மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டில் பூசாரியான பரமசிவம் தனது மனைவி அய்யம்மாள், மகன் பிரபுவுடன் வசித்து வந்துள்ளார். இவரது குடும்பத்துக்கும் அண்டை வீட்டாருக்கும் வாகனம் நிறுத்துவதில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் அய்யம்மாள் தலையில் காயம் ஏற்பட்டு அதற்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இதுதொடர்பாக பரமசிவம் ஜூலை 17 ஆம் தேதி சிந்தாமணி போலீசு நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அன்று நள்ளிரவு போலீசு போன் செய்து வழக்கை வாபஸ் வாங்கும் படி மிரட்டி உள்ளது. அதற்கு பரமசிவம் அடுத்த நாள் வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜூலை 19ஆம் தேதி பரமசிவத்தின் வீட்டிற்கு வந்த போலீசு பரமசிவம் மற்றும் அவரது மனைவியை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளது. அங்கு பரமசிவத்தை ஆய்வாளர் பாஸ்கரன், சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார், போலீசார் ஆனந்த், அப்துல் முகமது உள்ளிட்டோர் பூட்ஸ் கால்களால் அவரது தலையில் கொலைவெறியுடன் தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளார். பின்னர், போலீசு அருகில் உள்ள மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்துவிட்டு போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
தாக்கப்பட்டது குறித்து வெளியே சொன்னால் பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்துவிடுவதாக மிரட்டி அனுப்பியுள்ளது, போலீசு. பின்னர் வீட்டிற்கு வந்த பரமசிவம் அன்றிலிருந்து கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக ஆகஸ்ட் 8 ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். தலையை ஸ்கேன் செய்த மருத்துவர்கள், தலையில் உள்பக்கத்தில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை அறிந்து கொண்டு மருத்துவமனைக்குச் சென்ற போலீசு ஈவு இரக்கமின்றி உடனடியாக வீட்டிற்குப் போகும்படி மிரட்டியுள்ளது. வேறு வழி இல்லாமல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி அன்று தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பரமசிவம் சிகிச்சை பலனளிக்காமல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.
படிக்க: ஐந்து வாரங்களில் நான்கு கொட்டடிப் படுகொலைகள்! விஜய் அரசின் உண்மை முகம்!
பரமசிவம் வீட்டில் விழுந்ததால்தான் தலையில் காயம் ஏற்பட்டதாக போலீசு கூறியுள்ளது. ஆனால் உயிரிழப்பதற்கு முன்பாக பேசிய காணொளியில், தன்னை நான்கு போலீசு தலையில் தாக்கியதால்தான் ரத்தக்கசிவு ஏற்பட்டது, உயிருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், என்னைத் தாக்கிய போலீசார்தான் காரணம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருப்பது இது கொட்டடிப் படுகொலைதான் என்பதை உறுதிப்படுத்துகிறது.
இதுதொடர்பாக பரமசிவத்தின் மனைவி உயர்நீதிமன்ற மதுரை அமரவில் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்றம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், ஆகஸ்ட் 19 ஆம் தேதி மாவட்ட நீதித்துறை நடுவர் லட்சுமிபிரியா முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் நான்கு கொலைகார போலீசு மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
மேலும் சிந்தாமணி போலீசு நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் முறையாகச் செயல்படுகின்றனவா என்பதையும், ஏதேனும் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளனவா என்பதையும் ஆய்வு செய்வதற்காக வழக்கறிஞர் அயிராம் சிவகுமாரை நீதிமன்ற ஆணையராக நீதிமன்றம் நியமித்துள்ளது.
ஆனால் போதிய ஆதாரங்கள் இருந்தும் பரமசிவத்தை படுகொலை செய்த நான்கு கொலைகார போலீசு மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவும் கைது செய்து சிறையில் அடைக்கவும் உத்தரவிடவில்லை.
கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி அன்று தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு, விசிக கட்சியினர் வைத்திருந்த பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வி.சி.க. தொண்டர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அந்த வழியாக பைக்கில் சென்ற இளைஞர் ஆகாஷ் வழிவிடுமாறு கேட்டதில் வி.சி.க.வினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே பாதுகாப்பிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) வெறியோடு அவரது கன்னத்தில் அறைந்தார்.
எந்த காரணமும் இன்றி அறைந்ததால் இளைஞர் SSI-யின் கன்னத்திலும் அறைந்தார். இதைத் தொடர்ந்து, போலீசார் இளைஞரின் கழுத்தை நெறித்து குற்றவாளியைப் போல் வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளது. அவர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகு விசாரணை என்ற பெயரில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் கொட்டடிப் படுகொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. விஜய் ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைவதற்குள் எட்டு கொட்டடிப் படுகொலைகள் பதிவாகியுள்ளதாக “மக்கள் கண்காணிப்பகம்” தெரிவித்துள்ளது. அதிலும், கடந்த ஜூலை மாதம் மட்டும் மூன்று கொட்டடிப் படுகொலைகள் பதிவாகியுள்ளன. ஒரு போலீஸ் ராஜ்ஜியத்திற்கான அடித்தளத்தை த.வெ.க. அரசு அமைத்துக் கொண்டிருப்பதற்கான சமிக்ஞை வெளிப்படுகிறது.
எனவே, பரமசிவத்தை கொட்டடி படுகொலை செய்த நான்கு கொலைகார போலீசு மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும்; போலீஸ் வேலையிலிருந்து நீக்கப்பட வேண்டும்; பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக சக்திகளும் புரட்சிகர அமைப்புகளும் களப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











