
05.11.2026
மக்கள் அதிகாரக் கழகத்தின் 10வது தலைமைக்குழுக் கூட்டம்
பத்திரிக்கைச் செய்தி
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! தோழர்களே!
கடந்த நவம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் மக்கள் அதிகாரக் கழகத்தின் 10வது தலைமைக்குழுக் கூட்டம் உற்சாகமாக நடைபெற்று முடிந்தது. இக்கூட்டத்திற்கு மக்கள் அதிகாரக் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் தலைமை தாங்கினார்.
தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு கூட்டம் தொடங்கியது. முதல் நிகழ்வாக, நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளுக்கான பிரசுரம் தலைமைக்குழுத் தோழர்களால் வெளியிடப்பட்டது.
பின்னர், கடந்த மூன்று மாதங்களில் கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து பரிசீலிக்கப்பட்டது.
த.வெ.க. விஜய் அரசின் 100 நாள் ஆட்சியின் துரோகத்தை அம்பலப்படுத்தி கழகத் தோழர்கள் வெளியிட்ட வீடியோக்கள் தமிழ்நாட்டில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. சரியாக அம்பலப்படுத்தி உள்ளீர்கள் என பலரும் வரவேற்று வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இஸ்லாமியர்களுக்கு எதிரான 3.5 சதவீத இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டதைக் கண்டித்து பிரசுரம் வெளியிடப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது.பிரசுரம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. நெல்லை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் கதிரவன் மறைவை ஒட்டி, தமிழ்நாடு முழுவதும் கழகக் கிளைகளில் கூட்டங்கள் நடத்தப்பட்டு சிவப்பஞ்சலி செலுத்தப்பட்டது. இக்கூட்டங்கள் தோழர்கள் அனைவருக்கும் உணர்வூட்டியதுடன், தோழர் கதிரவனின் தியாகத்தையும் போற்றின.
நீட் தேர்வுகளில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகச் சொல்லி நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் கழகம் இறுதிவரை களத்தில் நின்றது. இதுபோல் கோவையில் நடந்த போராட்டத்திலும் கழகம் இறுதிவரை களத்தில் நின்றது.
கழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் நீட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. நீட்டுக்கு எதிரான போராட்டத்தில் கழகம் முக்கியமான பங்காற்றியது என்பதை ஜனநாயக சக்திகளும் மக்களும் அங்கீகரித்தனர்.
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சாதி ஆணவப் படுகொலைகள் மற்றும் சாதி மோதல்களுக்கு எதிராகக் கழகம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. நெல்லையில் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் கவினின் முதலாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி, கழகத்தின் சார்பில் அனைத்துக் கிளைகளிலும் நினைவுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
மேலும், செப்டம்பர் 11, 12, 13, 14 ஆகிய நான்கு நாட்களில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள், நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் பாலன் நினைவு நாள், நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் மாடக்கோட்டை சுப்பு நினைவு நாள், மாவீரன் மலைச்சாமி நினைவு நாள் ஆகியவை கழகக் கிளைகளில் கடைப்பிடிக்கப்பட்டு, தியாகிகளின் பங்களிப்புகள் மக்களிடம் எடுத்துச் செல்லப்பட்டன.
அக்டோபர் மாதம் முழுவதும் நவம்பர் 1 தமிழ்நாடு நாளை ஒட்டி பிரசுரங்கள் வெளியிடப்பட்டு, மக்கள் மத்தியில் விரிவான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் தமிழ்நாடு நாளின் அவசியம், மாநில உரிமைகள் பறிக்கப்படுவது, ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி.; அம்பானி – அதானி பாசிசத்தை வீழ்த்த வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்து ஜனநாயக சக்திகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பாசிசத்தை வீழ்த்துவதற்கான இந்தச் சமரசமற்ற, தொடர்ச்சியான கழகத்தின் பணிகளை பெரும்பான்மையான மக்கள் ஆதரித்து வரவேற்றனர்.
மேற்கண்ட இயக்க வேலைகளைப் பரிசீலனை செய்ததன் அடிப்படையில், அடுத்த காலாண்டிற்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டது.
பிறகு, 17 அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக, பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.
***
தீர்மானங்கள்:
1. பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கல்விக் கட்டமைப்பு சீரழிவு, வீட்டு வாடகை நெருக்கடி, விலைவாசி உயர்வு மற்றும் பாசிச சக்திகளுக்கு எதிராக வீதிகளில் இறங்கியுள்ள “ஜென் சி” தலைமுறையின் போராட்டம், முதலாளித்துவத்தின் போலி முகமூடியை உடைத்தெறிந்துள்ளது. தெற்காசியாவில், இலங்கை, வங்கதேசம், நேபாளத்தைத் தொடர்ந்து, இந்தியாவிலும் நீட் மோசடி மற்றும் வாக்குரிமைப் பறிப்புக்கு எதிராக மோடி அரசுக்குச் சாட்டையடி கொடுத்து இளைஞர்கள் களமிறங்கியுள்ளனர். ஐரோப்பா முதல் ஆசியா வரை பற்றி எரியும் இளைஞர்களின் இப்போராட்டங்களை மக்கள் அதிகாரக் கழகம் வரவேற்கிறது.
