மிகவும் வறிய நிலையிலுள்ள குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.72,000/- நிதியுதவி வழங்கும் அறிவிப்பை காங்கிரசு கட்சி வெளியிட்டவுடனேயே, “அது எப்படி சாத்தியம்? அவ்வளவு பணத்திற்கு எங்கே போவது? இதனால் நாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரித்துவிடாதா?” என்றெல்லாம் பா.ஜ.க.வும், வலதுசாரி பொருளாதார நிபுணர்களும் மூக்கைச் சிந்தத் தொடங்கிய அதேசமயத்தில்தான், ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஏறத்தாழ 10,000 கோடி ரூபாயைச் சுளையாகத் தூக்கிக் கொடுத்தது, பா.ஜ.க. அரசு.
அத்தனியார் நிறுவனத்தின் பெயர் ஜெட் ஏர்வேஸ். அந்நிய நிறுவனம் என வரையறுப்பதற்குத் தகுதியான ஜெட் ஏர்வேஸுக்கு இவ்வளவு பெரிய தொகையை அரசாங்க மொய்யாகத் தூக்கிக்கொடுத்த கயவர்கள், இல்லையில்லை, காவலாளிகள் நரேந்திர மோடியும் அருண் ஜேட்லியும். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இந்தச் சுமையை சுமந்து கொண்டிருப்பவை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள்.

பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் வாராக் கடன் பிரச்சினையால் ஏற்கெனவே பெரும் நட்டங்களைச் சந்தித்துவரும் வேளையில், ஒரு தனியார் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு, ஒன்றல்ல, இரண்டல்ல, 10,000 கோடி ரூபாயைத் தூக்கிக் கொடுக்கலாமா என எந்தவொரு பொருளாதார நிபுணனும் கேள்வி எழுப்பவில்லை.
ஏழைகளுக்கு நிதியுதவியோ, மானிய உதவியோ அளிக்கும்போதெல்லாம் நிதிப் பற்றாக்குறை என்ற பூச்சாண்டியைக் காட்டிப் பயமுறுத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் நிபுணர் கும்பல், கார்ப்பரேட் நிறுவனத்திற்குப் படையல் இடப்பட்ட இந்தக் கறி விருந்தை கண்ணை மூடிக்கொண்டு வரவேற்றிருக்கிறது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பொதுத்துறை வங்கிகளுக்கு ஏறத்தாழ 8,400 கோடி ரூபாய் அளவிற்குக் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. அதற்குரிய வட்டியைக்கூடக் கட்டமுடியாமல் அந்நிறுவனம் திவால் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. கடன் தவணைகளை முறையாகச் செலுத்தத் தவறும் நிறுவனங்களை வாராக் கடன் நிறுவனங்களாக வரையறுத்து, திவால் சட்டத்தின் கீழ் கொண்டுவந்து, அந்நிறுவனங்களை ஏலத்தில் விற்று வங்கிகள் தமது கடன் நிலுவைகளை வசூலித்துக் கொள்ளலாம் எனக் கூறுகிறது, புதிய திவால் சட்டம்.
இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தவரே மோடிதான். இப்புதிய திவால் சட்டத்தால் வங்கிகளின் வாராக் கடனெல்லாம் வசூலாகிவிடும் எனத் தம்பட்டம் அடித்துவருவதும் பா.ஜ.க. அரசுதான். ஆனால், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டுவராமல் காப்பாற்றிக் கரை சேர்த்திருக்கிறது, மோடி-அருண் ஜேட்லி கும்பல்.
இதுவொருபுறமிக்க, ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் தனது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் அந்நிய நாடுகளுக்குக் கடத்தியது குறித்தெல்லாம் பிரதமர் அலுவலகமே ஒரு விசாரணையை நடத்தி வந்ததாகச் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், அக்குற்றச்சாட்டுகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, ஜெட் ஏர்வேஸுக்கு வங்கிப் பணத்தைத் தூக்கிக் கொடுத்திருக்கிறார், காவலாளி மோடி.
