கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்குச் செல்ல வேண்டுமென்றால், அரசு சார்பான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும் படகிற்கான கட்டணம் நூறு ரூபாய் செலுத்தி முதலில் விவேகானந்தர் பாறைக்குச் செல்ல வேண்டும். பிறகு தமிழ் நாடு அரசு கட்டியுள்ள கண்ணாடிப் பாலத்தின் வழியாகத் திருவள்ளுவர் சிலையைச் சென்றடையலாம்.
இதற்கிடையில் போதிய காரணம் தெரிவிக்கப்படாமல், கண்ணாடிப் பாலம் வழியாகத் திருவள்ளுவர் சிலைக்குச் செல்லும் ஒவ்வொருவரிடமிருந்தும் முப்பது உருவா பணம் தனியார் நிறுவனமான விவேகனந்தா பாறை நினைவகம் சார்பாக நாள்தோறும் வசூலிக்கப்படுகிறது.
அரசுக்குச் சொந்தமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்குக் கழகத்திற்குப் பயணக் கட்டணம் செலுத்தி வரும் பயணிகள், அரசு கட்டி அமைத்துள்ள கண்ணாடிப் பாலத்தின் வழியாக அரசு உருவாக்கியுள்ள திருவள்ளுவர் சிலையைக் காண விவேகானந்தர் பாறை நிறுவனம் மேலும் முப்பது உருவா வாங்குவது சட்ட ‘விரோத’மான செயலாகும்.
கண்ணாடிப் பாலம், திருவள்ளுவர் சிலையைக் காண ஆயிரக்கணக்கான பேர் நாள்தோறும் வருகின்றனர். இப்படி வரும் பயணியர்களிடம் ஒரு மாதத்தில் விவேகானந்தா பாறை நிறுவனம் வசூலிக்கும் தொகை பல இலக்கங்களு(இலட்சங்களு)க்கும் அதிகமாகும்.. மேலும் இது முழுக்க முழுக்கச் சட்ட’விரோத’மானப் பணமாகும். எனவே தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு விவேகானந்தா பாறை நினைவகம் சார்பாக வசூலிக்கப்படும் தொகையை உடனடியாகத் தடைசெய்ய வேண்டும்.
படிக்க: த.வெ.க. நூறு நாள் ஆட்சியின் துரோகப் பட்டியல்! | ம.அ.க. அறிக்கை
தவிரவும், இதுவரை கட்டாயமாகத் தண்டிய (வசூலித்த) தொகையைத் தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு ஆணையிட வேண்டும்.
மேலும் திருவள்ளுவர் சிலை நிறுவப் பெற்று 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, வள்ளுவர் சிலை முழுமையாகச் செப்பனிடப்பட்டு அடர்ஒளியில் ஒளிரக்கூடிய வகையில் கடந்த காலத்தில் சிறப்பாக அமைந்திருந்தது. ஆனால் தற்பொழுது கடந்த சில மாதங்களாகத் திருவள்ளுவர் சிலை இரங்கத்தக்க வகையில் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. எனவே தமிழக அரசு இந்த அவல நிலையை மாற்றி மீண்டும் திருவள்ளுவர் சிலை இரவு நேரங்களில் ஒளிரும் வண்ணம் அடர் ஒளி விளக்குகளை அமைக்க வேண்டும் என வேண்டுகிறோம்.
திருவள்ளுவர் குறித்தும், திருக்குறள் குறித்தும் கன்னியாகுமரிக்கு வரக்கூடிய பயணிகளுக்கு விளக்கிச் சொல்வதற்கென நிலையான வழிகாட்டும் பணியாளர்களை நியமிக்க வேண்டும். திருக்குறள் தொடர்பாகவும் திருவள்ளுவர் தொடர்பாகவுமான விளக்கங்களைக் கொண்ட சிறு வெளியீடுகளை பல மொழிகளில் அச்சிட்டு அங்கு வருவோர்க்கெல்லாம் தர வேண்டும்.
திருவள்ளுவர் சிலைக்குக் கீழே உள்ள மண்டபத்தில் திருக்குறள் தொடர்பான அனைத்து நூல்களும் இடம்பெறும் வகையில் திருவள்ளுவர் நூலகத்தைத் தமிழ்நாடு அரசு அமைத்திட வேண்டும்
திருவள்ளுவர் சிலையைப் பார்க்க வரும் பயணிகள் கன்னியாகுமரியில் தங்குவதற்கு வாய்ப்பாகத் தமிழ்நாடு அரசு பெரும் தங்குமனைகளை மிகவும் மலிவான கட்டணத்தில் அமைத்துத் தரவேண்டும்.
மேற்காண் கோரிக்கைகளை உரிய விரைவில் நிறைவேற்றித் திருவள்ளுவர் சிலையைக் காத்திட வேண்டும் எனத் தமிழ்நாட்டு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
கூட்டறிக்கை ஒருங்கிணைப்பு:
முனைவர் மா. பூங்குன்றன்
(திருக்குறள் பேரவையம் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக)
07.09.2026
![]()
முகநூலில்: பொழிலன் தமிழ்நாடு
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