இப்போராட்டங்கள் உலகளாவிய முதலாளித்துவக் கட்டமைப்பின் மீதான அறச்சீற்றமாகும். எனவே, வெறுமனே தன்னெழுச்சியான கோபத்தோடு நின்றுவிடாமல், இந்த இளைஞர் எழுச்சியை வர்க்க உணர்வுமிக்க புரட்சிகர அரசியல் சக்தியாக மாற்றி, “அனைத்து அதிகாரமும் உழைக்கும் மக்களுக்கே” என்ற சோசலிச மாற்றை நோக்கி முன்னெடுக்க வேண்டும் என கழகம் அறைகூவல் விடுக்கிறது.
2. நவம்பர் 3 அன்று நடைபெற்ற அமெரிக்க இடைக்காலத் தேர்தலில், பாசிஸ்ட் டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரு அவைகளிலும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைக் கைப்பற்றியுள்ளது.
பல ஆண்டுகளாக குடியரசுக் கட்சியின் கோட்டைகளாகத் திகழ்ந்த கன்சாஸ் (1932-க்குப் பிறகு), டெக்சாஸ் (1994-க்குப் பிறகு), தென் கரோலினா, வடக்கு கரோலினா, மெய்ன், ஓஹியோ, அயோவா உள்ளிட்ட இடங்களை ஜனநாயக கட்சி கைப்பற்றியிருக்கிறது.
அமெரிக்காவில் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு, ஈரான் மீதான போர், உலக நாடுகள் மீது சுமத்தப்பட்ட வர்த்தக மற்றும் வரிப் பயங்கரவாதம், பெருநிறுவனங்கள் இயற்கை வளங்களைச் சூறையாடும் தரவு மையங்களுக்கு (Data Centers) எதிராக அமெரிக்க மக்கள் நடத்திய போராட்டங்கள் ஆகியவையே டிரம்ப் கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணம்.
இத்தோல்விக்கு ஈரான் மீதான போரே காரணம் என்பதை ஒப்புக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள டிரம்ப், அதே வேளையில் நாடாளுமன்ற முடிவுகளை முடக்கத் தனது அதிபர் ”வீட்டோ” (Veto) அதிகாரத்தைப் பயன்படுத்தப் போவதாக அப்பட்டமாக மிரட்டல் விடுக்கிறார். அமெரிக்க நாடாளுமன்றத்தையோ ஜனநாயக விழுமியங்களையோ டிரம்ப் ஒருபோதும் மதித்ததில்லை என்பதே கடந்த கால வரலாறு.
ஆயினும், அதிபர் பதவியும் நாடாளுமன்றமும் இருவேறு முரண்பட்ட கட்சிகளின் அதிகாரக் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள சூழல், அமெரிக்க அரசியலின் உள் ஸ்திரத்தன்மையை நிச்சயம் சீர்குலைக்கும். இது வெள்ளை மாளிகையைத் தங்களது கார்ப்பரேட் வேட்டைக் காடாக மாற்றி வைத்திருந்த டிரம்ப் – எலான் மஸ்க் பாசிசக் கும்பலுக்கு விழுந்த மரண அடியாகும் என்பதை கழகம் தெரிவிக்கிறது.
3. பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், டிரம்ப்–மஸ்க் பாசிசக் கும்பல் மற்றும் பன்னாட்டுப் பெருநிறுவனங்களின் சதிகளையும் மீறி, தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த லூலா டா சில்வா தீவிர வலதுசாரி வேட்பாளர் ஃபிளாவியோ போல்சோனாரோவை வீழ்த்தி நான்காவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
லத்தீன் அமெரிக்காவைத் தனது பின்நிலமாக்கத் துடிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் “அமெரிக்காக்களின் கேடயம்” (Shield of Americas) திட்டம், 50 சதவீத வரி அச்சுறுத்தல்கள் மற்றும் மெட்டா (Meta) நிறுவனத்தின் அப்பட்டமான டிஜிட்டல் தலையீடுகள் ஆகியவற்றை முறியடித்துப் பிரேசில் உழைக்கும் மக்கள், இளைஞர்கள் போராட்டத்தால் இவ்வெற்றி சாத்தியமாகியுள்ளது.
லூலாவின் வெற்றியைத் தொடர்ந்து, பிரேசிலின் பங்குச் சந்தையும் நாணய மதிப்பும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன; தோல்வியடைந்த ஃபிளாவியோ நீதிமன்ற உத்தரவை மீறி அமெரிக்கா தப்பியோடியுள்ளார். இவை ஆட்சியைச் சீர்குலைக்க கொல்லைப்புற வழியாக அமெரிக்கா மேற்கொள்ளும் சதி முயற்சிகள்.
