நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டமும் பு.மா.இ.மு-வின் களமாடலும்

இந்த நீட் எதிர்ப்பு மாணவர் எழுச்சியில், வெறும் பங்கேற்பாளர்களாக அல்லாமல், போராட்டத்தின் திசையை உறுதிப்படுத்திய, மாணவர்களை அணிதிரட்டிய, சீர்குலைவாதத்தை முறியடித்த, அடுத்த கட்டப் போராட்டப் பாதையை வடிவமைத்த முக்கிய அரசியல் சக்தியாக இப்போராட்டத்தில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி திகழ்ந்தது.

நீட் தேர்வு மோசடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கடந்த ஜூலை 20 அன்று “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” தலைமையில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் நாடாளுமன்ற முற்றுகைப் பேரணி நடத்தினர். இதனை சகித்துக்கொள்ள முடியாத பாசிச மோடி அரசு, போலீசு – துணை இராணுவப் படையைக் கொண்டு மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. மாணவர்களின் கை – கால்கள், தலை, கழுத்தை அடித்து உடைத்து, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி, பெல்லட் துப்பாக்கிச்சூடு நடத்தி தனது பாசிச முகத்தை வெளிக்காட்டியது.

நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதி வழியில் போராடிய மாணவர்கள் மீதான மோடி அரசின் இந்த கொலைவெறியாட்டம் இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாணவர்கள் – இளைஞர்களை வீதிக்கு வரவழைத்து, போராட்டக்களத்தை ஜந்தர் மந்தரிலிருந்து நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தியது! அதன் அங்கமாக, நீட் எதிர்ப்பில் முன்னோடி மாநிலமான தமிழ்நாட்டிலும் போராட்டங்கள் வெடித்தன.

“நீட் தேர்வை ரத்து செய்!” என்ற முழக்கத்தை உயர்த்திப் பிடித்து கடந்த பத்து ஆண்டுகளாக தெருமுனைக் கூட்டங்கள், பிரச்சார இயக்கங்கள், ஆர்ப்பாட்டங்கள், கல்லூரிப் போராட்டங்கள் என களமாடிவரும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி இப்போராட்டத்திலும் களமிறங்கியது. “மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” என்ற கோரிக்கையுடன் “நீட் தேர்வை இரத்து செய்ய வேண்டும்”, “தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை இணைத்து தமிழ்நாட்டு மக்கள், மாணவர்களின் உணர்வை உயர்த்திப் பிடித்து போராட்டத்தில் பங்கெடுத்தது.

குறிப்பாக, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்தும், நீட் தேர்வை முழுமையாக இரத்து செய்ய வலியுறுத்தியும் ஜூலை 20 அன்று தமிழ்நாட்டில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் பாலன் இல்லத்தில் தொடர் முழக்கப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இப்போராட்டத்தை ஆதரித்து, மக்கள் அதிகாரக் கழகம் மற்றும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் முதல் நாளிலேயே களத்திற்கு சென்றன.

15-க்கும் மேற்பட்ட மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் முழக்கமிட்டவாறு போராட்டக் களத்திற்கு பேரணியாக வந்து போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவித்தனர். மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் போராட்டத்தில் ஆதரவுத் தெரிவித்தும் நீட் தேர்வுக்கு பின்னாலிருக்கும் கார்ப்பரேட் கொள்ளையை அம்பலப்படுத்தியும் உரையாற்றினார்.

தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்புப் போராட்டத்தை திசைதிருப்புவதற்காக நடந்த முயற்சிகளுக்கு எதிராக, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, “பாலன் இல்லத்தில் நடைபெறுவதே மையப் போராட்டம்; மாணவர்களும் இளைஞர்களும் பாலன் இல்லம் நோக்கி அணிதிரள்வோம்” என்ற முழக்கத்தை முதன்முதலில் முன்வைத்து மாணவர்களை அணிதிரட்டியது.

நீட் எதிர்ப்பு போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், பாசிச மோடி அரசின் அடக்குமுறையைக் கண்டித்தும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இடதுசாரி மாணவர் அமைப்புகள் ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் பங்கெடுத்த மாணவர்களை பாலன் இல்லத்திற்கு அழைத்து வந்து பு.மா.இ.மு. தோழர்கள் போராட்டத்திற்கு ஆதரவுத் திரட்டினர்.

