பொதுப் பாதையில் பட்டாசு வெடிக்க, மேளம் அடிக்கத் தடை! தென்மாவட்டங்களில் தொடரும் சாதியத் தீண்டாமையும் தாக்குதல்களும்!

தேவேந்திர குல வேளாளர் சாதியைச் சேர்ந்த மக்களின் திருமணம், காது குத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மேளம் அடிப்பது, பட்டாசு வெடிப்பது போன்றவற்றை அப்பகுதி மறவர் சாதியைச் சேர்ந்த சில ஆதிக்கச் சாதிவெறியர்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இதற்குத் துணையாக போலீசும் நடந்து கொள்கிறது.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம் கான்சாபுரம் கிராமத்தில் சுமார் 1,000 குடும்பங்கள் உள்ளன. இதில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சுமார் 700 குடும்பங்களும், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 180 குடும்பங்களும் மற்றும் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 07.06.2026 அன்று தேவேந்திர குல வேளாளர் சாதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் பேத்திக்கு காது குத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்காக தாய்மாமன் சதீஷ்குமார் கான்சாபுரம் பஸ் திரும்பும் இடத்திலிருந்து மங்கம்மாள் கோவில் தெருவுக்குள் சீர்வரிசை, கொட்டு மேளத்துடன் எடுத்துச் செல்லும் போது, மறவர் சாதியைச் சேர்ந்த சிலர், சாதிய கண்ணோட்டத்துடன் வந்தவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இது குறித்து கூமாபட்டி போலீசு நிலையத்தில் சதீஷ்குமார் அன்றைய தினமே (07.06.2026) புகார் செய்தார். ஆனால் கூமாபட்டி போலீசு இப்புகார் குறித்து 12.06.2026 அன்று விசாரணை நடத்தி அந்த தெருவிற்குள் தேவேந்திர குல வேளாளர் மக்கள் வெடி போடக்கூடாது என்றும், மேளம் மட்டும் வைத்துக் கொள்ளலாம் என்றும் சாதிய எண்ணத்துடன் எழுதி வாங்கி சி.எஸ்.ஆர் (CSR) பதிவு செய்து சமரசம் செய்து முடித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து கடந்த 22.08.2026 அன்று இரவு 7 மணி அளவில் தேவேந்திர குல வேளாளர் சாதியைச் சேர்ந்த ராஜலிங்கம் – மகேஸ்வரி ஆகியோரது இல்ல திருமண விழாவில் பெண் அழைப்பு நிகழ்ச்சிக்கு மங்கம்மாள் கோவில் தெருவுக்குள் டிரம் செட் அடித்து சென்ற போது, மறவர் சாதியைச் சேர்ந்த சுந்தரம் மகன் கணேசன் என்பவர் இது என்ன நடைமுறை என சாதிய கண்ணோட்டத்துடன் மிரட்டும் தொனியில் தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பின் 25.08.2026 அன்று இரவில் மது போதையிலிருந்த கணேசன் தேவேந்திர குல வேளாளர் இளைஞர்களிடம் ‘உங்களால் தான் இங்கே அடிக்கடி பிரச்சனை வருகிறது’ என சாதியைச் சொல்லித் திட்டி உள்ளார். இதனால் கோபமடைந்த சில பட்டியல் சமூக இளைஞர்களுக்கும், கணேசன் என்பவருக்கும் மோதல் ஏற்பட்டு அதில் கணேசன் வெட்டு காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதில் சம்மந்தப்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலரைத் தேடி வருவதாக போலீசில் சொல்லப்படுகிறது.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த ஆதிக்க சமூகத்தைச் சார்ந்த பலர் நேற்று (26.08.2026) காலை 7 மணி அளவில் மங்கம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் அகிலி, பிச்சை மகன் முத்துப்பாண்டி, முத்து அய்யனார், சாம்பார் மாரியப்பன் மகன் செல்வம், பெரியசாமி மகன் ராஜ், ஆதி மருமகன் சங்கர், S.R.ரத்தினம் மகன் கனி, பெரியசாமி மகன் ஆறுமுகம் மற்றும் பலர் கையில் தடி கம்பு, கற்களோடு 40 பேருக்கு மேல் கும்பலாக வந்து போலீஸ் முன்னிலையில் மூர்க்கத்தனமாக தேவேந்திர குல வேளாளர் மக்கள் வாழ்கிற தெருவிற்குள் நுழைந்து அங்கிருந்த வீடுகள், 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கி வாசல்களிலிருந்த குடம் பாத்திரங்களை உதைத்தும், தள்ளிவிட்டும் வீடுகளில் கதவுகள், குடிநீர் குழாய்களைச் சேதப்படுத்தியும், சாதியைச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்தும், உங்கள் யாரையும் இங்கே வாழவிட மாட்டோம் என்றும் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் உயிரைக் காத்திடும் பொருட்டு பட்டியல் சமூக மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். இரவே சம்பவம் நடந்திருந்த போதும்  போதிய எண்ணிக்கையில் போலீசார் இல்லாததால் மேற்கூறிய தாக்குதல் நடந்துள்ளது.

தேவேந்திர குல வேளாளர் சாதியைச் சேர்ந்த மக்களின் திருமணம், காது குத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மேளம் அடிப்பது, பட்டாசு வெடிப்பது போன்றவற்றை அப்பகுதி மறவர் சாதியைச் சேர்ந்த சில ஆதிக்கச் சாதிவெறியர்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இதற்குத் துணையாக போலீசும் நடந்து கொள்கிறது.

இந்த சம்பவத்திற்குப் பின்னால், ஊருக்குள் நுழைந்த PMT போன்ற சாதிவெறி சங்கங்கள், தேவேந்திர குல வேளாளர் மக்களை பொதுப் பாதைக்குள் விடக்கூடாது என பேசி, மேலும் சாதிய வன்மத்தைத் தூண்டி வருகின்றன.

கான்சாபுரம் கிராமத்தில் பட்டியல் சமூக மக்களின் வீடுகளில், வாகனங்களில் கும்பல் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதோடு சாதிய வன்மத்தோடு நடந்து கொண்ட நபர்கள் அனைவர் மீதும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்திடவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும், பாதுகாப்பும் வழங்கிடவும், பொதுப் பாதையில் தேவேந்திர குல வேளாளர் மக்கள் பட்டாசு போடுவதைத் தடுத்து எழுதி வாங்கிய போலீசு ஆய்வாளர் மீதும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திட வேண்டும்.

மேலும் தென்மாவட்டங்களில் தொடர்ச்சியாக தலித் மக்கள் மீது சாதிவெறி, கொலைவெறித் தாக்குதல்கள் அதிகரித்தபடி உள்ளது. இத்தாக்குதலுக்குப் பின்னால் இருக்கும் ஆதிக்கச்சாதி வெறி சங்கங்களையும், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலையும் தடை செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கையை முன்வைத்து உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து களமிறங்க வேண்டும்.

மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை – தூத்துக்குடி மாவட்டங்கள்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க