ஜெட் ஏர்வேஸுக்குச் சட்டவிரோதமாக அளிக்கப் பட்டிருக்கும் இந்தச் சலுகையை மோசடி, ஊழல் எனக் குற்றஞ்சுமத்த முடியும். ஆனால், ஒவ்வொரு குற்றவாளியும் தன்னை நியாயப்படுத்திக் கொள்ள ஒரு துயரக் கதையைச் சொல்லுவது போல, மோடி கும்பலும் சட்டத்தை மீறி அளிக்கப்பட்ட இந்தச் சலுகையை நியாயப்படுத்த தொழிலாளர் நலன் என்ற முகமூடியை மாட்டிக் கொண்டது.

ஜெட் ஏர்வேஸைத் திவாலாக அனுமதித்தால், அதனை நம்பியிருக்கும் 16,000 பணியாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதால், அந்நிறுவனத்திற்குக் கடன்கொடுத்த ஸ்டேட் பாங்க் உள்ளிட்ட வங்கிகளையே அந்நிறுவனத்தைத் தத்தெடுக்கக் கட்டளையிட்டு, அந்நிறுவனத்தில் மேலும் 1,500 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடும் செய்ய வைத்து, அந்நிறுவனத்தை பா.ஜ.க. அரசு காப்பாற்றியிருப்பதாக ஒரு உருக்கமான கதையைப் புனைந்து உலவவிட்டிருக்கிறது, மோடியின் கைக்கூலி கும்பல்.
காவலாளி மோடியின் இந்தக் கருணையால் நேர்ந்த விளைவு என்ன? பொதுத்துறை வங்கிகள் ஜெட் ஏர்வேஸுக்குக் கொடுத்த கடன்கள் இப்பொழுது பங்குகளாக மாற்றப்பட்டு, அவ்வங்கிகளின் தலையில் சுமத்தப்பட்டுள்ளன. இதனால் இப்பொழுது ஜெட் ஏர்வேஸின் பெரும்பான்மையான பங்குதாரர்கள், அதாவது முதலாளிகள் ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட வங்கிகள்தான். வங்கித் தொழில் செய்து வரும் வங்கி நிர்வாகிகள் இப்பொழுது ஜெட் ஏர் வேஸை இயக்கி, அதனை இலாபத்தில் நடக்க வைத்து, அதன் பின்னர் தமது கைவசமுள்ள பங்குகள் மற்றும் புதிதாகப் போட்ட முதலீடு, ஆக மொத்தம் 10,000 கோடி ரூபாயை வேறு முதலீட்டாளர்களுக்கு விற்றுத் தமது கடன்களையும் வட்டியையும் ஈடுகட்டிக் கொள்ள வேண்டும்.
வங்கிக் கடனைத் திருப்பித் தராமல் நாமம் போட்ட விஜய் மல்லையாவையும், நிரவ் மோடியையும் வெளிநாடுகளுக்குத் தப்ப வைத்து, அவர்களை மோடி கும்பல் காப்பாற்றினாலும், இன்னொருபுறத்தில், “தப்பி ஓடிய அந்த மோசடியாளர்களை விட்டேனா பார்!” என்று நாடகமாடவும் வேண்டியிருந்தது. அவர்களும்கூட வெளிநாடுகளில் வழக்கு, வாய்தா எனத் தொல்லைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. அப்படிப்பட்ட தொந்தரவுகள் எதுவும் நேர்ந்துவிடாமல், மிகச் சாதுர்யமாக ஜெட் ஏர்வேஸின் முதன்மைப் பங்குதாரர்களான நரேஷ் கோயலையும், எதிஹாட் நிறுவனத்தையும் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதிலிருந்து காப்பாற்றிவிட்டார், காவலாளி மோடி.
படிக்க:
♦ கார்ப்பரேட்டுகளின் காவலன் பாஜக | தோழர் ராஜு லால்குடி உரை | காணொளி
♦ நீதித்துறையை ஆளுகிறது இந்து மனசாட்சி !
வெளிநாட்டு வாழ் இந்தியரான நரேஷ் கோயலும் அபுதாபியைச் சேர்ந்த எதிஹாட் நிறுவனமும் இப்பொழுது ஜெட் ஏர்வேஸில் சிறுபான்மை பங்குதாரர்களாகிவிட்டனர். மேலும், நரேஷ் கோயல் ஜெட் ஏர்வேஸின் தலைவர் பதவியிலிருந்து விலகிவிட்டார். அவரது மனைவி அனிதா கோயல் இயக்குநர் குழுமத்திலிருந்து விலகி விட்டார். இவையெல்லாம் தண்டனையா, தியாகமா அல்லது இரண்டும் கலந்ததா?
