29.08.2026

ஈரோடு – சத்தியமங்கலம்: சாதித் தீண்டாமையால் ஒடுக்கப்படும்
அண்ணாநகர் பட்டியலின அருந்ததியர் மக்கள்

பத்திரிகைச் செய்தி

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், உக்கரம் அருகே உள்ள அண்ணாநகரில் பட்டியலின அருந்ததியர் மக்கள் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவ்வூரில் பெரும்பான்மையாக ஆதிக்கச்சாதியைச் சார்ந்த நாயக்கர்கள் உள்ளனர். அவ்வூரில் இரு பட்டத்தரசி அம்மன் கோவில்கள் உள்ளன. இந்த இரண்டு கோயில்களிலும், வருடாந்திரம் ஒரு கோயில் என்ற வகையில் மாறி மாறி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெறுகின்ற திருவிழாவில், 15 பட்டியலின அருந்ததியர் மக்களின் குடும்பங்களைத் தீண்டாமையின் அடிப்படையில் ஊரை விட்டு ஒதுக்கிவைத்துவிட்டு, மற்றவர்களிடம் வரி வசூல் செய்து திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஆதிக்கச் சாதி நாயக்கர்கள் செய்து வந்துள்ளனர். இது குறித்து ஆகஸ்டு 15 அன்று, சத்தியமங்கலம் தாசில்தாரிடம் பட்டியலின அருந்ததியர் மக்கள் புகாரளித்துள்ளனர்.

மேற்கண்ட நிகழ்வின் பின்னணி என்னவெனில், கடந்த 2022 ஆம் ஆண்டு உக்கரம் மேட்டுக்கடையில் உள்ள டீக்கடையில், பட்டியலின மக்களுக்கு இரட்டை டம்ளரில் டீ கொடுப்பது மற்றும் ஹோட்டல்களில் டேபிள் சேரில் அமர வைக்காமல், கீழே உட்கார வைத்து உணவு கொடுப்பது என்ற வகையில் சாதித் தீண்டாமையை ஆதிக்கச்சாதி நாயக்கர்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர். டீக்கடையில் நிலவிய இரட்டை டம்ளர் தீண்டாமைக் கொடுமையைத் தட்டிக்கேட்ட பெரியகாளையன் என்பவரை, ஆதிக்கச்சாதியைச் சார்ந்த இருவர், சாதிரீதியாக இழிவுபடுத்தி கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

ஆனால், பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தும் கடத்தூர் போலீசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதைச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. அதுமட்டுமல்ல, கடந்த 2022-இல் நடந்த சம்பவத்திற்குப் பிறகு, ஆதிக்கச்சாதியைச் சார்ந்த 500க்கும் மேற்பட்டோர், தாக்குதல் நடத்திய ஆதிக்கச் சாதிவெறியர்களைக் கைது செய்யக்கூடாது எனவும், அருந்ததியர் மக்களுக்கு மிரட்டல் விடுகின்ற வகையிலும், அரசூர் – கோபி பிரதான சாலையில் மறியல் செய்துள்ளனர். இந்த அளவிற்கு சாதிவெறியர்கள் வெளிப்படையாக சாதியத் திமிரோடு நடந்து கொள்வதற்கு போலீசின் அலட்சியமும் முக்கியமான காரணம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதுகுறித்து கடத்தூர் போலீசு நிலையத்தில் எஸ்.சி-எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், இவ்வாண்டு ஆகஸ்டில், அண்ணமார் பட்டத்தரசி அம்மன் கோவில் விழாவை நடத்துவது குறித்து இரு சாதியினரும் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போது அங்கிருந்த ஆதிக்கச்சாதியைச் சார்ந்த ஆறு நபர்கள், கடந்த 2022 ஆம் ஆண்டு போடப்பட்ட மேற்கண்ட வழக்கை திரும்பப் பெறவேண்டும் என அருந்ததியர் மக்களை மிரட்டியுள்ளனர். இதற்கு அருந்ததியர் மக்கள் ஒத்துக் கொள்ளவில்லை. இதனால், ஆதிக்கச்சாதியைச் சார்ந்த நபர்களின் தூண்டுதலின் பேரில் 15 அருந்ததியர் குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து, திருவிழாவை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த அடிப்படையில்தான், தங்கள் மீது சாதித் தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் ஆதிக்கச் சாதிவெறியர்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அருந்ததியர் மக்கள், ஆகஸ்டு 15 அன்று சத்தியமங்கலம் தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளனர்.

மேற்கண்ட நிகழ்வுகளைத் தொகுத்துப் பார்க்கும்போது, ஆதிக்கச் சாதிவெறியர்கள் எந்தவித அச்சமுமின்றி, வெளிப்படையாக சாதித் தீண்டாமையை, ஒடுக்குமுறையைக் கடைப்பிடித்து வருகின்றனர். அந்த அளவிற்கு அவ்வட்டாரத்தில் சாதி அடக்குமுறை கோலோச்சுகிறது. சாதித் தீண்டாமை, ஒடுக்குமுறைகளுக்கு எதிராக சட்டங்கள் இருந்தும், அவையெல்லாம் ஆதிக்கச் சாதிவெறியர்களைக் கட்டுப்படுத்துவதில்லை. அவற்றை அவர்கள் மதிப்பதுமில்லை. ஏனெனில், அதை நடைமுறைப்படுத்தும் போலீசு உள்ளிட்ட அதிகார வர்க்கம் சாதிய மனநிலையில் இருப்பதும், பட்டியலின மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை அலட்சியத்தோடு கையாள்வதும் அதற்கு முக்கியக் காரணம் ஆகும்.

சத்தியமங்கலம் அண்ணாநகர் பட்டியலின அருந்ததியர் மக்கள் மீதான ஆதிக்கச் சாதிவெறியர்களின் சாதித் தீண்டாமை, அடக்குமுறையை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழ்நாடு அரசே! ஈரோடு மாவட்ட நிர்வாகமே! போலீசு துறையே!

  • அண்ணாநகர் பட்டியலின அருந்ததியர் மக்களை சாதித் தீண்டாமையின் அடிப்படையில் மிரட்டியும், ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தும் செயல்பட்ட ஆதிக்கச் சாதிவெறியர்களை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்! சிறையிலடை!
  • பட்டியலின அருந்ததியர் மக்களுக்கு கோவில் வழிபாட்டில் சம உரிமையை நிலைநாட்டு! உரிய பாதுகாப்பு வழங்கு!
  • சாதிரீதியான ஒடுக்குமுறைகளை மெத்தனமாகக் கையாளும் போலீசு மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடு!
  • ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களைத் தடை செய்!
  • ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலைத் தடை செய்!


இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க