கள்ளக்குறிச்சி: உணவின்றி தவிக்கும் சமூக நல விடுதி மாணவர்கள்

இவ்விடுதி பிரச்சினை ஊடகங்களில் வெளியாகி கவனத்தை பெற்ற நிலையில், இதனை தனிப்பட்ட பணியாளர்கள் பிரச்சினையாக ஊடகங்களும் சம்பந்தபட்ட அதிகாரிகளும் திசைதிருப்புகின்றனர். ஆனால், இது தமிழ்நாடு முழுவதும் தலித் மாணவர்களுக்கான அரசு விடுதிகள் அரசால் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டு வரும் போக்கின் அங்கம் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாலி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு சமூக நல மாணவர் விடுதியில், உரிய நேரத்தில் உணவு வழங்கப்படாததால், பசியில் மாணவர்கள் மயக்கமடைந்த அவலம் அரங்கேறியுள்ளது.

இவ்விடுதியில் மக்கள் அதிகாரக் கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட நேரடி கள ஆய்வில், விடுதியில் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக வழங்கப்படவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

பாலி கிராமத்தில் உள்ள இந்த மாணவர் விடுதியில் 50 மாணவர்கள் தங்கும் வசதி இருந்தாலும் தற்போது 16 மாணவர்கள் மட்டுமே தங்கி கல்வி பயின்று வருகின்றனர். எடைக்கல், சாத்தனூர், பாலிபுதுநகர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் இவ்விடுதியில் தங்கி பள்ளிக்குச் சென்று வருகின்றனர். அரசு சார்பில் செயல்பட்டு வரும் இவ்விடுதியின் தற்போதைய நிலை, மாணவர்களின் அடிப்படை உரிமைகள் குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.

விடுதி வளாகம் முழுவதும் புல், பூண்டு மற்றும் புதர்கள் வளர்ந்து காணப்படுவதுடன், வளாகம் முறையாக சுத்தம் செய்யப்படாமல் இருப்பதும் கள ஆய்வில் தெரியவந்துள்ளது. விடுதியில் உள்ள கழிப்பறைகளும் சரிவரப் பராமரிக்கப்படாமல் அசுத்தமான நிலையில் காணப்படுகின்றன. மாணவர்கள் தங்கிப் படிக்கும் இடத்தில் அடிப்படை சுகாதார வசதிகள்கூட முறையாக பராமரிக்கப்படாதது, மாணவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

விடுதி வளாகத்தில் நிலவும் இந்த சுகாதாரமற்ற சூழலை சுட்டிக்காட்டி, மக்கள் அதிகாரக் கழகம் சார்பில் இணைய போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையிலும் அரசு அதிகாரிகள் அதில் கவனம் கொடுக்கவில்லை. இதற்கு தாங்கள் தலித் மாணவர்கள் என்கிற அலட்சியமே காரணம் என்றும் அதனால் முறையான ஆய்வு மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பாலி அரசு சமூக நல மாணவர் விடுதியில் கள ஆய்வு மேற்கொண்ட தோழர் விநாயகம்.

விடுதியில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய பணியாளர்கள் இல்லாததும் முக்கியப் பிரச்சினையாக உள்ளது. விடுதி காப்பாளர் சுரேஷ் கூறுகையில், இவ்விடுதிக்கு இரண்டு சமையலர்கள், ஒரு தூய்மைப் பணியாளர், வாட்ச்மேன், ஒரு விடுதி காப்பாளர் மற்றும் உதவியாளர் என மொத்தம் ஆறு பேர் தேவைப்படுவதாகவும், ஆனால் தற்போது மூன்று பேர் மட்டுமே பணியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு பணியாளர் விடுமுறையில் இருப்பதாகவும், தாம் எறையூரில் பணியாற்றி வருவதுடன் கூடுதலாக இரண்டு விடுதிகளையும் பொறுப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

விடுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையும் மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. தண்ணீர் வழங்கும் வசதியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்வதற்காக தாம் சொந்தமாக சுமார் ரூ.9,000 செலவு செய்துள்ளதாக விடுதி காப்பாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார். பழுது ஏற்பட்டு சுமார் 40 நாட்கள் ஆகியும் அதற்கான ரசீது வரவில்லை என்றும் இருப்பினும், மாணவர்களுக்கு தண்ணீர் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

உணவு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை குறித்து விடுதி காப்பாளரிடம் கேட்டபோது, சிலிண்டர் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மாணவர்களுக்கு உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதாகக் கூறினார்.

மாணவர்களிடம் விசாரித்தபோது, தங்களுக்கு சுமார் இரண்டு வார காலமாக முறையாக உணவு வழங்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பள்ளி ஆசியர்கள் உணவு வாங்கி கொடுத்ததுடன் பொது மக்கள் சமைத்து கொண்டுவந்து மாணவர்களுக்கு கொடுத்துள்ளனர்.

மாணவர்கள் தங்கிப் படிக்கும் அரசு விடுதி என்பது அவர்களின் கல்வியுடன் நேரடியாக தொடர்புடைய அடிப்படை வசதியாகும். உணவு, குடிநீர், சுகாதாரம், தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது அரசின் கடமையாகும். ஆனால், பாலி அரசு சமூக நல மாணவர் விடுதியில் பணியாளர் பற்றாக்குறை, குடிநீர் பிரச்சினை, முறையாக உணவு வழங்கப்படாதது, பராமரிப்பற்ற வளாகம் மற்றும் கழிப்பறை ஆகியவை இவ்விடுதியின் நிர்வாகம் மற்றும் கண்காணிப்பு தொடர்பாக கேள்வியெழுப்புகிறது.

இவ்விடுதி பிரச்சினை ஊடகங்களில் வெளியாகி கவனத்தை பெற்ற நிலையில், இதனை தனிப்பட்ட பணியாளர்கள் பிரச்சினையாக ஊடகங்கள் சுருக்குகின்றன. விடுதி காப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் சமையலர் குப்பன் ஆகியோரை பணியிடைநீக்கம் செய்து சம்பந்தபட்ட அதிகாரிகள் பிரச்சினையை திசைதிருப்புகின்றனர். ஆனால், இது தமிழ்நாடு முழுவதும் தலித் மாணவர்களுக்கான அரசு விடுதிகள் அரசால் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டு வரும் போக்கின் அங்கம் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

தமிழ்நாடு த.வெ.க. அரசே, கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகமே!

  • அரசு சமூக நல மாணவர் விடுதியில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடு!
  • மாணவர்களுக்கு தரமான உணவு மற்றும் சுகாதாரமான விடுதி வசதியை உறுதி செய்!
  • அனைத்து விடுதியில் உடனடியாக அதிகாரிகள் நேரடி ஆய்வு மேற்கொண்டு, அனைத்து அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடு!

தோழர் வினாயகம்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம்.
7200112838

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க