08.09.2026

ஆரிய-பார்ப்பனிய சமஸ்கிருதத்தால் இருட்டடிப்பு செய்யப்பட்ட இசைத்தமிழை மீட்டெடுத்த ஆப்ரகாம் பண்டிதரின் நினைவு நாளை உயர்த்தி பிடிப்போம்!

மக்கள் அதிகாரக் கழகம் அறிக்கை!

ஆகஸ்ட் 31 – இசைத்தமிழை மீட்டெடுத்த ஆப்ரகாம் பண்டிதர் அவர்களின் நினைவு நாள். இவரை நினைவுக்கூர்வது தமிழ் இனத்தின் மீதும், தமிழ் இசையின் மீதும் பற்று கொண்ட, தமிழர் உரிமைக்காக களமாடும் அனைவருக்கும் முக்கியமானதாகும்.

1859-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், சாம்பவர்வடகரை என்னும் சிற்றூரில் ஒரு ஏழை குடும்பத்தில் ஆகஸ்ட் 02 அன்று பிறந்தார். பங்கலாச் சுரண்டையில் ஆரம்பக் கல்வியைப் பயின்று, அதன்பின் ஆசிரியர் பயிற்சி பெற்று தமிழ் ஆசிரியராக பணியாற்றினார். பிறகு தமிழ் மருத்துவத்தின் மீது ஆர்வம் கொண்டு 1879-இல் மூலிகை மலையான சுருளி மலையில் கருணாநந்த முனிவரிடம் மருத்துவம் பயின்று சித்த மருத்துவரானார். பின் தஞ்சைக்கு சென்று அங்கு குடியேறி, 100 ஏக்கர் நிலத்தில் மூலிகைத் தோட்டம் அமைத்து விவசாயாமும் செய்துவந்தார். மூலிகைகளைப் பயன்படுத்தி “கருணானந்த சஞ்சீவி மருந்துகள்” என்ற பெயரில் பல்வேறு சித்த மருந்துகளை தயாரித்து வெளிநாடுகளுக்கும் அதை ஏற்றுமதி செய்தார். இவர் தாயாரித்த கோரோசனை மாத்திரை இலங்கை, மலேசியா போன்ற பல நாடுகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இம்மருந்து சித்த மருத்துவத்தின் மிக முக்கிய மருந்தாக இன்றுவரை நடைமுறையில் இருந்து வருகிறது. மேலும் இசையின் மீது சிறு வயது முதலே ஆர்வமிக்கவராக இருந்தார் ஆப்ரகாம் பண்டிதர்.

இந்திய மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தவை; சமஸ்கிருத இலக்கணமே இதர மொழிகளுக்கு இலக்கணங்களாக ஏற்கப்பட்டன; தமிழிலுள்ள இலக்கியங்கள் கூட சமஸ்கிருத இலக்கியத்தை வழியொட்டி வந்தவைதான் என்பது போன்ற கருத்துகள் அப்போது மேலாண்மையில் இருந்து வந்தது. ராபர்ட் கால்டுவெல் 1856-இல் “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்னும் ஆய்வு நூலை வெளியிட்டார்.

இந்நூல் தமிழ் வரலாற்றில் முக்கிய திருப்புமுனை நூல் என்று சொல்லலாம். அதுவரை உருவாக்கப்பட்டிருந்த சமஸ்கிருதமே மூலம் என்கிற கருத்தை அது உடைத்து நொறுக்கியது.

தமிழ் உயர் தனிச் செம்மொழி என்ற ஆய்வு முடிவு தமிழர்களுக்குத் தன்னம்பிக்கையையும், சுயமரியாதையையும் உருவாக்கியது. இருபதாம் நூற்றாண்டில் பார்ப்பன எதிர்ப்பு இயக்கம் உருவெடுக்க கால்டுவெல்லின் கோட்பாடுகள் அடித்தளமாயின.

இசையிலும் சமஸ்கிருத மேலாதிக்கமே தொடர்ந்தது. அதிலும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரே ஆதிக்கம் செலுத்தினர். தமிழ்நாட்டு மக்களுக்கு புரியாத மொழியில் சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலுமே இசைக் கச்சேரிகள் நிகழ்த்தப்பட்டு வந்தன. சமஸ்கிருத மொழியில்தான் இசை தோன்றியது என்றும் இன்று வழங்கப்படும் இசை அனைத்தும் சமஸ்கிருத்ததிலிருந்து தோன்றியது என்ற கருத்தும் நிலவி வந்தது. தமிழ்மொழி என்பது இயல், இசை, நாடகம் என மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது என சொல்லப்பட்டு வந்தாலும், அந்தக்காலத்தில் இசைத்தமிழ் என்பது மறைக்கப்பட்டு சமஸ்கிருத சங்கீதமே மேல்நிலையில் இருந்தது.

