22.10.2026
கோவை: சாதிய வன்கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் அகிலன்!
பத்திரிகைச் செய்தி
கோவை பீளமேடு சிருங்கார் நகர் அருகேயுள்ள துரைசாமி லே அவுட் 5-வது வீதியைச் சேர்ந்த அசோக்குமார், கவுசல்யா ஆகியோரது மகனான அகிலன் (15) பீளமேட்டில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் கே.கே.நாயுடு பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அகிலன் பள்ளியில் தனக்குத் தொடர்ந்து ஏற்பட்டுவந்த சாதிய பாகுபாட்டால் அக்டோபர் 21 அன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விஜயகுமார் என்ற ஆசிரியர் வகுப்பில் உதவித்தொகை தகவல் சேகரிக்கும் பொழுது அகிலனிடம் “நீ மாட்டிறைச்சி சாப்பிடுகிறாயா?” என்று கேள்வி எழுப்பி இழிவுபடுத்தும் வகையில் பேசி சாதிய வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக அகிலனின் தாயார், மாட்டிறைச்சி சாப்பிடும் மாணவர்களை வகுப்பில் எழுந்து நிற்குமாறு கூறி மாணவர் அகிலனை அவமானப்படுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆசிரியர் விஜயகுமாரின் இந்த அப்பட்டமான சாதியப்புத்தி வெளிப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அகிலன் மாட்டுக்கறி சாப்பிடுபவர் மற்றும் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து கொண்ட மாணவர்கள் சிலர் அகிலனை சாதி ரீதியாகக் கேலி செய்து அவமதித்து ஒதுக்கியுள்ளனர். மாணவர்களின் இந்த சாதிரீதியான கேலிகள் தொடர்ந்து வந்ததால் மன உளைச்சலுக்கு உள்ளான அகிலன் பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லாமல் பள்ளியில் தொடர்ந்த சாதியப் பாகுபாடுகளைப் பெற்றோர்களிடம் சொல்லி வருத்தப்பட்டு உள்ளார்.
அகிலனை பெற்றோர்கள் சமாதானப்படுத்தி பள்ளிக்கு மீண்டும் அனுப்பியுள்ளனர். அகிலனுக்கு நடக்கும் சாதியப் பாகுபாடுகள் தொடர்பாக பள்ளி நிர்வாகம் மற்றும் தலைமை ஆசிரியர் அருண் குமாரிடமும் புகார் அளித்துள்ளனர். பெற்றோர்கள் அளித்த புகாரின் மீது தலைமை ஆசிரியர் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தி உள்ளார்.
பெற்றோர்கள் அளித்த புகாருக்குப் பின்னரும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பள்ளி தொடங்குவதற்கு முன்பு பிரார்த்தனை நேரம் நடக்கும்போது சக மாணவர்கள் அகிலனை மறுபடியும் சாதிப் பெயரைச் சொல்லிக் கிண்டல் செய்துள்ளனர். இவ்வாறு தான் எதிர்கொள்ளும் தொடர் சாதியத் தாக்குதல்களால் மனமுடைந்த அகிலன் அக்டோபர் 21 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பீளமேடு போலீஸார் ஆசிரியர் விஜயகுமார் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், ஆதிக்கச் சாதி புத்தியுடன் செயல்படும் போலீசு, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் யாரையும் இதுவரை கைது செய்யவில்லை. இதனை கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியரையும் சாதி ரீதியாக அகிலனை அவமானப்படுத்திய மாணவர்களையும் வழக்கில் மட்டும் சேர்த்துள்ளனர்.
பள்ளியில் சாதிய பாகுபாட்டால் தற்கொலை செய்து கொண்ட அகிலனுக்கு நீதி கோரி, குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரிய போராட்ட களத்தில் மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் மற்றும் முற்போக்கு இயக்க, கட்சி தோழர்களும் இருந்து வருகிறோம்.
தமிழ்நாடு அரசே! போலீஸ் துறையே!
சாதி ரீதியாக அகிலனை அவமானப்படுத்திய ஆசிரியர் விஜயகுமார் மற்றும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியரைக் கைது செய்!
அகிலன் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கு!
பள்ளிகளில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் பரிந்துரைகளை உடனே நடைமுறைப்படுத்து!
![]()
தோழமையுடன்
மக்கள் அதிகாரக் கழகம்,
கோவை மாவட்டம்.
9488902202
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





