பயிர்க்கடன் தள்ளுபடி – ஒரு விவசாயியின் கடைசி வாக்குமூலம்

‘என் பூமியை விழுங்கியது போதாதா? என்னையும் விழுங்க வேண்டுமா?’ என்று கதறுகிறேன். ‘நான் அளித்த வாக்குமூலத்தைக் குறுக்கு விசாரணை செய்யுங்கள்!’ என்று மீண்டும் மீண்டும் கத்துகிறேன். என் மகன்கள் அலறும் சத்தம் மெதுவாகக் குறைவதுபோல் தெரிகிறது. நான் மென்மையாவது போலவும் காற்றில் கலப்பது போலவும் உணர்கிறேன்.

பயிர்க்கடன் தள்ளுபடி கோரி திருச்சி சமயபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற ஒரு விவசாயியின் அனுபவப் பகிர்வு..

***

விவசாயியின் கடைசி வாக்குமூலம்

நான் சொல்வதெல்லாம் உண்மை..

தாது வருடத்திற்குப் பிறகும் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பும் நான் பிறந்ததாகச் சொல்வார்கள். அதனால், என் வயதைத் துல்லியமாகக் கூற முடியாது. எப்போதும் அந்தக் காலக்குறிப்பைச் சொல்லித்தான் என் பிறப்பை நினைவுகூர்வார் என் அப்பா. என் தாயோ, யார் யாரோ பிறந்ததற்கு ஒரு மாதம் முன்னும் பின்னும் என்று சொல்லி என் வயதை நினைவுகூர்வார். எங்கள் குடும்பத்தில் நான் நான்காவது குழந்தையாகப் பிறந்ததாகவும், ஓராண்டு கடந்தும் தாய்ப்பால் குடித்ததாகவும் என் தாய் பெருமையுடன் கூறுவார். அந்தக் காலத்தில் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதற்கு எந்த அளவுகோலும் கிடையாது.

என் வம்சத்துக்கென்று தனியாக வரலாறு கிடையாது. ஏனென்றால், நாங்கள் மன்னர் பரம்பரையோ ஆண்ட பரம்பரையோ அல்ல. வேளாண்மை செய்து குடிகளுக்கு உணவளித்ததால் எங்களைக் குடியானவர்கள் என்றும் உழவர்கள் என்றும் சொல்கிறார்கள். என் கொள்ளுத்தாத்தா முதல் என் அப்பா வரை, அதற்கு முன்னாலும் எங்கள் குடும்பத்தில் யாரும் படித்ததேயில்லை. என் தாயும் தந்தையும் பயிர்த்தொழில்தான் செய்து வந்தார்கள்.

என் கொள்ளுத்தாத்தாவுக்கு எட்டு மகன்கள் இருந்தார்களாம். வெள்ளைக்காரர் காலத்தில் வனங்களையும் காடுகளையும் நாகதாளிகளையும் அழித்து, அவற்றைப் பயிரிடும் நிலங்களாக மாற்றி, எட்டு மகன்களுக்கும் நிலத்தைப் பிரித்துக் கொடுத்ததாக என் தந்தை சொல்லுவார். ஒவ்வொருவருக்கும் கொஞ்சம் பூமி, ஒரு ஜோடி ஏர் மாடுகள், ஒரு கறவை மாடு, இரண்டு வெள்ளாடுகள், மம்முட்டி, அரிவாள், களைக்கொத்து ஆகியவற்றைக் கொடுத்து, ‘இவற்றை வைத்துக்கொண்டு பொண்டாட்டி பிள்ளைகளோடு பிழைத்துக்கொள்’ என்று சொன்னாராம்.

எனக்கு மூத்தவர்கள் யாரையும் என் தாய் தந்தையர் பள்ளிக்கு அனுப்பவில்லை. என் அம்மா என் அப்பாவோடு வயலுக்குச் சென்றுவிடுவார். ஒவ்வொரு குழந்தையும் தனக்குக் கீழே பிறந்த குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆடு, மாடு, கோழிகளைப் பராமரிக்க வேண்டும். தானியக் கதிர்களைக் கொத்த வரும் குருவிகளை விரட்ட வேண்டும். அன்றைய உணவுக்குத் தேவையான தானியங்களை வெயிலில் காயவைக்க வேண்டும். ஐந்தாறு வயது வரை உடையில்லாமல் பிறந்த மேனியோடு சுற்றிக்கொண்டிருந்த பிள்ளைகள் இப்படித்தான் சிறுவயதிலிருந்தே வேளாண் பொறுப்புகளைக் கற்றுக்கொண்டார்கள்.