இதனை ஆப்ரகாம் பண்டிதர் ஆய்வு செய்தார். பல்வேறு இசை அறிஞர்களின் கூற்றையும் இலக்கியங்களையும் இசை சாஸ்திரங்களையும் ஆராய்ந்து தனது ஆய்வு முடிவுகளை 1917-ஆம் ஆண்டு “கருணாமிருத சாகரம்” என்னும் புத்தகமாக வெளியிட்டார். அதில் தமிழ் இசையே தற்போது கர்நாடக சங்கீதமாகவும் இந்துஸ்தானி என்றும் இன்னும் பல பெயர்களில் உலகம் முழுவதும் வழங்கி வருகிறது என்று நிறுவினார். அதுநாள் வரை சமஸ்கிருத ஆரிய சங்கீதமே அனைத்து சங்கீதத்திற்கும் மூலம் என்ற பார்ப்பன மேலாதிக்கமே நிலவி வந்தது. இதனை முறியடித்து தமிழ் இசையே இன்று வழங்கிவரும் அனைத்து இசைப் பிரிவுகளுக்கும் மூலம் என்பதை நிலைநாட்டினார்.

இவர் எழுதிய “கருணாமிர்த சாகரம்” என்னும் இசைத்தமிழ் நூல் 24 சுருதிகள் பற்றியது. இந்நூல் நான்கு பாகங்களை உள்ளடக்கியது. மொத்தம் 1,346 பக்கங்களைக் கொண்டது. இந்நூலில் சங்கீதம் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழில் ஒன்றாயிருந்தது என்பதையும் தமிழ் மொழியின் வரலாறு, தமிழ்நாட்டின் தொன்மை, முச்சங்கங்களில் இசை பற்றிய குறிப்புகள், தமிநாட்டில் நடந்த அரசாட்சிகள், ஆரியப் படையெடுப்புக்கு பின் எவ்வாறு தமிழ் இலக்கியங்களும், இசை முதலிய கலைகள் சமஸ்கிருதமயம் ஆக்கப்பட்டதை பற்றியும், பூர்வத் தமிழ் பண்கள், யாழ், நான்கு பாலைகள் போன்ற எண்ணற்ற தகவல்களை உள்ளடக்கியதாக இந்நூல் உள்ளது.

மேலும் அவர் தனது நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “பூர்வ தமிழ் மக்கள் வழங்கி வந்த ஆதி இசைகளும், பண்களும் பலவிதமாகப் பேர் மாற்றப்பட்டு, 700, 800 வருடங்களுக்குள் முற்றிலும் மாறித் ‘தமிழ் மக்களுக்குச் சங்கீதமே தெரியாது’ என்று சொல்லும்படி நேரிட்டிருப்பதைக் காட்டும் சில குறிப்புகளையும் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இவைகளை இப்புத்தகம் மூன்றாம் பகுதியில் 517-ஆம் பக்கம் முதல் 768-ஆம் பக்கம் வரையும் காணலாம்”.

“ஆரியர்கள் தென்னிந்தியாவிற்கு வரும் முன்னதாகவே சங்கீதமும் அதைச் சேர்ந்ததான பரதம், தாளம் முதலிய அங்கங்களும் மிக விரிவடைந்து வீணை, புல்லாங்குழல், மிருதங்கம் முதலிய வாத்தியக் கருவிகளுடன் பயிலப்பட்டு வந்ததென்றும், அவைகள் கோயில்களிலும், ராஜ அரண்மனைகளிலும் முக்கியமாய் உபயோகப்பட்டு வந்ததென்றும் இதன் முன் பார்த்திருக்கிறோம். ஆரியர் தென்னாட்டிற்கு வந்தபின் தென்னிந்திய சங்கீதத்தைக் கற்றுக்கொண்டு அதில் தேர்ந்தவர்களானார்கள். வேத சுலோகங்களை எப்படி இதுநாள் வரையும் பிறருக்குச் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்ற எண்ணமுடையவர்களாயிருக்கிறார்களோ, அதுபோலவே மற்றவரிடத்திலிருந்து கற்றுக் கொண்ட தென்னிந்திய சங்கீதத்தையும் பிறருக்குச் சொல்லிக் கொடுக்க மனமற்றவர்களானார்கள். அதுமட்டுமல்லாது, பழங்காலத்தில் அல்லது ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் இசை வடிவங்களை (பாடல்களை) நீக்கிவிட்டு புதிதாக தங்கள் பரம்பரைக்கென்று சமஸ்கிருதம், தெலுங்கு போன்ற மொழிகளில் இசை வடிவங்கள் செய்து அவற்றையே வழங்கினார்கள். அவைகள் முற்றிலும் முற்கால தமிழ்நடையை ஒத்திருக்கிறதேயொழிய வேறில்லை. இதனால் காலப்போக்கில் தென்னிந்தியாவில் உண்டான சங்கீதம் வடநாட்டின் சமஸ்கிருதத்திலிருந்து உண்டானதாக எண்ணும்படியாயிற்று” என்று ஆரிய, சமஸ்கிருத, பார்ப்பனியத்தால் இசைத்தமிழ் இருட்டடிக்கப்பட்டு தங்களது மேலாதிக்கத்தை நிறுவிக்கொண்டதைப் பற்றி தனது நூலில் எடுத்துரைக்கிறார்.

