
02.11.2026
தருமபுரி: மதுபோதையில் பெற்ற தாயை வெட்டிக் கொன்ற மகன்!
போதைக் கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டியது உடனடித் தேவை!
பத்திரிகைச் செய்தி
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே மதுபோதையில் பெற்ற தாயை மகன் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நல்லம்பள்ளி அருகே உள்ள பழைய இண்டூரைச் சேர்ந்தவர் சின்ன பாப்பா (45), இவரது மகன் தேவராஜ் (19). ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தேவராஜ், ஒரு வழக்கில் கைதாகி அண்மையில்தான் பிணையில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில்தான், கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி மதுபோதை தலைக்கேறி, தனது தாயையே வெட்டிக் கொன்றுள்ளார்.
இன்றைக்கு தமிழ்ச் சமூகம் முழுக்க பரவியுள்ள டாஸ்மாக், கஞ்சா உள்ளிட்ட போதைக் கலாச்சாரம், புற்றுநோயைப் போல ஒட்டுமொத்த சமூகத்தையே அரித்துத் தின்று வருகிறது. போதைக் கலாச்சாரத்தின் காரணமாக, உழைக்கும் மக்களின் குறைந்தபட்ச வருமானமும் பறிக்கப்படுகிறது. பல குடும்பங்களின் வாழ்வையே அழிக்கிறது. பல்வேறு குற்றச் சம்பவங்களுக்குத் தூண்டுகோலாக இருக்கிறது. பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரிப்பதற்கும் முக்கியக் காரணமாக உள்ளது. எதிர்காலத் தலைமுறையின் சிந்தனை ஆற்றலை அழிக்கிறது. கூலிப்படைக் கலாச்சாரம் வளர்வதற்கு போதைக் கலாச்சாரம் அடிப்படைக் காரணமாக அமைகிறது.
தமிழ்ச்சமூகம் உயிர் பிழைத்திருக்க டாஸ்மாக், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அனைத்தும் முழுமையாகத் தடை செய்யப்பட வேண்டியது அவசியமானது.
ஆனால், அரசே போதைக் கலாச்சாரத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கி, டாஸ்மாக் மதுபான கடைகளை நடத்தி வரும் கேவலம் நடந்து கொண்டிருக்கிறது. எந்தக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும், டாஸ்மாக் கடைகளை மூடுவதில்லை. தேர்தலில் ஓட்டுப் பொறுக்குவதற்கு மட்டுமே அதைப் பற்றிப் பேசுகின்றன. மாறாக, புதிய புதிய வழிமுறைகளில் டாஸ்மாக் விற்பனையை அதிகப்படுத்தி, உழைக்கும் மக்களின் பணத்தைப் பறித்து கல்லாக் கட்டுவதிலேயே குறியாக உள்ளன.
தற்போது ஆட்சியில் இருக்கும் த.வெ.க. விஜய் அரசு, பள்ளி, கல்லூரி, கோவில்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று அறிவித்து, நடவடிக்கை எடுப்பதைப் போல பாவ்லா காட்டியது. ஆனால், பல இடங்களில் அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டின் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆனால், த.வெ.க. விஜய் அரசு, அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. போராடும் மக்களை ஒடுக்கும் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறது.
இளைஞர்களின் நாயகனாகத் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் விஜய், போதைக் கலாச்சாரத்திற்கு இளைஞர்கள் பலியாவது, பாதிக்கப்படுவது குறித்து துளியும் கவலைப்படுவதில்லை. இத்தகைய போக்குகள் மக்களிடத்தில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
த.வெ.க. விஜய் அரசுக்கு மக்களின் நல்வாழ்வில் எந்த அக்கறையும் கிடையாது என்பதையே அதன் மேற்கண்ட நடவடிக்கைகள் நமக்கு உணர்த்துகின்றன. போதைக் கலாச்சாரத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதன் மூலமே டாஸ்மாக், கஞ்சா உள்ளிட்டவற்றிற்கு முடிவு கட்ட முடியும்; இளம் தலைமுறையைப் பாதுகாக்க முடியும்.
த.வெ.க. விஜய் அரசே!
- தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக்கை இழுத்து மூடு!
- கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை முழுமையாகத் தடை செய்!
- தமிழ்நாடு முழுவதும் போதை மீட்பு மறுவாழ்வு மையங்களை தேவையான அளவிற்கு உருவாக்கு!
- போதைப் பொருட்களைத் தடுக்காத அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்!
![]()
இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





