10.09.2026
ஒன்பது மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் – யாருக்காக?
மக்கள் பணத்தை வீணடிக்கும் திட்டத்தை உடனடியாகக் கைவிடு!
மீனவர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாத்திடு!
பத்திரிகைச் செய்தி
சென்னையில் ஏற்கெனவே புனித ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலகம் செயல்பட்டு வரும் நிலையில், ரூ.1,200 கோடி செலவில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் 110-வது விதியின் கீழ் அறிவித்திருப்பது மக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கையாகும்.
ஒரு அரசின் நிர்வாகத் தேவைக்காக புதிய கட்டடம் கட்டுவது என்ற பெயரில், மக்களின் கருத்தைக் கேட்காமல், சட்டமன்றத்திலும் உரிய விவாதத்திற்கு வாய்ப்பளிக்காமல் இத்திட்டத்தை அறிவித்திருப்பது ஜனநாயக நடைமுறையைப் புறக்கணிக்கும் சர்வாதிகார செயல்பாடாகும்.
மக்கள் நெருக்கடியான பகுதியில் ஆட்சி மையமா?
பட்டினப்பாக்கம் ஏற்கெனவே மக்கள் நெருக்கடி மிகுந்த குடியிருப்புப் பகுதியாக உள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், தேவாலயங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இங்கு இயங்கி வருகின்றன. குறுகிய சாலைகளும் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்கெனவே மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்து வருகின்றன.
இந்நிலையில், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் தினசரி வந்து செல்லக்கூடிய தலைமைச் செயலகத்தை இங்கு அமைப்பது போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நெருக்கடியை மேலும் அதிகரிக்கும். இது மேலும் மக்களை பாதிக்கும் செயலாகும்.
மீனவர்களின் வாழ்வாதாரம் பலியாவதா?
பட்டினப்பாக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரையிலான கடற்கரைப் பகுதியில் ராஜீவ் காந்தி நகர், பவானி குப்பம், இருதயபுரம், செல்வராஜ்புரம், நொச்சி நகர், நொச்சிக்குப்பம் உள்ளிட்ட மீனவக் குடியிருப்புகள் உள்ளன. ஆயிரக்கணக்கான மீனவர்கள் தலைமுறை தலைமுறையாக இப்பகுதியைத் தங்கள் வாழ்விடமாகக் கொண்டுள்ளனர்.
தலைமைச் செயலகத் திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் மற்றும் குடியிருப்பு உரிமைகள் பாதிக்கப்படும் என மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மீனவச் சங்கங்களும் பொதுநல அமைப்புகளும் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையிலும், அவர்களின் எதிர்ப்பை த.வெ.க. அரசு மதிக்கவில்லை.
மீனவர்களின் வாழ்விடம் என்பது வெறும் நிலம் அல்ல; அது அவர்களின் உழைப்பு, தொழில், சமூக உறவுகள் மற்றும் தலைமுறை வாழ்வின் அடித்தளம். வளர்ச்சி என்ற பெயரில் அந்த வாழ்வாதாரத்தைப் பறிப்பதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
கஜானா காலி என்றால் ரூ.1,200 கோடி எதற்கு?
அரசின் நிதிநிலை குறித்தும், கஜானா காலியாக இருப்பதாகவும் ஆளும் கட்சியினர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசி வருகின்றனர். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களையே செயல்படுத்த நிதி இல்லை எனக் கூறப்படும் நிலையில், ஏற்கெனவே தலைமைச் செயலகம் இயங்கி வரும் சூழலில் புதிய கட்டடத்திற்காக ரூ.1,200 கோடி செலவிடுவது ஏன்?
மக்களின் மருத்துவம், கல்வி, குடிநீர், போக்குவரத்து, வீடு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக நிதி ஒதுக்க வேண்டிய நேரத்தில், அதிகார மையத்திற்கான பிரம்மாண்ட கட்டடத்திற்கு மக்கள் பணத்தைச் செலவிடுவது எந்த வகையில் மக்கள் நலன்?
இது நிர்வாகத் தேவையா? அதிகார வர்க்கத்தின் வசதிக்கான செலவா?
மேலும், முதலமைச்சரின் இல்லம் அமைந்துள்ள பகுதிக்கு அருகிலேயே தலைமைச் செயலகத்தை அமைப்பது என்பது அப்பட்டமான சர்வாதிகாரம்.
எனவே,
- பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வெளியிடப்பட்ட அரசாணையை த.வெ.க. அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
- கடலோரச் சூழலியல் மற்றும் மீனவர்களின் பாரம்பரிய வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டும்.
மக்களின் வாழ்விடத்தைப் பறித்து அதிகார மையங்களை உருவாக்குவது வளர்ச்சி அல்ல. மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதே உண்மையான மக்கள் நல ஆட்சி.
பட்டினப்பாக்கம் மக்களையும் மீனவர்களையும் பாதிக்கும் இந்தத் திட்டத்தை எதிர்த்து ஜனநாயக ரீதியான மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக அறைகூவல் விடுக்கின்றோம்.
தோழர் அமிர்தா,
சென்னை மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
7358482113
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