வங்கிக் கடனை வாங்கிப் போட்ட நரேஷ் கோயல் இலண்டனில் ஹாயாகப் பொழுதுபோக்கிக் கொண்டிருக்க, கடன் கொடுத்த வங்கிகளோ புதிய முதலீட்டாளர்களை வலைவீசித் தேடிக் கொண்டிருக்கின்றன.
***
விமான எரிபொருள் விலை உயர்வும், அத்துறையில் நடந்துவரும் கழுத்தறுப்புப் போட்டியும்தான் ஜெட் ஏர்வேஸை நட்டத்தில் தள்ளிவிட்டுவிட்டதாகவும், இல்லையென்றால் நரேஷ் கோயலைப் போல யோக்கியமான முதலாளியைப் பார்க்கவே முடியாதென்றும் கூறி, நரேஷ் கோயலைக் கடனைத் திருப்பிச் செலுத்தாத குற்றத்திலிருந்து காப்பாற்றிவிடத் துடிக்கிறார்கள், பொருளாதார நிபுணர்கள்.
ஜெட் ஏர்வேஸ் மீது நிதிக் கையாடல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கும் நிலையில், ஜெட் ஏர்வேஸ் நட்டமடைந்ததற்கு நிபுணர்கள் கூறும் காரணம் நம்பத்தகுந்ததாக இல்லை. எனினும், இத்தகைய பாரதூரமான நிலையை எதிர்கொண்டது நரேஷ் கோயலின் ஜெட் ஏர்வேஸ் மட்டும்தானா?

நரேந்திர மோடி அரசு ஏவிவிட்ட எரிபொருள் விலை உயர்வாலும், பணமதிப்பழிப்பு நடவடிக்கையாலும், ஆட்கொல்லி மிருகம் போன்ற ஜி.எஸ்.டி. வரி விதிப்பாலும் ஆயிரக்கணக்கான சிறுதொழில் நிறுவனங்கள் அழிவிற்குள் தள்ளப்பட்ட போதெல்லாம் மோடிக்கும் சரி, இந்த நிபுணர் கூட்டத்திற்கும் சரி இரக்கம் கசிந்ததேயில்லையே! மாறாக, சந்தையின் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும் என வக்கணை பேசியவர்கள், பாதிக்கப்பட்டிருப்பது கார்ப்பரேட் முதலாளி என்றவுடன் தட்டைத் திருப்பிப் போட்டுத் தட்டுகிறார்கள்.
பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் பல்லாயிரக் கணக்கான சிறுதொழில்களும் விவசாயிகளும் அழிவின் விளிம்பில் நிறுத்தப்பட்டபோது, அவர்களுக்கெல்லாம் நிதியுதவியோ, கடனோ, நிவாரணமோ அளிக்க மறுத்த மோடி, நாடெங்குமுள்ள விரைவுச் சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் குத்தகை எடுத்திருந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் நட்டமடைகின்றன என்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன், அந்நிறுவனங்களுக்கு நட்ட ஈடு அளிக்க உத்தரவிட்டார். ஏழை பங்காளன் என்றும், டீ வித்தவன் என்றும், காவலாளி என்றும் வேடம் போட்டுத் திரியும் மோடியின் உண்மை முகம் இது.
16,000 பணியாளர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டுதான் ஜெட் ஏர்வேஸைக் கைதூக்கிவிட்டாராம் மோடி! யாரிடம் காது குத்துகிறார்கள் இவர்கள்? இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா நிறுவனங்களை ஒன்றாக இணைத்தபோது, நூற்றுக்கணக்கான பணியாளர்களின் வேலை பறிபோகும் அபாயம் உருவானதே, அப்பொழுது வராத கருணை, இப்பொழுது வந்ததன் காரணம் என்ன? பி.எஸ்.என்.எல். நிறுவனத்தைச் சேர்ந்த ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்குக் கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டு வரும் மோடி அரசு, ஜெட் ஏர்வேஸ் பணியாளர்கள் மீது மட்டும் கருணை காட்டுவதன் இரகசியம் என்ன?