ஆகவே, தேர்தல் வெற்றியுடன் பாசிச எதிர்ப்புப் போராட்டம் முடிந்துவிடவில்லை; அது இப்போதுதான் தொடங்குகிறது. நாடாளுமன்றத்தில் வலதுசாரிகள் வலுவாக உள்ள சூழலில், தேர்தல் கட்டமைப்பிற்குள் மட்டுமே நின்று பாசிசத்தை வேரறுக்க முடியாது.
எனவே, பிரேசிலின் புதிய அரசாங்கம் சர்வதேச நிதி மூலதனத்தின் மிரட்டல்களுக்குப் பணியாமல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற உழைக்கும் மக்கள் தொடர்ந்து அரசியல் நிர்ப்பந்தம் அளிக்க வேண்டும். தேர்தல் எல்லைகளைக் கடந்து, அமெரிக்க ஏகாதிபத்திய நாட்டாமைத்தனத்திற்கும் நிதி மூலதனத்திற்கும் எதிராகத் தொழிலாளர்கள், இளைஞர்கள், விவசாயிகள் தங்களது சுயேச்சையான மாற்றுப் புரட்சிகர மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் அறைகூவல் விடுக்கிறது.
4. இலங்கையில் எல் நினோ காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் மற்றும் வறட்சியால் 1,15,000-க்கும் மேற்பட்ட மக்கள் குடிநீரின்றித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம், பொலன்னறுவை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கிணறுகள் மற்றும் பாசனக் குளங்கள் வற்றி, குடிநீருக்காக மக்கள் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கின்றனர். நெல், காய்கறிப் பயிர்கள் கருகி விவசாயிகள் கடன் வலையில் சிக்குகின்றனர். யால காடுகளில் நீரின்றி வனவிலங்குகள் மடிவதும், லாரிகளில் நீர் ஊற்றும் அவலமும் தொடர்கிறது.
இது வெறும் இயற்கைப் பேரிடர் அல்ல; புவி வெப்பமயமாதலைத் தீவிரப்படுத்தும் உலகளாவிய ஏகாதிபத்தியக் கார்ப்பரேட் சுரண்டலின் கோர விளைவாகும். ஐ.எம்.எஃப்-இன் (IMF) கட்டளைகளுக்கு அடிபணிந்து மறுகாலனியாக்கக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்திவரும் அனுர குமார திசாநாயக்க அரசு, மக்கள் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் இலவசக் குடிநீர் வழங்க வேண்டும்; விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்து முழு இழப்பீடு அளிக்க வேண்டும்; நீர்நிலைகளைப் போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என கழகம் வலியுறுத்துகிறது. மேலும் காலநிலைச் சீரழிவை ஏற்படுத்தும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்திற்கு எதிராக உலகம் முழுவதுமுள்ள உழைக்கும் மக்களை அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கிறது.
5. அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் தொழில்நுட்பப் பெருநிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் “மறுசீரமைப்பு” என்ற பெயரில் மீண்டும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலையிலிருந்து தூக்கியெறியத் தொடங்கியுள்ளதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அக்டோபர் 28 அன்று மின்னஞ்சல் மூலம் அமேசான் நிறுவனம் தனது சாதனங்கள் மற்றும் சேவைகள் பிரிவில் பணிபுரிந்த 250 பேரை உடனடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது. நடப்பாண்டில் ஏற்கெனவே 16,000 ஊழியர்களைத் தூக்கியெறிந்த அமேசான், “ஏ.ஐ. யுகத்தில் கருவிகளை விட முடிவுகளே முக்கியம்” என்ற பெயரில் மனித உழைப்பைத் தூக்கியெறிந்து, உழைக்கும் மக்களின் வேலைப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதேபோல் மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகளவில் 60,000 ஊழியர்களைக் குறிவைத்து, ‘விருப்ப ஓய்வு’ என்ற பெயரில் மறைமுகக் கட்டாய ஆட்குறைப்பை திணித்துள்ளது.
விஞ்ஞான-தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன்கள் மனித குலத்தின் வேலைப்பளுவைக் குறைக்கவும் சமூக நலனை உயர்த்தவும் பயன்படுவதற்குப் பதிலாக, ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளின் அதீத லாப வெறிக்காகவும், மனித உழைப்பைத் தூக்கியெறிந்து தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
எனவே, செயற்கை நுண்ணறிவை காரணம் காட்டி ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதைத் தடை செய்வது, வேலைநேரத்தைக் குறைத்து வேலையற்ற அனைவருக்கும் வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும் என கழகம் அறைகூவல் விடுக்கிறது.
