03.09.2026
அம்பாள் நகருக்கு சாலை அமைக்க கோரிய தொடர் உண்ணா நிலை, தொடர் முழக்கப் போராட்டத்திற்கு கிடைத்த முதல் கட்ட வெற்றி!
பத்திரிகைச் செய்தி
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், கெங்கரை ஊராட்சியில் உள்ள மலை கிராமமான அம்பாள் நகர் ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் மக்கள் சாலை வசதிக் கோரி அரசிடம் கோரிக்கை வைத்து 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர்.
இவர்களது குடியிருப்பிலிருந்து முதன்மை சாலைக்கு சாலை அமைப்பதற்குத் தடையாகச் சில தனியார் நில உரிமையாளர்களுக்குச் சொந்தமான நிலங்கள் உள்ளன. அதனை ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கட்டாய நில எடுப்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தி சாலை அமைத்துத் தருமாறு அரசிடம் கோரிக்கை வைத்து பல கட்ட போராட்டங்களை மக்கள் நடத்தியுள்ளனர்.
ஜூலை 2025 முதல் மக்கள் அதிகாரக் கழகம் அம்பாள் நகர் மக்களுடன் இணைந்து இப்பிரச்சினைக்காக ஒரு வருடமாக போராடி வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2026-இல் த.வெ.க. ஆட்சி அமைந்த பின்னர் அம்பாள் நகர் மக்களை இணைத்துக் கொண்டு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசை ஜீலை 13 அன்று நேரில் சந்தித்து மனு கொடுத்தோம். மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் போராட்டத்தின் தீவிரத்தை அரசிற்கு உணர்த்த ஆகஸ்ட் 9 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு முன்னர் அரசு அதிகாரிகள் ஒன்பது பேர் அம்பாள் நகருக்கு வந்து 15-20 நாட்களில் சாலை அமைத்து தருகிறோம் என வாக்குறுதி தந்து ஆர்ப்பாட்டத்தைக் கைவிடக் கோரினர்.
அரசு அதிகாரிகள் வாக்குறுதி அளித்து 15 நாட்களை கடந்தும் சாலை அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
இதன் காரணமாக கோத்தகிரி நகரத்தில் தொடர் உண்ணா நிலை தொடர் முழக்கப் போராட்டம் நடத்துவதற்கு போலீசுதுறையிடம் அனுமதி கடிதம் வழங்கியிருந்தோம். அவர்கள் அனுமதி மறுத்ததால் ஆகஸ்ட் 27 அன்று காலை 11.00 மணிக்கு தொடர் உண்ணா நிலை தொடர் முழக்கப் போராட்டத்தை அம்பாள் நகரில் உள்ளிருப்பு போராட்டமாக, பந்தல் அமைத்துத் தொடங்கினோம். இப்போராட்டம் ஆகஸ்ட் 27 அன்று தொடங்கி ஆகஸ்ட் 31 வரை ஐந்து நாட்கள் நீடித்து முதல் கட்ட வெற்றியை சாதித்தது.
முதல் நாளில் இருந்து ஐந்தாவது நாள் வரை கழக மாநில இணைச் செயலாளர் தோழர் மாறன் மற்றும் கோத்தகிரி கிளைச் செயலாளர் தோழர் சண்முகநாதன் இருவரும் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டனர். அம்மாள் நகர் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஒட்டுமொத்த ஊர்மக்களும் இரவு பகலாகப் தங்களது உரிமைக்கான போராட்டக் களத்தில் திரளாக தினமும் கலந்துகொண்டனர். இப்போராட்டத்திற்கு கோத்தகிரி பகுதியைச் சார்ந்த ஜனநாயக சக்திகளும் பல ஊர் மக்களும் ஊர் தலைவர்களும் நேரடியாக வந்து ஆதரவளித்தனர்.
முதல் இரண்டு நாட்கள் அரசு அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியது தோல்வி அடைந்தது. அவர்கள், “அம்பாள் நகருக்கு சாலை அமைப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து வேலைகளையும் முடித்து தலைமை செயலகம் அனுப்பி விட்டோம். அங்கிருந்து ஆணை வந்தால் சாலை அமைத்து தருகிறோம்” என வாய்வழியாக வாக்குறுதி தந்ததை ஏற்று போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.