விவசாயிகளின் வாழ்வாதாரமான நிலத்தைப் பறித்து, அவர்களின் எதிர்காலத்தைச் சூனியமாக்கி எட்டுவழிச் சாலை அமைக்கத் துடித்தவர்கள், ஜெட் ஏர்வேஸ் பணியாளர்களின் எதிர்காலத்தின் மீது அக்கறை காட்டவேண்டிய அவசியம் என்ன? பன்னாட்டு மூலதனத்தின் நலன்களுக்காக 13 மாருதி தொழிலாளர்களைத் தூக்கில் போட பரிந்துரைத்த பா.ஜ.க., நிரந்தர வேலைவாய்ப்பு என்பதே இருக்கக்கூடாது என்ற நோக்கில் தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்திவரும் மோடி அரசு, ஜெட் ஏர்வேஸ் பணியாளர்களின் பணிப் பாதுகாப்புப் பற்றிக் கவலை கொள்கிறதாம், அதனை நாம் நம்ப வேண்டுமாம்!
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அளிக்கப்படும் அபரிதமான வரிச் சலுகைகளும், மானியங்களும் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் என்ற சாக்குபோக்குகளைக் கொண்டு நியாயப்படுத்தப்படுவதைப் போல, தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு அரசுப் பணத்தை மொய்யாக எழுத பயிர்க் காப்பீடு, மருத்துவக் காப்பீடு திட்டங்கள் உருவாக்கப்பட்டிருப்பதைப் போல, ஜெட் ஏர்வேஸின் நரேஷ் கோயலையும் எதிஹாட் நிறுவனத்தையும் கடனைத் திருப்பிச் செலுத்துவதிலிருந்து காப்பாற்ற பணியாளர்களின் எதிர்காலம் என்ற சாக்கைக் காட்டுகிறார்கள்.
“பொது நலன் கருதி எடுக்கப்பட்ட புத்திசாலித்தனமான முடிவு இது” எனக் கூறிப் பொதுத்துறை வங்கிகளைப் பாராட்டியிருக்கிறார், நிதியமைச்சர் அருண் ஜேட்லி. அது என்ன பொதுநலன்? ஜெட் ஏர்வேஸைத் திவாலாக அனுமதித்திருந்தால், விமான பயணக் கட்டணங்கள் அதிகமாகி, பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியிருப்பார்களாம். பொதுத்துறை வங்கிகளின் முடிவு அந்த துரதிருஷ்டமான நிலைமை உருவாகாமல் தடுத்துவிட்டதாம்.
படிக்க:
♦ ஐ.சி.ஐ.சி.ஐ. – வீடியோகான் அம்பலமாகும் தனியார் வங்கி ஊழல் !
♦ மோடியின் டிஜிட்டல் இந்தியா : ஒராண்டில் சூறையாடப்பட்ட வங்கிப் பணம் 41,000 கோடி ரூபாய் !
ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் பயணம் செய்யும் ரயில் கட்டணங்களைப் பகற்கொள்ளை அளவிற்கு உயர்த்தி வரும் மோடி அரசு, மேட்டுக்குடி மற்றும் கார்ப்பரேட் கும்பலுக்கு மலிவான விமானப் பயணம் கிடைப்பதற்குப் பொதுப்பணத்தை வாரியிறைக்கிறது. அதேசமயம், ஏழை, நடுத்தர மக்களிடம், “உரிய கட்டணம் செலுத்தித்தான் சேவைகளைப் பெற வேண்டும். எதையும் இலவசமாகத் தர முடியாது” என உபதேசிக்கிறது.
மோடி ஆட்சியில் கார்ப்பரேட் முதலாளிகளுக்காகப் பொதுப் பணம் சூறையாடப்படுவது வாடிக்கையான ஒன்றாகவே மாறிவிட்டது. ஜெட் ஏர்வேஸுக்கு முன்பாக, ஐ.எல். எஃப். அண்ட் எஸ். என்ற தனியார் கார்ப்பரேட் நிறுவனம் திவாலாகும் அபாயத்தில் சிக்கியிருந்தபோது, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பணம் அந்நிறுவனத்தில் கொட்டப்பட்டது. வாராக் கடன் பிரச்சினையால் திவாலாகிப் போன ஐ.டி.பி.ஐ. வங்கியை ஆயுள் காப்பீட்டு நிறுவனம்தான் மூலதனத்தைப் போட்டுக் காப்பாற்றியது. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 2,41,000 கோடி ரூபாய் பெறுமான வாராக் கடன்களைப் பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்திருப்பதாக நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் அறிக்கை அளித்திருக்கிறது.
