தென்மாவட்டங்களில் தொடரும் சாதிவெறி, கொலைவெறித் தாக்குதல்கள்: நாம் என்ன செய்யப் போகிறோம்? | துண்டறிக்கை – ம.அ.க.

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களைத் தம் களமாகப் பயன்படுத்தி, தலித் மக்களைத் தாக்குதல் இலக்காக்கி, ஆதிக்கச் சாதி வெறியர்களை ஏவிவிட்டு சாதி வெறியாட்டம் ஆடுகிறது பாசிசக் கும்பல்!

நாங்குநேரி – பெரும்பத்து, ஆலங்குளம் – நெட்டூர்…
தென்மாவட்டங்களில் தொடரும் சாதிவெறி, கொலைவெறித் தாக்குதல்கள்:

நாம் என்ன செய்யப் போகிறோம்?

கருத்தரங்கம்
நாள்:
20.09.2026 ஞாயிறு
இடம்: ADMS மஹால், திலி.
நேரம்: மாலை 5:00 மணி

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே…

நம் முன்னோர்கள் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து இந்த மண்ணை மீட்க, சாதி-மத விலங்குகளை உடைத்தெறிந்து, உதிரம் சிந்தித் தோளோடு தோள் நின்று களமாடிய வீர மண் நம் தமிழ்நாடு!

பூலித்தேவன், ஒண்டிவீரன், அழகுமுத்துக்கோன், வேலு நாச்சியார், குயிலி, மருது சகோதரர்கள், திப்பு சுல்தான், தீரன் சின்னமலை, கட்டபொம்மன், சுந்தரலிங்கம், வென்னிக் காலாடி, வ.உ.சி எனப் பாளையக்காரர்களும், விடுதலைப் போராட்டத் தியாகிகளும் தம் உயிரை ஈந்து கட்டியமைத்த நிலமிது.

சித்தர்கள், வள்ளலாளர், பெரியார்… என பார்ப்பனிய எதிர்ப்பு மரபைக் கொண்ட சமத்துவத்தை நிலைநாட்டப் போராடிய நீண்ட வரலாறு நமக்கு உண்டு.

ஆனால், இன்றைய மறுகாலனியாக்கக் காலகட்டத்தில் நமது காடுகள், மலைகள், நீர்நிலைகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் அனைத்தும் பெருமுதலாளிகளுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் தாரை வார்க்கப்படுகின்றன.

மக்களின் இந்த வாழ்வாதாரச் சூறையாடலை நாம் எதிர்த்துக் கேள்விகேட்டு அணிதிரண்டுவிடக் கூடாது என்பதற்காகவும், பாசிச சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதற்காகவும், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிசக் கும்பல் சாதி, மத, இன ரீதியாக நம்மை பிரித்தாளும் சூழ்ச்சியை அரங்கேற்றுகிறது.

குறிப்பாக, தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களைத் தம் களமாகப் பயன்படுத்தி, தலித் மக்களைத் தாக்குதல் இலக்காக்கி, ஆதிக்கச் சாதி வெறியர்களை ஏவிவிட்டு சாதி வெறியாட்டம் ஆடுகிறது பாசிசக் கும்பல்!

கவின் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கொடூரம் நம் கண்முன் நிற்கிறது; ஆகாஷ் டெலிசன் போலீசால் கொட்டடிப் படுகொலை செய்யப்பட்டார். நாங்குநேரி பெரும்பத்து – இந்திரா காலனியில் எந்த முன்விரோதமும் இன்றி நாடார், பறையர் சாதி உழைக்கும் மக்கள் மீது திட்டமிட்டு சாதிவெறி, கொலைவெறித் தாக்குதல்கள், படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. அதே பாணியில், ஆலங்குளம் நெட்டூரில் தலித் கிறிஸ்தவர்களான தேவேந்திர குல வேளாளர் மக்கள் மீது சாதிவெறித் தாக்குதல்கள் ஏவிவிடப்பட்டன; ஆழ்வார்கற்குளத்தில் ஒரு முதியவர் மீது சாதிவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தகைய தொடர் வன்முறைகள் மூலம் மக்களிடம் அச்சத்தை விதைத்து, அவர்களை நிரந்தர அடிமைகளாக ஒடுக்க வேண்டும் என்கிற சாதிவெறி, இந்துமத வெறிக் கண்ணோட்டத்துடன் பாசிசக் கும்பல் செயல்படுகிறது.