என் அப்பாவின் குடும்பத் தேவைகள் மிகவும் குறைவாக இருந்தன. அவரிடம் நீர்க்காவி ஏறிய நாலுமுழ வேட்டிகள் இரண்டு, கோட்டப்பாளையம் துண்டுகள் இரண்டு, தொங்குக் கோவணங்கள் இரண்டு மட்டுமே இருந்தன. என் தாயார் அவரிடமிருந்த இரண்டு சுங்குடிச் சேலைகளையும் மாற்றி மாற்றி இடுப்பில் சுற்றிக்கொள்வார். காட்டில் வேலை செய்யும்போது சேலையின் ஒரு பகுதியைத் தலையில் கட்டிக்கொள்வார்.

அந்தக் காலத்தில் என் அப்பாவுக்குப் பயிர்த்தொழில் செய்யப் பெரிய அளவில் பணம் தேவைப்படவில்லை. பயிர்களுக்கு மாட்டுத் தொழு உரத்தைப் பயன்படுத்துவார்கள். பிள்ளைகள் ஏரிகளில் சாணம் பொறுக்கி வந்து உரம் சேர்ப்பார்கள். ஒரு விளைச்சலில் கிடைக்கும் தானியங்களிலிருந்தே அடுத்த சாகுபடிக்கான விதைகளைச் சேகரித்து வைத்துக்கொள்வார்கள். என் தந்தை ஏற்றம் இறைப்பார்; உழவு ஓட்டுவார். என் தாயார் வீட்டு வேலைகளோடு களையெடுப்பது, மாடு பால் கறப்பது போன்ற வேலைகளையும் செய்வார். பிள்ளைகள் மாடு கன்றுகளைப் பார்த்துக்கொள்வார்கள்.

ஏற்றத்தைப் பழுதுபார்த்தவர்களுக்குத் தானியமே கூலியாக வழங்கப்படும். துணி துவைப்போர், சவரம் செய்வோர், பறைசாற்றுவோர், கோவில் பணிகளைச் செய்வோர், பூசை செய்வோர், புலவர்கள், மடம் காப்போர், துறவிகள், விருந்தினர்கள் ஆகியோருக்கும் உணவும் தானியமும் வழங்கப்பட்டன. பெரும்பாலான தேவைகள் இப்படிப் பண்டமாற்று முறையிலேயே நிறைவேறின.

பண்டமாற்றில் கிடைக்காத சில பொருட்களுக்குப் பணம் தேவைப்பட்டது. அதற்காகப் பருத்தி, கரும்பு போன்ற பணப்பயிர்களையும் கொஞ்சம் பயிரிட்டார் என் அப்பா. அவர் வேளாண் தொழிலில் வரவு செலவுக் கணக்குப் பார்த்ததே கிடையாது. பின்னாளில் பிள்ளைகளின் கல்யாணம், காட்சி போன்றவற்றுக்குப் பணம் தேவைப்பட்டதால் பணப்பயிர் சாகுபடியைக் கொஞ்சம் அதிகப்படுத்தினார்கள். இப்படிப் பணப்பயிர்கள் வேளாண்மைக்குள் அதிகரித்தபோது, விளைபொருட்களை விற்கவும் பொருட்களை வாங்கவும் கொஞ்சம் படிப்பறிவு தேவைப்பட்டது.

அப்போதுதான் என் அப்பா என்னைப் பள்ளியில் சேர்க்க அழைத்துச் சென்றார். வாத்தியார் என் வயதைக் கேட்டார். அப்பா ஏதேதோ முன்னுக்குப் பின் மாற்றிச் சொன்னார். வாத்தியார் என் வலது கையைத் தலைக்கு மேலே கொண்டு சென்று இடது காதைத் தொடச் சொன்னார். நான் தொட்டுக் காட்டியதும் பள்ளிப் பருவம் வந்துவிட்டதாகக் கூறி வருகைப் பதிவேட்டில் பெயரைக் குறித்துக்கொண்டார்.