“டிஜிட்டல் புரட்சி” என்ற போர்வையில் மூலதனத்தின் லாபத்திற்காக மனித உழைப்பைச் சூறையாடும் ஏகாதிபத்திய முதலாளித்துவக் கட்டமைப்புக்கு எதிராகத் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்களும் பிற உழைக்கும் மக்களும் ஒன்றிணைந்து வர்க்கப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று கழகம் வலியுறுத்துகிறது.
000
6. 13 கோடி மக்களின் வாக்குரிமையைப் பறித்த எஸ்.ஐ.ஆர். எனும் பாசிச நடவடிக்கையை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மோசடியாக மேற்கொண்டது அம்பலமாகியுள்ளது.
நாடுமுழுவதும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கக் கோரி மக்கள் போராடிவரும் நிலையில், மறுபுறம் தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர். 3.0 மூலம் இலட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமையைப் பறித்து வருகிறது.
டெல்லியில் மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்களும் (47.56 லட்சம்), கர்நாடகாவில் 1.08 கோடியும், தெலுங்கானாவில் 73.39 லட்சமும், உத்தராகண்டில் 8.27 லட்சம் வாக்காளர்களும் குறிவைத்து நீக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.க. குண்டர்கள் ”படிவம் 7” பயன்படுத்தி பொய்யான விண்ணப்பங்கள் மூலம் இஸ்லாமியர்களின் வாக்குரிமையை பறித்து வருகின்றனர்.
இஸ்லாமியர்கள், தலித்துகள், பெண்கள், புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்து, மறைமுகமாக என்.ஆர்.சி திணிக்கப்பட்டு வருவதை கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
பாசிஸ்டுகளின் கைக்கூலியான தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்து கைது செய்து சிறையிலடைக்க வேண்டும். எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை உடனே இரத்து செய்ய வேண்டும். எஸ்.ஐ.ஆர். மூலம் மோசடியாக நடத்தப்பட்ட அனைத்து தேர்தல்களையும் இரத்து செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் உறுதிசெய்து இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
மேலும், பாசிசமயமாகியுள்ள தேர்தல் ஆணையத்தைக் கலைத்துவிட்டு, பாசிச எதிர்ப்பு ஜனநாயக முறைகளைக் கொண்ட தேர்தல் ஆணையத்தை கொண்டிருக்கும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை கட்டியமைக்க போராட வேண்டும் என கழகம் அறைகூவல் விடுக்கிறது!
7. எஸ்.ஐ.ஆர். (SIR) வாக்குரிமைப் பறிப்பு மோசடிக்குத் தலைமை தாங்கிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது, டெல்லி போலீசு கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறையை பாசிச மோடி அரசின் அறிவிக்கப்படாத அவசரநிலையை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அக்டோபர் 2 அன்று டெல்லி முழுவதும் பிரிவு 163 (BNSS) தடை உத்தரவு பிறப்பித்து, மெட்ரோ நிலையங்களை மூடி, வீதிகளில் இரும்புத் தடுப்புகளை அமைத்துப் போர்க்களமாக மாற்றிய பாசிச அரசு, 700-க்கும் மேற்பட்ட மாணவர்களைச் சிறைப்படுத்தியது. கைது வாகனங்களுக்குள்ளேயே மாணவர்களின் எலும்புகள் முறியும் அளவுக்குத் தாக்கியதும், வீதிகளில் மிருகத்தனமாக இழுத்துச் சென்றதும், போராடிய மாணவிகள் மற்றும் பெண்கள் மீது போலீசு சீருடையில் இருந்த குண்டர்கள் நடத்திய அருவருக்கத்தக்க பாலியல் அத்துமீறல்களும் பார்ப்போரின் ரத்தத்தைக் கொதிக்க வைக்கின்றன.
மாணவர்கள் மீது தடியடி நடத்தி, மாணவிகள் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட டெல்லி போலீசு அதிகாரிகள் மீது உடனடியாகக் குற்றவியல் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். கைதான அனைத்து மாணவர்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; அவர்கள் மீதான பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என கழகம் வலியுறுத்துகிறது.
மேலும், போராடும் மாணவர்களைக் கண்டு ஒட்டுமொத்த அதிகார பலமும் கொண்ட பாசிச மோடி அரசு தொடைநடுங்கிப் போயிருப்பதையே இந்த அரசுப் பயங்கரவாதம் காட்டுகிறது. லத்திகளாலும், சிறைக்கொட்டடிகளாலும், பாலியல் வன்முறைகளாலும் மாணவர்களின் சிந்தனைகளையும் போராட்டங்களையும் ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது என கழகம் தெரிவிக்கிறது.