ஆனால், தலித் மக்கள் ஒருபோதும் அச்சப்பட்டு அடங்கிப்போகவில்லை! எழுச்சி பெற்ற தலித் மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடுகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களின் சாலை மறியல் போன்ற போராட்டங்களுக்குப் பிறகே பெயரளவில் நடவடிக்கை எடுக்கும் சாதிய அரசுக் கட்டமைப்பைக் கடந்து, உழைக்கும் மக்கள் ஒன்றுபடுகிறார்கள்!

பெரும்பத்து இந்திரா காலனியில் படுகொலை செய்யப்பட்ட பறையர் சாதியைச் சேர்ந்த ஜான் மார்க்கிற்கும் சேர்த்தே நீதி கேட்டு, நாடார் சாதி உழைக்கும் மக்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். ஆலங்குளம் நெட்டூரில் மறவர் சாதி உழைக்கும் மக்கள், பாதிக்கப்பட்ட தேவேந்திர குல வேளாளர் மக்களுடன் உணர்வுப்பூர்வமாகக் கைகோர்த்து நிற்கிறார்கள்!

ஆனால், கட்டபொம்மன் வாழ்ந்த மண்ணில் எட்டப்பர்கள் முளைப்பதைப் போல,  சொந்த ’சாதி’ மக்களையே வீழ்த்தும் கோடாரிக் காம்புகளாக மாறி, இந்துத்துவ பாசிசக் கும்பலின் காலடியில் வீழ்ந்து கிடக்கிறார்கள் ஒரு சில தலித் தலைவர்கள்!

இந்த சாதிவெறியாட்டங்களுக்குப் பின்னால் ஆதிக்கசாதிவெறிச் சங்கங்களும், அதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இக்கும்பல் ஆதிக்க சாதியினரிடையே சாதி நஞ்சை விதைத்து, இளைஞர்களின் கைகளில் அரிவாளைத் திணித்து, அவர்களை இளங்குற்றவாளிகளாக மாற்றி, ஒட்டுமொத்த சமூகத்தையும் பின்னோக்கி இழுக்கிறது.

வடமாநிலங்களில் மதவெறியையும், வடகிழக்கு மாநிலங்களில் இனவெறியையும் மூட்டி ரத்த ஆறு ஓடவைத்தது போல, தமிழ்நாட்டில் சாதிவெறியைத் தூண்டிவிட்டு தம் பாசிசக் கால்களை ஊன்றத் துடிக்கிறது. ஜனநாயகத்தை விரும்புவோர் இதனைத் தடுக்க உடனே முன்வர வேண்டும்!

தமிழ்நாட்டைச் சுடுகாடாக்கத் துடிக்கும் பாசிசக் கும்பலை முறியடிப்போம்!

ஆதிக்கச் சாதிவெறிச் சங்கங்களையும், அவற்றை பின்னணியில் இருந்து இயக்கிவரும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலையும் தடை செய்யப் போராடுவோம்!

பாசிசத்தை வீழ்த்தி, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை கட்டியமைக்கும் போராட்டத்தில் உழைக்கும் மக்களும், ஜனநாயக சக்திகளும் உடனடியாக ஒன்றிணைந்து களமிறங்குவோம்!

பார்க்க: வினவு, பெருவிழா
படிக்க: புதிய ஜனநாயகம்

நிதி தாரீர்!

மக்கள் அதிகாரக் கழகம்,
திருநெல்வேலி – தூத்துக்குடி மாவட்டங்கள்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க