பஞ்சாப்: அரசு ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம்

செப்டம்பர் 30 அன்று பஞ்சாப் சட்டமன்றத்திற்கு அப்பால் தனியே மக்கள் மன்றம் கூட்டப்பட்டு, அதில் பங்கெடுக்க 117 எம்.எல்.ஏ-க்களும் 13 எம்.பி-க்களும் அழைக்கப்படுவர் என்றும் அங்கு அவர்கள் தங்களின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பஞ்சாப் அரசு ஊழியர்களின் போராட்டம் புதிய கோணத்தில் வீரியமிக்க புதிய வடிவங்களில் முன்னேறுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் நடைபெற்று வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியில் அரசு ஊழியர்களின் முக்கியமான கோரிக்கைகள் வெகுகாலமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளன. பொறுமை இழந்த அரசு ஊழியர்கள் தங்களின் முக்கியக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி கடந்த ஆகஸ்ட் 27 அன்று, ஊழியர்கள் அனைவரும் பொது விடுப்பு (mass casual leave) எடுப்பதன் மூலம் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.

இப்போராட்டத்தில் 4 லட்சம் அரசு ஊழியர்கள் ஒற்றுமையுடன் பங்கேற்றனர். மேலும் 3.5 லட்சம் அரசு ஓய்வூதியதாரர்களான முன்னாள் அரசு ஊழியர்கள் இப்போராட்டத்தை ஆதரித்து மாநிலம் முழுவதிலும் மாவட்ட மற்றும் வட்ட தலைநகரில் அரசு அலுவலகங்களின் முன்பு திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

அரசாங்க அலுவலகப் பணிகள் அனைத்தும் ஒரு நாள் முழுவதுமாக நின்று போயின. அரசு மருத்துவமனைகளிலும் வெளிநோயாளிகள் சேவை முற்றாகத் தடைப்பட்டது. அவசரச் சிகிச்சை பிரிவுக்கு சங்கத் தலைமையே விலக்களித்திருந்தது என்பது கவனத்திற்குரியதாகும். மொத்தத்தில் கடந்த ஆகஸ்ட் 27 அன்று பஞ்சாப்பில் அரசு எந்திரத்தின் இயக்கம் முற்றாக ஸ்தம்பித்தது.

கீழ்கண்டவையே அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள் ஆகும்.

  • நெடுங்காலமாக தேக்கி வைக்கப்பட்டிருக்கும் 18 சதவிகித பஞ்சப்படியை உடனே விடுவிக்க வேண்டும்!
  • பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே அமலாக்கிட வேண்டும்!
  • ஒப்பந்த முறையில் அமர்த்தப்பட்டுள்ள அரசு பணியிடங்கள் அனைத்தையும் நிரந்தரப்படுத்த வேண்டும்!
  • ஆஷா மற்றும் அங்கன்வாடி மதிய உணவுத் திட்ட ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின்படி ஊதியம் வழங்க வேண்டும்!
  • ஜூன் 17, 2020 மற்றும் அதற்குப் பிறகும் காலமுறை ஊதிய (consolidated pay) அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட அனைத்து ஊழியர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும்

ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படவில்லை என்றால் போராட்டத்தை மேலும் தீவிரபடுத்த நேரிடும் என்று இப்போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தும் அரசு ஊழியர் சங்கக் கூட்டமைப்பான “சஞ்சா முலசாம் மஞ்ச் கமிட்டி” (sanjha mulasam committee) அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சஞ்சா முலசாம் மஞ்ச் கமிட்டி எனப்படுவது பல்வேறு துறைகளைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட சங்கங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பாகும்.

ஆனால், அரசுத் தலைமையகம் ஆகஸ்ட் 27 அன்று வேலைக்கு வராத ஊழியர்கள் அனைவருக்கும் விளக்கம் கோரும் அறிவிக்கை அனுப்பும்படி எல்லா துறைத்தலைவர்களுக்கும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதன்படி அந்தந்தத் துறை சார்ந்த ஊழியர்களுக்கு இந்த விளக்கம் கோரும் அறிவிக்கை அனுப்பப்பட்டு வருகிறது.