அரசு அதிகாரிகள் மீது நம்பிக்கையற்ற கழகமும் அம்பாள் நகர் மக்களும் எமது கோரிக்கையான, அரசு அதிகாரிகள் சாலை அமைத்து தருகிறோம் என்ற வாக்குறுதியை வாய்மொழியாக அல்லாமல் எழுத்துப்பூர்வமாக தர வேண்டும் அல்லது பொறுப்பு அமைச்சர் எழுத்துப்பூர்வமாகத் தர வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக நின்று போராட்டத்தை மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து வந்தோம்.
இந்த மூன்று நாள் தொடர் உண்ணா நிலை போராட்டம் அரசு அதிகாரிகளுக்கு நெருக்கடியை உருவாக்கியது.
நான்காவது நாள் மறுபடியும் அரசு அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். எங்களது கோரிக்கைகளை ஏற்கவில்லை. பின்னர் உண்ணாநிலை போராட்டம் மேற்கொள்ளும் தோழர்களின் உடல்நிலையைக் காரணம் காட்டி போலீசு அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. அங்கும் தோழர்கள் இருவரும் உண்ணாநிலை போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். போராடும் மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற மறுத்து போராட்டத்தை வலுவிழக்க செய்ய போலீசு மேற்கொண்ட இந்நடவடிக்கையை கண்டித்து இ-போஸ்டர் வெளியிட்டோம்.
மேலும், போராட்டப் பந்தலில் இருந்து தோழர்கள் இருவரையும் போலீசு அழைத்துச் சென்ற நேரம் முதல் கோத்தகிரி கிளை இணைச் செயலாளர் தோழர் ஆறுமுகம், தோழர் அருணாச்சலம், தோழர் மோகன்ராஜ் மூவரும் போராட்டப் பந்தலில் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டனர்.
அம்பாள் நகருக்கு சாலை வசதிக் கோரி இருவர் மேற்கொண்ட உண்ணா நிலை போராட்டம் ஐவர் மேற்கொள்ளும் போராட்டமாக வலுவடைந்தது. போராட்டத்தின் ஐந்தாம் நாளான ஆகஸ்ட் 31 அன்று மதியம் கோத்தகிரி அனைத்து கட்சிகள் இயக்கங்கள் சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தி அம்பாள் நகர் மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வட்டாட்சியரிடம் மனுவாக கொடுத்து அதற்கு பதில் அளிக்குமாறும் மனுவில் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து மக்கள் போராட்டத்திற்கு அரசு பணிந்தது. அனைத்து கட்சிகள் இயக்கங்கள் சார்பாகக் கொடுக்கப்பட்ட மனுவை பெற்றுக்கொண்டு, அம்பாள் நகருக்கு சாலை அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்து வட்டாட்சியர் ஒப்புகைச் சீட்டில் கையெழுத்திட்டு நம்மிடம் தந்தார்.
இதன் அடிப்படையில் மக்கள் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கழக மாநில இணைச் செயலாளர் தோழர் மாறன், கோத்தகிரி கிளைச் செயலாளர் தோழர் சண்முகநாதன், கோத்தகிரி கிளை இணைச் செயலாளர் தோழர் ஆறுமுகம், தோழர் அருணாச்சலம், தோழர் மோகன்ராஜ் ஆகிய தோழர்கள் ஐவரும் உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்துக்கொண்டனர். இந்த முதல் கட்ட வெற்றியை இனிப்புகள் வழங்கி அம்பாள் நகர் மக்கள் கொண்டாடினர்.
செப்டம்பர் 1 அன்று அம்பாள் நகர் மக்கள் கழகத் தோழர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அம்பாள் நகர் மக்களுடன் கழகத் தோழர்கள் இணைந்து குழுப் புகைப்படமும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த முதல் கட்ட வெற்றியை தொடர்ந்து அம்பாள் நகர் மக்களுக்கு தமிழ்நாடு அரசு சாலை அமைத்துத் தரும் வரை அம்பாள் நகர் மக்களுடன் இணைந்து மக்கள் அதிகாரக் கழகம் போராட்டங்களை முன்னெடுக்கும்!
![]()
தகவல்
மக்கள் அதிகாரக் கழகம்,
கோத்தகிரி கிளை,
கோவை மாவட்டம்.
9488902202
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