பிறகு, ‘என்ன தொழில்? என்ன சாதி?’ என்று கேட்டார். ‘மாடு கன்றுகளை வைத்து நிலத்தை உழவு செய்கிறோம்; உழவர்கள் வசிக்கும் வளவில் இருக்கிறோம்’ என்று அப்பா சொன்னார். வாத்தியார் பழுப்பேறிய பெரிய புத்தகத்தைப் புரட்டிப் பார்த்து, பயிர்த்தொழில் செய்வதாகக் குறித்தார். ‘நாங்க குடியானவங்க’ என்றார் அப்பா. ‘எல்லாம் ஒன்றுதான், விடு’ என்றார் வாத்தியார். இப்படித்தான் என் பள்ளிப்படிப்பு தொடங்கியது.

நான்காம் வகுப்பை முடித்து ஐந்தாம் வகுப்புக்கு வந்தேன். நன்றாகத் தமிழ் படிக்கக் கற்றுக்கொண்டேன். கொஞ்சம் வரலாறு, புவியியல், இயற்கைப் பாடம், தோட்ட வேலை, நன்னெறி போதனை, மனக்கணக்கு ஆகியவற்றையும் கற்றேன். என் அப்பா பருத்தி, வெல்லம் போன்ற பொருட்களை வியாபாரியிடம் விற்கும்போது ராத்தல் கணக்கில் எடையை எண்ணுவதற்குப் பெருவிரலில் நகத்தை வளர்த்து வைத்திருப்பார். மேலிருந்து ஒன்று, இரண்டு என்று புள்ளிகளை எண்ணிக்கொண்டே வருவார்.

அப்பா மேலிருந்து புள்ளிகளை எண்ணிக் கீழே வருவதற்குள் நான் எண்களைப் பார்த்து, ‘முப்பது ராத்தல்’ என்று சொல்லிவிடுவேன். அதைக் கேட்டு என் அப்பா பெரு மகிழ்ச்சி அடைவார். எடையைச் சொல்லவும் பாண்டுப் பத்திரங்களைப் படித்து அப்பாவுக்கு விளக்கவும் எனக்குத் தெரிந்துவிட்டது. எனவே, ‘இதுவே போதும்’ என்று சொல்லி என் படிப்பை அப்பா நிறுத்திவிட்டார். அதன்பிறகு அவருக்கு உதவியாக ஏற்றம் இறைப்பது, உழவு ஓட்டுவது, மாடு கன்றுகளைப் பராமரிப்பது என்று என் வாழ்க்கை தொடங்கியது.

ஒருநாள், நீண்ட கால் ட்ரவுசர் அணிந்த இரண்டு மூன்று பேர், கையில் நீண்ட நோட்டுப் புத்தகத்தை வைத்துக்கொண்டு என் தந்தையிடம் ஏதேதோ விளக்கிச் சொன்னார்கள். ‘இனிமேல் ஏற்றம் இறைக்க வேண்டியதில்லை. பைக்காராவிலிருந்து கரண்ட் வருகிறது. உங்கள் கிணற்றுக்கும் கரண்ட் வைக்கலாம்; இங்கே கைரேகை வையுங்கள்’ என்றார்கள். ‘கரண்ட் உயிர்கொல்லி; எனக்கு வேண்டாம்’ என்றார் அப்பா.

வந்தவர்கள் அவரிடம் ஏதேதோ எடுத்துச் சொன்னார்கள். எங்கள் ஊரின் மணியம், பெரிய பண்ணை, நடுப்பண்ணை எல்லோரும் ஒப்புதல் கொடுத்துவிட்டதாகச் சொன்னார்கள். அப்பா பெருவிரலில் மையை உருட்டி நோட்டில் கைரேகை பதித்துவிட்டு, விரலைத் தலையில் தேய்த்துக்கொண்டே, ‘எல்லாரும் கரண்ட் வைத்த பிறகுதான் என் கிணற்றில் கரண்ட் வைக்க விடுவேன்’ என்றார். இப்படி, என் அப்பா காலத்திலேயே இஞ்சின், கரண்ட் மோட்டார் என்று பாசன முறை மாறிவிட்டது.

