எலும்புகள் முளைத்திருக்கும் மரணம் விழுங்கிய வெளி | எம். ரிஷான் ஷெரீப்

செம்மணி மனிதப் புதைக்குழியில் அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களின் எண்ணிக்கை 583 ஆக உயர்ந்துள்ளதுடன், கடந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது மண்டையோடற்ற இரண்டு மனித எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இன்றைய நாள் கீழேயுள்ள செய்தியோடு விடிந்திருக்கிறது.

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் மண்டையோடற்ற இரண்டு மனித எலும்புக்கூடுகள் மீட்பு – இதுவரை கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை இன்றோடு 583 ஆக உயர்வு

செம்மணி மனிதப் புதைக்குழியில் அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களின் எண்ணிக்கை 583 ஆக உயர்ந்துள்ளதுடன், கடந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது மண்டையோடற்ற இரண்டு மனித எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இலங்கையில் இதுவரை பதிவாகியுள்ள மிகப்பெரிய மனித புதைக்குழியாகக் கருதப்படும் இவ்விடத்தில் புதிதாகக் கண்டெடுக்கப்பட்ட 15 எலும்புக்கூடுகளில் இந்த மண்டையோடற்ற எலும்புக்கூடுகளும் அடங்குவதாகக் கூறப்படுகின்றது.

முன்னணி தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் தடயவியல் மருத்துவ அதிகாரி டாக்டர் செல்லையா பிரணவன் ஆகியோரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த அகழ்வாராய்ச்சிப் பணிகளில் இதுவரை 583 மனித எலும்புக் கூடுகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. அகழ்வாராய்ச்சியின் போது அடையாளம் காணப்பட்ட எச்சங்களில் பல குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் அடங்கியிருக்கின்றன.

செம்மணி சிட்டுப்பாத்தி மனித புதைக்குழியின் அகழ்வாராய்ச்சிப் பணிகள் இடம்பெற்ற 100ஆவது நாளில் அடையாளம் காணப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 500ஐக் கடந்திருந்ததுடன், அதன் பின்னரே இந்த புதிய கண்டுபிடிப்புகள் இடம்பெற்றுள்ளன. தற்போதைய நிலவரப்படி, இந்த மனிதப்  புதைகுழி வளாகத்தில் பரிசோதனைகளும், அகழ்வாராய்ச்சிப் பணிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய செய்திக்கு முப்பத்தொரு வருடங்கள் பின்னோக்கிப் பார்த்தோமானால், இந்த எலும்புகள் முளைத்திருக்கும் மரணம் விழுங்கிய வெளியின் பின்னணியை அறிந்து கொள்ளலாம்.

சூரியக் கதிர் நடவடிக்கை எனும் பெயரில் இலங்கையின் முப்படைகளும் இணைந்து யாழ்ப்பாணத்தில் 1995 ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை எனும் யாழ்ப்பாண ஆக்கிரமிப்புப் போரின் பின்னர், தென்மராட்சியிலும்,  வடமராட்சியிலும் தமிழ் மக்கள் நிறையப் பேர் தஞ்சமடைந்திருந்தார்கள்.  அந்த மக்களை மீண்டும் ஓர் இராணுவ நடவடிக்கை மூலம் சிறைப்படுத்திச் சொந்த இடங்களுக்கு அழைத்துச் சென்றது இராணுவம்.

அந்தக் காலகட்டத்தில் காணாமலாக்கப்பட்ட அந்த மக்கள்  படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டிருக்கக் கூடும். அந்த வஞ்சகச்செயலை அம்பலப்படுத்தும் கவிதைகளை அந்தக் காலத்தில் ஈழத்தின் பல கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் கலை, பண்பாட்டுக் கழகத்தால் அந்தக் கவிதைகள் தொகுக்கப்பட்டு ‘செம்மணி’ எனும் தலைப்பில் ஒரு கவிதைத் தொகுப்பாக ‘வெளிச்சம்’ பதிப்பக வெளியீடாக 1998 இல் வெளிவந்திருக்கிறது.