ஆனால் சங்கத் தலைமை, இந்த விளக்கம் கோரும் அறிவிக்கைக்கு ஊழியர்கள் யாரும் பதில் அளிக்கத் தேவையில்லை என்றும் செப்டம்பர் 7-ஆம் தேதிக்குள் இந்த அறிவிக்கைகளை திரும்பபெற வேண்டும் என்றும் அரசுக்கு கெடு விதித்திருப்பதாக உறுப்பினர்களுக்கு தெரிவித்திருக்கிறது. அதற்குள் திரும்பபெறப்படவில்லை என்றால் செப்டம்பர் 8 அன்று மீண்டும் ஒரு நாள் ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம் நடத்த நேரிடும் என்று எச்சரிக்கையும் விடுத்திருக்கிறது.

மேலும் தமது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டமாக அந்தந்தத் துறை சார்ந்த அமைச்சர்களின் சொந்த ஊர்களில் உள்ள அவர்களின் வீடுகளில் செப்டம்பர் மாத மத்தியில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்; அதற்கு முன்பாக செப்டம்பர் 10 அன்று சங்க்ரூரில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் மஹா பேரணி நடத்தப்படும், அப்பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கெடுப்பார்கள் எனப் போராட்டத் தலைமை தெரிவித்திருக்கிறது.


படிக்க: பஞ்சாப்: அமெரிக்க அடிமை ஒப்பந்தத்தை இரத்து செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம்!


பஞ்சாப் அரசு ஊழியர்களின் கூட்டு ஒருங்கிணைப்பு குழு (Joint Coordination Committee of Government Employees) இதற்கான விரிவான போராட்டத் திட்டங்களை அறிவித்திருக்கிறது. அதன் தலைவரான ஹர்தீப் தோடர்பூர் இப்போராட்டத் திட்டங்களை “மஹா ஹர்த்தால்” என்கிற பெயரில் வெளியிட்டுள்ளார்.

ஒருங்கிணைப்புக் குழுவின் இன்னொரு தலைவரான சுக் ஜெயின் சிங், அமைச்சர்களின் சொந்த ஊர்களில் உள்ள வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் செப்டம்பர் 12, 13 ஆகிய நாட்களில் நடைபெறும் என்று கூறியுள்ளார். முதற்கட்டமாக இந்த இரு நாட்களில் முற்றுகை நடைபெறும் முக்கிய அமைச்சர்களின் பெயர்ப் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறார்.

இதில் அமைச்சர்களின் பெயர்களோடு சபாநாயகர், துணை சபாநாயகர் மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. அடுத்து இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 19, 20 தேதிகளில் முற்றுகை நடக்க உள்ள அமைச்சர்கள் பட்டியல் பின்னர் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார். அதற்குள் தீர்வு எட்டப்படவில்லை என்றால் அக்டோபர் 21, 22 ஆகிய நாட்களில் மீண்டும் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் பின்னர் நிலைமையை பொறுத்து தொடர் வேலைநிறுத்தமாக மாற்றப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே செப்டம்பர் 30 அன்று பஞ்சாப் சட்டமன்றத்திற்கு அப்பால் தனியே மக்கள் மன்றம் கூட்டப்படும் என்றும் அதில் பங்கெடுக்க 117 எம்.எல்.ஏ-க்களும் 13 எம்.பி-க்களும் அழைக்கப்படுவர் என்றும் அங்கு அவர்கள் தங்களின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு பஞ்சாப் அரசு ஊழியர்களின் போராட்டம் என்பது புதிய கோணத்தில் வீரியமிக்க புதிய வடிவங்களில் கட்டமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அரசு வெறுமனே வாக்குறுதிகளை மட்டும் தருவதும் பொருளாதாரக் காரணங்களை மட்டுமே காட்டி ஏமாற்றுவதையும் ஊழியர்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை. அரசு ஊழியர்கள் அனைவரும் ஒன்றுபட்ட போராட்டத்தின் அவசியத்தை உணர்ந்திருப்பதும் எந்தப் போராட்டத்திற்கும் நேரடியாக களத்தில் நிற்க தயாராய் இருப்பதும் புதிய நிலைமைகள் ஆகும்.

பஞ்சாபின் எதிர்க்கட்சியான சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் தலைவர் சுக் பீர் சிங், அரசு ஊழியர்களின் இப்போராட்டத்தை தமது கட்சி ஆதரிப்பதாகவும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கும் நிலை ஏற்பட்டிருப்பது போராட்டத்தின் வீரியத்தை உணர்த்துகிறது.

அரசு ஊழியர்களின் இக்கோரிக்கைகள் மிகவும் அடிப்படையானவை நியாயமானவை என்பதை அங்கீகரித்து நாடு முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளும் உழைக்கும் மக்களும் இப்போராட்டத்தை ஆதரிக்க வேண்டும்.


வானுறை சம்பத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க