01.11.2026

கிருஷ்ணகிரி – ஊத்தங்கரை:
சாதி மறுப்பு இணையருக்கு குடிநீரை மறுக்கும் சாதிவெறியர்கள்!

பத்திரிகைச் செய்தி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே காரப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட வண்ணாம்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதியினரான லட்சுமணன் – திவ்யா ஆகியோர் ஊர்த் தலைவர்களால் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு, அவர்களுக்கு குடிநீர் கிடைப்பதைக் கூட தடுத்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் லட்சுமணன், “நாயுடு சமூகத்தைச் சேர்ந்த நானும் பக்கத்து ஊரில் வசித்த வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த திவ்யாவும் காதலித்து, கடந்த 17.11.2024 அன்று கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குறைவாகவும், திவ்யாவின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாகவும் வசிக்கும் எங்கள் கிராமத்தில், நாங்கள் சாதி கடந்து காதல் திருமணம் செய்ததைச் சிலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால், எங்களோடு பேசக் கூடாது, எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று இரண்டு சமூகத்தினரும் உத்தரவு போட்டார்கள். இதனால், எங்களோடு நல்ல பழக்கத்தில் இருந்த இரண்டு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் கூட எங்களிடம் பேசுவதில்லை.

ஆரம்பத்தில் எங்கள் திருமணத்தை இரு வீட்டாரும் ஏற்றுக் கொள்ளாததால் கேரளாவில் ஹிட்டாச்சி ஆபரேட்டராக வேலை செய்த நான், மனைவியோடு அங்கேயே குடியிருந்தேன். பின்பு, இரு வீட்டிலும் எங்களை ஏற்றுக் கொண்டாலும், ஊர்க் கட்டுப்பாடு காரணமாக ‘ஊருக்கு வர வேண்டாம்’ என்று கூறியதால் கைக்குழந்தையுடன் ஊத்தங்கரையில் குடியிருந்தோம். என் அண்ணன் மனைவி உடல்நிலை சரியில்லாமல் இறந்தபோது கூட எங்களால் கலந்துகொள்ள முடியவில்லை. அதுமட்டுமின்றி, அவரது உடலை ஊருக்குள் கொண்டுவரக் கூடாது என்றும் ஊர்க்காரர்கள் தடை செய்ததால், மருத்துவமனையிலிருந்து நேராக சுடுகாட்டுக்குக் கொண்டு சென்று புதைக்கும் நிலை ஏற்பட்டது. இப்படியே என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் ஊர் விலக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில், என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் என்று கிராமத்திலுள்ள என் வீட்டுக்கே வந்து விட்டோம். இதை ஜீரணிக்க முடியாத என் மனைவியின் உறவினரான ஊர்க்கவுண்டர் ராஜமாணிக்கமும், ஊர் முக்கியஸ்தர்கள் பரமகேது, ஆறுமுகம், வேலு உள்ளிட்டோரும், என்னுடன் பேசக் கூடாது, பழகக் கூடாது, என்னை நல்லது கெட்டதுகளில் சேர்க்கக் கூடாது என்று எங்கள் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்தார்கள்.

நான் இல்லாதபோது என் பெற்றோரை மேற்படி நபர்களின் தூண்டுதலின் பேரில் இழிவாகப் பேசுவது, ஊர்த் திருவிழாக்களுக்கு வரி வாங்காமல் அவமதிப்பது என்று மன உளைச்சல் கொடுத்து வருகிறார்கள். ‘பேசாமல் நாம் வெளியூரில் போய் வாழ்ந்து கொள்ளலாம், இவ்வளவு கொடுமைக்கு நடுவே இங்கே வாழ வேண்டாம்’ என்று என் அப்பா புலம்பும் நிலைக்கு அவரைக் கொண்டுவந்து விட்டார்கள். பிறந்த ஊரைவிட்டு நாங்கள் ஏன் வெளியூருக்கு இடம்பெயர வேண்டும்? இவ்வளவு நெருக்கடிகளையும் தாங்கிக் கொண்டு ஊரிலிருந்து வருகிறோம்” என்று ஆதங்கத்தோடு கூறுகிறார்.