8. ஒடிசாவின் கலஹாண்டி, ராயகடா மலைப்பகுதிகளில் பழங்குடி மக்களுக்குப் பல ஆண்டுகளாக மருத்துவச் சேவை செய்து வந்த மருத்துவர் ரான்டால் செக்வேராவையும், தலித் செயற்பாட்டாளர் லட்சமண் நாயக்கையும் சிஜிமாலி பாக்சைட் சுரங்கத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தை தூண்டியதாக கைது செய்த ஒடிசா அரசின் நடவடிக்கையை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
2013-இல் நியாம்கிரி மலையில் பழங்குடி கிராம சபைகளின் எதிர்ப்பால் வேதாந்தாவின் சுரங்கத் திட்டம் கைவிடப்பட்டது. அதே கார்ப்பரேட் நிறுவனத்துக்காக இப்போது சிஜிமாலி, குட்ருமாலி மலைகளைக் கையகப்படுத்த ஒடிசா பா.ஜ.க. அரசு முயற்சித்துவருகிறது.
எனவே, மருத்துவர் ரான்டால் செக்வேரா, லட்சமண் நாயக் உள்ளிட்ட சிறையிலுள்ள அனைத்துப் பழங்குடி, தலித் தலைவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்; பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்; கிராம சபைகளின் ஒப்புதலின்றி சுரங்கத் திட்டங்களை அனுமதிக்கக் கூடாது; இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கழகம் வலியுறுத்துகிறது.
9. மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த கடந்த ஆறு மாதங்களில் சிறுபான்மை மக்கள், அவர்களின் வழிபாட்டுத் தலங்கள், இடதுசாரி அமைப்புகளின் புத்தகக் கடைகள் மற்றும் சிந்தனையாளர்களின் நினைவுச் சின்னங்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடந்து வருவதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
கடந்த ஆறு மாதங்களில் மட்டும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 48 வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் நாராயண்தலாவில், ”சர்ச் ஆஃப் நார்த் இந்தியா” (CNI) தேவாலயத் திறப்பு விழாவின் போது 35-க்கும் மேற்பட்ட சங்கப் பரிவாரக் குண்டர்கள் புகுந்து அங்கிருந்தவர்களை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். வழிபாட்டை தடுத்து நிறுத்தி, சிலுவையைச் சேதப்படுத்தி, வீடியோ எடுத்தவர்களின் செல்போன்களை அடித்து உடைத்துள்ளனர்.
மேற்கு மேதினிபூரில் அக்டோபர் 2 அன்று ஜெபக் கூட்டத்தில் புகுந்த 100 பேர் கொண்ட கும்பல், பெண்களின் உடைகளைக் கிழித்து பாலியல் ரீதியாக அத்துமீறியதோடு, கட்டாயப்படுத்தி துளசிச் செடியை நடச் செய்து ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட வைத்துள்ளது. வடக்கு 24 பர்கானாஸ் ஹிங்கல்கஞ்ச் பகுதியில் காவி கும்பல் வீடுகளில் புகுந்து வெளிநாட்டு மாணவர்களை மிரட்டிப் பொருட்களைச் சூறையாடியுள்ளது.
தாக்குதலுக்குள்ளான மக்கள் போலீசு நிலையத்திற்குப் புகார் அளிக்கச் சென்றால், பா.ஜ.க. நிர்வாகிகளின் முன்னிலையிலேயே பாதிக்கப்பட்டவர்களை நள்ளிரவு வரை காத்திருக்க வைத்து அச்சுறுத்துவதும், புகார்களைத் திரும்பப் பெற நிர்ப்பந்திப்பதும், தொழுகை மற்றும் ஜெபக் கூட்டங்களை நடத்தக் கூடாது என போலீசே மிரட்டுவதும் அன்றாட வாடிக்கையாகியுள்ளது.
எனவே, கருத்துரிமை, வழிபாட்டுரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். பாசிச ஆட்சியை வீழ்த்த, சிறுபான்மை மக்களும், தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் ஜனநாயக-புரட்சிகர சக்திகளும் ஓரணியில் திரண்டு வீதிப் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.
10. மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் கர்ஜத் பகுதியில், மேற்குத் தொடர்ச்சி மலையின் (சஹாயாத்ரி) சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த சாய்டோங்கர் மலைக்காடுகளை அழித்து, டோரண்ட் பவர் நிறுவனம் ரூ.13,505 கோடி மதிப்பீட்டில் 3,000 மெகாவாட் நீர்மின் திட்டத்தை அமைத்து வருகிறது.
இத்திட்டத்திற்காக 377 ஹெக்டேர் நிலப்பரப்பில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் கட்காரி பழங்குடி மக்களின் வாழ்வுரிமையைப் பறித்து அவர்களை விரட்டியடித்துள்ளது; 32,000-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டிச் சாய்த்துள்ளது.
மருத்துவ மூலிகைகளின் புகலிடமாகவும் பேஜ் ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியாகவும் விளங்கும் சஹாயாத்ரி மலையை வெட்டிச் சாய்ப்பது மகாராஷ்டிரத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தென்னிந்தியச் சூழலியலுக்கே விடப்படும் சவாலாகும். இந்த கார்ப்பரேட் பயங்கரவாதத்தை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அதிகார வர்க்கத்துடனும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் குடும்பத்துடனும் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள இந்த குஜராத் கார்ப்பரேட் நிறுவனம், ஓட்டுக் கட்சிகள் அனைத்தையும் தேர்தல் பத்திர லஞ்சம் மூலம் தனது பாக்கெட்டுக்குள் போட்டு வைத்துள்ளது.
