய் காந்தியையும் அவர்கள் சந்திக்க விரும்பினர். சஞ்சயின் நடவடிக்கைகளை ஊக்குவித்தனர். அவசர நிலை முடிவுக்கு வந்து தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், ஒரு புறம் ஜனதா கட்சியில் இணைந்து கொண்ட ஜனசங் கட்சி, இந்திராவுக்கு எதிராக இருந்த அதே நேரத்தில், ஆர்.எஸ்.எஸ். இந்திராவுக்காக வேலை செய்தது என்று இந்தப் பேட்டியிலும் தனது நூலிலும் கூறுகிறார் ராஜேஸ்வர்.
இந்த உண்மைகள் எதையும் ஆர்.எஸ்.எஸ். காரர்களால் மறுக்கவோ மறைக்கவோ முடியவில்லை. தேவரஸ் இந்திராவிடம் மண்டியிடவில்லை என்றும் ஏ.ஜி.நூரானி போன்றவர்கள் இடதுசாரிகள் என்பதால் தங்கள் தலைவரை வேண்டுமென்றே அவதூறு செய்வதாகவும் ஆர்கனைசர் பத்திரிகை மழுப்பலாக சமாளிக்கிறது.

நூரானி இருக்கட்டும், இன்றைய பா.ஜ.க. தளபதியான சு.சாமி அவசர நிலை அறிவிப்பின் 25 ஆண்டையொட்டி என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம். பிப். 4, 2000 ஃபிரண்ட்லைன் இதழிலும், ஜூன், 13, 2000 இந்து நாளேட்டிலும் சுப்பிரமணியசாமி இரண்டு கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.
20 அம்சத்திட்டத்துக்கு வேலை செய்கிறேன் என்று தேவரஸ் இந்திராவுக்கு கடிதம் எழுதினார் என்றும், வாஜ்பாயியும் அவ்வாறே மன்னிப்பு கடிதம் கொடுத்தாரென்றும் அதில் குறிப்பிடுகிறார். அரசுக்கு எதிரான எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டேன் என்று இந்திராவுக்கு கடிதம் எழுதிக் கொடுத்ததன் விளைவாகத்தான் 20 மாத அவசர நிலைக்காலத்தின் பெரும்பகுதி நாட்களில் வாஜ்பாயி பரோலில் வெளியே இருந்ததாகவும் கூறுகிறார் சு.சாமி.
கூமி கபூர் என்ற பத்திரிகையாளர் (சு.சாமியின் மைத்துனி) சமீபத்தில் எழுதியிருக்கும் நூலிலும், அவசர நிலைக்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். இன் சரணாகதியை உறுதி செய்கிறார்.
அவசரநிலைக்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் பலர் சிறை வைக்கப்பட்டது உண்மைதான். ஆனால் அது ஆளும் வர்க்கத்தின் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட முரண்பாட்டின் ஒரு விளைவு. அவ்வளவே. அவசர நிலைக்காலத்தில் புரட்சியாளர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் ஒடுக்கப்பட்டதுடன் இது ஒப்பிடத்தக்கதல்ல.
சிறை வைக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். காரர்கள் ஏன் மன்னிப்புக் கேட்கவேண்டும்? ஏனென்றால் முதலாவதாக அவர்கள் கோழைகள். இரண்டாவதாக ஆர்.எஸ்.எஸ். ஒரு ஆளும் வர்க்க எடுபிடி அமைப்பு. தனது தன்மையிலேயே அது ஒரு ஜனநாயக விரோத பாசிச அமைப்பு. இந்திராவின் பாசிசம் தங்களை ஒடுக்கியது மட்டும்தான் அவர்களது பிரச்சினையேயன்றி, ஜனநாயகம் அவர்களுடைய கோரிக்கை அல்ல.
துக்ளக் தலையங்கத்தில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை ஆதரித்து எழுதப்பட்ட சில வரிகளை சென்ற இதழில் மேற்கோள் காட்டியிருந்தோம். ‘‘நாட்டின் 99% மக்களுக்கு தமது உடம்பு குறித்த அச்சத்தை அரசு ஏற்படுத்த வேண்டும். அதுதான் தண்ட நீதி. அதுதான் நாட்டுக்குத் தேவை என்கிறது அந்த தலையங்கம்.
‘‘நாட்டில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் நிலைநாட்டிய காரணத்தினால்தான் அவசரநிலையை ஆதரிப்பதாக அன்று தேவரஸ் இந்திராவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். துக்ளக் சோ அதைத்தான் கூறுகிறார். இன்று அவசர நிலையை நினைவுகூரும் குருமூர்த்தி, மீண்டும் அவசரநிலை வேண்டும் என்று சோ கருத்தை வழிமொழிகிறார்.
அன்றைய அவசர நிலைக்காலத்தை இன்றைய மோடி அரசோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். அன்று ஊடகங்கள் ஒடுக்கப்பட்டன. இன்று பெரும்பாலானவை சரணடைந்து விட்டன. நீதித்துறையும் அவ்வாறே. மாநிலங்களின் உரிமை பறிப்பு, அதிகார மையப்படுத்துதல், எல்லா அரசு அதிகாரப் பதவிகளிலும் பார்ப்பன பாசிஸ்டுகள் அமர்த்தப்படுதல், அரசியல் எதிரிகள் தேசவிரோதி என்று குற்றம் சாட்டப்படுதல்… என ஒவ்வொரு அம்சத்திலும் அன்றைய காலத்தை இன்றைய நிலை விஞ்சிக்கொண்டிருக்கிறது. இந்த 43 ஆண்டுகளில் இந்திய அரசமைப்பின் எல்லா உறுப்புகளும் தமது பெயரளவிலான ஜனநாயகத் தன்மையையும் இழந்து, பாசிசத்துக்கு இணக்கமானவையாக மாறியிருக்கின்றன.
அன்று சிறை வைக்கப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்டுகள் இன்று அதிகாரத்தில் இருக்கிறார்கள். சட்டபூர்வமான அதிகாரத்தில் இருப்பது மட்டுமல்ல, அரசியல் சட்டத்துக்கு அப்பாற்பட்ட ஆயுதம் தாங்கிய அதிகாரமாகவும் நிலைபெற்றிருக்கிறார்கள். அவசரநிலைக்காலத்தின் கைதிகளுக்கு மகாராட்டிர அரசு வழங்கவிருக்கும் ஓய்வூதியம் என்பது, இந்துத்துவ பாசிசத்தை சட்டபூர்வமாக்கும் நடவடிக்கையின் முதல்படி. மோடி அரசின் கீழ் அடுத்தபடியாக பசுக்குண்டர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படலாம்.
– அஜித்
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2018
மின்னூல்:

₹15.00Add to cart
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com
புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்
![]() ₹15.00Add to cart |
![]() ₹15.00Add to cart |
![]() ₹15.00Add to cart |