நிலத்திற்குத் தொழு உரம் இடும் பழக்கமும் மாறத் தொடங்கியது. சுண்ணாம்புத் தூளைப்போலத் தோற்றமளித்த புதிய உரங்கள் வர ஆரம்பித்தன. அந்த உரங்களை வயலில் பயன்படுத்தக் குடியானவர்கள் முதலில் மறுத்தார்கள். அதனால், அந்த உரங்களை விலையில்லாமல் கொடுத்து வயலில் போடச் செய்து மகசூல் பெருகுவதைக் காட்டினார்கள். போகப்போக என் அப்பா முதற்கொண்டு எல்லோரும் பணம் கொடுத்து அந்த உரங்களை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

அந்த உரங்களைத் தொடர்ந்து பயன்படுத்தியதில் கன்னி மண்ணில் இருந்த உயிர்ச்சத்து குறைந்து, நிலம் மலடாகிவிட்டதாக நாங்கள் உணர்ந்தோம். சிறிது காலத்திலேயே உரம் போட்டால்தான் பூமி விளையும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டோம். அதுவரை கடனில்லாமல் வாழ்ந்தவர்கள் உரம் வாங்கவும் பூச்சிக்கொல்லி மருந்துகள் வாங்கவும் கடன்படத் தொடங்கினார்கள்.

கடன் கிடைக்காத நிலை ஏற்பட்டபோது சர்க்காரே கடன் கொடுக்கத் தொடங்கியது. மகசூல் பெருகவும் பால் வளம் அதிகரிக்கவும் என்று கடன் கொடுத்து உற்பத்தியைப் பெருக்க வலை விரித்தது. சீமையிலிருந்து மாடுகளையும் விதைகளையும் வரவழைத்துக் குடியானவர்கள் கையில் கொடுத்தார்கள். பரம்பரையாக வளர்த்த மாடுகளையும் பாதுகாத்த விதைகளையும் ஒதுக்கிவிட்டு, சீமை மாடுகளையும் சீமை விதைகளையும் கடனாகப் பெற்றார்கள். ஆனால், அந்தக் கடனை அடைக்க முடியாமல் மீண்டும் மீண்டும் கடனில் மூழ்கினார்கள்.

கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதபோது சர்க்கார் அதிகாரிகள் கதவுகளையும் பாத்திரம் பண்டங்களையும் ஜப்தி செய்ய நடவடிக்கை எடுத்தார்கள். மானத்தோடு வாழ்ந்த என் அப்பாவால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ‘இனிமேல் இந்த ஊரில் இருக்க முடியாது’ என்று சொல்லி, பூமியை வந்த விலைக்கு விற்றுவிட்டு எங்களையும் அழைத்துக்கொண்டு ஊரைவிட்டுப் புறப்பட்டார்.

‘கெட்டவன் கிழக்கே போ’ என்ற பழமொழிக்கு ஏற்ப, நிலத்தை விற்றுக் கிடைத்த சொற்பப் பணத்தை எடுத்துக்கொண்டு கிழக்கே வந்தார். அங்கே பள்ளமும் மேடுமாகக் கரடுமுரடாகக் கிடந்த ஒரு பூமியைத் தன்னிடம் இருந்த சொற்பப் பணத்தில் வாங்கினார். மேடு பள்ளங்களைத் திருத்தி அதை பொன் விளையும் பூமியாக மாற்றினார். அவர் மூப்படைந்த காலத்தில் கோல் ஊன்றி, குனிந்தபடியே பூமியைப் பார்த்துக்கொண்டு நடப்பார். அவர் அப்படிக் குனிந்து சென்றது முதுமையின் தோற்றமா, அல்லது பூமியின் மீது அவர் கொண்டிருந்த விடாப்பிடியான பற்றா என்று இன்றுவரை எனக்குத் தெரியவில்லை.

என் பாட்டனார் இறக்கும் தருவாயில் அன்னம், தண்ணீர், ஆகாரம் எதுவும் உட்கொள்ளாமல் படுக்கையில் இருந்தாராம். அப்போது உழவு மண்ணை எடுத்து நீரில் கரைத்து, வடித்த நீரை வாய்வழியாக உட்கொண்ட பிறகுதான் அவர் உயிர் பிரிந்ததாம். அத்தனை ஆழமாக மண்ணோடு பிணைந்திருந்தது எங்கள் வாழ்க்கை.

ஆனால், அந்த மண்ணில் தொடர்ந்து பயிர்த்தொழில் செய்வது நாளுக்கு நாள் கடினமாகிக் கொண்டே போனது. தட்பவெப்பநிலை சீர்கேடு, வறட்சி, வெள்ளப் பாதிப்பு, பயிர் நோய், பூச்சித் தொல்லை, ஆள் பற்றாக்குறை, நிலையற்ற விலை என்று எத்தனையோ பிரச்சினைகளால் மீண்டும் கடனாளியானோம். திக்குத் தெரியாத துயரத்தில் ஆழ்ந்த என் அப்பா ஒருநாள் எங்களை அழைத்துப் பேசினார்.