இரண்டு சட்டக் கல்லூரிகளில் பு.மா.இ.மு. கிளைத் தோழர்கள் போராட்டத்தை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றினர். நூற்றுக்கணக்கான சட்டக் கல்லூரி மாணவர்களை போராட்ட முன்னணிக்கு அணிதிரட்டினர். அவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டக் களத்திற்கு வந்து போராட்டம் முடியும் வரை மூன்று நாட்களும் இரவும் பகலும் தங்கி உறுதியாகப் போராடினர்.

ஜூலை 23, போராட்டத்தின் மூன்றாவது நாளில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களை பேரணியாக அழைத்து வந்து போராட்டத்திற்கு ஆதரவளிக்கப்பட்டது. போராட்டத்திற்கு மாணவர்கள் எவ்வாறு ஆதரவு அளிக்க வேண்டும், கல்லூரிகளில் மாணவர் அணிகளை எப்படி உருவாக்க வேண்டும் என்பதை செயல் வடிவில் நிரூபிப்பதாக பு.மா.இ.மு-வின் இந்நடவடிக்கைகள் அமைந்தன.

அன்று இரவே, போராட்டக் களம் விரிவடைவதை உணர்ந்து “நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக சி.ஜே.பி. தலைமையில் மாணவர்கள் போராடிவரும் பாலன் இல்லத்தின் இருபுறமும் உள்ள சாலைகளில் தடுப்பு அமைத்து, போராட்டக்களத்தை விரிவுபடுத்திப் பாதுகாப்பாக நடத்திட அனுமதித்திடு!” என்று முழக்கம் முன்வைக்கப்பட்டது.

இதற்கிடையில் காங்கிரசு உள்ளிட்ட தேர்தல் கட்சிகள் “தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” என்ற கோரிக்கையை இரண்டாம்பட்சமாக்கி, “மோடி பதவி விலக வேண்டும்” என்பது போன்ற கோரிக்கைகளை முதன்மைப்படுத்திய போது, இது போராட்டத்தை திசைதிருப்பும் நடவடிக்கை என மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக வன்மையாகக் கண்டிக்கப்பட்டு காணொளிகள் வெளியிடப்பட்டன.

தொடர்ச்சியாகப் போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம், அதில் ஏற்பட்ட சீர்குலைவுவாத முயற்சிகளை முறியடிப்பதிலும் பு.மா.இ.மு. முக்கியப் பங்காற்றியது. போராட்டத் தலைமையுடன் கலந்தாலோசித்து போராட்டத்தின் நிகழ்ச்சிநிரல், அடுத்தகட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்பதில் பு.மா.இ.மு. முக்கியப் பங்காற்றியது.

கார்ப்பரேட் ஊடகங்கள் இப்போராட்டத்தைப் பதிவு செய்யாமல் இருட்டடிப்பு செய்தன எனில், த.வெ.க. ஐ.டி. குண்டர் படையோ இப்போராட்டத்தின் மீது அவதூறைப் பொழிந்தது. இவற்றுக்கு எதிராக பு.மா.இ.மு., மக்கள் அதிகாரக் கழக முகநூல் பக்கங்களும் வினவு யூடியூப் சேனல் மற்றும் அதன் சமூக ஊடகப் பக்கங்களும் இப்போராட்டத்தை உடனுக்குடன் பதிவு செய்து இலட்சக்கணக்கான மக்களிடம் போராட்டச் செய்திகளை கொண்டுசேர்த்தன. இந்நடவடிக்கைகள் இப்போராட்டம் வெகுமக்களின் கவனம் பெறுவதற்கும் இப்போராட்டத்தை நோக்கி மாணவர்கள் அணிதிரள்வதற்கும் உந்து விசையாக அமைந்தன.

பு.மா.இ.மு. தோழர் தீரன் பாடிய ம.க.இ.க. சிவப்பு அலை கலைக்குழுவின் புரட்சிகர பாடல்கள் போராடிய மாணவர் – இளைஞர்களுக்கு உணர்வூட்டியது. போராட்டக்களத்தில் இரவு பகல் பாராமல் புரட்சிகர பாடல்கள் ஒலித்த வண்ணமே இருந்தன. நீட் தேர்வை ஏன் தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உரையாடல்களும் ஊக்கமாக நடைபெற்றன. இதில், பு.மா.இ.மு. தோழர்கள் ஊக்கமாக விவாதித்தனர். பு.மா.இ.மு. தோழர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்டோரின் முகங்கள், கைகள், ஆடைகளில் சிவப்பு வண்ணத்தால் கம்யூனிசத்தின் சின்னமான அரிவாள்-சுத்தியலையும், “நீட் தேர்வை தடை செய்”, “ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்”  போன்ற முழக்கங்களையும் வரைந்து போராட்டக்களத்தை சிவப்பால் மிளிரச் செய்தனர். அந்தவகையில், இப்போராட்டக்களமானது அரசியல் பயிலும் களமாக விளங்கியது என்றால் அது மிகையில்லை.