மோடி அரசு பதவியேற்றபோது 2,19,000 கோடி ரூபாயாக இருந்த வாராக் கடன், அவரது நான்கு ஆண்டு கால ஆட்சியின் முடிவில், அதாவது மார்ச் 2018-இல் 8,97,000 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இந்த வாராக் கடன் சுமையைச் சமாளிக்கப் பொதுத்துறை வங்கிகள் தமது இலாபத்திலிருந்து 6,67,001 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளன.
புதிய திவால் சட்டத்தின் கீழ் ஏலத்திற்குக் கொண்டு வரப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களில் ஒரு பகுதியைத் தள்ளுபடி செய்ததன் மூலம் பொதுத்துறை வங்கிகள் அடைந்துள்ள நட்டம் 84,585 கோடி ரூபாய்.
இந்தக் கடன் தள்ளுபடிகளுக்கெல்லாம் அப்பால், கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரிகள் தள்ளுபடி செய்யப்பட்டதன் காரணமாக, கடந்த ஐந்தாண்டுகளில் மைய அரசிற்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு (revenue foregone) ஏறத்தாழ ஐந்து இலட்சம் கோடி ரூபாய். அரசின் இழப்பு, முதலாளிகளுக்கு வரவு!
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த உர்ஜித் படேல், 2,000 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவை வைத்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களைத் திவால் சட்டத்தின் கீழ் ஏலத்தில் விடவேண்டும் என்றும் அந்நிறுவனங்களின் கடன்களை மறுசீரமைப்பு செய்யக்கூடாதென்றும் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவைத் திரும்பப் பெறக் கோரிய மோடி அரசு, அவரைக் கட்டாயப்படுத்திப் பதவிவிலக வைத்தது.
அவர் வெளியேற்றப்பட்ட பிறகு, மோடியின் பண மதிப்பழிப்பு நடவடிக்கையைப் பலவாறாக முட்டுக்கொடுத்துவந்த சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டார். சக்திகாந்த தாஸின் நிர்வாகத்தின் கீழ் கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக் கடன்களை மறுசீரமைப்பதையும் தாண்டி, திவாலாகக்கூடிய நிறுவனங்களைப் பொதுத்துறை வங்கிகளின் தலையில் சுமத்தும் திருப்பணி தொடங்கப்பட்டிருப்பதை ஜெட் ஏர்வேஸ் விவகாரம் எடுத்துக் காட்டுகிறது.
நட்டத்தில் இயங்கிவரும் அல்லது திவாலாகக்கூடிய நிலையில் உள்ள தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகளின் தலையில் கட்டப்படுவது ஒருபுறம் என்றால், இன்னொருபுறத்தில் நல்ல இலாபத்தில் இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் மிக வேகமாகத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கப்படுகின்றன. இந்த நிதியாண்டில் மட்டும் 85,000 கோடி ரூபாய் அளவிற்குப் பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்கப்பட்டுள்ளன என்றும், இது இலக்கை மிஞ்சிய சாதனையென்றும் ஆனந்தக் கூத்தாடி அறிக்கைவிட்டிருக்கிறார், அருண் ஜேட்லி.
நாட்டின் பொதுச் சொத்துக்களை, பொதுப் பணத்தைத் தனியார் முதலாளிகளுக்குப் பங்கு போட்டு பிரித்துக் கொடுக்கும் பா.ஜ.க. தலைவர்கள், தங்களைக் காவலாளிகள் எனத் தமக்குத்தாமே அடை மொழி போட்டு அழைத்துக் கொள்கிறார்கள். மோடியின் ஆட்சியில் திருடர்கள் காவலாளியாகிவிட்டார்கள்; எனவே, திருட்டு சட்டபூர்வமாகிவிட்டது. பொதுப் பணத்தைத் திருடுவது சட்டபூர்வமாகிவிட்டதால், ஊழலும் ஒழிக்கப்பட்டுவிட்டது!
ஆர்.ஆர்.டி.
மின்னூல்:
₹15.00Add to cart
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com
புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்
![]() ₹15.00Add to cart |
![]() ₹15.00Add to cart |
![]() ₹15.00Add to cart |