‘இந்த வேளாண் தொழில் உன் தாத்தாவோடும் என்னோடும் முடியட்டும். பிற்காலத்தில் நீங்கள் படித்து முன்னேறி வேறு வேலைக்குப் போய்விடுங்கள்’ என்றார். ‘விவசாயத்தை விட்டுவிட்டு நகர்ப்புறம் சென்றால் அங்கும் வேலையில்லாத் திண்டாட்டம் உருவாகும்தானே?’ என்று கேட்டேன். ‘பல தலைமுறைகளாக மண்ணில் உழைத்தது போதும். உங்கள் மக்களாவது இந்தத் தலையெழுத்தை மாற்றி நகர வாழ்க்கை வாழட்டும்’ என்றார்.

என் அப்பா வயலில் நின்ற பயிர்களையும் மரத்தடியில் நின்ற மாடுகளையும் குத்திட்ட கண்களோடு, கடைக்கண்ணில் நீர் மல்க ஏக்கத்தோடு பார்த்தார். அந்தக் காட்சி என் மனதில் பதிந்துவிட்டது. விடாப்பிடியான முயற்சியோடு என் பிள்ளைகளைப் படிக்கவைத்து வெற்றியும் கண்டேன். பரம்பரைத் தொழிலுக்கு விடை கொடுத்து அவர்களுடைய வாழ்வை மாற்றி அமைத்தேன். வெள்ளையர் ஆட்சி முடிந்து பல ஆட்சிகள் வந்துபோன பிறகும் வேளாண் தொழிலுக்கு மட்டும் விடிவு பிறக்கவில்லை. பூமியைப் பின்னால் விட்டுவிட்டு கல்வியைக் கையில் ஏந்திக் கடல் கடந்து சென்ற தன் சந்ததியைப் பார்க்க என் அப்பா உயிரோடு இல்லை.

காலம் சென்றது. கிராமப்புற வாழ்க்கையிலும் மாற்றங்கள் தொடர்ந்தன. முன்பு வேளாண் வேலைகளுக்குத் தங்கள் குடும்பத்தையே நம்பியிருந்த குடியானவர்களைப் போலவே, என் வயதொத்த விவசாயிகளும் குடும்பங்களின் அளவு குறைந்ததையும் வயல் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டதையும் பேசிக்கொண்டார்கள். குடும்ப நலத்திட்டங்களால் இந்த நிலை ஏற்பட்டதாகச் சிலர் கருதினார்கள். பின்னர் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் வந்தபோது, வயல் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில் மேலும் சிரமம் ஏற்பட்டு வருவதாகக் கூறினார்கள். ‘இப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்டால் பயிர்த்தொழில் எப்படி முன்னேறும்?’ என்று என் வயதொத்தவர்கள் வருந்தினார்கள்.

ஒருநாள் எங்களுடன் பயிர்த்தொழில் செய்துகொண்டிருந்த வயதொத்த நண்பர் ஒருவர், ‘நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங், விவசாயத்தை நம்பி வாழும் மக்கள் பிற தொழில்களுக்குச் செல்ல வேண்டும் என்று பேசியிருக்கிறாராம்’ என்றார். ‘வேளாண் தொழிலைத் தவிர நமக்கு வேறு தொழில் தெரியாதே! நாம் எங்கே போவது?’ என்று எங்களில் சிலர் வேதனைப்பட்டார்கள். விவசாயத்தை நம்பியிருந்தவர்களுக்கு அந்தச் செய்தி இப்படித்தான் புரிந்தது.

என் மக்கள் ஒருநாள், ‘அப்பா, நீங்கள் பட்டது போதும். எங்களோடு நகர வாழ்க்கைக்கு வந்துவிடுங்கள். உங்களுக்கும் பாதுகாப்பு; எங்களுக்கும் பாதுகாப்பு; எங்கள் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு’ என்றார்கள். ‘காடு, கழனி எல்லாம் கிடக்கட்டும்; பார்த்துக்கொள்ளலாம்’ என்று சொல்லி என்னை அழைத்துச் சென்றார்கள்.