எனவே, மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒட்டுமொத்த சூழலியலுக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் டோரண்ட் பவர் நிறுவனத்தின் 3,000 மெகாவாட் திட்டத்தை அரசு உடனடியாக நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று கழகம் வலியுறுத்துகிறது. சஹாயாத்ரி மலைத்தொடரையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்கப் பழங்குடி மக்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினர் ஒருங்கிணைந்து சமரசமற்ற மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
000
11. செப்டம்பர் 2026 தரவுப்படி இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம் 5.54%, உணவுப் பணவீக்கம் 7.74%. தமிழ்நாடு 6.81% பணவீக்கத்துடன் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது; உணவுப் பணவீக்கம் 10.62%. அரிசி, துவரம்பருப்பு, வெங்காயம், சமையல் எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
உழைக்கும் மக்களின் கூலி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், விலைவாசி உயர்வால் மக்கள் தங்களது அன்றாட உணவையும் மருத்துவத்தையும் சுருக்கிக் கொண்டு வாழ வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இத்தகைய சூழலிலும் அரசி, சோளம் முதலிய உணவுப்பொருட்களை மலிவு விலையில் எத்தனால் ஆலைகளுக்கு வழங்கி வருகிறது மத்திய அரசு, பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைக்காமல், உணவுப் பொருட்கள் மீது ஜி.எஸ்.டி. வரி விதித்து மக்களை ஒட்டச் சுரண்டி வருகிறது. உள்நாட்டு உற்பத்தியைப் புறந்தள்ளி ஊகவணிகத்திற்கும் பதுக்கலுக்கும் பாசிச மோடி கும்பல் துணைபோகிறது.
தமிழ்நாட்டில் த.வெ.க அரசோ, அரிசி விலை உயர்வையொட்டி மக்களுக்கு கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி 25,000 டன்கள் வழங்குவதாக அறிவித்தது. ஆனால், ரேஷன் அரிசியையே பட்டைதீட்டி கிலோ ரூ.30-க்கு விற்று மக்களை ஏமாற்றியுள்ளது; அதிலும் வெறும் 995 டன்களை மட்டுமே ஒதுக்கியுள்ளது. மறுபுறம் குடும்பங்களுக்கு 3 இலவச சிலிண்டர் திட்டத்தை 2027 பொங்கலுக்குத் தள்ளிப்போட்ட விஜய் அரசு, கார்ப்பரேட் தனியார் விமான நிறுவனங்களின் எரிபொருள் வரியை சென்னையில் 29%-லிருந்து 16%-ஆகவும், பிற விமான நிலையங்களில் 1%-ஆகவும் குறைத்து கார்ப்பரேட் சேவையாற்றியுள்ளது.
உணவுப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்தத் தவறிய பாசிச மோடி அரசின் கார்ப்பரேட் சார்புக் கொள்கைகளையும், த.வெ.க. அரசின் நிர்வாகத் தோல்வியையும் மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
உடனடியாக இந்திய உணவுக் கழகத்தில் தேங்கியிருக்கும் அரிசியுடன் ரேஷன் மூலம் அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் மலிவு விலையில் வழங்க வேண்டும்; எத்தனால் ஆலைகளுக்கு உணவு தானியம் வழங்கும் கொள்கையைக் கைவிட வேண்டும்.
அதேபோல், த.வெ.க அரசு சன்னரக அரிசி விற்பனையின் கொள்முதல், விலை, அளவு குறித்த முழு விவரங்களை வெளியிட வேண்டும்; விற்பனையை அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
பெட்ரோல், டீசல் மீதான வரிகளையும் உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி-யையும் ரத்து செய்ய வேண்டும்; பதுக்கல், ஊகவணிகத்தைத் தடுக்க வேண்டும் என கழகம் வலியுறுத்துகிறது.
12. முல்லைப் பெரியாறு அணை மற்றும் தென் மாவட்ட விவசாயிகளின் உரிமைகளுக்காகத் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துப் போராடிய மூத்த விவசாயச் சங்கத் தலைவரும் உரிமை மீட்புப் போராளியுமான ஐயா கே.எம். அப்பாஸ் அக்டோபர் 26 அன்று, தனது 94-வது வயதில் மூப்படைவு மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு விவசாயிகள் மத்தியிலும் உரிமைப் போராட்ட இயக்கங்களிலும் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐயாவின் மறைவுக்கு மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
13. விவசாயிகளின் முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், நிபந்தனைகளுடன் கூடிய பகுதியளவு கடன் தள்ளுபடியை அறிவித்து விவசாயிகளுக்கு துரோகம் செய்து வரும் த.வெ.க. அரசை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி கோரி தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களுக்கு கழகம் ஆதரவு தெரிவிக்கிறது. விஜய் அரசு, தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றி, அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடன்களையும் நிபந்தனையின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.