இந்தக் காலகட்டத்தில், செம்மணிப் புதைகுழிகளின் உண்மை வெளிவந்து கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், இலங்கை  மக்களிடையே அந்தப் புதைகுழிகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் போலவே ஏறத்தாழ முப்பது வருடங்களுக்கு முன்பு ஈழத் தமிழ் மக்களிடையே ஏற்பட்ட கொதிப்புணர்வின் அடையாளமாகவே அந்தக் கவிதைகளும் அமைந்திருந்திருக்கின்றன.

உதாரணத்துக்கு அவற்றுள் குறிப்பிடத்தக்க இரண்டு கவிதைகளைக் கீழே தந்திருக்கிறேன். இவற்றுள் ‘நிறமிழக்கும் நகரத்தில்’ எனும் கவிதையை கவிஞர் கருணாகரன் எழுதியிருக்கிறார். ‘முள்வெளி’ எனும் கவிதையை கவிஞர் எஸ்.போஸ் எழுதியிருக்கிறார். சாக்குருவி தின்றழித்த மரணத் திகதி குறித்து எழுதியுள்ள கவிஞர் எஸ். போஸ் பின்னர் வவுனியாவிலுள்ள அவரது வீட்டில், தனது ஏழு வயது மகனின் முன்னால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.

1. கவிஞர் எஸ்.போஸ் 2. கவிஞர் கருணாகரன்

நிறமிழக்கும் நகரத்தில்

I. அது வனமொன்றின்
ரகசிய அடுக்குகளில் நிகழவில்லை
கனவுகளும் பாதச்சுவடுகளும் அழிந்த கிராமங்களில்
வெண்கொடிகள் நடப்பட்ட நகரின்
இருள் ஆழங்களில்
பேச்சொடுங்கி
பாடல்களும் ஒளியும் வற்றிய
இரவுகளில்
ஒதுக்குப்புற வெளியில்
உவர்ப்புதர்களின் கீழ் ரகசிய மடிப்புகளில்
அது நிகழ்ந்தது

உணர்வழிந்த உயிருடனும்
உயிரணுவின் முனைசிதைய
வதைபட்டுலைந்த பிணமாயும்
குழிகளில் புதைக்கப்பட்டனர் மனிதர்கள்
எங்கள் மனிதர்கள்
யாருங்காணாமற் பிடித்துச் செல்லப்பட்டோர்
யாருமறியா இருளின் ஆழத்துள் புதைக்கப்பட்டனர்.
ஆட்காட்டியோ தன்குரலடக்கி அதை அறிந்திருந்தது
அக்கணங்களில்
தவறியெழும்பியொலித்த அவலக்குரல்களை
யாரும்கேட்கா வண்ணமாய்
அவர்கள் சன்னம்களால் மேவினர்
ஆட்காட்டியோ துயரத்தோடதைக் கேட்டிருந்தது
யாருமறியாத படியாய் அந்நாடகம் நடக்கையில்
ஆட்காட்டியோ தன்சிறகொடுக்கி

அதையெல்லாம் பார்த்திருந்தது.

வயற்கரையில்

அதன் முதிய வளைவீடுகளில்
மூன்று குஞ்சுகளும்
குஞ்சாகும் இரண்டு முட்டைகளும்
அந்தப் புதைகுழிகளில் மூடுண்டன
நண்டின் வளைகள்மீதும் நாலுகுழிகள் ஐயோ

அக்கணமோ
குரலை விழுங்கி அக்குருவி தவித்தது

தன் விதியழியத் தானே பார்த்துத் துடித்தது
அவ்வெளியில் விரிந்த பயங்கரங்கண்டு
அது விறைத்தது.