மாணவர் – இளைஞர்கள் தங்களின் கலை – இலக்கிய தனித்திறன்களை தாமாக முன்வந்து வெளிப்படுத்தினர். பாடல், கவிதை, ஓவியம் என போராட்டக்களம் கலைக்கூடமாகவும் விளங்கியது. மாணவர்கள் பலரும் தங்களது காதலர்களுடன் வந்து இப்போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். பல தன்னார்வலர்கள் உணவு, குடிநீர் வழங்குவது, சுத்தம் செய்வது என இப்போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். இவ்வாறு “போராட்டமே கொண்டாட்டம்” என்பதை பாலன் இல்ல போராட்டக்களம் நிரூபித்தது.

இதன் தொடர்ச்சியாக, இந்தியா முழுவதும் நடைபெற்ற மாணவர் போராட்டங்களுக்கு பணிந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஜூலை 25 அன்று பதவி விலகினார். இது, இந்திய அளவிலான மாணவர்களின் உறுதியான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். அதேசமயம், இது நீட் எதிர்ப்பு போராட்டத்தின் முதல் அரசியல் வெற்றியாகும்!

அந்தவகையில், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிச சக்திகள் பின்வாங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது; அவர்களுக்கு மிகப்பெரிய அரசியல் அடி விழுந்துள்ளது என்பதை மாணவர்களின் முன்னிலையில் வலியுறுத்தப்பட்டு போராட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது.

அந்தவகையில், இந்த நீட் எதிர்ப்பு மாணவர் எழுச்சியில், வெறும் பங்கேற்பாளர்களாக அல்லாமல், போராட்டத்தின் திசையை உறுதிப்படுத்திய, மாணவர்களை அணிதிரட்டிய, சீர்குலைவாதத்தை முறியடித்த, அடுத்த கட்டப் போராட்டப் பாதையை வடிவமைத்த முக்கிய அரசியல் சக்தியாக இப்போராட்டத்தில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி திகழ்ந்தது.

அதைப்போல், மக்கள் அதிகாரக் கழகம், தர்மேந்திர பிரதானின் பதவி விலகலை “உலக முக்கியத்துவமுடைய வெற்றி!” என பிரகடனப்படுத்தி இப்போராட்டத்தின் அரசியல் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியது.

நீட் எனும் உயிர்கொல்லி தேர்வு கொண்டுவரப்பட்ட போதே அதற்கெதிராக இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு உறுதியாகப் போராடிய மாநிலம்தான் தமிழ்நாடு. இந்தியாவில் நீட்டிற்கு எதிராக முதல் குரலெழுப்பி போராடி உயிர்நீத்த போராளி அனிதாதான். ஆனால், நீட் தேர்வை இரத்து செய்வதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு அதற்கான உரிய நடவடிக்கை எதையும் எடுக்காமல் தமிழ்நாட்டிற்கு துரோகமிழைத்தது. தற்போது ஆட்சியிலிருக்கும் த.வெ.க. அரசு ஒருபுறம் நீட் தேர்வை இரத்து செய்ய வேண்டும் என்று பேசிக்கொண்டே, நீட் தேர்விற்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தைக் கடுமையாக ஒடுக்கி வருகிறது.

தேர்தல் கட்சிகளின் இந்த நாடகங்களையும், சந்தர்ப்பவாதத்தையும் முறியடிக்க வேண்டும். தர்மேந்திர பிரதானை பதவி விலகச் செய்த இப்போராட்டமானது அடுத்தக்கட்டமாக நீட் தேர்வை இரத்து செய்வதை நோக்கி முன்னேற வேண்டும். அந்த பாதையில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தொடர்ந்து போராடும்.

தோழர் அறிவு,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு-புதுவை.

(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க