“தென்னிந்திய அல்லது திராவிட சங்கீதமானது வேதங்களை ஓதுவதற்கு அதிகப் பயனுள்ளதாயிருக்கிறது என்கிறார் வடதிசை சாஸ்திர விற்பன்னர் ஒருவர். தென்னிந்தியாவின் சங்கீதம் வேதம் ஓதுவதற்கு ஏற்றதாயிருக்கிறதென்று சொல்வதை நாம் இங்கே கவனிக்கவேண்டும். தென்னிந்தியாவில் ராவணேசுவரன் முற்காலத்தில் இயற்றப்பட்ட தமிழ் இசைப் பாடல்களை நீக்கிவிட்டு, ஏழு சுரங்களைப் பயன்படுத்தி சாமவேதத்தைப் பாடும் முறை உருவாவதற்கு முன்பே வாழ்ந்தவன் என்றும், அவன் தென்னிந்தியாவின் சமீபத்திலுள்ள இலங்கைக்கு அரசனென்றும் நாம் அறிவோம். ஏழு சுரங்களோடு சேர்ந்து வழங்கிய பல சுருதிகளும் முற்கால தமிழ் நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. இதைக் கொண்டு, ஆரம்பகால வேதப் பாடல்களுக்கும், மற்ற இசை முறைகளுக்கும் முந்தைய பழமையான இசை மரபைக் கொண்டது தென்னிந்தியாதான் என்று கூறுவதற்குப் போதிய ஆதாரங்களும் நியாயமான காரணங்களும் உள்ளன” என்று வேதகாலத்திற்கு முற்பட்டது தமிழ் இசையின் காலம் என்று கூறுகிறார்.

இசைத்தமிழைப் பற்றி பல்வேறு ஆய்வுகளை முன்வைத்து, “ஆதி இசை தமிழிசையே” என்பதை  முதல் முதலாக எடுத்துரைத்து‌, பார்ப்பன இசையின் மேலாதிக்கத்தை உடைத்தெறிந்து, இசைத்தமிழின் வளர்ச்சிக்கும், பல்வேறு ஆய்வுகளுக்கும் வித்திட்டவர் ஆப்ரகாம் பண்டிதர். தனது நூலில் வரலாறு, அறிவியல், மொழி, ஆன்மீகம், வாழ்வியல், வானியல், அரசியல் என பல்வேறு தளங்களில் இசைத்தமிழ் குறித்த தனது ஆய்வை முன்னெடுத்துள்ளார்.

பன்னெடுங்காலமாக தமிழினத்தின் மீதும் அதன் பண்பாடு, கலாச்சாரத்தின் மீதும் தாக்குதல்களை தொடுத்து வருகிறது இந்த ஆரிய-சமஸ்கிருத-பார்ப்பன கும்பல். இன்றும் மாநில உரிமைகள் பறிப்பு, தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்கு தள்ளுவது, மும்மொழி கொள்கையைத் திணிப்பது, காசி தமிழ்ச்சங்கம் என்னும் பெயரில் பார்ப்பன புரட்டுக்களை அரங்கேற்றுவது போன்ற பல்வேறு வகைகளில் தனது பாசிச தாக்குதலை தொடுத்து வருகிறது பாசிச பா.ஜ.க அரசு. உணவின் மீது, மொழியின் மீது திணிக்கப்படும் ஆதிக்கமும், பண்பாட்டின் மீது திணிக்கப்படும் ஆதிக்கமும், மாநிலத்தின் மீது திணிக்கப்படும் ஆதிக்கமும் வேறு வேறல்ல. அந்த வகையில் தமிழ் மொழியின் மீது மட்டுமல்ல, அனைத்து தேசிய இனங்களின், உழைக்கும் மக்கள் பேசக் கூடிய மொழியின் மீது இந்தியும் சமஸ்கிருதமும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. அதை முறியடிக்கும் வகையில்,  இசைப்பிரிவில் “களவாடப்பட்ட இசையே கர்நாடக இசை” என்று நாம் முரசறைந்து சொல்ல வேண்டியுள்ளது. அதற்கு ஆபிரகாம் பண்டிதரை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

தனது பெரும் பிரிவுகளான இயல், இசை, நாடகம் என அனைத்திலும் தமக்கே உரிய பார்ப்பனிய எதிர்ப்பு மரபுடன் தமிழ் மொழியும், தமிழர் பண்பாடும் தனித்தே இயங்கவல்லது. இதற்கு வலுசேர்த்த அறிஞர்களில் ஆப்ரகாம் பண்டிதரும் ஒருவராக திகழ்கிறார். “கருணாமிர்த சாகரம்” என்னும் இந்நூலை, பாண்பாட்டுத்தளத்தில் பார்ப்பனியத்திற்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்த வேண்டியது ஆரிய-திராவிடப் போரில், களத்திலிருக்கும் ஒவ்வொரு ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.

இசைத்தமிழின் பண்களும் தாளங்களும் எட்டுத்திக்கும் ஒலிக்கட்டும்! பார்ப்பன புரட்டுகள் அனைத்தும் நார்நாராய் கிழியட்டும்‌!


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க