II. அந்த இரவுகள் வெளிறத் தொடங்கியபோது
இரவின் ரகசியங்கள் உதிரத் தொடங்கின.

மழித்த முகத்துடன்
பகலில் மலர்த்திய புன்னகை
இரவில் வன்மமாய்ச் சிலிர்த்தது.
உறவின் தளிர்முனையென
அசைந்த வெண் கைகள்
சாமங்களில் உயிர்பிடுங்கும் கூர்நகங்களோடு நீண்டன.
“நலமா?” வென மென்குரலெழுப்பும்
அன்பில் தோய்ந்துழலும் நாக்குகள்

இருளில்

பச்சை ரத்தம் நக்கத் தவித்தலைந்தன

இரவுகளில், இருளின் ஆழங்களில்
இப்படி அற்புதங்கள் நிகழ்ந்தன

பிறகு
காலையில் மறுபடியும்
சீருடை, தொப்பி, சப்பாத்துடன்
துப்பாக்கி தூக்கிய குழந்தைகள்
வாய் மலர்த்தின; பூச்செண்டுடன் கையசைத்தன.

ஐயோ வெண்கொடிகள் நடப்பட்ட நகரத்தில்
அற்புதங்கள் நிகழ்கின்றன இப்படி… இப்படி…

III. கண்ணிர் நிரம்பிய முற்றங்களில்
துயர் முற்றிய பெண்களின் சித்திரம் நடுங்குகிறது
வெம்மை தகிக்கும் தெருக்களில்
வேர்சுட்ட மரங்களின் மீதலைகின்றன
கரும்பட்சிகள்.

மலம் பரவிய முற்றமாயிற்று
நகரின் தோரண வாசல்.

– கருணாகரன், 1998

முள்வெளி

சாக்குருவியின் துயரப்பாடலால் உறிஞ்சப்பட்ட
மிகப் பழைய மனிதனின் மரணம்
ஈரப்பாடை பற்றிய எல்லோரின் கனவுகளிலும்
ஈரித்துறைந்தது.
தீயின் வெம்மையடங்கி சாம்பல் பூத்த
அவனுடைய மரணம்
ஆன்ம வெளி குதறும் அப்பாடலில் பின்னப்பட்ட போது

பூக்களினதும்

ஊதுபத்தி, மஞ்சள் நீரினதும் வாசனை
வெளியின் மடிப்புகளில் ஊர்ந்தது.
அந்த மிகப்பழைய மனிதனின் கனவுகள்
– மண்பற்றியதும், விடிவுபற்றியதும், ஆதிமொழிபற்றியதும் –
வரண்டழிந்த ஒரு காலத்தில்
சாக்குருவியின் துயரப்பாடலில் விழுந்த மரணத்திற்காக
அவனது குழந்தைகள் அழுதார்கள்;
இருதயத்தின் சோகத்தை உருக்கி
மனசெங்கும் பரவினர்.
மரணம் துயரப்பாடலில் அமிழ்ந்தமிழ்ந்து ஜனித்தது.
பூக்கள் வாசனையுமிழ்ந்தன;
ஊதுபத்தி, மஞ்சள் நீர், ஓமத்தீ.
ஒவ்வொரு மரணத்திலும் ஆழ்ந்த சோகத்தின் திரையில்
ஒரு தீக்கங்கின் ஒளி அல்லது சுவாலைகள்
தொடர்ந்து கொண்டே இருந்தன.
சாக்குருவி தின்றழித்த மரணத்திகதி
சுவர்களில் தொங்கிக் கொண்டிருந்தது.
சாக்குருவி நிஷ்டையிலிருந்த ஒரு பொழுதில்:
அதன் துயரப்பாடலுக்காகவும்
பிண ஒளி சூழ்ந்த அதன் அடையாளத்திற்காகவும்
அவனுடைய குழந்தைகள்
சுருண்டொடுங்கிய ஒரு பொழுதில்
தொன்மை வேர் பெயர்த்து வெளிதாண்டிப் பெயர்ந்த
ஆதிக்குழந்தைகள் சிலவற்றை அவனுடைய நகரம்
இழந்தது.
யுகங்களை மிதித்துத் துரத்திய மரணத்தின் பாடல்கள்
ஆதிக்குழந்தைகளின் எஞ்சிய கனவுகளில்
வியாபித்தொளிர்ந்தன.
சாக்குருவியின் துயரப்பாடல் வெளியை விழுங்கிற்று.
கள்ளிச் செடிகளின் முளைகள் காற்றில் படர்ந்து
வெளியில் பரவி உறைந்தன;
மரணம் விழுங்கிய வெளியில் எலும்புகள் முளைத்தன.