14. ஆட்சியமைத்ததிலிருந்து சட்டமன்ற நாடகங்கள், கவர்ச்சிவாத விளம்பரங்கள் மூலம் மக்களைத் திசைதிருப்பிவிட்டு, தமிழ்நாட்டை அம்பானி–அதானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்காடாக மாற்றிவரும் த.வெ.க. அரசின் மக்கள் விரோதப் போக்கை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தூத்துக்குடி புதிய அனல்மின் நிலையம், என்.எல்.சி விரிவாக்கம், நச்சு உமிழும் குப்பை எரிவுலைகள், விவசாய நிலங்களை அபகரிக்கும் நகர் ஊரமைப்புச் சட்டத் திருத்தம், ஹைட்ரோகார்பன், உசிலம்பட்டி ஓணான்கரடு, சிவகங்கை ஜெயங்கொண்டநிலை கல்குவாரி என பல்வேறு நாசகரத் திட்டங்களை த.வெ.க அரசு அறிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் முதல் பரந்தூர் வரை மக்கள் போராட்டங்களே நாசகரத் திட்டங்களை முறியடித்தன. எனவே, த.வெ.க. அரசின் இத்தகைய பேரழிவுத் திட்டங்களுக்கு எதிராக மக்கள் திரள் போராட்டங்களைக் கட்டியமைத்துப் பணிய வைப்போம் என கழகம் அறைகூவல் விடுக்கிறது.
15. நீலகிரி மாவட்டம் குன்னூர்–மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை 181-ல் (NH-181) பர்லியார் பகுதியில் அக்டோபர் 23 நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் அரசுப் பேருந்து சிக்கி, ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்தார்; நடத்துநர் பலத்த காயமடைந்தார்.
இது வெறும் இயற்கை விபத்து அல்ல; மாறாக, மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் நிகழ்ந்த நிர்வாகப் படுகொலையாகும். இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் (GSI), 2023-லேயே இப்பகுதியை ”மிக அதிக அபாயமிக்க பகுதி” என எச்சரித்திருந்தது. விதிமுறைகளை மீறிச் செங்குத்தாக வெட்டப்பட்ட மலைச்சரிவுகள், அடைபட்ட வடிகால்கள் குறித்துச் சுட்டிக்காட்டி, சரிவுப் பலப்படுத்துதல் மற்றும் வடிகால் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளத் திட்டவட்டமாகப் பரிந்துரைத்திருந்தது. ஆனால், கார்ப்பரேட் காண்ட்ராக்டர்களின் லாபத்திற்காக அறிவியல் எச்சரிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டுத் தடுப்புப் பணிகளைச் செய்யாமல் அலட்சியம் காட்டியதே இந்த உயிரிழப்பிற்குக் காரணமாகும்.
மேலும், விபத்து நிகழ்ந்த நாளில், பர்லியார் பகுதியில் நிலச்சரிவு அபாயம் குறித்து ஜி.எஸ்.ஐ. முன்னெச்சரிக்கை வெளியிட்டிருந்தது அம்பலமாகியுள்ளது. எனவே, கனமழை பெய்தபோது போக்குவரத்து நெறிமுறைகளைப் பின்பற்றாமல் பேருந்தை இயக்கியதும், விபத்திற்குப் பின்பும் உரிய அதிகாரப்பூர்வ விசாரணையை வெளிப்படையாக நடத்தாததும் த.வெ.க. அரசின் பொறுப்பற்ற தன்மையைத் தோலுரித்துக் காட்டுகிறது.
எனவே, இந்த விபத்துக்குக் காரணமான, மத்திய, மாநில அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்; உயிரிழந்த ஓட்டுநர் குடும்பத்திற்கும், காயமடைந்த நடத்துநருக்கும் முழுமையான இழப்பீடும் அரசு வேலையும் வழங்க வேண்டும்.
பர்லியார், குன்னூர், உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஜி.எஸ்.ஐ பரிந்துரைத்துள்ள புவித்தொழில்நுட்ப அறிவியல் சார்ந்த பாதுகாப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.
நிலச்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கைகளை உடனடியாகப் பொதுமக்களுக்கும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் கொண்டு சேர்க்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
சூழலியல் தாங்குதிறனைக் கணக்கில் கொள்ளாமல் சுற்றுலா மற்றும் கார்ப்பரேட் லாப வெறிக்காக மேற்குத் தொடர்ச்சி மலையைச் சீரழிக்கும் கட்டுப்பாடற்ற சாலை விரிவாக்கம், பாறை உடைப்புகள் உள்ளிட்ட மலைச்சரிவு அழிப்புத் திட்டங்களை உடனடியாகக் கைவிட வேண்டும் என கழகம் வலியுறுத்துகிறது.