ஒருநாள் என் மகன்கள், ‘அப்பா, வருமானம் இல்லாத வெற்று பூமியை ஏன் காத்துக்கொண்டிருக்க வேண்டும்? கம்பெனிக்காரன் கேட்கிறான்; விற்றுவிடலாம்’ என்றார்கள். திடுக்கிட்டு நிமிர்ந்தேன். என் ஐம்புலன்களையும் சுட்டெரித்ததுபோல் இருந்தது. ‘வம்சாவழியாக நிலம் வைத்து வாழ்ந்த நம் பரம்பரையை, நிலமில்லாமல் நிர்வாணமாக்கிப் பார்க்கிறாயா?’ என்று கேட்டேன்.

என் மகன், ‘அப்பா, நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால், உங்களுக்குப் பிறகு எங்களுக்கு நம் நிலத்தின் அத்துகூடத் தெரியாது. அதை எப்படி பராமரிப்பது? நிலத்தை விற்றுப் பணத்தை வேறு முதலீடு செய்தால் நாலு காசு பார்க்கலாம்’ என்றான்.

காலம் காலமாகக் கட்டிக்காத்த பூமி எங்கள் கையைவிட்டுப் போகப்போவதை உணர்ந்தேன். என் காதுகளை யாரோ பஞ்சு வைத்து அடைத்ததுபோல் இருந்தது. என் கண் விளிம்புகளில் நீர் திரண்டு நின்றது. நன்னிலம் காத்த என் நாவு வறண்டது. பூமி சுற்றுவதுபோல் தோன்றியது. ஆமாம், பூமி சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது. இல்லை… இல்லை… என் பூமியைப் பறிக்கவே பூமி செய்யும் சித்து வேலையா இது? ‘நான் ஏமாற மாட்டேன்! நான் ஏமாற மாட்டேன்!’ என்று கதறினேன். என் வம்சாவழியில் யாரும் ஏமாறவில்லை. நான் மட்டும் எப்படி ஏமாறுவேன்? ‘ஏமாற மாட்டேன்! ஏமாற மாட்டேன்!’ என்று கத்தினேன்.

‘அப்பா… அப்பா…’ என்று என் மகன்கள் அழும் சத்தம் கேட்கிறது. என் வேளாண் நிலத்தில் வானளாவிய கட்டிடங்கள் தெரிகின்றன. எங்கள் பசிப்பிணிக்கு உணவளித்த அந்த மந்திர பூமி முழுவதும் கான்கிரீட் கற்களால் மூடப்பட்டுள்ளது. உணவளித்த என் பூமி எப்போது இப்படி மீளாத் துயிலில் ஆழ்ந்தது என்று கதறுகிறேன்.

வண்ணக் கார்களும் கனவான்களும் மாறி மாறி வருகிறார்கள். அவர்கள் என்னைப் பார்த்துச் சிரிப்பதுபோலவும் உறுமுவதுபோலவும் தெரிகிறது. என்னை நெருங்கி வருகிறார்கள். அவர்கள் கைகளில் நகங்கள் நீளுவதையும், வாயில் பற்கள் நீளுவதையும் கண்டு பயந்து ஓடுகிறேன். ஓடிக்கொண்டே இருக்கிறேன். அவர்கள் தொடர்ந்து துரத்திக்கொண்டே வருகிறார்கள். எங்கும் இருள் சூழ்ந்துவிட்டது.

‘என் பூமியை விழுங்கியது போதாதா? என்னையும் விழுங்க வேண்டுமா?’ என்று கதறுகிறேன். ‘நான் அளித்த வாக்குமூலத்தைக் குறுக்கு விசாரணை செய்யுங்கள்!’ என்று மீண்டும் மீண்டும் கத்துகிறேன். என் மகன்கள் அலறும் சத்தம் மெதுவாகக் குறைவதுபோல் தெரிகிறது. நான் மென்மையாவது போலவும் காற்றில் கலப்பது போலவும் உணர்கிறேன். சப்தங்கள் யாவும் மறைந்துவிடுகின்றன. கனவில் மிதப்பதுபோல் இருக்கிறது. இதுதான் காலனின் வருகையா?  எங்கள் பூமியின் தாய்மடிக்கே மீண்டும் போய்க் கொண்டிருக்கிறேனா?

இரா. துரைசாமி,
பண்டைய வேளாண் வேலைகளைக் கற்றுத் தேர்ந்த எளிய விவசாயி,
ராசிபுரம், நாமக்கல் மாவட்டம்.
தொடர்பு: 98428 19540 | duraiorambu@gmail.com

disclaimerசமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads


விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க