– எஸ்.போஸ், 1998

மூன்று தசாப்தங்களுக்கு முன்பு எழுதப்பட்ட போர்க்காலக் கவிதைகளான இவை இன்றைய திகதிக்கும், இன்றைய செய்திக்கும் அச்சொட்டாகப் பொருந்துகின்றன எனும் இந்நிலையில் 1998.07.04 அன்றைய வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்துள்ள ஒரு செய்தித் துணுக்கைக் கீழே தருகிறேன்.

கிருஷாந்தி கொலைவழக்கில் மரணதண்டனை பெற்ற படையினன் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன  ராஜபக்ஷவின் நீதிமன்ற வாக்கு மூலத்திலிருந்து:

“‘மேலதிகாரிகளினால் இரவில் அனுப்பப்படும் உடல்கள் செம்மணியில் புதைக்கப்படுவதுண்டு. முன்னூறு முதல் நானூறு வரையான புதைகுழிகளை என்னால் காண்பிக்க முடியும்” “

“In nights dead bodies send by our superiors were dumped in Chemmani I can show ( point out ) about three hundred to four hundred such graves.’ ‘

– Lance Corporal Somaratna Rajapakshe

அந்த முன்னாள் இராணுவ அதிகாரி சோமரத்ன ராஜபக்‌ஷவின் சாட்சியத்தின் மூலமே 1998 ஆம் ஆண்டில் செம்மணியிலுள்ள இந்தப் பாரிய மனிதப் புதைகுழி அறியப்பட்டது. கிருஷாந்தி குமாரசாமி எனும் தமிழ்ச் சிறுமியை பாலியல் வன்முறைக்குட்படுத்தி, படுகொலை செய்தததற்காகவும், அவரது குடும்பத்தினரைப் படுகொலை செய்ததற்காகவும் 1998 ஆம் ஆண்டில், அவருக்கும், அவரோடு பணி புரிந்த மேலும் எட்டு இராணுவத்தினருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஜூலை 1998 இல் காவல்துறையாலும், தடயவியல் நிபுணர்களாலும் இந்தப் பாரிய மனிதப் புதைகுழி குறித்த தகவலின் உண்மைத்தன்மை ஆராயப்படும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் செம்மணி அகழ்வைச் செய்யுமாறு அப்போதைய சட்ட மா அதிபர் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்த போதிலும், உடனடியாக அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.

அப்போதைய அரசாங்கத்தின் மீது அதிகரித்து வந்த தொடர்ச்சியான உள்ளூர் மற்றும் சர்வதேச அழுத்தங்களின் காரணமாக 1999 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மாதிரிகளைச் சேகரிப்பதற்காக அரசாங்க நிபுணர்களால் செம்மணியில் அந்த இடம் பார்வையிடப்பட்டது. அவ்வாறே 1999 ஆம் ஆண்டு செம்மணியில் சடலங்கள் தோண்டியெடுக்கப்பட வேண்டும் என்று கோரும் அறிக்கைகளை சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டது. இவற்றுக்கிணங்க 1999 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்ட செம்மணி அகழ்வுப் பணிகள் 2026 ஆம் ஆண்டில் இந்த மாதம் வரை இருபத்தியேழு ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டேயிருக்கின்றன.


எம். ரிஷான் ஷெரீப்

disclaimerசமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram


விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க