16. கோயம்புத்தூரில் கே.கே. நாயுடு பள்ளியில் படித்துவந்த மாணவன் அகிலன் சாதிய வன்கொடுமையால் அக்டோபர் 21 அன்று தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்தில் தற்போது வரை மாணவன் தற்கொலைக்குக் காரணமான ஆசிரியர்களைக் கைது செய்யாமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக த.வெ.க அரசு செயல்பட்டு வருவதை கழகம் கண்டிக்கிறது.
மறுபுறம், இக்கொடூர குற்றத்தைச் செய்த சாதிவெறியர்களுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ்.–பா.ஜ.க கும்பலும், ஆதிக்கச் சாதிவெறி அமைப்புகளும் வெளிப்படையாகக் களமிறங்கியுள்ளன. மாணவன் அகிலனுக்கு நீதி கேட்டு போராடிய அமைப்புகள் மற்றும் கட்சிகள் மீது அவதூறு பரப்பி, போராடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளன. மேலும், அரசு நிதியுதவி பெறும் பள்ளியின் பெயர் பலகையில் உள்ள சாதிப் பெயரை நீக்கவே மாட்டோம் என சனாதனத் திமிருடன் கொக்கரித்து வருகின்றன.
தமிழ்நாட்டின் அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க, பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்கள் வரை சாதிய நஞ்சைப் பாய்ச்சி, ஆதிக்கச் சாதிச் சங்கங்களை இயக்கும் தலைமையாக ஆர்.எஸ்.எஸ்.–பா.ஜ.க கும்பல் செயல்பட்டு வருவது இச்சம்பவத்தின் மூலம் மீண்டும் அம்பலமாகியுள்ளது.
மாணவன் அகிலனைத் தற்கொலைக்குத் தூண்டிய பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உடந்தையாக இருந்த நிர்வாகத்தினர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தாமதமின்றி சிறையிலடைக்க வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது. மேலும், கே.கே. நாயுடு பள்ளியின் பெயர் பலகையில் உள்ள சாதிப் பெயரை உடனடியாக அகற்ற வேண்டும்; அப்பள்ளியை அரசு தன்கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.
மேலும், ஆதிக்கச் சாதி வெறியைத் தூண்டி வன்முறைகளை அரங்கேற்றும் ஆர்.எஸ்.எஸ்.–பா.ஜ.க கும்பலையும், அதற்குத் துணைபோகும் ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களையும் தமிழ்நாட்டில் முழுமையாகத் தடை செய்வதற்கான மக்கள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும் என கழகம் முன்வைக்கிறது.
17. விழுப்புரம் மாவட்டம் வானூரில் காதல் விவகாரத்தைக் காரணம் காட்டி 14 வயது பள்ளி மாணவியை அவரது தந்தையே படுகொலை செய்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இன்ஸ்டாகிராமில் பழகியதற்காக 18 வயது இளம் பெண்ணைத் தாய் மற்றும் சகோதரரே அடித்துக் கொன்றுள்ளனர். ஆந்திர மாநிலம் அனந்தபூரில் தன்னுடைய காதலை ஏற்காததால் 21 வயது இளைஞர் ஒருவர் 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவியை வகுப்பறைக்குள் புகுந்து ரம்பத்தால் கொடூரமாக தாக்கியுள்ளார்.
காதல், நட்பு, விருப்பம் ஆகியவற்றின் மீது குடும்பமும் ஆதிக்கச் சமூகமும் கட்டவிழ்த்துவிடும் இத்தகைய தொடர் கொடூரங்கள், பெண்ணை ஒரு தனிநபராக மதிக்காமல் குடும்பத்தின் உடமையாகவும் “கவுரவத்தின்” குறியீடாகவும் கருதும் அழுகிப்போன ஆணாதிக்க–சாதிய மனநிலையின் வெளிப்பாடாகும்.
இவற்றை வெறும் “குடும்பத் தகராறு” என்றோ “தனிநபர் விரோதம்” என்றோ குறுக்கிவிட முடியாது; மாறாக, பெண்களின் அடிப்படை தன்னுரிமையை நசுக்கும் வன்முறைக் கலாச்சாரமாகும். பெண்கள் தங்களுங்கான துணையைத் தேர்ந்தெடுப்பதற்கும் சரி, மறுப்பதற்கும் சரி இரண்டிற்குமே இங்கு அனுமதிக்கபடுவதில்லை. பெண்களின் காதல், விருப்பம், சுதந்திரம் ஆகியவற்றை நசுக்கி உயிரைப் பறிக்கும் இக்கொடூர ஆணாதிக்கப் போக்கிற்கு எதிராகவும், இப்பிற்போக்குச் சிந்தனைகளை பாதுகாக்கும் சமூகம், அரசமைப்பிற்கு எதிராகவும் மக்கள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும்.
ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என கழகம் வலியுறுத்துகிறது.
*
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram





