19.10.2026

திருநெல்வேலி: சாரா டக்கர் மகளிர் கல்லூரியில் பி.எச்.டி மாணவியிடம் லஞ்சம் கேட்ட பேராசிரியை

கண்டன அறிக்கை

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது சாரா டக்கர் (Sarah Tucker) மகளிர் கல்லூரி. இது அரசு உதவிபெறும் தன்னாட்சிக் கல்லூரி ஆகும். இக்கல்லூரியில் வணிகவியல் (Commerce) துறையில் ஆராய்ச்சிப் படிப்பு (Ph D) மேற்கொண்டு வரும் மாணவி பி.ஆதித்யா. இக்கல்லூரியின் வணிகவியல் துறையில் பணியாற்றுபவர் பேராசிரியை லீலாவதி. மாணவி ஆதித்யாவிடம், பேராசிரியை லீலாவதி ஆராய்ச்சிப் படிப்பு தொடர்பாக லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி ஆதித்யா, அலைபேசி பேச்சு ஒலிப்பதிவு ஆதாரத்துடன் கல்லூரி மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டதை அடுத்து, கல்லூரி நிர்வாகம் பேராசிரியை லீலாவதியை தற்காலிகப் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்த பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தமிழ்நாடு முழுவதும் எழுந்த வண்ணம்தான் உள்ளன. குறிப்பாக, ஆண் மாணவர்கள் என்றால் லஞ்சம், பெண் மாணவர்கள் என்றால் பாலியல் தொந்தரவு என்ற அடிப்படையில் ஒடுக்கப்படுவதான குற்றச்சாட்டுகள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளன; தற்போதும் நடந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய போக்குகள் காரணமாக மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனால், அவர்களின் கல்வியும், எதிர்காலமும் வெகுவாக பாதிக்கப்படுகிறது.

நாம் இங்கு அனைத்துப் பேராசிரியர்களையும் குற்றம் சாட்டவில்லை. கன்னியமிக்க முறையில், அக்கறையோடு மாணவர்களை அணுகும் பல பேராசிரியர்கள் உள்ளனர். ஆனால், குற்றமிழைக்கும் பேராசிரியர்களோ, நிர்வாகமோ எல்லா இடங்களிலும் தண்டிக்கப்படுகிறார்களா என்றால் இல்லை. பல இடங்களில் அவ்வாறு நடப்பதில்லை. மேலும், இத்தகைய குற்றங்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் எதுவுமே தெரியாமல் நடக்கின்றன என்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ்நாடு அரசு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகங்களின் அலட்சியம், அக்கறையற்ற போக்கின் காரணமாகவே தொடர்ச்சியாக இத்தகைய குற்றங்கள் நடக்கின்றன என்று கம்யூனிச மாணவர் – இளைஞர் கழகம் குற்றஞ்சாட்டுகிறது; வன்மையாகக் கண்டிக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இத்தகைய குற்றங்களை முழுமையாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசே!

  • ஆராய்ச்சிக் கல்வி படிக்கும் மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாத்திடு!
  • எல்லாப் பல்கலைக் கழகங்களையும், உறுப்புக் கல்லூரிகளையும் முறையாகக் கண்காணித்திடு! குற்றமிழைத்தது கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடு!
  • மாணவர்கள் அச்சமின்றி, தங்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் வகையில் நிர்வாகத் தன்மையை உருவாக்கு!
  • தமிழ்நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் உடனடியாக துணைவேந்தர் நியமிப்பதற்கான நடவடிக்கை எடு!


தோழமையுடன்
கம்யூனிச மாணவர்-இளைஞர் கழகம்,
தமிழ்நாடு-புதுச்சேரி.
94448 36642.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க