“முதலில் எங்களிடம் பேச மறுத்த பலரும் இப்போது எங்களுடன் பேசுகின்றனர். ஆனால், திருமணம், கோவில் திருவிழா எதற்கும் நாங்கள் போக முடிவதில்லை. வீட்டிலேயே இருக்கிறோம்.” என்கிறார் திவ்யா.

கடந்த ஜனவரியிலேயே, திவ்யா – லட்சுமணன் பாதுகாப்புக் கேட்டு கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். ஆனால், விசாரிக்க வருகின்ற அதிகாரிகள், வன்னிய சாதியைச் சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு, அதையே ரிப்போர்ட்டாக கலெக்டருக்கு கொடுத்து விடுவதாகவும் குற்றஞ்சாட்டுகிறார் லட்சுமணன்.

இந்த நிலையில்தான், வாழ்வாதாரத்துக்கு அடிப்படையான குடிநீரைக் கூட லட்சுமணன் குடும்பத்திற்கு சாதிவெறிவர்கள் தடுத்துள்ளார்கள். இதற்கு ஊராட்சி அதிகாரிகளும் துணைபோயுள்ளார்கள். பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்கப் போனால் இழிவாகப் பேசுவது, நிலத்தில் நடக்கக் கூடாது என்று ஏசுவது என அன்றாட வாழ்க்கையே லட்சுமணன் – திவ்யா குடும்பத்திற்கு நரகமாகியுள்ளது.

பலநாட்களாக வெளியில் பணம் கொடுத்து குடிநீர் வாங்கியுள்ளனர். இரண்டு குழந்தைகளுடன் குடிநீருக்காக கஷ்டப்படுவதைப் பார்த்தும் மனசாட்சியே இல்லாமல் குடிக்கும் தண்ணீரைத் தடுக்கின்றனர் என விரக்தியுடன் கூறுகிறார், திவ்யா.

இந்தப் பிரச்சினை சமூக ஊடகங்கள் வாயிலாக பரவலாக வெளியே தெரிந்த பிறகே, மாவட்ட நிர்வாகம் பெயரளவுக்கு சில ’ஆய்வு நடவடிக்கைகளை’ மேற்கொண்டுள்ளது. ஆனால், பிரச்சினைக்குக் காரணமான குறிப்பிட்ட சாதிவெறியர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இரண்டு பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் காதலித்து திருமணம் செய்ததையே ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு ஆணாதிக்கமும், குறுகிய சாதிவெறியும் சமூகத்தில் புரையோடிப் போயுள்ளது. ஆணோ, பெண்ணோ தங்களுக்கு விருப்பமானவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு இந்தச் சாதிய, ஆணாதிக்க சமூகம் எந்த வகையிலும் அனுமதிப்பதில்லை. அதை மீறி நடந்தால், சமூகப் புறக்கணிப்பு செய்து அவர்களை வாழவிடாமல் செய்யும். ஆணவப் படுகொலை செய்யும். அரசோ, அலட்சியமாக நடந்து கொண்டு சாதிவெறியர்களுக்குத் துணை போகும். இதுதான் நடைமுறையாக உள்ளது.

பார்ப்பனிய சாதி, ஆணாதிக்கத்துக்கு எதிராக அரசியல், சமூக, பண்பாட்டுத் தளத்தில் தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை நிலைமைகள் உணர்த்திக் கொண்டேயுள்ளன. அத்தகைய இடைவிடாத, தொடர்ச்சியான போராட்டங்களின் ஊடாகத்தான் சமத்துவத்தை நோக்கி முன்னேற முடியும்.

தமிழ்நாடு அரசே! கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகமே!
  • திவ்யா – லட்சுமணன் தம்பதியினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கு! அவர்களின் வாழ்வாதார அடிப்படைத் தேவைகளை உறுதி செய்!
  • சாதிவெறியர்கள் மீது நடவடிக்கை எடு!
  • ஆதிக்க சாதிவெறி சங்கங்களைத் தடை செய்!
  • ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி யைத் தடை செய்!


இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க